Tuesday, May 18, 2010

சங்கர ஜெயந்தி சிறப்புப் பதிவு 2 : சங்கரருக்கு பராசக்தி தரிசனம்

ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர

இன்று சங்கர ஜெயந்தி, அவரது பிறந்த தினமான வைசாக சுத்த பஞ்சமி. இந்த நன்னாளில், அவருக்கு முதன்முதலில் கிட்டிய இறை-தரிசனத்தைப் பார்ப்போமா?.

சிறப்புப் பதிவு-1 இங்கே!



ஒருநாள் சிவகுரு அவர்களால் பூஜை செய்ய இயலாத நிலை, ஆகையால் தாய் ஆர்யாம்பாள் குழந்தை சங்கரரரிடம் பாலைக் கொடுத்து அனுப்பி அம்பிகைக்கு நிவேதனம் செய்யச் சொல்லுகிறார். சங்கரரும் கோவிலை அடைந்து அம்பிகையின்முன் பாலை வைத்துவிட்டு அம்பிகையை நோக்கி 'என் தந்தைக்கு பதிலாக நான் வந்திருக்கிறேன், எப்போதும் போல இன்றும் நீ பாலை கொஞ்சம் அருந்தி, மீதத்தை எனக்குத் தா" என்று பிரார்த்தனை செய்கிறார். குழந்தை சங்கரரின் பரிசுத்தமான பிரார்த்தனைக் கேட்ட அம்பிகை, அவர் கொண்டுவந்த பாலை எடுத்து அருந்துகிறாள். அப்போது தன் முன்னால் இருக்கும் குழந்தையின் சிறப்பினை நினைத்தவாறு முழுவதையும் அருந்திவிடுகிறாள்.

தனக்கு மீதம் ஏதும் வைக்காது பால் முழுவதையும் அருந்தியதைக் கண்ட பாலகர் வருத்தமுற்று அழ ஆரம்பித்துவிடுகிறார். அப்போதுதான் அம்பிகைக்கு தனது செயல் புரியவருகிறது. கருணா ரூபமான அவள் தனது செல்லக் குழந்தை, ஈச்வரனதுஅம்சமான அக்குழந்தையின் அழுகையை சகியாது, குழந்தை சங்கரரை தனது மடியிலிருத்தி, தனது ஸ்தனத்திலிருந்து பாலைத் தருகிறாள். பின்னர் குழந்தையை கொஞ்சி, இல்லத்திற்கு அனுப்புகிறாள். இல்லம் திரும்பிய பாலகர் தனது தாயிடம் நடந்த சம்பவத்தைக் கூறினார் என்பது மாதவீய சங்கர விஜயத்தில் கூறப்பட்டிருப்பது.

இந்த நிகழ்வினை செளந்தர்யலஹரியிலும் சொல்லியிருக்கிறார் ஆசார்யார்.
அந்தப் பாடல்,

தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசுராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானாம் அஜநி கமநீய: கவயிதா (75)

[அம்பிகே!, உன்னுடைய ஸ்தன்யமானது ஹ்ருதயத்திலிருந்து உண்டான க்ஷீர ஸமுத்ரம் போலவும், ஸாரஸ்வத ப்ரவாஹம் போலவும் பெருகுகின்றது என்று நினைக்கிறேன். ஏனென்றால் உன்னால் கருணையுடன் கொடுக்கப்பட்ட அந்தப் பாலைப் பருகிய த்ராவிட தேசத்து சிசு ஒருவன் ப்ரஸித்தர்களான கவிகளும் மெச்சும்படியான கவியாக ஆகிவிட்டானன்றோ!. ]

