Tuesday, March 4, 2008

சிவராத்ரி சிறப்புப் பதிவு -1இந்துமத பண்டிகைகளில் நவராத்திரியும், சிவராத்திரியுமே 'ராத்ரி' என்னும் பெயரோடு அழைக்கப்படுகிறது.இதற்குக் காரணம் இந்த இரண்டு பண்டிகைகளும் இரவு நேரத்தில் செய்யப்படும் பூஜையினை கொண்டது என்பதைக் குறிக்கிறது. சிவராத்திரி என்பது, நித்ய சிவராத்ரி, பக்ஷ சிவராத்ரி, மாஸ சிவராத்ரி, யோக சிவராத்ரி, மஹா சிவராத்ரி என்பதாக ஐந்து வகைப்படும். இந்த தினங்களில் பகலில் உபவாசமிருந்து, மாலையில் ஆரம்பித்து இரவு நான்கு ஜாமங்களிலும் பரமேஸ்வரனுக்கு 'ஸ்ரீருத்ர' மஹா மந்த்திரத்தால் பதினோரு திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்து, பில்வத்தால் அர்ச்சனை செய்தல் வேண்டும். இவ்வாறு சிவனை ஆராதிப்பவருக்கு அவனருளால் இவ்வுலகில் தேவையானவை எல்லாம் கிட்டுவதுடனன்றி இறந்த பின் கைலாச பதவியும் கிட்டும் என்கிறது லிங்க புராணம்.


மஹா சிவராத்ரி தினமானது சிவபஞ்சாஷர ஜபம் செய்து சித்தி செய்து கொள்ள மிகச் சிறந்த நாளாகும். அறிந்தோ, அறியாமலோ உபவாசம் செய்து, இரவு கண் விழித்து ஜபம், அர்ச்சனை போன்றவற்றை செய்து சிவ புராணம் படித்து/கேட்டு இறையருளை அடையலாம். சிவராத்ரி விரதத்தை யாதொரு பலனை விரும்பாதவரும், ஸ்ரீ வைஷ்ணவரும் கூட அனுஷ்டிக்க வேண்டும் என்று கருட புராணத்தில் மஹாவிஷ்ணு கூறியிருக்கிறார். புராணங்களில் சொல்லப் பட்டிருக்கும் பல நிகழ்ச்சிகள் சிவராத்ரி தினத்திலேயே நடந்ததாக தெரிகிறது.


ஆலஹால விஷமருந்திய சிவபெருமான் மயங்கிய நேரம் சிவராத்ரி நாள். ப்ரம்மாவும், விஷ்ணுவும் அடிமுடி தேடிச் சென்ற போது சிவன் ஜோதி ஸ்வருபனாய் நின்ற சிவனை தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்ரி. சிவராத்ரி விரதமிருந்துதான் ப்ரம்மா சரஸ்வதியையும், மஹாவிஷ்ணு லக்ஷ்மியையும், சக்ராயுதத்தையும் அடைந்தனராம். தேவி விளையாட்டாய் ஈசன் கண்களை மூட, அதன் காரணமாக உலகங்கள் இருண்டு போன போது, ஒளி வேண்டி தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்ரி காலமே. ஒரு மனுவின் காலம் முடிந்து அண்டங்கள் எல்லாம் இருண்ட சமயம் பதினோரு ருத்ரர்களும் அந்த இருள் நீங்க பரமேஸ்வரனை திருவிடை மருதூரில் பூஜித்த காலம் சிவராத்ரி.

இவ்வாறாக சிவராத்ரிக்கு ஏகப்பட்ட மஹிமைகள் உண்டு. ஈசனை வழிபட ருத்ரமும், சமகமும்தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. அவரவர் தமக்கு தெரிந்த, சிவ பரமான மந்திரங்கள், தேவாரம், திருவாசகம், போன்றவற்றைச் சொல்லலாம், அல்லது 'நம: சிவாய' என்று பக்தியுடன் ஜபித்தாலே போறும்.


சிவராத்ரி மஹிமைக்கு எடுத்துக்காட்டாக ஒரு கதையும், பூசலார் மனதாலேயே கோவில் கட்டியது போல ஆதிசங்கரர் மனதாலேயே ஈசனுக்கு பூஜை செய்த (சிவ மானஸ ஸ்துதி) ஸ்லோகமும், நாளைய பதிவில்.

8 comments:

கீதா சாம்பசிவம் said...

இன்னும் யாரும் வரலையா? ம்ம்ம்ம்ம்?? எழுத்துக் கொஞ்சம் கஷ்டமா இருக்கு, (எனக்கு) கண்ணாடியை மாத்தணும்!

அடுத்ததும் படிச்சுட்டு மொத்தமாக் கமெண்டறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

மௌளி நல்ல பதிவு. அதுவும் மூன்று நாள் மூன்று பதிவுகள். சிவராத்திரியை நன்கு கொண்டாட வழி இதுதான்.Cutain Raiser.வேறே. ஜாமாய்ங்க!

கிர்ர்ர்ர்ர்ர் வந்தாச்சா அது போதும். கண்ணாடியை மாத்தினா மட்டும் போதாது

ambi said...

மிக அருமையாக, கோர்வையாக சிவராத்ரி பற்றி பதிந்தமைக்கு நன்றி. :)

//எழுத்துக் கொஞ்சம் கஷ்டமா இருக்கு, (எனக்கு) கண்ணாடியை மாத்தணும்!
//

@geetha amdam, என்னாது, எழுத்து இன்னும் கஷ்டமா இருக்கா? மாத்த வேண்டியது கண்ணாடியை அல்ல. உங்கள் உண்மையான வயதை ஒத்துக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. :)))

@TRC sir, அப்படி நல்லா சொல்லுங்க TRC சார்.

குமரன் (Kumaran) said...

மௌலி,

சிவராத்திரிக்கு ஒரு அருமையான அறிமுகம். நன்றாக இருக்கிறது. நித்ய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி இவற்றைப் பற்றி இன்னும் சொல்லுங்கள். மாச சிவராத்திரியும், மகா சிவராத்திரியும் தெரியும்.

மதுரையம்பதி said...

மொத்தமா படிக்கிறீங்களா?, என்னைக்கு..சிவராத்ரி முடிந்து 3 நாள் முடிய போகுது....:-)

திராச ஏதோ சொல்லியிருக்கார் பார்த்துக்கங்க.

மதுரையம்பதி said...

@ திராச, எல்லாம் உங்க ஆசிர்வாதங்கள்....

மதுரையம்பதி said...

வாங்க அம்பிசார், தம்பிசாரை பார்க்கவே முடியல்லையே?....

மதுரையம்பதி said...

வாங்க குமரன். ரெண்டு நாட்கள் மதுரை விஜயம் முடிந்து இன்றுதான் வந்தேன். நீங்கள் கேட்டவற்றை எழுதுகிறேன் தனிப் பதிவாக.