பண்டாஸுரனுடைய ஸைன்யத்தை வதம் செய்வதில் முயற்சியுடைய சக்திகளின் பராக்ரமத்தால் ஸந்தோஷம் அடைந்தவள் என்பதே 'பண்டஸைன்ய வதோத்யுக்த சக்தி விக்ரம ஹர்ஷிதா' என்னும் நாமத்தின் பொருள். பண்டாஸுரனுடைய படைகளை வதம் செய்வ முயலும் சக்திகள் யார்?, எல்லாம் அம்பாளின் ரூபங்களான, வாராஹீ, நாரஸிம்ஹி, நகுலி, தூமாவதி, மந்திரிணி, தந்திரிணி போன்ற சக்திகள் தாம், இந்த சக்திகளின் பராக்ரமத்தால் பண்டனுடைய படைகளை சிதறடிக்கச் செய்வதால் மகிழ்கிறாளாம் அன்னை. பண்டன் என்பதே ஜீவாத்மா, அவனுடைய படைகளை (அதாவது பேத பாவத்தை) நாசம் செய்யும் சக்திகளைக் கண்டு சந்தோஷப்படுபவள் என்று பாஸ்கரர் சொல்லுகிறார்.
பண்டாசஸுரனுடைய படைத் ஸேனாபதி/தளபதிகளான தமனகன், சித்ரகுப்தன் போன்றோர் இரவு நேரத்தில் அன்னையின் சக்ரராஜத்தை சூழ்ந்து கபட யுத்தம் செய்ய முயலுகின்றனர். அப்போது திதி நித்யா தேவதைகள் அம்பிகைக்கு முன்னர் தங்களது வீரத்தை வெளிப்படுத்தி அசுர தளபதிகளை வீழ்த்துகின்றனராம். அதைக் கண்ட அம்பிகை மிகுந்த மகிழ்வடைகிறாள், இதைச் சொல்வதே 'நித்யபராக்ரமாடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகா'. அதாவது நித்யா தேவதைகளது பராக்ரமத்தைப் பார்ப்பதில் மகிழ்பவள். ஜீவாத்மாவிடத்திருக்கு சாஸ்வதமான ஆத்ம சக்தி அதிகரித்து வருவதைக் கண்டு ஸந்தோஷிப்பவள். திதி நித்யா தேவதைகள் சேனாதிபதிகளை வீழ்த்தியது போல மந்த்ரிணி என்றழைக்கப்படும் ச்யாமளா தேவியானவள், விஷங்கன் என்கிற பராக்ரமம் மிகுந்த அசுரனை (இவன் பண்டனுக்கு சஹோதரன்) வதைக்கிறாள். விஷங்கனது வதத்தால் மகிழும் அம்பிகையைச் சொல்வதுதான் "மந்த்ரிண்யம்பா விரசித விஷங்க வத தோஷிதா".
மந்த்ரிணியம்பா விஷங்கனை வதைத்தது போலவே வாராஹி விசுக்ரன் என்னும் அரக்கனை வதம் செய்கிறாள். இந்த அசுரனும் பண்டனுக்குச் சகோதரனே. விசுக்ரனது ப்ராணனை போக்கடித்த வாராஹியின் வீரத்தால் மகிழ்ந்தவள் என்பதைக் குறிக்கும் நாமாவே, 'விசுக்ர-ப்ராண-ஹரண வாராஹீ வீர்ய நந்திதா' என்பது.
இந்த விஷங்கன், விசுக்ரன் இருவரும் பண்டனுடைய புஜங்களிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த கடைசி இரண்டு நாமங்களும் லலிதோபாக்யானத்தில் கொஞ்சம் வேறுபட்டுக் காணப்படுகிறது. அதாவது விஷங்கனை வாராஹி வதம் செய்ததாகவும், விசுக்ரனை மந்த்ரிணி வென்றதாகவும் சொல்லியிருக்கிறது. ஆனால் வாக்தேவதைகள் சொல்லிய சஹஸ்ரநாமமே ப்ரமாணம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
2 comments:
இத்தனை அழகா எங்கேந்து இந்த ரூபமெல்லாம் மௌலி? எந்த ஊர் ஸ்வாமி? ?வெள்ளி கவசம் போட்டு முந்தைய போஸ்ட் படமும் நன்னா இருந்தது.
தண்டினியும் வராஹியும் ஒண்ணே தானே?
வாங்க ஜெயஸ்ரீ-மா!. படம் மைசூர் சாமுண்டீ. வெள்ளிக்கவசம் அயல்நாட்டு தேவி, எந்த ஊர்ன்னு தெரியல்லை....எல்லாம் கூகிளார் உபயம் தான். :-). ஆமாம் தண்டினியும் வாராஹியும், அகிலாண்டேஸ்வரியும் ஒன்றுதான்....திருவானைக்காவல் அம்மனை தண்டினி/சேனாபதி என்றும், மீனாக்ஷியை மந்திரிணியாகவும் சொல்வர். வாராஹி=தண்டினி என்பதே லலிதோபாக்யானம் சொல்வது.
Post a Comment