Wednesday, March 5, 2008

சிவராத்ரி சிறப்புப் பதிவு - 2


குருத்ரோகி என்ற வேடன் தனக்கு கடனாக பணம் கொடுத்தவர்களை ஏமாற்றினான். அவனிடம் ஏமாந்தவர்கள் ஒரு நாள் அவனை பகலெல்லம் சிவன் கோவிலில் அடைத்து வைத்தனர். இரவில் அவன் விடுவிக்கப்பட்டான். விடுபட்ட பின்பு, இரவில் அவன் வேட்டையாட செல்கிறான். அப்போது ஒரு நதியினைக் கடந்து அக்கரையினை அடைந்தான். நான்கு திக்கிலும் சப்தம் கேட்கவே, பயந்து ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான். அங்கு வந்த மான்களை அடிக்கத் தொடங்கினான். அப்போது மான்கள், 'தாங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரமது என்றும், சென்றுவிட்டு காலையில் வருவதாகவும், அவ்வாறு வராவிடில் மஹா பாபங்களைச் செய்தவர்கள் செல்லும் நரகத்திற்கு செல்லதாகவும்' கூறிச் சத்யம் செய்துவிட்டு சென்றன. இரவு முழுவது மரத்தில் உறங்காது இருக்க அம்மரத்தின் தழைகளை உருவி உதிர்த்தபடியே கண்விழித்திருந்து, பின்னர் காலையில் கிழே இறங்கினான்.

சத்யம் தவராத மான்களும் காலையில் அங்கு வந்தன, அதைக் கண்ட வேடனுக்கு நற்புத்தி உண்டாயிற்று. 'மான்கள் கூட சத்யத்தை கடைபிடிக்கிறதே?, நாம் ஏன் நல்லவனாக வாழக்க்கூடாது" என்று எண்ணி, 'இனி பிராணிகளைக் கொல்வதில்லை' என்று சத்யம் செய்தான். அப்போது அவன் முன் ஒரு சிவகணம் தோன்றி அவனிடம், 'நீ நேற்று சிவராத்ரி என்று உணராமலேயே 'சிவ சிவ' என்று விளையாட்டாக கூறியவாறு இரவு முழுவதும் வில்வ மரத்தின் மேல் விழித்திருந்து, அதன் தழைகளை கிழே இருந்த சிவலிங்கத்தில் போட்ட காரணத்தால் நீ சிவ சாயுஜ்ய பதவி அடைந்தாய்' என்று கூறி அவனை கைலாசத்திற்கு அழைத்துச் சென்றதாம். அவனுடன் இருந்த மான்கள் மிருக சீர்ஷம் என்னும் நக்ஷத்ரமாயிற்று. அறியாமல் செய்த சிவராத்ரிக்கு பலன் இதுவானால், அறிந்து விதிப்படி, இயன்றவரை, பக்தி, பணிவுடன் இந்த விரதத்தை செய்வோர் பெறும் பலனைப் பற்றி எப்படிக் கூறுவது?.

சிவராத்ரியன்று சிவ பஞ்சாக்ஷர மஹா மந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்றுக் கொள்ள மிகச்சிறந்த நாளாகும். கணவன்-மனைவி இருவருமாகச் சேர்ந்து பஞ்சாஷர உபதேசம் பெற்றுக் கொண்டு அதை அனுதினமும் ஜபித்துவர பரமசிவன் அனுக்கிரஹத்தால் நல்ல தெளிவான ஞானம், அறிவு, ஆகியவை உண்டாகும். ஏதாகிலும் சிவாபசாரம் குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த்தாலோ அல்லது சிவன் சொத்து நம் குடும்பத்தை சார்ந்திருந்ததால் உண்டாகும் மனக் குழப்பம், புத்தி மந்தம், தடுமாற்றம் போன்றவை விலகிவிடும் என்று சிவ புராணம் கூறுகிறது. நமது பதிவுலக நண்பர்களுக்கு எளிதான பூஜை கிழே!.
சிவ மானச பூஜை என்னும் ஸ்லோகத்தை ஆதி சங்கர பகவத்பாதர் அருளியிருக்கிறார். லிங்கம், விக்கிரகம் போன்ற உருவங்கள் இல்லாது, செல்ல முடியாத சமயத்தில் எளிதாக மனதாலேயே சிவனைப் பூஜிக்க மிகச் சிறந்த ஸ்லோகம் இது.

ஆராதயாமி மணி ஸந்நிபம் ஆத்மலிங்கம்
மாயாபுரி ஹ்ருதய பங்கஜ ஸந்நிவிஷ்டம்
சிரத்தா நதீ விமலசித்த ஜலாபிஷேகை:
நித்யம் ஸமாதிகுஸுமை: அபுநர்பவாய

மாயாபுரி என்னும் இந்த உடலிலுள்ள ஹ்ருதய கமலத்தில் ஸ்படிகம் போல் வெண்மையாகப் பிரகாசிக்கும் ஆத்ம லிங்கத்தை, ஸ்ரத்தை என்னும் நதியிலிருந்து நிர்மலமான சித்தம் என்னும் ஜலத்தினால் அபிஷேகம் செய்து, ஸமாதி என்னும் புஷ்பங்களால் மீண்டும் பிறவாத வரமருள ஆராதிக்கிறேன்.

