Friday, August 7, 2009

காமாக்ஷி...கடாக்ஷி - 4 (ஆடி வெள்ளி சிறப்புப் பதிவு)


லலிதோபாக்யானத்தில் 'ப்ராங்முகீ தத்ர வர்த்தேஹம் மஹாலக்ஷ்மீ ஸ்வரூபேண' என்று சொல்லப்படுகிறது. அதாவது லலிதையே மஹா-லக்ஷ்மி ஸ்வரூபமானவள் என்பதாகச் சொல்வது. போன இடுகையில் நாம் பார்த்த கனக மழை என்பதே லக்ஷ்மி ஸ்வரூபமான தேவியின் திருவிளையாடல் தான். காமாக்ஷியின் மூலஸ்தானத்தில், அவளது இடப்புறச் சுவற்றின் வெளியிலே அரூப லக்ஷ்மியும், வலப்பக்கத்தில் ஸ்வரூப லக்ஷ்மியும் இன்றும் நமக்கு அருள் புரிவது நாம் அறிந்ததே. இவ்வாறாக அரூபமாகவும், ஸ்வரூபமாகவும் தாயார் இருப்பது பற்றியதே இன்றைய ஆடி வெள்ளி இடுகை. நமது வாழ்வில் நடப்பது போன்றே கடவுள்களிடத்தும் ஊடல், கூடல், கிண்டல் போன்றவை இருப்பதாகச் சொல்லும் நிகழ்ச்சி இது.


ஒரு நாள் பரமபதத்தில், பரமபத நாதனும்-ஸ்ரீ தேவியும் உரையாடுகையில் அன்னை தமது நாதனை பலவாறாகப் பரிஹாசம் செய்கிறாள். மந்தகாஸத்துடன் மாதவனும் அவற்றை ரஸித்து வருகையில் தாயார் ஏனோ சற்றே எல்லை மீறி, 'மோஹினி ரூபமெடுத்த நீங்கள் சிவனையும் கூட மயக்கியது உண்மைதான், அது உங்கள் மாயா சக்தியால் செய்த தந்திரமே தவிர, ரூப லாவண்யத்தால் அல்ல. எது எப்படியாகிலும் நீங்கள் கருப்பு நிறத்தவர் தானே, உம்மீது யார் ப்ரேமை கொள்ள முடியும்' என்று ஏளனம் செய்கிறார். தாயார் ஏளனமாக இவ்வாறு கூறியது அவரது மனத்திலிருந்து வந்தது என்று புரிந்துகொண்டார் பரந்தாமன். ஆயினும் சினம் கொள்ளாது, 'அது சரி, ஆனால் பாற்கடலைக் கடைந்த போது நீயாகவே வந்து எனக்கு மணமாலை சூடியது ஏனோ?' என்று சிரிப்புடன் வினவுகிறார். 'ஓ, அதற்குக் காரணம் பாற்கடலின் ப்ரகாசம் மற்றும் எனது உடலின் பொன் வண்ணத்தால் எங்கும் ஜோதி மயமாக அப்போது இருந்தது, அப்போது அங்கிருந்த உங்கள் கருமையான மேனி கூட முலாம் பூசப்பட்ட தங்கமாகத் திகழ்ந்தது. அதில் மதிமயங்கி மாலையிட்டுவிட்டேன்' என்று தாயார் கூறுகிறார்.

இந்த பதிலைக் கேட்ட சாந்த மாமலை சீற்றம் கொண்டது, விளையாட்டு வினையாகியது. 'ரமா என்று இன்பமே உருவானவளாகக் கூறப்பட்ட நீ இன்று உனது வாக்கால் துன்பத்தை தேடிக் கொள்கிறாய். வாஸ்தவத்தில் நீ மதி-மயக்கம் அடைந்தது இன்றே. உன்னுடைய அதி செளந்தர்யம் உனக்கு கர்வத்தை உருவாக்கியிருக்கிறது. இப்போதே நீ குரூபியாகி மண்ணுலகில் வாசம் செய்வாயாக' என்று சக்ரதாரி தமது ப்ரியசகியைச் சபித்துவிடுகிறார். ஸ்ரீபதியின் பாதத்தில் வீழ்ந்து மன்னிக்க வேண்டுகிறாள் ஸ்ரீதேவி. 'பூலோக மக்களுக்கு எச்சரிக்கையாகவும், படிப்பினையாகவும் நடக்கும் எமது நாடகங்களில் இதுவும் ஒன்று. இந்த நாடகம் இன்னும் கொஞ்சம் நீடிக்க வேண்டும். நீ காமகோடியில் வாசம் செய்து காமாக்ஷியைத் துதித்து வா. அவளருளால் நீ மீண்டும் என்னை அடைவாய்' என்று கூறுகிறார்.

