பலவருடங்களுக்கு முன்னர் நான் மதுரையில் படித்து வருகையில் அங்குள்ள ராமகிருஷ்ண மடத்தில் இருந்த ஸ்வாமிகளை பார்க்கும் வாய்ப்பு சில நாட்கள் முன்னர் கிடைத்தது. நான் அவரை கிட்டத்தட்ட 18 வருஷங்கள் கழித்துச் சந்தித்தேன். அவரும், மதுரையிலிருந்து பல இடங்களுக்கு மாறுதலாகி, கடைசியாகத் தற்போது பெங்களூர் வந்திருந்தார். அவரும், அவருக்குத் தெரிந்த 3 ஆன்மிக நண்பர்களும் சந்தித்துக் கொண்டோம், அதன் ஜிஸ்ட் இங்கே. இன்றைக்கு பள்ளிகளில் ஆசிரியர்-மாணாக்கர் தொடர்பு பற்றிப் பேச ஆரம்பித்து, அது சீக்ஷாவல்லியில் முடிந்தது. கீழே இருப்பது நாங்கள் சந்தித்த யதியின் சொற்கள், எழுத்து வடிவம் மட்டுமே என்னால் செய்யப்பட்டது.
******
பணம், புகழ் போன்ற எல்லாம் சந்ததித் தொடர்பின் மூலம் வரலாம் அல்லது தானே முயன்று சம்பாதிக்கலாம், அவையெல்லாம் அழிந்திடக்கூடியது, ஆனால் குரு/ஆசிரியர் மூலமாகப் பெறப்படும் ஞானமே அழிவில்லாதது என்று சொல்லி இருக்கிறார்கள். பகவத்பாதர் தனது ப்ரச்னோத்ர மாலிகாவில் 'எது விஷம்' என்ற கேள்விக்கு பதிலாக, குரு/ஆசிரியர்களுக்குச் செய்யும் அவ-மரியாதையைச் சொல்லியிருப்பதன் மூலம் தெளிவாகிறது.
நமது வேதங்களில் ஆசிரியர்-மாணவன் தொடர்பு பற்றியும், ஒரு ஆசிரியருக்குக் கொடுக்கப்படும் மரியாதையும், முக்கியத்துவமும், மாணவர்களின் கடமை போன்றவை மிக அழகாக, விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ண பரமாத்மாவே குருகுலம் சென்று பயின்றதும், குருவே கற்றுத்தர மறுத்தாலும், மானசீகமாக வில்வித்தை பயின்ற ஏகலைவனையும் கண்டிருக்கிறோம். ஆசிரியருக்கு இணையாக த்ரிமூர்த்திகளையும் சொல்லி இருக்கிறார்கள் நமது பெரியவர்கள்.
கல்வி கற்பதில் நேர்மை வேண்டும், மாறாத உறுதியும், அறிவுக் கூர்மையும், ஆசிரியன் மீது அசையாத நம்பிக்கை ஆகியன மாணாக்கருக்கு இருக்க வேண்டியவை என்றும், அதே போல ஆசிரியனும் மாணவனிடத்தில் அன்பு கொண்டு இருக்க வேண்டும் என்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். எந்த ஒரு ஆசிரியர் தனது சீடனுக்கு/மாணவனுக்கு அஞ்ஞான இருளை நீக்கி ஞானத்தின் மூலமாக பிரம்மத்தின் பாதையைக் காண்பிக்கிறாரோ, அவரே 'ஸத்குரு' என்று போற்றப்பட்டிருக்கிறார்.
கல்வி பயில்வதில் மூன்று நிலைகளைச் சொல்கிறார்கள், அவை, கேட்டல், கேட்டதை மனதில் வாங்கி ஆராய்தல், அறிந்ததை தியானத்தின் மூலமாக நிலைத்திருக்கச் செய்தல் என்பன. இதுவே சிரவணம், மனனம் மற்றும் நிதித்யாஸனம் என்று சொல்லப்படுவது. ஆதி சங்கர் விவேகசூடாமணியில் உண்மையான சீடனின் கடமைகள், ஆசிரியரின் பங்கையும் விரிவாகச் சொல்லியிருக்கிறார். அதில் (விவேக சூடாமணி) ஆசிரியர்/குரு தனது சிஷ்யனுக்கு ஞானத்தை ஊட்டுவது என்பது, இயற்கையானது வசந்தகாலத்தில் எப்படி நம்மிடமிருந்து எந்த் எதிர்பார்ப்பும் இல்லாது நமக்கு இனிமை அளிக்கிறதோ அதுபோன்றது என்று கூறி ஆசிரியர்/குரு தன்னலமற்று இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது.
தைத்ரீயோபநிஷதத்தின் முதல் பகுதி சீக்ஷாவல்லி. இதில் குருகுலத்தில் பயில வேண்டிய முறை, உபாசனை, தியானம், கல்வி கற்றபின் உலகத்தில் எப்படி வாழ்வது போன்றவற்றைச் சொல்லியிருக்கிறது. குருகுல வாசத்தின் முடிவில், குருகுலத்தை விட்டுச் செல்லும் மாணவனுக்கு ஆசார்யனால் பல அறிவுரைகள் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அறிவுரைகள் ஒருவனது வாழ்வு முழுவதும் பின்பற்றத்தக்கதாக இருப்பது சிறப்பு. அவற்றில் சிலதைப் பார்க்கலாமா?
