Showing posts with label ஷண்முகன். Show all posts
Showing posts with label ஷண்முகன். Show all posts

Thursday, July 3, 2008

ஸ்ரீ சுப்ரமண்ய ஷடக்ஷரி மஹா-மந்த்ர ஸ்தோத்ரம்....


முருகனருள் வலைப்பூ 100ஆம் பதிவினை நோக்கிச் செல்லும் விட்ஜெடைப் பார்த்த போது, இதை எழுதத் தோன்றியது. இந்தப் பதிவினை இரண்டு நாட்கள் முன்பே போட்டிருக்க வேண்டும். எழுத நேரம் கிடைக்கவில்லை. முருகனருள் வலைப்பூவில் பதிவிடும் நண்பர்கள் எல்லோருக்கும் முருகனருள் கிடைக்க வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் மஹா மந்திரம் என்று ஒன்று இருக்கும். அதில் முருகனுக்கானது ஷட்-அக்ஷரங்களால் ஆன 'சரவணபவ'. ஆறுமுகனது அருளை அள்ளித்தந்திடும் இந்த ஸ்தோத்ரம் குமார தந்திரம் என்னும் மந்திர சாஸ்திர நூலில் இருக்கிறது. நமக்கு மொழிப் பேதமிருந்தாலும் நம் கந்தனுக்கு எல்லா மொழியும் தம்மொழிதானே!!!


அதாத: ஸ்ம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்தவம் சிவம்
ஜபதாம் ச்ருண்வதாம் ந்ரூணாம் புக்திமுக்தி ப்ரதாயகம்
ஸர்வசத்ரு க்ஷயகரம் ஸ்ர்வரோக நிவாரணம்
அஷ்டைச்வர்ய ப்ரதம் நித்யம் ஸர்வலோகைக பாவனம்.

இந்த ஸ்தோத்ரம் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், இன்பத்தையும் மோக்ஷத்தையும் அருளக்கூடியது. விரோதிகளை வெற்றி கொள்ளவும், நோய் நொடிகள் அண்டாமல் அஷ்டலெக்ஷிமியின் அருளைப் பெறவும், உலகிலுள்ளோர் அனைவரையும் தூய்மைப்படுத்தும் ஸ்ரீமுருகனின் மங்களமான மூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம்.

சராண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம்
ரண்யம் த்வாம் ப்ரபன்னஸ்ய தேஹி மே விபுலாம் ஸ்ரீயம்.

சரவணப் பொய்கையில் பிறந்தவரும், ஸ்கந்தனும், தன்னை சரணமடைந்தவர்களை காப்பவருமான, தாங்களை சரணடையூம் எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

ராஜராஜ ஸ்கோத்பூதம் ராஜீவாயத லோசனம்
தீச கோடி ஸெளந்தர்யம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

குபேரனைத் தோழமை கொண்ட சிவனிடத்திலிருந்து வந்தவரும், தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையுடையவரும், கோடி மன்மதனுக்கு நிகரான அழகும் கொண்ட நீங்கள் எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

பலாரி ப்ரமுகைர் வந்த்ய: வல்லீந்த்ராணி ஸுதாபதே!
ரதாச்ரித லோகானாம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

இந்திரனுள்ளிட்ட தேவர்களால் வணங்கப்படுபவரும், வள்ளி-தேவசேனா ஆகியோரின் மணவாளனும், தன்னை அண்டியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே!, எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

நாரதாதி மஹாயோகி ஸித்தகந்தர்வ ஸேவிதம்
வவீரை: பூஜிதாங்க்ரிம் தேஹிமே விபுலாம் ச்ரியம்


நாரதர் முதலிய சிறந்த துறவிகளாலும், சித்தர்கள்-கந்தர்வர்களாலும் வணங்கப்பட்டவரும், வீரபாஹு முதலிய ஒன்பது வீரர்களால் பூஜிக்கப்பட்ட பாதத்தை உடையவருமான உம்மைச் சரணடைகிறேன். எனக்கு சகல செல்வங்களையும் அருள்வீராக.

பகவன் பார்வதீஸுநோ! ஸ்வாமின் பக்தார்திபஞ்சன!
வத் பாதாப்ஜயோர் பக்திம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

பகவானே!, பார்வதி குமாரா!, தலைவனே! பக்தர்களின் கவலைகளைப் போக்குகின்றவனே! தங்களுடைய பாத கமலங்களில் குறைவற்ற பக்தியையும், அளவற்ற செல்வத்தையும் எனக்கு அளித்துக் காக்க வேண்டும்.