விநயம் என்பதின் பொருளான ஆசார்யாள், தம்மைத் தாமே இப்படி சிறந்த கவியாகிவிட்டேன் என்று சொல்லிக் கொள்வாரா என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. சரி, இது சம்பந்தரைக் குறிப்பது என்று எடுத்துக் கொள்வதானால் இருவருக்கும் உண்டான காலம் வேறுபடுவது மிகத் தெளிவு. செளந்தர்ய லஹரியை அளித்தது அவர் ஹிமாசலம் சென்று ஈச்வர தரிசனம் பெற்ற பிறகே, அதற்கு முன்னரே அவர் பல ஸ்லோகங்கள், பாஷ்யம் போன்றவற்றைச் செய்துவிடுகிறார். அவ்வாறு பல நூல்களையும் படைத்ததால் உலகம் அவரைக் கொண்டாட, அந்தக் கொண்டாட்டத்தை, உலகம் புகழ்ந்ததன் காரணத்தை இந்த ஸ்லோகத்தில், அன்னையின் ஸ்தனங்களது விசேஷத்தைப் பற்றிச் சொல்லுகையில் சொல்வதாகச் சொல்லுகிறார்கள் பெரியவர்கள்.



இரண்டாவதாக சங்கரரருக்குக் கிடத்ததும் அம்பிகையின் தரிசனமே!, இது எல்லா சங்கர விஜயங்களில் மற்றும் பெரியோர்களால் ஏற்கப்பட்ட ஒன்று. பிரம்ஹச்சார்யத்தின் பகுதியாக பிக்ஷை எடுக்கையில் ஏழைக் குடும்பத்தின் வறுமையை நீக்கப் பாடிய போது,மஹா-லக்ஷ்மி அவருக்கு மட்டும் தெரியுமாறு தோன்றி அந்த வறியவர் குடும்பத்திற்கு அருளினாள். இந்த சந்தர்ப்பத்தில் பாடியதே "கனகதாரா ஸ்தோத்ரம்". முதலில் பகவதி தரிசனம், பின்னர் லக்ஷ்மியும் தரிசனம். அடுத்து சரஸ்வதி தரிசனம் தந்ததும் நமக்குத் தெரிந்தது தான்.

மண்டனமிச்ரருடன் வாதம் செய்கையில் அவருடைய பத்னியாக வந்தது சரஸ்வதி. மண்டன மிச்ரருடன் (பிரம்ஹாவின் அவதாரம்) வாதத்தில் வென்ற பின்னர் கற்பில் சிறந்த அவருடைய மனையாள் உபய பாரதி, தனது பதியின் தோல்வியைச் சகியாது, சங்கரருடன் வாதம் செய்ய ஆரம்பித்து, அவளும் தோல்வியடைவதும், அவ்வாறு தோல்வியடைந்த பின்னர் மண்டன மிச்ரர் வாதத்தின் ஆரம்பத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி சன்யாஸம் ஏற்கிறார். அப்போது உபய-பாரதி,அந்தர்யாமியாகிறார். ஜகதகுரு தனது யோக சக்தியின் மூலமாக வந்தது யார் என்று அறிவதாகச் சொல்கிறது சங்கர விஜயம்.

ஆக சங்கரருக்கு முதலில் அனுக்ரஹம் செய்தது பராசக்தியே என்று தெரிகிறது. பிற்காலத்திலேயே மற்ற ரூபங்களின் தரிசனம் கிட்டியிருக்கிறது.
இந்த நான்னாளில் பரம பூஜ்யரான சங்கர பகவத்பாதர் பதம் பணிவோம்.


ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர

9 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

சௌந்தர்ய லஹரியில் திரவிட சிசு என்று சொல்வது ஞான சம்பந்தரைக் குறித்து என்பதாகக் கேள்விப்பட்டு ஞாபகம். இங்கே சங்கரர் தன்னுடைய சொந்த அனுபவமாகவே சொல்வதாக இருப்பது புதிதாக இருக்கிறது மௌலி! அவள் அம்மா! அழுகிற அத்தனை குழந்தைகளுக்கும் வாத்சல்யத்தோடு அமுதூட்டுபவள்! சங்கரரும் அதில் அடக்கம் என்று வைத்துக்கொள்வதில் தவறில்லைதான்! ஆனாலும், இது புதிய செய்தியாக இருக்கிறது.