ரத்தை கல்பிதமாஸநம் ஹிமஜலை: ஸ்நாநம் சதிவ்யாம்பரம்
நாநாரத்ன விபூஷிதம் ம்ருகமாதா மோதாங்கிதம் சந்தனம்
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம் புஷ்பம் சதூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பசுபதே ஹ்ருத்கல்பிதம் க்ருஹ்யதாம்


கருணைக்கடலே! பசுபதே! நவரத்தினங்கள் இழைத்த ஆசனமும், பன்னீரால் திருமஞ்சனமும், திவ்யமான பட்டாடையும், சுந்தராபரணங்களும், கஸ்தூரி கமழும் சந்தனமும், ஜாதீ, சம்பகம், பில்வபத்ரம் போன்ற புஷ்பங்களும், தூப, தீபங்களும் என் மனத்தாலே ஸங்கல்பித்து அளிக்கிறேன். அன்புடன் இவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஸெளவர்ணே நவரத்னகண்டரசிதே பாத்ரேக்ருதம் பாயஸம்
பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததியுதம் ரம்பாபலம் பாநகம்
சாகாநாமயுதம் ஜலம் ருசிகரம் கர்பூரகண்டோஜ்வலம்
தாம்பூலம் மனஸா மயாவிரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு

ப்ரபுவே! உயர்ந்த ரத்னங்கள் இழைத்த ஸுவர்ண பாத்ரத்தில் நெய்யும், பாயசமும், பஞ்ச பக்ஷணங்களும், பால், தயிர், வாழைப்பழம், பானகம், மற்றும் பல காய்கறிகளும், ருசியுள்ள நிர்மலமான ஜலமும், பச்சைக் கர்ப்பூரம் கலந்த தாம்பூலமும் பக்தியுடன் மனத்தால் ஸமர்பிக்கிறேன், அன்புடன் பெற்றுக் கொள்ளுங்கள்.

சத்ரம் சாமரயோர் யுகம் வ்யஜனகம் சாதர்கம் நிர்மலம்
வீணா பேரி ம்ருதங்க காஹலகலா கீதம் சந்ருத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதி ஸ்துதிர் பஹுவிதா சைதத் ஸமஸ்தம் மயா
ஸ்ங்கல்பேன ஸ்மர்ப்பிதம் தவவிபோ பூஜாம் க்ருஹாணாப்ரபோ

குடையும், சாமரங்களும், விசிறியும், நிர்மலமான கண்ணாடிகளும், வீணை, பேரி, மிருதங்கம்,எக்காளம்முதலிய வாத்ய கோஷங்களுடனும், பாடல்களுடனும், பல ஸ்தோத்திரங்களுடன் ஸாஷ்டாங்க நமஸ்காரமும் மனதில் அளிக்கிறேன். ப்ரபோ! என் பூஜைகளைப் பெற்றுக் கொள்வீராக.


ஆத்மா த்வம் கிரிஜா மதி: ஸஹசரா: ப்ராணா: சரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோபபோக ரசநா நித்ரா ஸ்மாதிஸ்திதி:
ஸ்ஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வா கிரோ
யத் யத் கர்ம கரோமி தத்தகிலம் சம்போ தவாராதநம்

தாங்களே நான், புத்தியே பார்வதி தேவி, பஞ்சப்ராணன்களே பணியாட்கள். என் உடம்பே உமது திருக்கோவில். நான் நுகரும் விஷயாதிகளே உமக்கு அளிக்கும் பூஜை. உறங்குவதே சமாதி நிலை. காலால் நடப்பதே உமக்குப் பிரதக்ஷிணம், பேசுவதெல்லாம் உமது தோத்திரங்கள். சம்போ! என்ன என்ன காரியங்கள் செய்கிறேனோ அவை அனைத்தும் தங்கள் ஆரதனைகளாகும்.

கரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ச்-ரவண நயனஜம் வா மானஸம் வாபராதம்
விதிதம் அவிதிதம்-வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
சிவசிவ கருணாப்தே ஸ்ரீமஹாதேவ சம்போ

மங்கள ஸ்வரூபராண கருணைக்கடலே! மகாதேவ சம்போ! அடியேன் கைகளாலும், கால்களாலும், வாக்காலும், உடலாலும், காதுகளாலும், கண்களாலும், மனத்தாலும், விதிப்படியும், விதிப்படி இல்லாமலும், பலவித குற்றங்கள் செய்திருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் அடியேனை மன்னித்து ஆட்கொள்வீராக என்ற் தங்களை மிகுந்த பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

11 comments:

ஜீவா (Jeeva Venkataraman) said...