விஷ்ணு லோகத்தை இழந்த கமலினி, கடாக்ஷிப்பாய் காமாக்ஷி என்று தனது தவத்தை காஞ்சீயில் ஆரம்பிக்கிறாள். ஆக காமாக்ஷி மட்டுமல்லாது, சந்த்ர சகோதரியும் தவமியற்ற ஆரம்பிக்கிறாள். பத்மினி, பத்மஹஸ்தை, பத்மாஸனை, என்று ஈரேழுலகும் புகழும் பத்மநாப பத்னி, தனது பத்ம நயனங்களை மூடி த்யானத்தில் இருக்கிறாள். தனது ரூப லாவண்யம் இழந்து, கருமையான நிறத்துடன் இருக்கும் ஸ்ரீதேவிக்கு தரிசனம் தருகிறாள் காமலோசனி. தரிசனம் தந்தது மட்டுமல்லாது, 'அஞ்சன காமாக்ஷி' என்று விளித்து, தான் வேறு, லக்ஷ்மி வேறல்ல, தானே லக்ஷ்மி ரூபிணியும் என்று தெளிவிக்கிறாள். பாதம் பணிய வந்த பத்மாசனாக்ஷியை தடுத்து, 'எனது புருஷாகாரமான விஷ்ணுவின் வாக்கைக் காக்கவும், இல்லற தர்மத்தை மக்களுக்கு உணர்த்தவும் ஒன்று சொல்கிறேன் கேள். இங்கிருக்கும் எனது அர்ச்சா ரூபத்தின் இடது பக்கத்தில் நீ இந்த நிலையிலேயே பிம்பமாக இரு. எனது பக்தர்கள் தாங்கள் பெறும் எனது குங்குமப் பிரசாதத்தை உன்மேல் தரித்த பின்னரே தமது உடலில் தரிக்கட்டும். இவ்வாறு சிலர் செய்தவுடன் உனது குரூப ரூபம் மறைந்து ஸர்வாங்க செளந்தர்யையாக ஆகிடுவாய். அவ்வாறு ஆனபின் எனது வலது பக்கத்தில் இரு' என்று கூறுகிறாள். இன்றும் காமகோடி பீடத்தில் இருக்கும் ஸ்ரீசக்ரத்திற்குச் செய்யும் குங்குமார்ச்சனை பிரசாதத்தை பெறும் அன்பர்கள் அங்கே இடதுபுறம் இருக்கும் அஞ்சன காமாக்ஷியும் கேசாதி-பாதம் தடவிய பின்னரே தாம் தரிக்கின்றனர். இதன் மூலமாக அன்னை ஸ்ரீதேவி தனது ரூப லாவண்யத்தை மீண்டும் பெற்று காமாக்ஷியின் வலப்புறம் வாசம் புரியத் தொடங்குகிறாள்.

ஏதோ ஒரு வேகத்தில் சபித்தாலும், லக்ஷ்மிகரம் இழந்த வைகுந்தத்தில் நாராயணன் சோபையற்று தமக்குத் தாமே சாபம் கொண்டதாக வருந்தியிருகிறார். எப்படி ஈசன் தாக்ஷாயினியை இழந்து தவித்தாரோ அந்த ஸ்திதி தனக்கும் ஏற்பட்டதே என்று தாபத்தை உணர்கிறார். கச்சியில் பராசக்தி என்ன திருவிளையாடல் புரிகிறாளோ?, எப்போது அஞ்ஜனியை காஞ்சமாக ஆக்க முடிவு செய்திருக்கிறாளோ? என்று எண்ணி காமகோட்டத்தில் யாரும் அறியாமல் புகுந்து பார்க்கிறார். ஒளிந்து வரும் நாதனைக் கண்டுகொண்டாள் பத்மாசினி. ஒளிந்து நின்ற பெருமாளைப் பார்த்து, 'வாராய் கள்ளா' என்று முகமன் கூறுகிறாள். திருட்டுத்தனமாக வந்ததால் மட்டும் 'கள்ளா' என்று அழைக்கவில்லை, எல்லோர் மனதையும் திருடிடும் எழிலான கோலத்தை அடிப்படைக் கருத்தாக வைத்து 'கள்ளா' என்று அழைக்கிறாள். அன்னை பராசக்தி/காமாக்ஷியின் முன்னிலையில் பிரிந்த தேவ தம்பதிகள் கூடினர்.

