ஒருநாள் கைலாயத்தில் அன்னையும் அப்பனும் ரிலாக்ஸா இருக்கும் போது அவரகளைக் காண பேய் உருவில் தலைகிழாக ஒருவர் நடந்து வருவதைக் காண்கிறார் பார்வதி. உடனே பார்வதி தேவி, "சுவாமி, இந்த கோலத்தில் வரும் இந்த பெண் யார்?" என்று கேட்கிறார். அதற்கு பதிலாக ஈசன், 'பார்வதி, வருபவள் உனக்கும் எனக்கும் அம்மை' என்கிறார். வந்தவர், இறைவன் தன்னை 'அம்மையே' என்று அழைத்ததைக் கேட்டவுடன் ஆனந்த கண்ணீர் பெருக இறைவனை தரிசித்தார்.
'அம்மா உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று ஈசன் வலிந்து கேட்க, 'பிறவா வரம் தாரீர் பெம்மானே, மீறி பிறந்தாலும் உம்மை மறவா வரம் தாரீர்' என்று கேட்டு, இறைவனையே மெய்சிலிர்க்க வைத்த பெருமைக்குரியவர். காரைக்கால் அம்மையார் என்று நாம் அழைக்கும் புனிதவதியார். மூன்றாம்/நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த இவர், அறுபத்து மூவரில் வெகு சிலரேயான பெண் நாயன்மார்களில் ஒருவர். இவரது ஜெயந்தி தினம் இன்று.
சோழவள நாட்டில் உள்ள கடற்கரை துறைமுகமாகிய காரைக்காலில் வியாபர குடும்பத்தவரான தனதத்தன் என்பவரது செல்வத் திருமகளாய் பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் புனிதவதி. சிறுவயது முதலே ஈசனிடம் மாறாத அன்பு பூண்டு வந்தவர். இவருக்கு பரமதத்தன் என்னும் நாகப்பட்டினத்தைச் சார்ந்த வியாபாரி ஒருவருடன் திருமணம் செய்வித்தனர் பெற்றோர். ஈசனிடம் மாறாத அன்பு கொண்டதால் இத்தம்பதிகளைத் தேடி சிவனடியார்கள் வருவர். அவர்களுக்கு புனிதவதியார் தலைவாழையில் உணவு படைத்து மகழ்வதுண்டு.
இவ்வாறாக ஒரு நாள் கணவன் பரமதத்தன் தனது வியாபார தலத்தில் தன் நண்பர் மாங்கனிகள் இரண்டினை தனது பணியாள் மூலமாக இல்லத்திற்கு அனுப்புகிறார். அதனைப் பெற்றுக் கொண்ட புனிதவதியார் இரண்டு கனிகளில் ஒன்றினை அன்று இல்லத்திற்கு உணவுக்கு வந்த சிவனடியாருக்கு அளித்து, இன்னொன்றை கண்வனுக்காக வைத்திருக்கிறார்.பரமதத்தனும் வந்து உணவருந்துகையில் அவருக்கு மீதமிருந்த மாங்கனியும் அளிக்கப்பட்டது. அந்த மாங்கனியின் சுவையில் ஆழ்ந்த பரமதத்தன் இன்னொரு மாங்கனியினையும் உண்பதற்குக் கேட்கிறார். புனிதவதியாருக்கு என்ன செய்வதென விளங்கவில்லை, உள்ளே சென்று மனதார இறைவனிடம் இறைஞ்ச, ஈசன் அவர் கையில் இன்னொரு பழத்தினை அளிக்கிறார். அந்த கனியினைக் கொண்டுவந்து கணவனுக்கு அளிக்கிறார். அதனைச் சுவைத்த பரமதத்தன், 'நான் கொடுத்து அனுப்பிய கனிகள் இரண்டும் ஒரே மாதிரியானதுதான் ஆனால் நீ அளித்த இரண்டாவது கனி தேவாமிருதம் போல் சுவையுடன் இருக்கிறதே என்ன காரணம்?' என்று கேட்க, புனிதவதியார் மறைக்காது நடந்ததைக் கூறுகிறார்.