Thursday, July 21, 2011

காமாக்ஷி...கடாக்ஷி - 1 (ஆடி வெள்ளி சிறப்புப் பதிவு)

காமாக்ஷி பற்றி எழுத வேண்டும் என்று பலநாட்களாக நினைத்திருந்தேன், இன்றைய தினம் ஆடி முதல் நாள், வெள்ளிக் கிழமையும் கூட. அன்னையின் அருள் வேண்டி இந்தச் சிறுதொடரை எழுத ஆரம்பிக்கிறேன். வரும் ஆடி வெள்ளிகளில் தொடராக 2-3 பதிவுகள் எழுத இருக்கிறேன்.


காமாக்ஷி பற்றி சொல்லப்பட்ட புராணங்கள் பின்வருமாறு.




1. மார்க்கண்டேய புராணத்தில் 'தேவீ மகாத்மீயத்தை அடுத்ததாக வரும் "ஸ்ரீ காமாக்ஷி விலாஸம்".


2.பிரம்மாண்ட புராணத்தில் விரிவாக உள்ள லலிதோபாக்யானம் மற்றும் த்ரிபுரா ரஹஸ்யம் என்னும் க்ரந்தம்.


3. ஸ்காந்த புராணத்தில் ஸநத்குமார ஸம்ஹிதையிலுள்ள 'காஞ்சீ மஹாத்மீயம்' குறிப்பாக அதில் வரும் 'தக்ஷ காண்டத்தில்'.


4. சில செவிவழிக் கதைகள்.




டிஸ்கி:

******************************************

சாதாரணமாக புராணங்கள்/சரிதங்களைப் படிக்கும் போது ஆங்காங்கே தெய்வங்களிடை உயர்வு-தாழ்வு தொனிக்கலாம், அது ஒரு குறிப்பிட்ட மூர்த்தியிடம் பக்தியை வலுப்படுத்துவதற்கான உத்தேசமேயன்றி, பிற தெய்வங்களை மட்டந்தட்டுவதல்ல என்பது நாம் அறிந்ததே. இந்தத் தொடருக்கும் அது பொருந்தும் என்றுணர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மனிதர்களைப் போலவே, மனிதர்களுக்கு ஆதர்சமாய் லீலை புரிவதற்கு என்றே பராசக்தி பல கடவுளராகி இப்படியெல்லாம் செய்துள்ளார் என்பதை மனதிலிருத்தி மேற்கொண்டு படிக்க வேண்டுகிறேன்.

******************************************


தேவியின் பல வடிவங்களுள், நாற்கரம் கொண்டு, அவற்றில் கரும்புவில், மலரம்பு, பாச-அங்குசம் தாங்கி அமர்ந்த கோலத்தில் இருப்பவளேகாமாக்ஷி மற்றும் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி, ராஜராஜெஸ்வரி. பஞ்ச தசாக்ஷரி, ஷோடசீ ஆகிய மந்த்ரங்களில் தலையானதாக உள்ள ஸ்ரீவித்யா மந்த்ரங்களில் விவரிக்கப்பட்ட லக்ஷணப்படி அமைந்த விக்ரஹமே காஞ்சீ காமாக்ஷி விக்ரஹம். ஆக மொத்தமாக மந்த்ரங்களில் சிறந்த ஸ்ரீவித்யாவால் காட்டப்பட்ட ஸ்ரீ மாதாவின் ரூபம் காமாக்ஷீ.


இந்த தேவி எங்கு வாசம் செய்கிறாள்?.


பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும், அழிவில்லாத 'அக்ஷரம்' எனப்படும் ஓங்கார ஒலியின் அலைகளான இருபத்து-நான்கு சப்த சலனங்களிடையே அவள் வாசம் செய்கிறாள்.



ஆம்! அந்த இருபத்து-நான்கு சப்தங்களை, இருபத்து-நான்கு ஸ்தம்பங்களாகக் கொண்ட மண்டபத்தில் அவள் வாசம் செய்கிறாள் என்றே காமாக்ஷி விலாஸத்தில் சொல்லப்படுகிறது.



