Thursday, March 6, 2008

சிவராத்ரி சிறப்புப் பதிவு - 3

சிவராத்ரி கடைசி கால / ஜாம பூஜை என்பது பொதுவாக சிவ-சக்தி ஐக்கிய வழிபாடாக கொள்வது வழக்கம். சிவம் என்றாலே ஆனந்தம் என்பது பொருள். அன்னையும் சேர்ந்த ஐக்கிய ஆனந்த ஸ்வரூபத்தை எப்படி நமது முன்னோர் வழிபட்டனர் என்பதே இந்த பதிவு. சிவ-சக்தி இணைந்த அந்த ஆனந்தத்தை அதிவீரராம பாண்டியர் எப்படி சொல்கிறார் என்றால்,'ஆரா அமுதம் உண்டவர் போல் அனந்தானந்தத் தகம்நெகிழ, ஆரா இன்பம் அறிவித்தாய்; அறியேன் இதற்கோர் வரலாறே' என்கிறார். சிவ-சக்தி ஐக்கியத்தைப் பற்றி கரிவலநல்லூர் அந்தாதியில் பாடும் போது பின்வருமாறு சொல்கிறார்.

உரகா பரணத் திருமார்பும்
உமைஒப் பனையாள் இடப்புறமும்,
சிரமா லிகையும், புரிசடையும்,
செய்ய வாயும், கறைமிடறும்
வரதா பயமும், மழுமானும்,
வயங்கு கரமும், மலரடியும்,
கருவா புரியான் வெளிப்படுத்திக்
காட்சி கொடுத்து நின்றானே.

ஸ்ரீவைஷ்ணவம் எப்போதும் பிராட்டி-பெருமாள் இணைத்தே பேசுவதைக் கண்டிருக்கலாம். அதுபோலவே சைவத்தில் உமா-மகேஸ்வரத் திருக்கோலம் முக்திக்கு முக்கியம் என்பார்கள். ஆன்மாக்களை அறியாமையிலிருந்து நீக்கி முக்தியின் பக்கம் இழுப்பதும் சக்தியோடு கூடிய சிவமே. இந்தக் கருத்தினை,

அருளது சக்தியாகும் அரன்றனக்கு;
அருளையன்றி தெருள் சிவமில்லை;
அந்தச்சிவமின்றிச் சத்தியில்லை.

என்று கூறியிருக்கிறார்கள். இதனை ஆதிசங்கரர் சிவானந்த லஹரியினைப் பின்வருமாறு ஆரம்பிக்கிறார்.

கலாப்யாம் சூடாலங்க்ருத சசிகலாப்யாம் நிஜதப:
பலாப்யாம் பக்தேக்ஷு ப்ரகடித பலாப்யாம் பவது மே
சிவாப்யாம் அஸ்தோக த்ரிபுவன சிவாப்யாம் ஹ்ருதிபுனர்
பவாப்யாம் ஆனந்த ஸ்புர தனுபவாப்யாம் நதிரியம்.

சொல்லும் பொருளும் போல, பிரிக்க முடியாத இணைந்த கோலத்தில் விளங்கும் மாதொரு பாகன் என்ற அர்த்தநாரிஸ்வர வடிவத்தினை வணங்குகிறார். இந்த ஸ்லோகத்தில் கலாப்யாம், பலாப்யாம், சிவாப்யாம், பவாப்யாம் என்ற சொற்கள் ஒவ்வொன்றும் இரண்டு முறை எடுத்தாளப்பட்டிருக்கிறது. அந்த சொற்கள் ஈசன் - இறைவி ஆகிய இருவருக்கும் பொருத்தமான பொருளினையே தருகிறது.

இருவரும் கலைகளின் வடிவானவர்கள் என்பதை கலாப்யாம் என்கிறார். 'சதுசஷ்டி கலாமயி' என்று அன்னையின் சஹஸ்ர நாமமும், ஏழிசையாய், இசைப்பயனாய் இருப்பவன் என்று தேவாரம் சொல்வதும் இதைத்தான். அம்மை-அப்பன் இருவரும் பிறைச் சந்திரனை சூடியவர்கள், இதனையே சசிகலாப்யாம் என்கிறார். இதுவே 'சாருசந்திர கலாதரா' என்று அன்னைக்கான நாமம். அப்பனை பிறைசூடிப் பெருமானே என்றும், தூவெண் மதிசூடி என்றெல்லாம் கூறுகின்றது தேவாரம். பலாப்யாம் என்பதை நிஜதப: பலாப்யாம் என்பதாக படிக்க வேண்டும். அதாவது அம்மை அப்பன் இருவருமே தவத்தின் பலனானவர்கள் என்பதாக அர்த்தம். இதே போல ஆனந்த தனுபவாப்யாம் என்பது அன்னை-ஈசன் ஆகிய இருவரும் ஆத்மானுபவத்தில் களித்திருப்பவர்கள் என்பதாக பொருள் தருகிறது.

இவ்வாறான ஈசனை, சர்வேசனை, உமா மகேசனை உளமாற வணங்கி அவனருளை நாடுவோம். எல்லோருக்கும் ஈசன் அருள் கிட்டட்டும்.

6 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

சிவராத்ரியின் பலன் எங்களுக்கு இந்தப் பதிவின் மூலமே வந்து விட்டது.சிவனை நினை மனமே இப்போதே, இன்றே. அப்புறம் நினைதுக்கொள்ளாலாம் என்றால் முடியாமல் போகலாம் சிவன் சொன்ன மாதிரி
ஒன்றுமே பயன் இல்லையென்று உணர்ந்தபின்பவர் உண்டென்பார்

ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தார்

அன்று செயலழிந்தல மருபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே

ஆதலினால் மனமே இன்றே சிவ
நாமம் சொல்லிப்பழகு

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உரகா பரணத் திருமார்பும்
உமைஒப் பனையாள் இடப்புறமும்,
சிரமா லிகையும், புரிசடையும்,
செய்ய வாயும், கறைமிடறும்
வரதா பயமும், மழுமானும்,
வயங்கு கரமும், மலரடியும்//

சூப்பர் சந்தம்!
படமே வேணாம்! பாட்டுலயே ஓவியமா வரைஞ்சிட்டார் ஈசனை!

//ஸ்ரீவைஷ்ணவம் எப்போதும் பிராட்டி-பெருமாள் இணைத்தே பேசுவதைக் கண்டிருக்கலாம். அதுபோலவே சைவத்தில் உமா-மகேஸ்வரத் திருக்கோலம் முக்திக்கு முக்கியம் என்பார்கள்.//

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே!
தாயாகித் தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம்!
உமா மகேஸ்வர பெம்மானே சரணம் சரணம்!

மதுரையம்பதி said...

வாங்க திரச. நீங்க சொல்வது சரி. இன்னைக்கு இல்லேன்னா கடைசி நேரத்துல வராது.

மதுரையம்பதி said...

வாங்க கே.ஆர்.எஸ். சரியாச் சொன்னீங்க. எழுத ஆரம்பிக்கும் போது நினைத்தேன், ஊருக்கு போகும் அவசரத்தில விடுபட்டு போச்சு.

குமரன் (Kumaran) said...

அம்மையப்பன் திருவடிகள் சரணம். சிவானந்தலஹரியையும் நன்கு இரசித்தேன்.

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி குமரன்.