சிவனடியாருக்கு ஒரு பழத்தை தந்ததையும், இறையருளால் இன்னொரு பழம் வந்ததையும் நம்பாத பரமதத்தன், "இரண்டாவது கனி கொடுத்த அதே இறைவனிடம் மற்றொரு மாங்கனியினை வாங்கிவா பார்க்கலாம் என்க, கணவனே தன்னை நம்பவில்லையே என்று எண்ணிய புனிதவதியார், மனமுருகி வேண்ட, ஈசன் அவர் கையில் இன்னொரு மாங்கனியினை அருளச் செய்கிறார். இந்த கனியினையும் கணவனிடம் அளிக்கிறார் புனிதவதி. அதை பரமதத்தன் உண்ண முற்படுகையில் அது தானாகவே மறைந்துவிடுகிறது. அதிசயித்த பரமதத்தன், புனிதவதி தன் மனையாள் என்பதையும் மறந்து கையெடுத்து கும்பிட்டு தெய்வமாகவே தொழுதான். அவரை மனையாளாக நெருங்க மறுத்து விலகினான். இவ்வாறான காலத்தில் வாணிபத்தின் பொருட்டு கடல் பிரயாணம் செய்த பரமதத்தன் பாண்டிய நாட்டில் வேறு ஒரு வணிகரின் மகளை மணந்து கொண்டு ஒரு பெண் குழந்தைக்கு தந்தையும் ஆனான். அக்குழந்தைக்கு தனது முதல் மனைவி பெயரான புனிதவதி என்றே பெயரிட்டு வளர்த்து வருகிறான். இதனை அறிந்த புனிதவதியார் கணவனை பார்க்க பாண்டிய நாடு வந்தார். பரமதத்தன் தன் இரண்டாம் மனைவி, மகளுடன் புனிதவதியாரைக் கண்டு காலில் விழுந்து வணங்குகிறான். கணவனுக்குரிய தனது உடல் இப்போது அவனுக்கு தேவையில்லை என்பதை உணர்ந்த புனிதவதியார் இறைவனை வணங்கி பேய் வடிவம் பெறுகிறார். அந்த வடிவத்துடன் தலைகிழாக கையிலைக்கு நடந்து சென்று பரமசிவன் பார்வதி தரிசனம் பெறுகிறார். இறுதியில் தொண்டை நாட்டில், திருவாலங்காட்டில் முக்தி பெற்றார் என்கிறது திருத்தொண்டர் புராணம். சேக்கிழார் இவரைப்பற்றிச் சொல்லும் போது பின்வறுமாறு சொல்கிறார்.
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போதுன் அடியின் கீழிருக்க என்றார்
அன்னை காரைக்காலில் பிறந்தமையால் காரைக்கால் அம்மையார் என்று போற்றப்படுகிறார். இவர் நால்வருக்கும் மூத்தவர். இவர் திருவாலங்காட்டு ஈசன் மேல் இருபது திருப்பதிகங்கள் பாடியுள்ளார். அவை திருவாலங்காட்டு மூத்த திருப்பதிங்கள் என்றழைக்கப்படுகிறது. அது மட்டுமல்லாது அற்புத திருவந்தாதியும், இரட்டை மணிமாலை போன்றதும் இவர் எழுதியதே.
கீழே இருப்பது காரைகாலம்மை அருளிய திருவந்தாதியிலிருந்து சில பாடல்களும் அவற்றிற்கு எனக்குத் தெரிந்த பொருளும். இந்த பதிவினை படிப்பவர்கள் நான் கூறியுள்ள பொருளில் ஏதேனும் தவறு இருப்பின் சுட்டிக்காட்டி திருத்த வேண்டுகிறேன்.
பிரானென்று தன்னைப்பன் னாள்பர வித்தொழு வார்இடர்கண்
டிரான்என்ன நிற்கின்ற ஈசன்கண் டீர்இன வண்டுகிண்டிப்
பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்துபொம் மென்றுறைவாய்
அராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன் நீள்முடி அந்தணனே.
பொருள் : பிரானே! என்று தன்னை எல்லாநாட்களிலும் எப்போதும் தொழுபவரது இடர்களை பார்த்துக் கொண்டிராது களைபவன். வண்டுகள் சூழும் கொன்றை மலர்களை, செம்பொன் போன்ற செஞ்சடையில் அணிந்த அந்தணன்.