கபீரன்பன் said...

மிகவும் சிரத்தையாக, ஆச்சாரியரின் ஜயந்தியை முன்னிட்டுத் தரும் இடுகைகள் சிறப்பாக உள்ளன. அவரருள் என்றும் தங்களுக்கு துணையிருக்கும். நன்றி

மதுரையம்பதி said...

mவாங்க கிருஷ்ண மூர்த்தி சார்.

நீங்கள் கேள்விப்பட்டதும் ஒரு விதத்தில் சரிதான்...இந்த நிகழ்வில் சற்று குழப்பம் இருக்கிறது.

சங்கரர் காலத்தால் திருஞான சம்பந்தரை விட முந்தியவர், ஆகவே சங்கரர் தனது பாடலில் சம்பந்தரைச் சொல்லியிருக்க முடியாது என்று சொல்வார்கள்.

சங்கரர் கி.மு என்று சொல்வதற்கான சாத்தியங்களை பல விதங்களில் நிறுவுகிறார்கள். அப்படிச் செய்கையில் இந்த நிகழ்வு செளந்தர்ய லஹரியில் சங்கரர் தன்னையே சொல்லிக் கொள்வதாக வரும்.

இன்னும் சொல்லப் போனால் கி.பியிலேயே இரண்டு ஆண்டுகளைச் சொல்லி குழப்புவதும் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் நமது வரலாற்றை எழுதியதில் ஏற்பட்ட குழப்பம் இவை என்பார்கள்.

கடபயாதி சங்க்யை, புத்த மதத்தின் தொன்மை, மெளரிய வம்ச வரலாறு, சிருங்கேரி தவிர்த்த மற்ற 3 ஆம்னாய பீடங்களின் வரலாறு, அதன் ஆசார்ய பரம்பரைக் குறிப்புகள், காஞ்சி மடத்து ஆசார்ய பரம்பரைக் குறிப்புக்கள் மற்றும் பல விஷயங்களைக் கொண்டு பரமாசார்யார் சங்கரரது காலம் கி.மு என்று சொல்லியிருக்கிறார். நேரம் கிடைக்கையில் அதனையும்
தட்டச்சுகிறேன்.

மதுரையம்பதி said...

வாருங்கள் கபீரன்பன் சார்....உங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி.

Rajewh said...

போன மாசம்தான் பிறந்தநாள் வந்தது!
இந்த மாசமும் சங்கரர் பிறந்த நாளா!

Any way பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சங்கரா!

thanks mouli sir!

Rajesh

மதுரையம்பதி said...

வாங்க ராஜேஷ்....போன மாதம் சங்கர ஜெயந்தியல்லவே!, ராமானுஜ ஜெயந்தி மட்டுமே போன மாதம். சங்கர மடங்களில் ஜெயந்தி என்பதும் பிறந்த திதியை வைத்தே கொண்டாடப்படும், நக்ஷத்திரம் வைத்தல்ல...வைகாச-சுக்ல பக்ஷ பஞ்சமியே சங்கர ஜெயந்தி.

SANKARAN said...

மிகவும் அருமை சார் சங்கரர் ஜயந்தி பதிவு. அம்பாள் அருள் எல்லோர்க்கும் கிடைக்கட்டும்.

குமரன் (Kumaran) said...

ஒரு தட்டச்சுப்பிழை மௌலி - வைசாக சுத்த பஞ்சமி என்று சொல்வதற்குப் பதிலாக வைகாச சுத்த பஞ்சமி என்று சொல்லியிருக்கிறீர்கள்.

மதுரையம்பதி said...

வாங்க குமரன்...."வைகாச" சரிதான் குமரன்... வைகாச என்பது வடமொழியில் சொல்லப்படுகிறது...வழக்கில் கூட இருக்கிறது இன்னமும்.