ஸுதான்யம் யச: கீர்திம் அவிச்சேதம் ச ஸ்ந்ததே:
சத்ரு நாசன மத்யாசு தேஹி மே விபுலாம் ச்ரியம்

தங்கம், தான்யம், அளவற்ற புகழ், மகன்-பேரன் என்று வம்ச விருத்தி, விரோதமற்ற சுற்றம் ஆகியவற்றை இப்போழுதே எனக்கு அளித்து, செல்வத்தையும் அருள் புரிவீர்களாக!

இதம் ஷடக்ஷரம் ஸ்தோத்ரம் ஸுப்ரம்மண்யஸ்ய ஸந்ததம்
ய: படேத் தஸ்ய ஸித்யந்தி ஸ்ம்பத: சிந்திதாதிகா:

ஸ்ரீ சுப்ரமண்யருடைய இந்த மூல மந்திர ஷடக்ஷ்ர ஸ்தோதிரத்தை எப்போது யார் படிக்கின்றாரோ அவருக்கு விரும்பிய அளவுக்கும் மேலாக செல்வங்கள் கிடைக்கும்.

Sunday, May 18, 2008

முருகன் தமிழ் கடவுள் மட்டுந்தானா?....



சமிபத்தில் யார் தமிழ் கடவுள் என்று மிகுந்த பரபரப்பான பதிவு ஒன்றை நம் கே.ஆர்.எஸ் எழுதினார். இந்த பதிவினை முடிக்கையில் கந்தன், கார்த்திகேயன் என்றெல்லாம் அழைக்கப்படும் முருகன் மட்டும் தமிழ் கடவுள் அல்ல, மால், ஹரி என்றெல்லாம் சொல்லும் மஹாவிஷ்ணுவும் தமிழ் கடவுளே என்பதற்கு ஏகப்பட்ட தமிழ் இலக்கிய சான்றெல்லாம் தந்து முடித்தார். சாதாரணமாகவே சில தீவிர முருகனடிமைகள், முருகனை ஏதோ வட மொழிக்கு பிடிக்காத தெய்வம் மாதிரி சித்தரித்தும், உச்சரித்தும் மகிழ்வார்கள். வடமொழி முருகனை போற்றவில்லையா?, இவர்கள் சொல்வது போல பார்பன தீவிரவாதத்தால் தான் தெய்வானை என்ற தெய்வமே உருவானதா?. வடக்கில் குமரன், கந்தன் வனங்கப்படுவதில்லையா?.தமிழகத்தில் மட்டும், அதுவும் தமிழ் மட்டுந்தான் முருகனை தெய்வமென போற்றியுள்ளதா?. இதற்க்கெல்லாம் சில குறிப்புக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்வாமி என்பதே சம்ஸ்க்ருதத்தில் சுப்ரமணியரைத்தான் குறிக்கிறது. அமரகோசம் என்று ஒரு நிகண்டு/அகராதி வடமொழியில், அதில் "சுப்ரமணியர்" என்ற பதத்திற்கு "தேவசேனாபதி; சூர; ஸ்வாமி; கஜமுகானுஜ" என்பதாக பொருள் சொல்லப்பட்டிருக்கு. மற்ற தெய்வங்களை சொல்லும் போது இந்த 'ஸ்வாமி' என்ற் ப்ரயோகம் இல்லை. ஆக "ஸ்வாமி" என்பது முருகனை மட்டுமே குறிப்பிடுகிறது.