இனிவார் சடையினிற் கங்கையென் பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணில்என் செய்திகை யிற்சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந் தன்றுசெந் தீயில்முழ்கத்
தனிவார் கணைஒன்றி னால்மிகக் கோத்தஎஞ் சங்கரனே.
பொருள் : தலையில் உள்ள ஜடாமுடியில் கங்கை என்பவளை கொண்டு, கனிவாக மலைமகளையும் அருகிலிருத்தி, முப்புரங்களையும் ஒரே கணையால் எரித்த சங்கரனே.
சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாவென் றாழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஓவாது நெஞ்சே உரை.
பொருள் : நீண்ட சடையுடைய சங்கரனை, அந்த சடையில் சீற்றமுள்ள நாகத்தைச் சூடியுள்ள புண்ணியனை நம்மை எப்போதும் காக்கும் ஈசனை எப்போது மனதில் நினை.
27 comments:
தலைப்பை பாத்ததும் கீதா மேடமுக்கு பிறந்த நாளோ?னு ஓடி வந்தேன். :D
காரக்கால் அம்மையார் என்றவுடன் டக்குனு கே.பி.சுந்தராம்பாள் அம்மா நினைவுக்கு வருகிறார்கள். :))
//இந்த பதிவினை படிப்பவர்கள் நான் கூறியுள்ள பொருளில் ஏதேனும் தவறு இருப்பின் சுட்டிக்காட்டி திருத்த வேண்டுகிறேன்.//
ஹஹா! ரொம்பவே உஷாரு தான் நீங்க. எல்லாம் மாதவிபந்தலில் பார்த்த அனுபவமோ? :p
//ஹஹா! ரொம்பவே உஷாரு தான் நீங்க. எல்லாம் மாதவிபந்தலில் பார்த்த அனுபவமோ//
இல்லப்பா, மாதவி பந்தல்ல அரை-குறை தமிழைப் பார்க்க முடியாது. ஆனா என்னோடதில எல்லாமே ஆப் பாயில் தான். :-).
எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தரவில்லை இறைவன், ஆதனால பதிவுலக ஆன்மீக பெரியோர்களிடம் தப்பை திருத்திக் கொடுக்க கேட்டா நீ குறுக்கால வந்ந்து வம்பு பண்ணறீயேப்பா!! :-)
//'பிறவா வரம் தாரீர் பெம்மானே, மீறி பிறந்தாலும் உம்மை மறவா வரம் தாரீர்'//
வெகு நாட்களாக இந்தப் பதிவுலகுக்கு வரவேண்டும் என இருந்தவனுக்கு
காரைக்கால் அம்மையாரின் தினத்தன்று அந்த பாக்கியம் கிட்டியிருக்கிறது.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனச் சொல்வது திருவாசகம்.
இது போன்ற பதிவு எழுத அவன் அருள் இருந்தாலன்றி இயலாது.
God Bless you and your family.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com
http://vazhvuneri.blogspot.com
வாங்க சூரி சார். உங்கள் முதல் வரவுக்கு நன்றி. உங்களது பதிவு மற்றும் கருத்தான பல பின்னூட்டங்களை படித்திருக்கிறேன்.
அவ்வப்போது வாருங்கள்.
காரைக்கால் அம்மையார் ஜெயந்தியா இன்று!
இந்த மூன்று பாடல்களிலும் சடைபற்றி குறிப்பாகச் சொல்கிறார்! பல பாடல்களில் சுடுகாட்டு நடனத்தை போற்றுகிறார்!
அம்மையார் சடையனை இப்படிப் பல பெயர்களில் குறிப்பிடுகிறார்:
அடிகள், அழகன், அந்தணன், அரன், ஆதிரையான், ஆள்வான், இறைவன், ஈசன், உத்தமன், எந்தை, எம்மான், ஒப்பினை இல்லவன், கண்ணுதலான், கறைமிடற்றான், குழகன், சங்கரன், நம்பன், பரமன், புண்ணியன், மாயன், வானோர் பெருமான், விமலன், வேதியன்.
மௌளி,
படித்தேன் ரசித்தேன் - வாழ்த்துகள். ம.பா வின் பின்னூட்டம் தொடரும்.