ஸத்யான்ன ப்ரமதி தவ்யம் - சத்யத்திலிருந்து எப்போதும் தவறக்கூடாது.
தர்மான்ன ப்ரமதி தவ்யம் - தர்ம நெறியில் எப்போதும் இருக்க வேண்டும்.
ஸ்வாயாயப்ரவசநாப்யாம் ந ப்ரமதி தவ்யம் - கற்றைதை பயிற்சி செய்யவும், பிறருக்குக் கற்றுத் தரவும் வேண்டும்.
மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ - பெற்ற தாயும், தந்தையும் கடவுளாக வணங்கப்படத்தக்கவர்
ஆசார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ - கல்விக் கண் திறந்த ஆசார்யனும், விருந்தினரும் கடவுளுக்கு ஒப்பாகக் கொள்ள வேண்டும்.
தேவ பித்ரு கார்யாப்யான்ன ப்ரமதி தவ்யம் - தேவ, பித்ரு கர்மாக்களைத் தவறாது செய்ய வேண்டும்.
இவற்றை மனதில் நிறுத்திக் கொண்டு, நாம் செய்யும் எல்லாவற்றிலும் தர்மத்தையும், சத்யத்தையும் கடைபிடித்தால் அதுவே தர்ம வாழ்கை என்று முடித்தார் அந்த யதி.
8 comments:
நல்லதொரு தொகுப்பு மௌலி!இதைப் போன்ற நல்ல விஷயங்களைப் படிக்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது!
Simple truths, yet profound.
""ஸ்வாயாயப்ரவசநாப்யாம் ந ப்ரமதி தவ்யம் ""
உம்... இன்னும் சொல்லித்தாங்கோ பின்ன !இது மிஸஸ் சிவமுக்கும் சேத்து தான்:))))))
ஸ்ருங்கேரில அம்மா சன்னதி, வித்யாரண்யர் சன்னதிகளுக்கு நடுவுல இருக்கறவர் (பி......ன்/ர்) சன்னதி இந்த தர்மத்தை ஞ்யாபக படுத்தத்தான் :)))))
வாங்க கிருஷ்ணமூர்த்தி சார். ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க...உங்களுக்குப் பிடித்திருப்பது பற்றி ரொம்ப சந்தோஷம்... :-)
வாங்கோ ஜெயஸ்ரீ-மா....அழகாகச் சொன்னீர்கள்.. :-). நீங்க சொல்லியிருப்பதையே தனிக் கட்டுரையாகத் தரலாம். :)
அடிக்கடி வந்து அம்பாளுடைய திருநாமங்களைப் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன் மௌலி! எல்லா நேரங்களிலுமே பின்னூட்டமாகச் சொல்ல முடிவதில்லை.
நேற்றிரவு நான் ரீடரில் ஹார்வர்ட் பிசினெஸ் ஸ்கூல் ப்ளாக் சிலவற்றைப் படித்துக் கொண்டிருந்தபோது, அப்போதுதான் இந்தப்பதிவு வலையேற்றப்பட்டதைக் கண்டேன். உடனே வந்து படித்தவுடன், ஒரு பின்னூட்டம்.
வெய்யிலில் அலைந்து களைத்தவனுக்குக் கொஞ்சம் நிழலில் ஒதுங்க இடம் கிடைத்தமாதிரி, இந்தப் பதிவைப் படித்து விட்டு அப்புறம் சுகமாகத் தூங்கப் போனேன்!
//அடிக்கடி வந்து அம்பாளுடைய திருநாமங்களைப் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன் மௌலி! எல்லா நேரங்களிலுமே பின்னூட்டமாகச் சொல்ல முடிவதில்லை.//
மிக்க நன்றி சார். பின்னூட்டம் இடாவிட்டாலும், பதிவுகள் தொடரும்..:-). படிக்கிறீர்கள் என்பதே மகிழ்ச்சிதான்.
//நேற்றிரவு நான் ரீடரில் ஹார்வர்ட் பிசினெஸ் ஸ்கூல் ப்ளாக் சிலவற்றைப் படித்துக் கொண்டிருந்தபோது, அப்போதுதான் இந்தப்பதிவு வலையேற்றப்பட்டதைக் கண்டேன். உடனே வந்து படித்தவுடன், ஒரு பின்னூட்டம்.//
ஆஹா!, எந்தெந்த ப்ளாக் எல்லாம் படிக்கிறீங்க?...கொஞ்சம் லிங்க் கொடுங்க... :)
//வெய்யிலில் அலைந்து களைத்தவனுக்குக் கொஞ்சம் நிழலில் ஒதுங்க இடம் கிடைத்தமாதிரி, இந்தப் பதிவைப் படித்து விட்டு அப்புறம் சுகமாகத் தூங்கப் போனேன்//
ஆஹா!, (வெய்யில்) காலத்துக்கு ஏற்ற உவமை.... :-)
"மாதா, பிதா, குரு, தெய்வம்" என்னும் வழக்கை அழகாய் எடுத்தியம்புகிறது!
மிக்க நன்றிகள் மௌலி சார்.
வாங்க ஜீவா...நல்லாயிருக்கீங்களா?...சாட்ல கூட பார்க்கமுடிவதில்லை...வேலைப் பளூ அதிகமோ?.
Post a Comment