ஷண்முகனது அவதாரம் பற்றி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சுப்ரமண்ய அவதாரம் என்று சொல்லும் போது, சாந்தோக்ய உபநிஷத் ப்ரம்மாவின் மானச புத்திரான ஸனத்குமாரர் தான் ஸ்கந்தனாக/கந்தனாக அவதரித்தார் என்று சொல்லுகிறது. முருகனின் 'ஞானபண்டிதன்' என்னும் பெயரும் இதை உறுதி செய்வதுபோல் இருக்கிறது. இருள் கடந்த ஓளி ஞானாக்னி என்றெல்லாம் சாந்தோக்யம் கூறுவதாக தெரிகிறது. சுப்ரமண்யர் பற்றி வேதத்தில் இல்லை என்று சொல்லி வருபவர்களுக்காக பரமாச்சார்யார் சில வேத விற்பனர்களை ஆராய வைத்து சொல்லியிருக்கிறார். சிவ புராணத்தில் த்ரிபுர ரஹஸ்யத்தில் ஸனத் குமாரர் சிவ குமரனாக பிறப்பது பற்றிய முழுத்தகவலும் (சரவணப் பொய்கை, கார்த்திகை பெண்கள், ஷண்முக ரூபம் எல்லாம்) இருக்கிறது. இதில் அன்னை பராசக்தியே சரவணப் பொய்கையாக வந்து ஆறு குழந்தைகளைத் தாங்கியதாகச் சொல்லப்படுகிறது. இதுவும் ஒருவிதத்தில் சரிதானே!, வாயுவாலும் அக்னியாலும், கங்கையாலும் தாங்கமுடியாத ஈசனின் தேஜஸை அம்பிகையால் மட்டுந்தானே தாங்க இயலும். கங்கையால் தாங்கப்பட்டதால் தான் அவன் காங்கேயன். அக்னிச் சுடரில் பிறந்தவர், என்பதையே 'அக்னி பூ' என்று சொல்கிறது அமர கோசம். அதுவும் எப்படி "ஸேநானி; அக்னி: பூ குஹ:" என்று சொல்கிறது. இன்றும் நாம் முருகனை தேவசேனாபதி என்றும் குகன் என்றும் சொல்கிறோம். அக்னிக்கு அதிதேவதையாக ஸ்கந்தனே சொல்லப்பட்டிருக்கிறது.


ரிக்வேத பஞ்ச சூத்திரத்தில் மஹேஸ்வரனை பற்றிச் சொல்லும் போது, "குமாரனை வணங்குகிற பிதா" என்பதாக சொல்லியிருப்பதாக தெரிகிறது, இன்று நாம் சொல்லும் தகப்பன் சாமி எனப்படும் ஸ்வாமிநாதன் தானே இது?. போதாயன மஹரிஷி (இவர் வேதகாலத்து ரிஷி, கர்மாக்களை பிரித்து, அதற்கு மந்த்ர-தந்த்ரங்களை வகுத்தவர்களில் ஒருவர்) தான் எழுதிய தர்ம சூத்ரத்தில் தேவ தர்பணங்களில் ஸ்கந்தனும் அவனது பரிவாரங்களும் இடம் பெறுவதாக தெரிகிறது. பாணினியின் வியாகரணத்திலும், பதஞ்சலி யோக சூத்திரத்திலும் ஸ்கந்தன், விசாகன் என்ற பெயர்களில் முருகனைப் பற்றி விஸ்தாரமாக கூறப்பட்டிருக்கிறதாம்.


கந்தனுக்கு கார்த்திகேயன் என்னும் பெயர் இருப்பது நமக்கு தெரியும், அதன் காரணமும் அறிவோம். கார்த்திகேயன் என்னும் பெயர் வடதேசத்தில் பலகாலமாக வழக்கத்தில் இருக்கிறது. நாம் இங்கு பார்வதி-பரமேஸ்வர குமாரர் என்றால் கணேசனையும் சொல்வோம், முருகனனையும் சொல்வோம். ஆனால் வட தேசத்தில் கார்த்திகேயன் மட்டுமே குமாரனாக கருதப்படுகிறார். வால்மிகி ராமாயணத்தில் வசிஷ்டர் ராம-லக்ஷ்மணர்களுக்கு ஸ்கந்தனது கதையை விரிவாகக் கூறி வேறெங்கும் இல்லாத சிறப்பாக இந்த இடத்தில் ஸ்கந்தனது கதையை கேட்பதால் எற்படும் நன்மைகளுக்கு மட்டும் பலஸ்ருதி சொல்லி அதில், பின்வருமாறு சொல்கிறார், அப்பா, காகுத்ஸா, இந்த லோகத்தில் ஒரு மனுஷன் கார்த்திகேயனிடம் பக்தி வைத்துவிட்டால் போதும், தீர்க்காயுள், புத்ர, பெளத்ராதிகள், எல்லாம் கிடைத்து முடிவில் ஸ்கந்த லோகத்தில் அவருடன் நித்ய வாசமும் செய்யலாம்". இதன் தாக்கத்தாலேயே காளிதாசனும் குமார ஸம்பவம் என்று பெயர் வைத்தார் போல. வட இந்தியாவில் கார்த்திகேயன் பிரம்மச்சாரி. ஆதி சங்கரர் காலத்தில் மீமாம்ஸ கொள்கையில் தீவிரமாக காசியில் வாழ்ந்த குமரில பட்டர் கந்தனின் மறு அவதாரமாகவே போற்றப்படுகிறார். பழங்கால வட இந்தியாவின் கோடிகளில் வாழ்ந்த அரசர்களின் பெயர் "குமார குப்தன்" என்றெல்லாம இருந்திருக்கிறது. குமரனை வெற்றியின் அடையாளமாக வணங்கி அவனது பெயரை தமது சிறப்புப் பெயர்களாக கொண்டுள்ளனர் என்றும், பழங்காலத்தில் ஷண்முகன் மயில் வாகனத்தில் இருப்பது போன்ற நாணயங்கள் (குஷாணர் காலத்தில்) கிடைத்திருப்பதும் தெரிகிறது.