சுலோகங்களுக்கு மிக்க நன்றி திரு.மதுரையம்பதி.

ambi said...

அருமையான சுலோகங்கள் மற்றூம் விளக்கங்கள்.


நெஞ்சகமே கோவில்
நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர்
பூஜை கொள்ள வாராய் பாரபரமே!

சொன்னது தாயுமானவர் தானே?

சில வரிகள் மறந்து விட்டது. நீங்க சொல்லலைனா எப்படியும் கேஆரெஸ் அண்ணா வந்து சொல்லிடுவார். :)))

தி. ரா. ச.(T.R.C.) said...

மௌளி மிக அருமையான பதிவு. தெரியாத விஷயங்களை நீங்கள் அளிக்கும் விதமே தனி.பட்டிணத்தார் வரிகளை ஞாபகப் படுத்துகிறது உங்கள் பதிவு

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையும்,நினையாப் பிழையும், நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும்,துதியாப் பிழையும், தொழாப் பிழையும்,
எல்லாப் பிழையும், பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே

குமரன் (Kumaran) said...

இந்தக் கதையைப் படித்திருக்கிறேன் மௌலி. அஜாமிளன் கதையைப் போல் எனக்குத் தோன்றும்.

கடைசி சுலோகம் மட்டும் நன்கு தெரியும். இன்று மற்ற சுலோகங்களையும் படித்து அறிந்து கொண்டேன் மௌலி. ஆசார்யர் எழுதிய சுலோகங்கள் எல்லாம் பெரும்பாலும் பதம் பிரித்துப் படித்தாலே புரிந்துவிடும்படியாக இருக்கிறது. மிக நன்றாகப் பொருள் எழுதியிருக்கிறீர்கள்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சிவராத்திரி அதுவுமாய் மானச பூஜை அருமை மெளலி அண்ணா!
அத்தனை ஸ்லோகங்களையும் பொறுமையாக விளக்கியமைக்கு நன்றி!

//நெஞ்சகமே கோவில்
நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர்
பூஜை கொள்ள வாராய் பாரபரமே!
சொன்னது தாயுமானவர் தானே?//

அம்பி சொன்னா தங்கக் கம்பி சொன்னா மாதிரி! :-)
தாயுமானவ சுவாமிகளே தான்!

//சில வரிகள் மறந்து விட்டது. நீங்க சொல்லலைனா எப்படியும் கேஆரெஸ் அண்ணா வந்து சொல்லிடுவார். :)))//

அடே அம்பி, இங்கும் வந்து மாவரைக்கிறியா நீ? உன்னை....:-)))
சரி தங்கக் கம்பி உத்தரவு போட்டுட்டாரு! பெங்களூர் வேற வரேன்! அதுக்காகவாச்சும் சொல்லிடறேன்!

விண்ணுக்கும் விண்ணாகி மேவும் உனக்கு யான்பூசை
பண்ணி நிற்குமாறு பகராய் பராபரமே.

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சன நீர் பூசைகொள்ள வாராய் பராபரமே

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி ஜீவா.

மதுரையம்பதி said...

அம்பி, நீங்க சொன்னா கே ஆர் எஸ் கேட்காம விட்டுடுவாரா என்ன? மிச்சத்தை எழுதிட்டார் பாருங்க.

மதுரையம்பதி said...

நல்லவை, அல்லவை எல்லாமே கச்சி எகம்பன் தான், இது பட்டினத்தார் சொன்னதா திரச?.

மதுரையம்பதி said...

வாங்க குமரன். ஏதோ எனக்குத் தெரிந்த வரையிலும் சொல்லியிருக்கிறேன். மேலும், சில குறிப்புக்கள் உதவுகிறது.

மதுரையம்பதி said...

வாங்க கே.ஆர்.எஸ்.

//அத்தனை ஸ்லோகங்களையும் பொறுமையாக விளக்கியமைக்கு நன்றி//

ஏதோ எனக்கு தெரிந்ததை, எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதை எழுதுகிறேன்.

சான்ஸ் கிடைத்தால் அம்பி மாவு மட்டுமா அரைப்பார்?, சட்னி, சாம்பார், மசாலான்னு எல்லாம் அரைப்பார். :-)

திவா said...

//தாங்களே நான், புத்தியே பார்வதி தேவி, பஞ்சப்ராணன்களே பணியாட்கள். என் உடம்பே உமது திருக்கோவில். நான் நுகரும் விஷயாதிகளே உமக்கு அளிக்கும் பூஜை. உறங்குவதே சமாதி நிலை. காலால் நடப்பதே உமக்குப் பிரதக்ஷிணம், பேசுவதெல்லாம் உமது தோத்திரங்கள். சம்போ! என்ன என்ன காரியங்கள் செய்கிறேனோ அவை அனைத்தும் தங்கள் ஆரதனைகளாகும்.//

மஹா நாராயண உபநிஷத் நினைவுக்கு வருகிறது!