இன்றும் காமாக்ஷி கோவிலில் அஞ்சன காமாக்ஷி என்றழைக்கப்படும் அரூப லக்ஷ்மி மற்றும், ஸ்வரூப லக்ஷ்மியை தரிசிக்கிறோம். தண்டனை நீங்கி ஸ்வரூபம் பெற்ற தாயாரைக் காண வந்த மாதவனுக்கும் காமகோட்டத்தினுள்ளேயே கோவில் இருக்கிறது. இவரது மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி மிக்கவர். ஆம், வைஷ்ணவ திவ்ய தேச மூர்த்திகளில் இவரும் ஒருவர், ஸ்ரீவராக ரூபம். பிருத்வீ க்ஷேத்ரத்தில், பூமியை தூக்கி நிறுத்திய வராஹர் இருப்பதும், அருகிலேயே வாராஹியும் இருப்பது முறைதானே. இவரை திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். பாடல் கீழே!

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய், ஒண்துறைநீர் வெஃகாவுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய், உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய், கள்வா
காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு-
பேரகத்தாய், பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே.

----------------(2059) திருநெடுந்தாண்டகம் 8

இவ்வாறாக வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்று காமாக்ஷி சன்னதியில் இருக்கிறது என்றால், இன்னொன்று இதே காஞ்சியில் ஏகம்பன் கோவிலில் இருக்கிறது. அப்பெருமாளை 'நிலாத் திங்கள் துண்டத்தாய்' என்று விளிக்கிறார் திருமங்கையாழ்வார்.

இந்த வெள்ளியில் அன்னை காமாக்ஷி, மஹா-லக்ஷ்மி மட்டுமல்லாது அன்னையின் புருஷாகார ரூபமான மஹா-விஷ்ணுவையும் வணங்கிடுவோம்.

34 comments:

Geetha Sambasivam said...

பலமுறை காஞ்சிபுரம் போயிருந்தும் போன வருஷம் ஆகஸ்டில் தான் அரூபலக்ஷ்மி தரிசனம் கிடைத்தது. மற்றபடி இந்தக் கதையும், அதனோட தொடர்நிகழ்வுகளும் அறிந்தது என்றாலும் மீண்டும் படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி.

Raghav said...

அன்னை காமாக்ஷி எங்களை நன்றாகவே கடாக்ஷிக்கிறாள் தங்கள் மூலமாக.

ஆடி வெள்ளிக்கிழமைகள் முடிந்தாலும்.. தொடர்ந்து எழுதுவீர்கள் தானேண்ணா.. :) மேலும் அறிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்.

Raghav said...

//ஒரு நாள் பரமபதத்தில், பரமபத நாதனும்-ஸ்ரீ தேவியும் உரையாடுகையில்//

அவதாரங்களும் இவ்விதமான திருவிளையாடல்களும் வியூக நிலையான திருப்பாற்கடலில் தானே? பரமபதத்தில் ஜீவன் முக்தர்களாகிய அனந்தன், கருடன், விஷ்வக்சேனர்களுடன் அல்லவா இருக்கிறான்.. அங்கே எப்படி இந்த உரையாடல் நடக்கும்.

Raghav said...

//எனது பக்தர்கள் தாங்கள் பெறும் எனது குங்குமப் பிரசாதத்தை உன்மேல் தரித்த பின்னரே தமது உடலில் தரிக்கட்டும்.//

இது தெரியாமப் போச்சே!! நான் சென்ற போது அன்னையை மட்டும் கூட்டத்துக்கு நடுவில் எட்டிப் பார்த்து விட்ட வரவேண்டியதாயிற்று. கள்வன் இருப்பதே அப்போது தெரியாது.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா...உங்களுக்குத் தெரியல்லன்னாத்தான் ஆச்சர்யம் :)

வருகைக்கு நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி ராகவ்.