ஆதிசங்கரரது சுப்ரமண்ய புஜங்கமும், அவர் ஸ்தாபித்த ஷண்மதங்களில் கெளமாரமும் ஆதிசங்கரரின் முருக வழிபாட்டிற்கு கட்டியம் கூறுகிறது. அதிலும் அவர் புஜங்கத்தில் 'ந ஜானே ந ஜானே' என்பதாக இன்னொரு தெய்வம் இல்லை, இல்லை என்று இருதரம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.

________________________________________________________
இன்று (19-05-2008) வைகாசி விசாகம். இவ்வாறாக வேத காலத்திலிருந்தே வணங்கப்பட்ட கந்தக்கடவுள் ஈசனின் தேஜஸிலிருந்து உருவான தினமே வைகாசி விசாகம். 400-450 ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டிய நாட்டில் ஸ்ரீ வைகுண்டம் என்னும் ஊரில் சண்முக சிகாமணிக்கும் சிவகாமசுந்தரி என்பவருக்கும் ஒரு ஆண் மகவு பிறந்தது. ஐந்து வயதாகியும் அந்த குழந்தைக்கு பேச்சு வராதது கண்டு பெற்றவர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். யாரோ ஒரு யதி அவர்களிடம் திருச்செந்தூர் சென்று ஒரு மண்டல காலம் ஸமுத்ரத்தில் நீராடி செந்திலாதிபனை வணங்கி விரதமிருக்கச் சொன்னார்கள். அவ்வாறு இருந்தும் குழந்தைக்கு பேச வராதது கண்டு வருந்தி, மறுநாள் உஷத் காலத்தில் மகனுடன் கடலில் இறங்கி உயிர்விட முடிவு செய்துவிடுகின்றனர். அன்றிரவு அர்ச்சகர் வடிவில் வந்த குமரன் குழந்தையை தட்டி எழுப்பி அவரது நாவில் ஷடாக்ஷர மந்த்ரத்தை எழுதி, குழந்தாய் சீக்கிரமாக விஸ்வரூப தரிசனம் காண வருமாறு பணித்துவிட்டு செல்கிறார். குழந்தையும் உடனே பெற்றோரை 'அம்மா-அப்பா' என்று அழைத்து எழுப்புகிறது. அவர்களுக்கு தங்கள் அன்பு மகன் பேசுவது கண்டு மிகுந்த வியப்பும், மகிழ்ச்சியும். நடந்ததை குழந்தை தெளிவாகச் சொன்னது. மூவரும் செந்திலாண்டவன் சன்னதிக்குச் சென்று விஸ்வரூப தரிசனம் கண்டு விரதம் முடித்து ஊர் திரும்பினர். இந்த குழந்தைதான் பின்னாளில்,

...ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே ......

...சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே ......

என்றெல்லாம் பாடிய குமர குருபரர். இவரது இன்னொரு படைப்பு மீனாக்ஷி பிள்ளைத்தமிழ்.
__________________________________________________________
த்(3)ருஸி ஸ்கந்த மூர்த்தி: ஸ்ருதெள் ஸ்கந்த கீர்த்தி:
முகே(2) மே பவித்ரம் ஸதா தச் சரித்ரம்
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்(4)ருத்யம்
கு(3)ஹே ஸந்து லீநா: மமாஸேஷ பா(4)வா:


என்னுடைய கண்கள் ஸ்கந்த மூர்த்தியே உங்களையே பார்க்கட்டும், .என் காதுகள் உங்கள் புகழையே கேட்கட்டும். என் நாக்குகள் எப்போதும் உங்கள் புனிதப் புகழ் பாடட்டும். என் கைகள் தங்களுக்கான நற்காரியங்களை செய்யட்டும்! என்னுடல் தங்களுக்கான சேவையில் ஈடுபடட்டும். இது போல என் எண்ணங்களும் எப்போதும் தங்களிடமே உரைந்து போகட்டும்.






வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!


சக்திவேல் முருகனுக்கு அரோகரா!!!