அதென்ன 24 சப்தங்கள்?. 16 கால், 1000 கால் மண்டபங்கள் எல்லாம் இருக்கும் போது, ஏன் 24 சப்த ஸ்தம்பங்களாலான மண்டபம்?.


காயத்ரீ மஹாமந்திரம் இருபத்தி-நான்கு அக்ஷரம் கொண்டது, அந்த மந்த்ரத்தின் மஹிமையை நமக்கு விளக்கும் விதமாக காயத்ரி மண்டபத்தில் வசிக்கிறாள் ஸ்ரீமாதா. காஞ்சி காமாக்ஷி கோவிலில் அன்னையின் வாசஸ்தலம் காயத்ரி மண்டபம் என்றே கூறப்படுகிறது.

சரி, அதென்ன காமாக்ஷி என்ற பெயர்?. இதன் விளக்கம் என்ன?.


'க' என்ற பதம் பிரம்மனைக் குறிக்கும்; 'கஸ்மை தேவாய' என்று வேதத்தில் பல இடங்களில் பிரம்மனை குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல,


'அ' என்பது சிவனின் பெயர். அ'காரத்திலேயே ஆண்பால் நாமங்கள் பெரும்பாலும் முடிகிறது உ.ம்: சிவ, ராம, க்ருஷ்ண என்பதாக. பிரகிருதிக்கு அப்பாற்பட்ட புருஷ ரூபம் சிவம்.



வேதத்தில் 'ம' என்ற சப்தம் நாராயணனைக் குறிப்பதாம். இதனாலேயே 'மா' என்ற சப்தம் மஹாலக்ஷ்மியைக் குறிப்பதாகக் கூறுகிறார்கள். அதாவது கணவன் 'ம' என்பதாலேயே, இவள் 'மா' ஆகிறாள்.



ஆக, 'க' என்ற ப்ரம்மன், 'அ' என்ற சிவன், 'ம' என்ற விஷ்ணு ஆகிய மூவரும் எவளது 'அக்ஷி'யிலிருந்து தோன்றினார்களோ, அவள் காமாக்ஷி. ('அக்ஷி' என்றால் கண்).


பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற்பாடலில், "திருமகள் வலக்கண், வாக்கின் சேயிழை இடக்கண், ஞானப்பெருமகள் நுதற்க்கண்ணாகப் பெற்று வான் செல்வம் கல்வி அருமைவீடளிப்பாள்" என்பதாக கூறுகிறார். பரஞ்சோதி முனிவர் மீனாக்ஷியை அப்படிக் கூறினாலும், அது காமாக்ஷியை மனதிலிருத்தியே என்பது தெரிகிறது. இன்னும் சொல்லப் போனால், ஸ்ரீ லலிதாவின் சேனை நாயகி (அ) தண்டினி எனப்படுபவள் வாராஹி ரூபம். அதே போல மந்த்ரிணியாக இருப்பது ராஜ மாதங்கீ. அதனால் தான் அகிலாண்டேஸ்வரியை தண்டினியாகவும், ராஜமாதங்கீ ரூபத்தில் கிளியுடன் இருப்பதாலும், மீனாக்ஷி கையில் கிளியைக் கொண்டதாலும் அவளை மந்திரிணியாக ஆதி சங்கர பகவத்பாதர் சொல்கிறார்.



மனிதனுடைய குணத்தை அவனுடைய கண்களிலிருந்தே அறியலாம் என்பார்கள். திருடனின் கண்களில் இருக்கும் தடுமாற்றம் அவனைக் காட்டிக் கொடுத்துவிடும். காதலுடைய கண்களில் எத்தனையோ விதம், கெஞ்சும் கண்கள், கொஞ்சும் கண்கள்,மிஞ்சும் கண்கள் என்பதாக பலவற்றையும் கவிஞர்கள் சொல்லக் காண்கிறோம். கடைக்கண்ணால் பார்க்கும் பார்வையை தயாளத்தின் உருவமாகவும், அன்பின் தோற்றமாக அருள் நிறைந்த தேஜசுடனும் சொல்வது வழக்கம். காதலியின் கடைக்கண் பார்வைக்கு காதலனும், பரமேஸ்வரியின் கடைக்கண் பார்வைக்காக பக்தனும் காத்திருப்பதாகச் சொல்வர்.