(ம.பா = மறு பாதி)
மௌளி,
பிறவாமை வேண்டும் - மீண்டும் பிறப்புண்டேல் உனை மறவாமை வேண்டும் என்ற காரைக்கால் அம்மையார், தம் மன வலிமையால் இறைவனிடம், எப்போதும் நான் உன் திருவடிக் கீழ் வீற்றிருக்கும் திருவருளைத் தா எனக் கேட்பது, பிறப்பே வேண்டாம் என்பதை மறைமுகமாய்ச் சுட்டிய மாண்பு. அப்பனே, அம்மையாரைத் தாயே என்று அழைத்தது, எப்பொழுதும் பெரிய புராணத்தில் பேசப்படும் பெருமையே ஆகும்.
பாடல் பொருள் விளக்கம் எளிமையும் இயல்புமாய் உள்ளது. அடிகளின் விளக்கம் சரியே.
வாருங்கள் தமிழாசிரியை திருமதி சீனா அவர்களே....உங்களது முதல் வரவுக்கு நன்றி.
நீங்க பார்த்து பொருள் சரின்னு சொன்னது மிகுந்த மகிழ்வளிக்கிறது.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீனா சார்.
வாங்க ஜீவா.....ஈசனின் பல பெயர்களை புனிதவதியார் சொல்லியிருக்கார். ஆனா நடராஜன் என்னும் பெயரை அவர் எங்கும் உபயோகம் செய்யவில்லை என்பது பற்றிக் கூட எங்கோ படித்தேன். அதேபோல வேதியன் என்றும் குறிப்பிட்டிருக்கார்.
முதல் விசிட் இது! நல்லதொரு பதிவு படித்த உணர்வு/இனி அடிக்கடி வரேன்.
அட, எல்லாரும் வந்துட்டுப் போயாச்சா? அப்போ மாம்பழம் எனக்கு இல்லை? :P
நல்லா இருக்கு மெளலி, ஆனால் இன்னும் கொஞ்சம் விளக்கமா இருந்திருக்கலாம். நான் ஒரு சுட்டி அனுப்பறேன், உங்களுக்குத் தேவையான பாடல்களை அதிலிருந்து எடுத்துக்கொள்ளலாம், எனக்கு வேறே ஒருத்தர் அனுப்பினார். :D
//தலைப்பை பாத்ததும் கீதா மேடமுக்கு பிறந்த நாளோ?னு ஓடி வந்தேன். :D//
அம்பி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்., என்ன இந்த்ப் பதிவிலே வந்து கூட ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே? :P
வாங்க ஷைலஜா/திருஅரங்கப்ரியா....முதல் வரவுக்கு நன்றி. நேரம் கிடைக்கையில் எட்டிப்பாத்துட்டுப் போங்க. :)
வாங்க கீதாம்மா, நேத்திலேருந்து சுட்டியினை எதிர்பார்க்கிறேன், இன்னும் வரல்லையே? :)
//ஆனா நடராஜன் என்னும் பெயரை அவர் எங்கும் உபயோகம் செய்யவில்லை என்பது பற்றிக் கூட எங்கோ படித்தேன். //
ஆமாம் மதுரையம்பதி, அதனால் இவரின் காலத்தைப்பற்றி நிறைய குழப்பங்கள். Something that needs to be researched further.
நன்றாக வந்திருக்கும்மா. மௌலி. விளக்கம் புரிந்து கொள்ளும்படி இருக்கிறது.
காரைக்கால் அம்மையாரை மீண்டும் பரிச்சயம் செய்து வைத்ததற்கு நன்றி.
அம்மையாரை மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள்!!!
சென்னைக்கு அருகில் இருக்கும் திரு ஆலங்காட்டில் இன்றலவும் வருடா வருடம் மாங்கனி கொடுத்தல் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. அரிய செய்திகளைத் தந்தற்கு நன்றி.
முதல் வரி என்னமோ குழந்தைகளுக்குக் கதை சொல்லத் தொடங்குவது போல் இருக்கிறது. :-)
அந்தக்காலத்துப் புத்தகங்களில் இங்கே இருக்கிற படம் போல நிறைய படம் இருக்கும். அந்தக் காலத்து மகாபாரதம், இராமாயணம் எங்க பாட்டிக்கிட்ட இருக்கு. அங்கே எல்லாம் இந்த மாதிரி படங்களைப் பாத்திருக்கேன். :-)
காரைக்கால் அம்மையாரின் பதிகங்களை இதுவரை படித்ததில்லை மௌலி. நல்லதொரு அறிமுகம் தந்தீர்கள். மிக்க நன்றி.
