Monday, November 19, 2007

அந்திரி சூட்டக் கனாக் கண்டேன்....



இந்திரன் உள்ளிட்ட தேவர்குழாம் எல்லாம்
வந்திருந்தென்னை மகள்பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன்.



கோதை நாச்சியார் தனது கனவில் திருமணக் காட்சியினை சொல்கையில் மேற்கண்டவாறு சொல்கிறார். அதாவது கண்ணனுடன் தனது திருமணம் நடக்கையில் இந்திரன் முதலிட்ட எல்லா தேவர்களும் வந்திருந்தனர் என்று சொல்லி, பின்னர் அந்தரி ஆண்டாளுக்கு கூறைப் புடவை அணிவித்து, மலர் மாலையைச் சூட்டினாள் என்கிறார். கண்ணனின் சகோதரி முறையில் இருக்கும் துர்காம்பிகை/பராசக்திதான் அந்த அந்தரி. இன்றைய திருமணங்களிலும் மாப்பிள்ளையின் சகோதரி தானே ஓதியிட்டு தரும் கூறைப்புடவையினை உடுத்த உதவி மணமேடைக்கு கூட்டிவரும் முறையிருக்கிறதே.


அந்தரி என்பது அம்பிகையின் பெயர். துர்காதேவிக்கு அந்தரி என்ற பெயருண்டு. அபிராமி பட்டரும் இந்த பெயரைச் சொல்கிறார். நமது மனதுக்குள் வாசம் செய்பவள், அந்தராத்மாவாக இருக்கும் சக்தி அந்தரி. சத்-சித்-ஆனந்தம் என்கிறோம். அதில் உள்ள 'சித்' என்பதுதான் இந்த அந்தரி.


"சத்" என்பது சகலத்துக்கும் சத்தியமாக உள்ள பரமாத்மா. இந்த பரமாத்மாவுடன் 'சித்' இணைந்து கிடைக்கும் ஆனந்தமே சச்சிதானந்தம். சித் என்பதே சைதன்யம். அதாவது ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் பரமாத்ம ஸ்வருபமாக இருப்பது. இந்த சத்-சித்-ஆனந்த நிலையினை கூறும் அன்னையின் நாமா, "சிதக்னி குண்ட சம்பூதா". அதாவது நமது 'சித்'திலே நாம் அவளை நினைத்துச் செய்கின்ற பிரார்த்தனை எனப்படும் யாகத்தில் தோன்றுபவள் சிதக்னி குண்ட சம்பூதா. இவ்வாறாக தோன்றியவள் நமக்கு தேவ உணர்வினை, அதாவது சத்-சித் ஆனந்தத்தை அளிப்பதால் தேவ-கார்ய-சமுத்யதா.


பண்டாசுர வதம் நடப்பதற்காக தேவர்கள் அன்னையை வழிபட்டனர். அப்போது தேவர்களை பண்டாசுரனிடமிருந்து காக்கும் பொருட்டு (தேவகார்ய சமுத்யதா), அன்னை அந்த தேவர்கள் செய்த யாக குண்டத்திலிருந்து வந்தாளாம். அதுவும் வரும் போதே 16 வயது இளமங்கையாக வந்தாளாம்.
இதனாலும் அவள் "சிதக்னிகுண்ட சம்பூதா - தேவகார்ய சமுத்யதா"


இதில் சிதக்னிகுண்ட சம்பூதா என்பது ஒரு நாமா, தேவ-கார்ய சமுத்யதா என்பது அடுத்த நாமம்.

6 comments:

குமரன் (Kumaran) said...

சித் அக்னி குண்ட சம்பூதா, தேவ கார்ய சமுத்யதா என்ற இரண்டு திருநாமங்களுக்கும் நல்ல விளக்கம் மௌலி.

Geetha Sambasivam said...

அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நல்லா இருக்கு! உங்கள் வேலைகளுக்கு இடையில் இந்தப் பணியும் பார்த்துப் பார்த்துச் செய்கிறீர்கள். நன்றி.

manipayal said...

உங்க கமெண்ட்ஸ் எல்லாம் நிறையா படிச்சிருக்கேன். இன்னிக்குதான் உங்க வலைக்கு வரேன். பல நல்ல தகவல்கள். நன்றி

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி குமரன், கீதாம்மா...

முதல் வருகைக்கு நன்றி மணிப்பயல் சார்.

தி. ரா. ச.(T.R.C.) said...

அந்தரி என் பாசத்தொடரை எல்லாம் வந்தரி என்று அழைத்த பட்டரின் விளக்கத்தோடு லலிதாவின் 2 நாமங்களை அளித்ததற்கு நன்றி. தேவர்களின் உதவிக்காக அசுரர்களை அழிக்க வந்த்தால் கூட தேவ கார்ய சமுத்யதா என்றும் கூறலாமோ.தவறு என்றால் விலக்கவும்.

மெளலி (மதுரையம்பதி) said...

விலகக வேண்டியதில்லை தி.ரா.ச சார். நீங்க சொன்னதைத் தான் நானும் கடைசி பாராவில் சொல்லியிருக்கேன். நின்றி.