"தனந்தரும், கல்விதரும்" என்று ஆரம்பித்து அன்னையின் கடைக்கண் பார்வையில் என்னவெல்லாம் கிடைக்கும் என்று ஒரு பட்டியலே தந்திருக்கிறார் அபிராமி பட்டர். இதையே ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் தமது பாடலில் "சாரதா ரமா நயநே' என்று கூறுகிறார். சிவப்பிரகாச ஸ்வாமிகள், "நின் திருமுக பங்கயத்தில் கண்ணாயினர் உனக்கு அவ்வலைமாதும், கலைமகளும் பெண்ணார் அமுதனையாய்" என்கிறார். "ஸசாமர ரமா வாணீ ஸவ்ய தக்ஷிண ஸேவிதா" என்கிற லலிதையின் நாமா என்ன சொல்கிறதென்றால், வாணியும், ரமாவும் (லக்ஷ்மி), அன்னைக்கு இருபுறங்களிலும் சாமர சேவை செய்வதாக வருகிறது. ஆக காமாக்ஷி ரூபத்தில் கண்களாக கலைமகளும், அலைமகளும் இருப்பதாகவும் கொள்ளலாம்.


சிவ சிவ பச்யத்திஸமம் காமாக்ஷி கடாக்ஷீதா: புருஷா:

விபிநம் பவநம் அமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவது பிம்போஷ்டம்



அதாவது காமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு விபிநம், பவநம் ஆகிய இரண்டும் ஒன்றாகவே தெரியுமாம். விபிநம் என்றால் காடு, பவநம் என்றால் மாளிகை. காமாக்ஷியின் அருள் பெற்றவர் ஞானியாகிவிடுவர், ஆகவே அவர்களுக்குமித்ரம்-அமித்ரம், சிநேகிதன்-சத்ரு, போன்ற வேறுபாடுகளோ அல்லது யுவதியின் ஒஷ்டம் (சிவந்த உதடுகள்) மற்றும் லோஷ்டம் (ஓட்டு சில்லு) போன்றவற்றில் எந்த வேறுபாடுகள், காமனைகள் இல்லை என்று பரமாசார்யார் கூறுகிறார்.


தெய்வத்தை ஸ்திரீ ரூபமாக வணங்குவது என்பது நமது வேதத்தில் மட்டுமே சொல்லப்பட்டிருக்கறதாகச் சொல்கிறார்கள். ஆதிசங்கரர் செளந்தர்ய லஹரியில், அன்னையின் தரிசனத்தை வேண்டும் போது, "அம்பிகே!, தங்களை நான் சேவிக்க திவ்ய ரூபத்துடன் தரிசிக்க அருள வேண்டும். வாயில் தாம்பூலமும், கண்களீல் மையும், நெற்றியில் காஷ்மீர குங்குமமும், கழுத்தில் முத்து ஹாரமும், இடுப்பில் பட்டாடையும், தங்க ஒட்டியாணமும் அணிந்த பர்வத ராஜ குமாரியாக தரிசனம் அருள வேண்டும்" என்கிறார். இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட ரூபத்தில், கைகளில் பாச-அங்குசமும், கரும்புவில்-மலரம்புகளுமாய் காக்ஷி தருகிறாள் அம்பிகை.


24 comments:

Radha said...

அருமையான பதிவு !
//ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் தமது பாடலில் "சாரதா ரமா நயநே' என்று கூறுகிறார்.//

அன்னை காமாக்ஷியின் புகழ் பாடும் ச்யாமா சாஸ்திரியின் "அம்பா காமாக்ஷி" அருமையாக இருக்கும்.
~
Radhamohan

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ராதா மோகன், முதல் வருகைக்கு நன்றி.