ஆடி முடிந்தாலும் 2-3 பதிவுகள் வரும் போல இருக்கு ராகவ். சமயம் வருகையில் கண்டிப்பாக எழுதுவேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

//அவதாரங்களும் இவ்விதமான திருவிளையாடல்களும் வியூக நிலையான திருப்பாற்கடலில் தானே? பரமபதத்தில் ஜீவன் முக்தர்களாகிய அனந்தன், கருடன், விஷ்வக்சேனர்களுடன் அல்லவா இருக்கிறான்.. அங்கே எப்படி இந்த உரையாடல் நடக்கும்//

ராகவ், எனக்கு சொல்லப்பட்டது பரமபதம் என்று தான். ஸ்ரீவைஷ்ணவத்தில் தான் பரமபதம்-வைகுந்தம்-திருப்பாற்கடல் எல்லாம் வேறு-வேறுன்னு நினைக்கிறேன்.

Raghav said...

//ஸ்ரீவைஷ்ணவத்தில் தான் பரமபதம்-வைகுந்தம்-திருப்பாற்கடல் எல்லாம் வேறு-வேறுன்னு நினைக்கிறேன்//

அண்ணா.. ஒரு பெரிய குழப்பம்..வேதத்தில் ஐந்து நிலைகளான பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை இவையெல்லாம் சொல்லப்பட்டுள்ளன தானே?

மெளலி (மதுரையம்பதி) said...

//பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை இவையெல்லாம் சொல்லப்பட்டுள்ளன //

இதுக்கு எல்லாம் ஒவ்வொரு பிரிவிலும் (சைவம்/சாக்தம்/ஸ்ரீவைஷ்ணவம்/மாத்வம்) ஒவ்வொரு விதமான அர்த்தங்கள் தரப்படுகின்றன ராகவ். எப்படியானால் என்ன?, பெருமாளிருக்கும் இடம் வைகுந்தம், ஈசனிருக்குமிடம் கைலாஸம்.. :-)

Geetha Sambasivam said...

//கள்வன் இருப்பதே அப்போது தெரியாது.//

கள்வனைச் சுலபமாய்த் தரிசித்துவிடலாம், அரூபலக்ஷ்மியைத் தரிசிப்பது தான் கொஞ்சம் கஷ்டம், தெரிஞ்சவங்க இருக்கணும், அப்போத் தான் பார்க்க முடியுது! :(

கபீரன்பன் said...

///நமது வாழ்வில் நடப்பது போன்றே கடவுள்களிடத்தும் ஊடல், கூடல், கிண்டல் போன்றவை இருப்பதாகச் சொல்லும் நிகழ்ச்சி இது///

அதற்கான காரணத்தையும் பின்னே சொல்லிவிட்டீர்கள்.

///'பூலோக மக்களுக்கு எச்சரிக்கையாகவும், படிப்பினையாகவும் நடக்கும் எமது நாடகங்களில் இதுவும் ஒன்று. இந்த நாடகம் இன்னும் கொஞ்சம் நீடிக்க வேண்டும். நீ காமகோடியில் வாசம் செய்து காமாக்ஷியைத் துதித்து வா. ///

புண்ணிய தினத்தில் அம்பையின் அருளுக்கு வாசகர்களும் பாத்திரமாகும் வகையில் இடுகை இடும் தங்களுக்கு நன்றி.

Raghav said...

// பெருமாளிருக்கும் இடம் வைகுந்தம், ஈசனிருக்குமிடம் கைலாஸம்.//

அண்ணா, ஏன் ஒருவரும் பிரம்மா வசிக்கும் இடமான சத்யலோகத்துக்கு ஆசைப்படுவதில்லை ?

pudugaithendral said...

சிறப்புப்பதிவு மிக அருமை.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி புதுகையக்கா.

மெளலி (மதுரையம்பதி) said...

