Friday, July 24, 2009

காமாக்ஷி...கடாக்ஷி - 2 (ஆடி வெள்ளி சிறப்புப் பதிவு)


முதல் பகுதி இங்கே!

பரமசிவன் தக்ஷிணாமூர்த்தியாக யோகவடிவில் இருந்த நேரத்தில் காமவேளான மன்மதன் அவரை நோக்கி தனது மலரம்புகளை விடுத்து, அதன் காரணமாக கோபம் கொண்ட ஈசன் தனது நெற்றிக்-கண்ணால் மனஸிஜன் என்று அழைக்கப்படும் மன்மதனை நோக்க, அவன் சாம்பலாகிறான். ஈசனது பூதகணங்களின் தலைவர்களில் ஒருவனான சித்ரஸேனன் என்பவன் மன்மதனது சாம்பலை பிடித்து ஒரு அரக்கன் போன்ற உருவத்தைச் செய்கிறான். அழகனான மன்மதன் தமது அரக்க குணத்தாலேயே ஈசனிடம் விளையாடி அழிந்தான் என்பதாக நினைத்து இந்த பிம்பத்தைச் செய்கிறான். பின்னர், யோகம் கலைந்த தக்ஷிணாமூர்த்தி கண்களில் அந்த பிம்பம் படுகிறது. ஈசனது பார்வை பெற்ற அந்த பிரதிமை உயிர் கொண்டு ஓர் அசுரனாகிறது, அதுவே பண்டாசுரன். தான் படைத்த உருவம் உயிர் பெற்றதால் அதன் மீது மிகுந்த அன்பு கொண்டு அவனுக்கு "சத ருத்ரீயம்" என்னும் மந்திரத்தை உபதேசிக்கிறான் சித்ரஸேனன். இந்த மந்திரத்தால் ஈசனை உபாசித்து, ஆசுதோஷியான அவரிடத்து பல வரங்களைப் பெறுகிறான். தாம் பெற்ற வரத்தின் பலத்தால் தேவர்கள் முதலான எல்லோரையும் ஜெயித்து ஸர்வ-லோகங்களுக்கும் சக்ராதிபதியாகி இன்னல்களைச் செய்கிறான் பண்டன். அவனை வதைக்க தேவர்கள் செய்த யாகத்தில் ஞான வடிவாக உதித்தவளே ஸ்ரீ லலிதை. இதைக் கூறுவதே லலிதோபாக்யானம்.

மன்மதன் ரஜோ வடிவானவன், அவனது சாம்பலில் உருவான பண்டனும் ரஜோ குணத்துடனே இருந்து அன்னையால் அழிக்கப்பட்டு, அல்ல அன்னையால் ஸ்த்வ குணவானாக்கினாள். ரஜோ குணத்தின் இரு கிளைகளான காமம், க்ரோதம் ஆகிய இரண்டுமே ஜீவாத்மாவின் பெரும் பகைவர்கள் என்று கீதை முதலான எல்லா ஞான நூல்களும் கூறுகின்றன. இங்கே மன்மதன் காமம், பண்டன் க்ரோதம், காமம் முற்றி நிறைவேறாத போது க்ரோதம் என்னும் கோபம் உருவாகிறது. காமம் தானாக கரைந்து ஒழியாமல் எறிந்து தணலாகிச்-சாம்பலாக, அதுவே குரோதமாகிறது போலிருக்கிறது. ரஜோ குணம் என்பது செயல் துடிப்பு என்றால், தமோ குணமோ செயலற்ற சோம்பலும் மயக்கமும் ஆகும். ரஜோ குணத்திப் போல பல செயல்களைச் செய்து அதன் மூலமாக பாவச் சுமையை அதிகமாக்கவில்லை தமோ குணம் என்றாலும், செயலூக்கம் இல்லாவிடில் ஸாதனை ஏது?, நன்னெறிப்பட முயற்சி ஏது?அல்லது முடிவில்லா ஆனந்தமடைவதேது?. ஏறுமாறான ரஜோ குணச் செயல்களை ஒழுங்குபடுத்தி ஸத்வமாக்கும் அன்னை, தமோ குணத்தையும் மாற்றுகிறாள் அன்னை.