தீக்ஷதர், மற்றும் சாஸ்திரி அவர்களது பாடல்களை இணைக்க முயற்சித்தேன்...ஆனால் இணையம் ஒத்துழைக்கவில்லை

கபீரன்பன் said...

காமாக்ஷியைப் பற்றிய விளக்கமான பதிவுக்கு நன்றி.

அம்பா காமாக்ஷி என்ற பாடலை M.D. ராமனாதன் குரலில் இந்த Youtube சுட்டியில் கேட்கலாம்.

நன்றி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதனாலேயே 'மா' என்ற சப்தம் மஹாலக்ஷ்மியைக் குறிப்பதாகக் கூறுகிறார்கள்.

அதாவது கணவன் 'ம' என்பதாலேயே, இவள் 'மா' ஆகிறாள்//

அதாச்சும் புருசனை விட எப்பமே ஒரு மாத்திரை நீட்டி ஒலிக்கணும்! புருசனை விட எப்பமே ஒரு படி ஜாஸ்தி...சரி தானே-ண்ணா? :)

//ஆகவே அவர்களுக்கு மித்ரம்-அமித்ரம், போன்ற வேறுபாடுகளோ//

:)
அம்மா தாயே காமட்சீ!

//அதனால் தான் அகிலாண்டேஸ்வரியை தண்டினியாகவும்//

தண்டினி என்றால் என்ன-ண்ணா?

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ், தண்டினி என்பதற்கு சேனாதிபதி என்று பொருள் சொல்லலாம் என்று தோன்றுகிறது. லலிதா பரமேஸ்வரியின் சதுரங்க சேனைத்தலைவி தண்டினி என்னும் அகிலாண்டேஸ்வரி என்பர் ஆன்றோர்.

Radha said...

Thanks Kabeeranban Sir ! I have so far heard only Semmangudi's rendering. Thanks for the link.

கபீரன்பன் said...

ராதா அவர்களே மன்னிக்க வேண்டுகிறேன் என் அவசரத்திற்கு :(

நான் தரவிறக்கத்திற்கு ஆணையிட்டு பாட்டைக் கேட்காமலே பின்னூட்டத்தில் இணைப்பைக் கொடுத்து விட்டேன். தங்கள் பின்னூட்டம் கண்டுபின் ப்ளே செய்தால் MDR அவர்களின் ஆலாபனை மட்டுமே அதில் உள்ளது.(9 நிமிடங்கள் !!) பாடலை இன்னொரு பகுதியாக வலையேற்றிருக்கிறாரோ என்னவோ அந்த அன்பர்.

இப்போது திருச்சூர் சகோதரர்கள் பாடிய அதே பாட்டைக் கேட்டபின் அந்த இணைப்பை இங்கே தந்திருக்கிறேன்.

அம்பா காமாக்ஷி

Kavinaya said...

//அதாவது காமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு விபிநம், பவநம் ஆகிய இரண்டும் ஒன்றாகவே தெரியுமாம்.//

ஸ்ரீ காமாக்ஷி தேவியின் அருமையான தரிசனத்திற்கு மிக்க நன்றி மௌலி.

S.Muruganandam said...

காஞ்சி காமாக்ஷியின் அருளை இயம்பும் இப்பதிவுகளுக்கு நன்றி மௌலி ஐயா.

S.Muruganandam said...

மௌலி ஐயா, கவிநயா அவர்கள் அன்பு கூர்ந்து அடியேனின் வலைப்பூவிற்க்கு சுவையான வலைப்பூ என்னும் விருது கொடுத்து கௌரவித்தாத். அடியேன் அதை தங்களுக்கு அளிக்கின்றேன். மேலும் விவரம் அட்ரா சக்கை நமக்கும் கூட விருது ! ! ! பதிவில் சென்று காணுங்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் விருதுக்கும் நன்றி கைலாஷி ஐயா. இதற்கெல்லாம் எனக்குத் தகுதி இருப்பதாகத் தெரியவில்லை. தங்களது அன்பினைப் பகிர்ந்திருக்கிறீர்கள், மிக்க நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கவிக்கா.

