Thursday, May 6, 2010

தேவர்ஷிகண ஸங்காத ஸ்தூயமான ஆத்ம வைபவா'தேவர்ஷிகண ஸங்காத ஸ்தூயமான ஆத்ம வைபவா', அதாவது தேவர்களும், முனிவர்களும், கணங்களும் தமது ஆத்ம ரூபமாக போற்றும் அம்பிகை என்பது பொருள். இதையே வேறு விதமாக தேவர்கள், ரிஷிகள் மற்றும் கணங்கள் துதிக்கும் சிறப்பு வாய்ந்தவள் என்றும் கொள்ளலாம். வைபவம் என்றால் எங்கும் பரவியிருப்பது என்று ஒரு பொருள் சொல்லுகிறார்கள். அப்படிப் பார்த்தால் அம்பாள் ஸர்வ வியாபியாக இருப்பதை துதித்தார்கள் எனலாம். 'ஸங்காத' என்பதை ஸம்யக் + காத என்று பிரித்து, பண்டாசுர வதத்தைச் சுட்டுவதாகவும் சொல்லலாம். 'தேவர்ஷிகண' என்பதை பிரம்மா முதலான த்ரிமூர்த்திகளாகவும், ரிஷி என்பதற்கு வஸிஷ்டாதி ரிஷிகளையும், கண என்பதற்கு ஆதித்யன் முதலான கணங்களையும் சொல்லுவது வழக்கம். இவர்கள் எல்லோரும் சேர்ந்து துதிக்கிறார்கள், கதறுகிறார்கள் அம்பிகையிடத்தில். ஏதற்காக இவ்வாறு என்றால் பண்டாசுரன் படுத்தும் பாடு தாங்காமல் அம்பிகையிடம் இறைஞ்சுகிறார்கள். இதே நாமம் அக்னி புராணத்திலும் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.

'பண்ட' என்றால் நல்லது என்று பொருள், பண்டன் என்றால் நல்லவன். அசுரனில் அதென்ன நல்ல அசுரன்?. இந்த இடத்தில் கொஞ்சம் லலிதோபாக்யானத்தைப் பார்க்க வேண்டும். ஈசனது நெற்றிக்கண்ணின் தழலால் மன்மதன் சாம்பலாகிறான். அந்த சாம்பல் கைலாசத்தில் இருக்கும் போது குழந்தை கணேசர் அந்த சாம்பலை தனது கைகளால் பிடித்து ஓர் உருவத்தைச் செய்கிறார். கைலாசத்தில் உருவான அந்த சாம்பலால் ஆன உருவமும், ஸ்தல விசேஷத்தின் காரணமாக தவத்தில் ஆழ்ந்துவிடுகிறது. இதன் தவத்தைக் கண்ட பிரம்மா, 'பண்ட, பண்ட' (நல்லது, நல்லது) என்று வாழ்த்துகிறார். தவத்தின் மூலம் சிவனது அருளுக்குப் பாத்திரமாகி ஆற்றல் பெறுகிறது அந்த சாம்பல் பொம்மை. ஆற்றல் வந்துட்டாலே அஹங்காரம் வந்துடும் என்பது பூலோகத்தில் மட்டுமல்ல, கைலாசத்திலும் அதேதான் போல. பண்டனுக்கு ஆற்றல் வந்ததும் அஹங்காரமும் வந்துவிட்டுகிறது. அஹங்காரமுற்ற பண்டன், பண்டாசுரனாகிறான். நல்லவர்கள் கூட செயல்திறன்/ஆற்றல் வந்துவிட்டால் அஹங்காரம் வந்து தீயவர்களாகிவிடுகிறார்களே?, அதைக் காட்டுவதுதான் பண்டாசுரன் படைப்பு. தனக்கு ஈசன் அளித்த ஆற்றலை தவறாகப் பயன்படுத்தி சகல உலகங்களையும் ஆட்டிப் படைக்கிறான். அப்போது அவனை அடக்குவதற்காகவே எல்லோரும் அம்பிகையிடம் முறையிடுகிறார்கள்.