இதே போன்று இன்னொரு அசுரன் பந்தகன் என்ற பெயரில் பிரம்மாவிடம் வரங்களைப் பெற்றிடுகிறான். இவன் தமோகுணமான செயலின்மைக்கு ரூபகம். ஒரு செயலுமின்றி ஓர் அசுரன் இருந்தல் அவனால் எவருக்கும் தீமை விளையாதே?. பிறகேன் அவனை அசுரன் என்று கூறவேண்டும்?. கும்பகர்ணனைப் போலஇவனும் போர் அற்ற காலங்களில் மாதக்கணக்கில் ஆழ்ந்து உறங்குவதில் வல்லன். ஆனால் இவன் போர்க்களத்தில் இருக்கும் போது இருளைப் பரப்பி எதிரிகளை அந்தகர் போல மருள வைப்பதில் வல்லவன். "தம ஸோமா ஜ்யோதிர் கமய" என்பது உபநிஷத வாக்யம், ஆனால் ஒருசமயம் பந்தகன் ஜோதி லோகமாகியதேவ லோகத்தையும் இருளில் மூழ்கச் செய்துவிட்டான். தேவர்கள் எப்போதும் போல இந்த முறையும் கைலாயத்திற்கு ஓடிச் சென்று ஈசனிடம் மன்றாடுகின்றனர். தேவர்கள் அன்னையை மறந்ததன் விளைவே இது என்றறிந்த ஈசன் , இந்த இடர்பாடு அவளாலேயே களையப்பட வேண்டியது என்று உணர்ந்து பின்வருமாறு கூறுகிறார்.

'தேவர்களே நீங்கள் இந்த இடரிலிருந்து மீள அன்னை பராசக்தியை வழிபட வேண்டும். அவள் அருளாலேயே பந்தகனிடமிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும், ஆனால், அடைக்கலம் என்று என்னிடம் வந்த உங்களை பந்தகனிடமிருந்து காப்பாற்றிட ஒரு உபாயம் சொல்கிறேன். இதோ நான் அமர்ந்திருக்கும் இந்த பீடத்தின் அடியில்இருக்கும் கோமுகத் த்வாரத்தின் வழியாக புகுந்து செல்லுங்கள். அங்கு நீங்கள் நிலையாக வாசம் செய்யாது, தொடர்ந்து செல்லுங்கள். பூமிக்கடியில் செல்லும் த்வாரத்தில்/பிலத்தில்/குகையில் தொடர்ந்து தென்முகமாகச் சென்றால் பிரளயத்திலும் அழியாத 'பிரளயஜித்' என்றழைக்கப்படும் இடத்தை அடைவீர்கள். ஊழி வெள்ளத்திலும் தலை ஓங்கி நிற்கும் ஒரு 'மா'மரம். ஆமாம், மஹா பெருமை பெற்ற மரம் அது. நான்கு வேதங்களும் நாலு கிளைகளாகவும், அவ்வேதங்களின் சாகைகள் எல்லாவற்றுக்குமான பலம்/பயன் ஒன்றேயான பரம்பொருள் என்று உணர்த்தும் ஒரே கனியைக் கொண்ட மரம். இதனாலேயே அந்த க்ஷேத்ரம் 'ஏகாம்ரம்' (ஆம்ர பலம் = மாம்பழம்) என்று கூறப்படும். விராட ஸ்வரூபத்தில் சராசரி வடிவு கொண்ட அன்னையின் நாபி ஸ்தானம் அவ்விடமே!. இந்த கைலாஸ பிலம் அங்கே ஏகாம்ர/காஞ்சி பிலத்தில்தான் முடிவடைகிறது. நாபியின் மீது அணியும் மேகலா என்ற ஆபரணத்தின் பெயரே காஞ்சி. பிலத்தினைச் சூழ்ந்த தலமாதலால் காஞ்சிபுரமாகிறது. அங்கே சென்று சுகமாக/கிளியாக அம்மரத்தில் வாழ்ந்து அன்னையைநோக்கித் தவம் செய்யுங்கள். அவள் உங்களூக்கு சுகம் தருவாள்'.