இரண்டாவது பாடலில் கங்கையைச் சடையில் வைத்திருக்கிறீரே; அங்கத்தில் இருப்பவள் அவளைப் பார்த்தால் என்ன செய்வாளோ என்று வியக்கும் சுவை நன்கு இருக்கிறது. :-)
வல்லியம்மா, என்னுடைய பதிவுக்கு முதல் முறையா வந்திருக்கீங்க...மிக்க மகிழ்ச்சி...
வாங்க இறக்குவானை நிர்ஷன்.
உங்களது முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வாங்க திரச சார், நீங்க சொன்ன விழாவினைப்பற்றி நானும் படித்திருக்கிறேன்.
வாங்க குமரன்.
//முதல் வரி என்னமோ குழந்தைகளுக்குக் கதை சொல்லத் தொடங்குவது போல் இருக்கிறது. :-) //
எல்லாம் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்டதுன்னு வச்சுக்கங்களேன். :))
//அந்தக்காலத்துப் புத்தகங்களில் இங்கே இருக்கிற படம் போல நிறைய படம் இருக்கும். அந்தக் காலத்து மகாபாரதம், இராமாயணம் எங்க பாட்டிக்கிட்ட இருக்கு. அங்கே எல்லாம் இந்த மாதிரி படங்களைப் பாத்திருக்கேன். :-) //
அப்படியா?, இந்த படம் கூகிளாண்டவர் கொடுத்ததுதான். :-)
//காரைக்கால் அம்மையாரின் பதிகங்களை இதுவரை படித்ததில்லை மௌலி. நல்லதொரு அறிமுகம் தந்தீர்கள். மிக்க நன்றி. //
ஏதோ நான் மட்டும் முன்பே தெரிந்ததுன்னா சொன்னேன். பஞ்சாங்கத்தில் 2-3 நாள் முன்பு ஜெயந்தி என்று பார்த்தேன், பின்னர் மதுரைத்திட்டம் உதவியது.
//இரண்டாவது பாடலில் கங்கையைச் சடையில் வைத்திருக்கிறீரே; அங்கத்தில் இருப்பவள் அவளைப் பார்த்தால் என்ன செய்வாளோ என்று வியக்கும் சுவை நன்கு இருக்கிறது. :-)//
நன்றி.
எனக்கு ஒரு ஐயம்
புனிதவதியார் காரைக்காலில் பிறந்தார் என்று புராணம் சொல்கிறது.புனிதவதியார் இறைவனை நோக்கிச் செல்லும் பொழுது அவன் இருக்குமிடத்தில் தன் பாதம் படக் கூடாது என்றுதான் தலையால் நடந்து சென்றதாக சொல்லப் படுகிறது.கார் என்றால் கூந்தல் அந்தக் கூந்தலைக் காலாகக் கொண்டு நடந்ததால் காரைக்கால் அம்மையார் என்று ஆனாரா...,இது உண்மையென்றால் அந்த ஊருக்கு எப்படி ஏற்கனவே அப்பெயர் வந்திருக்கும்.
விளக்கம் தேவை
என் முந்தைய கேள்விக்கு இன்னும் பதில் தரவில்லையே,
வாங்க கோமாக்கா.
//கார் என்றால் கூந்தல் அந்தக் கூந்தலைக் காலாகக் கொண்டு நடந்ததால் காரைக்கால் அம்மையார் என்று ஆனாரா...,இது உண்மையென்றால் அந்த ஊருக்கு எப்படி ஏற்கனவே அப்பெயர் வந்திருக்கும்.
விளக்கம் தேவை//
அந்த ஊருக்கு அப்போது என்ன பெயர் என்று தெரியவில்லை. நீங்க மேலே சொல்லியது போல அவருக்குப் பின் கூட அப்பெயர் அந்த ஊருக்கு வந்திருக்கலாம். தேடிப் பார்க்கிறேன், பதில் கிடைத்தால் மெயில் அனுப்புகிறேன்.
Post a Comment