//ஒருவரும் பிரம்மா வசிக்கும் இடமான சத்யலோகத்துக்கு ஆசைப்படுவதில்லை //

ஹிஹிஹி....ஏதோ ஒரு முடிவுல இருக்கீங்க போல :)

ப்ரம்ம லோகத்தில் இருக்கறவங்க யாருன்னு கொஞ்சம் யோசிங்க :)

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கபீரன்பன் சார்....கரெக்டா பாயிண்டைப் பிடிச்சுட்டீங்க :)

மெளலி (மதுரையம்பதி) said...

//கள்வனைச் சுலபமாய்த் தரிசித்துவிடலாம், அரூபலக்ஷ்மியைத் தரிசிப்பது தான் கொஞ்சம் கஷ்டம், தெரிஞ்சவங்க இருக்கணும், அப்போத் தான் பார்க்க முடியுது! :(//

உண்மைதான் கீதாம்மா.

தி. ரா. ச.(T.R.C.) said...

காமாக்ஷி அம்மனை பற்றிய அரிய செய்திகளை தொகுத்து வழங்கும் மௌலிஜிக்கு நன்றி.அரூபலக்ஷ்மியைப் பற்றிய செய்தி எல்லோருக்கும் பயன் அளிக்கும்.

Anonymous said...

//Kamakodhi mahapadma peetasthayaii namo namaha//

Thambhi

ஷைலஜா said...

காஞ்சிஅன்னையை சமீபத்திலதான் கண்குளிர தரிசித்து வந்தேன்.இங்கே உங்கள்பதிவில் புதிய விஷய்ங்கள் அறிந்துகொண்டேன் மறுபடி காஞ்சிபோனால் இவைகளை நன்கு கவனிச்சி வணங்கிவரணும் நன்றி லஷ்மிகரமான பதிவுக்கு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்த வெள்ளியில் அன்னை காமாக்ஷி, மஹா-லக்ஷ்மி மட்டுமல்லாது அன்னையின் புருஷாகார ரூபமான மஹா-விஷ்ணுவையும் வணங்கிடுவோம்//

ஹரிணி ஓம்! ஹரி ஓம்!
:)

அரூப லக்ஷ்மியைப் பற்றியும் சொரூப லஷ்மியைப் பற்றியும் அறியத் தந்தமைக்கு நன்றி-ண்ணா!

கருவறைக்குள் அல்லவா அரூப லட்சுமி இருக்கிறாள்? அப்படி என்றால் பக்தர்கள் எப்படி அவள் மேல் குங்குமம் பூச முடியும்? கருவறை நுழைவு காஞ்சியில் உண்டா என்ன?

ஏகம்பன் சன்னிதியில் திரு நிலாத் திங்கள் துண்டம் என்று திவ்யதேசத்தின் பேரைச் சொல்லி இருக்கீங்க! ஆனால் காமாட்சியம்மன் சன்னிதியில் உள்ள திவ்ய தேசத்தின் பேரைப் பதிவில் சொல்லலையே! அதன் பேரென்ன?

அப்பறம் முக்கியமா...பதிவை மட்டுமே படித்தேன்! ராகவ் கேள்விகளை அடியேன் படிக்கலை-ன்னு மட்டும் சொல்லிக்கறேன்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//விஷ்ணு வக்ஷஸ்தலத்தை இழந்த கமலினி//

பதிவில் உள்ள இந்தச் சிறு தவற்றை மட்டும் அடியேன் சுட்டிக் காட்ட விழைகிறேன்! தவறு இருந்தால் மன்னியுங்கள்!

விஷ்ணு வக்ஷஸ்தலத்தை மகாலஷ்மி என்றுமே "இழப்பதில்லை"!

சாபம், தாபம், அவதாரம் போன்ற காலங்களில் கூட, வைகுண்டத்தை மட்டுமே நீங்குவாளே தவிர, அவள் அம்சமான வக்ஷஸ்தலத்தை விட்டு "இழப்பதே" இல்லை! அப்படி இழப்பதாகக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது! கண் இமைக்கும் பொழுதும் (இறையும்) நீங்குவதில்லையாம்!

அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை உறை மார்பா என்று அதனால் தான் சாதித்து அருளினார்!
இதே கருத்து வேதத்தில் ஸ்ரீ சூக்தத்திலும் வரும்!

பதிவில் "வக்ஷஸ்தலத்தை இழந்த" என்பதை மட்டும் மாற்றி அமைக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்! ஜெய ஜெய காமாட்சி!

Kavinaya said...