மெளலி (மதுரையம்பதி) said...

இருமுறை வந்தும், சரியான சுட்டியை தந்தமைக்கும் நன்றிகள் கபீரன்பன் சார்.

தி. ரா. ச.(T.R.C.) said...

சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி
ஜோதியாய் நின்ற உமையே

சுக்கிர வாரத்தில் உனைக் கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கிவிடுவாய்

சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள்
துயரத்தைப் மாற்றிவிடுவாய்

ஜெகமெலாம் உன் மாயை புகழவென்னாலாமோ
சிறியனால் முடிந்திடாது

சொந்தவுன் மைந்தனாம் எந்தனை ரக்ஷிக்க
சிறிய கடன் உன்னதம்மா

சிவசிவ மஹேஷ்வரி பரமனிட ஈஷ்வரி
சிரோன்மணி மனோன்மணியும் நீ

அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
அனாத ரக்ஷகியும் நீ

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே.

காமாக்ஷி பதிவுக்கு வணக்கம் மௌலி.தொடர்ந்து எழுதவும்

தக்குடு said...

அப்பாடி! ஒரு வழியா மதுரையம்பதி அண்ணா மறுபடியும் எழுத ஆரம்பிச்சு இருக்கார். ரொம்ப சந்தோஷம்! புது போஸ்ட் போடுங்கோ! மறுபதிவு எல்லாம் "செல்லாது செல்லாது" ..:))

Kavinaya said...

//மறுபதிவு எல்லாம் "செல்லாது செல்லாது" ..:))//

ரிப்பீட்டேய்!

welcome back mouli!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மொதல்ல..மீண்டதற்கு அடையாளமா மீள்-பதிவு! அப்பாலிக்கா பதிவு!
அதுக்குள்ள செல்லாது செல்லாது-ன்னா எப்படி ராசா-தக்குடு?:)

Jayashree said...

When did u write these !! I was about to give up hopes that u would start writing again . Bless u Mouli .I 'm @ work today . Will read soon :)))) Happy Adi, Varalakshmi nombu :))))

Anonymous said...

அபயக் கரந்தந் தருள்செய் வாளம்பி‍கேனு முடிச்சிருக்கிங்க பரணி சார்.

அரச இலைக்காப்பு Profile படம் அருமை.

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி சிவபிரகாஷம்.

ranjith said...

hi
i read ur blog.i ve impressed very much.

i have a doubt that u upload kanchi is the siva pancha bootha sthalam for earth and sakthi pancha bootha sthalam for space. i know about siva pancha bootha sthalam, could u please tell me which are all the sakthi pancha bootha sthalam
thank u

வரஹூர் வே. ரங்க ப்ரஸாத் said...

ராதே க்ருஷ்ணா

இதன் அடுத்த பதிவு எப்போது வரும்? அன்னையின் வரவு மிக மிக அருமையாக இருக்கிறது. வரும் பதிவுகளை வணங்கி வரவேற்கிறோம்.ந்

அன்பர்களின் பதிவுகள் அதைவிட அருமை

ராதே க்ருஷ்ணா

வரஹூர் வே. ரங்க ப்ரஸாத் said...

ராதே ருஷ்ணா

அருமையான பதிவு. அம்பிகையை வணங்கி வரவேற்கிறோம். அடுத்த பதிவுகள் எப்போது?

அன்பர்களின் அருமையான பதிவுகளும் அழகாக இருக்கின்றது.

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

ராதே க்ருஷ்ணா

Anonymous said...

I don't know if it's just me or if everyone else encountering issues with your website.
It appears like some of the text within your posts are running off the screen. Can someone else please provide feedback and let
me know if this is happening to them as well? This might be a
issue with my browser because I've had this happen previously.
Appreciate it