தேவர்களுக்கு உதவ, தேவேந்திரனுடைய வேள்வித் தீயில் இருந்து சிதக்னி குண்ட சம்பூதாவாக உருவாகிறாள் ஸ்ரீ லலிதை. உதித்த லலிதை எப்படி உதித்தாளாம்?, பண்டாசுரனை ஸம்ஹாரம் செய்யத் தேவையான சக்திகளின் ஸைன்யத்துடனேயே உதித்தாளாம். இவ்வாறு அஹங்காரத்தை/பண்டனை அழிக்கத் தேவையான சக்திகளை தன்னுள் கொண்ட லலிதை என்பதைத்தான் 'பண்டாஸுர வதோத்யுக்த சக்திச்ஸேனா ஸமன்விதா' என்னும் நாமம் சொல்கிறது. சக்தி ஸைன்யம் எப்படியிருந்தது என்றால் சதுரங்க சைன்யமும் இருந்தது, இதனால் 'சதுரங்க பலேசஸ்வரி' என்ற நாமம். ஸைன்யத்துடனேயே உதித்தாள் என்றால் என்ன விதமான ஸைன்யம்? என்பதையும் பார்த்துடலாமா?

யானைப் படை, குதிரைப்படை, தேர்ப்படை ஆகிய எல்லாவற்றுடன் உதித்தாள். அம்பிகையின் யானைப் படைக்குத் தலைவியாக ஸம்பத்கரீ என்னும் தேவி உதித்தாள். இந்த ஸம்பத்கரீயின் உத்தரவுக்குக் கட்டுப்பட்ட யானைகளின் கூட்டத்தால் அம்பிகை சேவிக்கப்படுகிறாள் என்பதை குறிக்கும் நாமமே,"ஸம்பத்கரீ ஸமாரூட ஸிந்துரவ்ரஜ ஸேவிதா".இந்த ஸம்பத்கரீயே அம்பிகையின் ஆயுதங்களில் அங்குசமாக இருப்பவள். ஞானம் (அறிவு), ஞாத்ரூ (அறிபவன்), ஞேயம் (அறியும் பொருள்) இந்த மூன்றின் வித்யாசங்களைத் தெரிந்து கொண்டு இவற்றை ஸம்பந்தப்படுத்தும் ஞான ரூபமான வ்ருத்திக்கு ஸுக-ஸம்பத்கரீ என சொல்லுவார்களாம்.

அம்பிகையின் சதுரங்க ஸைன்யத்தில் குதிரைப்படைக்குத் தலைமை தாங்குபவள் அச்வாரூடா என்னும் சக்தி, இவள் அம்பிகையின் கையில் இருக்கும் பாசம் என்னும் ஆயுதமாவாள். இந்த அச்வாரூடாவின் உத்தரவுக்குட்பட்ட பல கோடி குதிரைகளால் சூழப்பட்டவளாம் அம்பிகை, இதுவே 'அச்வாரூடஸ்திஷ்டிதாச்வ கோடி கோடிபிராவ்ருதா.' பஞ்ச இந்திரியங்களை அச்வங்களாகச் சொல்லி அதன் தலைமையாக மனஸ் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் பெரியோர். இந்திரிய்ங்களின் மூலமாக மனஸ் தனக்குச் சாதகமானதைச் செய்துகொள்வதால் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, மனதுக்கு அடங்கிய இந்திரியங்களான குதிரைகளால் சூழப்பட்டவளாகிறாள் ஸ்ரீ லலிதை.

இந்த நாமாக்களுக்குப் பின்னர் அன்னையின் ரத ஸைன்யம் பற்றிச் சொல்லும் 3 நாமங்களை நாம் முன்னரே பார்த்துவிட்டோம்.

4 comments:

vijay said...

/* பண்ட' என்றால் நல்லது என்று பொருள், பண்டன் என்றால் நல்லவன் */
/* பிரம்மா, 'பண்ட, பண்ட' (நல்லது, நல்லது) என்று வாழ்த்துகிறார். */

'ஸ்ரீ மாதா' புஸ்தகத்தில் அதன் ஆசிரியர் ( கணேஷன் என்பதாக நினைவு)
'பண்டன்' என்றால் 'கோமாளி' என்று அர்த்தம் சொல்லுகிறார்.
இதைக் குற்றமாக சொல்லவில்லை !!!

- சௌ. விஜயராகவன்

மதுரையம்பதி said...

வாங்க விஜய். நான் படித்ததில்லை...ஆனால் எனக்குச் சொல்லியவர்கள் இப்படித்தான் சொல்லியிருககார்கள்...புத்தகத்தின் பெயர், ஆசிரியர், பதிப்பகம் ஆகிய தகவல்களை தாருங்கள்...கிடைத்தால் வாங்கிப் படிக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

தேவ ரிஷி கணங்களால் வணங்கப்படும் அன்னையின் திருவடிகளுக்கு அடியேனும் வணக்கங்கள்!

மதுரையம்பதி said...

வாங்க குமரன்...