//காமாக்ஷி அம்மனை பற்றிய அரிய செய்திகளை தொகுத்து வழங்கும் மௌலிஜிக்கு நன்றி.//

பணிவன்புடன் ரிப்பீட்டிக்கிறேன். நன்றி மௌலி. அழகான அவள் படத்துக்கும் சேர்த்து!

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா...நன்றி. படம் கூகிளாண்டவர் உபயம்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ். உங்களது விருப்பத்திற்கேற்ப ஸ்ரீவிஷ்ணு வக்ஷஸ்தலஸ்திதாயை என்பதை சரி செய்துவிடுகிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி ஷைல்ஸக்கா. போகும் முன்பு போன் பண்ணுங்க...இன்னும் தெளிவாகச் சொல்லி அனுப்புகிறேன். :)

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி தம்பி கணேசன் அவர்களே!

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி திராச சார். ஆமாம், அதென்ன மெளலி-ஜி. நீங்க அப்படியெல்லாம் விளிப்பது வித்யாசமாக இருக்கு, வேண்டாமே இந்த 'ஜி'. :)

S.Muruganandam said...

நாம் எல்லோரும் உய்ய மஹா விஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும் ஆடிய நாடகத்தை இந்த ஆடி வெள்ளி நாளில் அற்புதமாக அளித்த மௌலி ஐயா ஆயிரம் கோடி நன்றிகள். இன்னும் பல பதிவுகள் வரும் என்று எதிர்பார்க்கின்றேன்.

அனைத்து பதிவுகளிலும் பல அரிய விஷயங்களை சொல்லி வருகின்றீர்கள், மிக்க நன்றி ஐயா.

S.Muruganandam said...

அடியேனும் இது வரை அஞ்சன காமாக்ஷியின் மேல் ஏன் என்று தெரியாமல் குங்குமம் அப்பி விட்டு வந்துள்ளேன் இன்று தாத்பரியம் விளங்கியது.

ஜெய் காமாக்ஷி!ஜெய் காமாக்ஷி!

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும், கருத்துப் பகிர்தலுக்கும் நன்றிகள் கைலாஷி சார்.

வல்லிசிம்ஹன் said...

கள்வனையும் ,அவனது சொத்தையும்,
காஞ்சீபுரத்தில் கண்ட அனுபவம் பத்து வருடங்களுக்கு முன். காமாட்சிக்கு எப்போதும் எங்கள் வீட்டில் தனி இடம்.

அவள்தான் காமாம் க்ஷீரோத சம்பவாம் ஆனவள்.
நன்றி மௌலி.

குமரன் (Kumaran) said...

நானும் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் மௌலி. நிலாத்திங்கள் துண்டத்தனைப் பற்றி சொன்ன நீங்கள் காமாட்சியம்மன் ஆலயத்தில் இருக்கும் திவ்யதேசத்தின் பெயரைச் சொல்லவில்லையே என்று. அந்தப் பாசுரத்தில் திருமங்கையாழ்வார் நிறைய பெயரைச் சொல்கிறாரே - அதில் எது காமாட்சியம்மன் ஆலயத்தில் இருக்கும் திவ்யதேச எம்பெருமானைப் பற்றியது?

இராகவ், வியூஹத்தில் திருப்பாற்கடலைப் போல் கார்ய வைகுண்டம் என்று ஒன்றைச் சொல்லிப் படித்திருக்கிறேன். ஜய விஜயர்கள் சாபம் பெற்று மூன்று பிறவிகள் எடுத்தது இந்த கார்ய வைகுண்டத்தில் தான் என்று படித்திருக்கிறேன்.

பாலாஜி ராவ் said...

திவ்ய தேச பெருமாள் பெயர் கள்வர் எனும் ஆதிவராகர், கள்வர் , அரூப லட்சுமி , ஸ்வருப லட்சுமி, வாராஹி, அர்த்த நாரிஸ்வரர் எல்லாம் காயத்ரி மண்டபதினுள் உள்ளனர் . அங்கு செல்ல உபய தரர் களுக்கு மட்டும் அனுமதி வழங்க படும். கள்வரை மட்டும் அன்னபுர்ணா சன்னதி அருகில் உள்ள கண்ணாடி மூலம் வெளியில் இருதே தரிசிக்கலாம்.