பந்தகனிடத்திருந்து விமோசனம் பெறும் வழியறிந்த தேவர்கள் அவ்வாறே பிலத்தின் வழியே சென்று ஏக-ஆம்ர மரத்தில் வசித்து அன்னையை வழிபடுகின்றனர். பிலத்தையும், ஆம்ர மரத்தையும் பலகாலம் சுற்றிவந்து போற்றுகின்றனர் தேவர்கள். அன்னை அருள் தர முன்வந்து அவர்கள் முன்பாகத் தரிசனம் தருகிறாள். பின்னர் தேவி அவர்களிடத்தே 'தேவர்களே உங்களைத் தேடி பந்தகனும் கைலாஸம் சென்று அங்கு உங்களைக் காணாது சோம்பிச் சலித்துத் தூங்குகிறான் பாருங்கள்' என்று அந்தக் காக்ஷியைக் காண்பிக்கிறாள். தனது பார்வையாலேயே தூங்கும் அசுரனை கொணர்ந்து பிலத்துக்கு அருகில் எறிகிறாள். விழுந்த வேகத்தில் அவுணன் தனது நித்திரை கலைந்து எழுந்தான். அன்னை பதினெட்டு புஜங்களுடன் பைரவியாக உருக்கொண்டு அவன் மீது பாய்ந்து அவனை அழிக்கிறாள். அழித்த அவுணனது உயிரற்ற சடலத்தைப் புதைக்க, தனது காலால் நிலத்தில் கீரி, அங்கு ஒரு குழியினைப் பறிக்கச் சொல்கிறாள். தேவர்கள் அவ்விடத்தை அகழ்கையில் பூமிக்கடியில் இருந்து ஒரு ஹுங்கார கர்ஜனை கேட்டது. அவ்விடத்தில் மண்ணுக்குள்ளே மல்லகன் என்னும் அசுரன் மூச்சை அடக்கி உக்ர தவம் செய்வது அறிகிறார்கள்.

தபஸ்வியைக் கொல்வது பாபமாகுமே என்று தேவர்கள் யோசிக்கையில், பொது நலனுக்காக பாபத்தை மேற்கொள்ளத் துணிந்த ஸ்ரீமந் நாராயணர், தமது சக்ராயுதத்தை ஏவுகிறார். சக்ராயுதம் அரக்கன் மேனியை பதம் பார்க்க, அவன் உடலில் இருந்து ரத்தம் கொப்பளிக்கிறது. அச்சோ!, இதென்ன விபரீதம், அந்த ரத்தத் துளிகள் ஒவ்வொன்றும் அசுரனாக உருவெடுக்கிறதே!. தேவியின் பாகவதத்தில் வரும் ரக்த பீஜன் கதை போல் இருக்கிறதே என்று எல்லோரும் மிரள, பரமசிவன் முன்பு தனது சடையிலிருந்து வீரபத்ரரை உருவாக்கியது போல இப்போது ஆணும், பெண்ணுமாக இரு பூதங்களை உருவாக்கிவிடுகிறார். அந்த பூதங்கள் மல்லகனின் ரத்தத்தை குடித்து, அதன் மூலமாக மல்லகனையும், அவனது உதிரத்திலிருந்து தோன்றும் அசுரர்களையும் நிர்மூலமாக்குகின்றனர். இவ்வாறாக மஹாவிஷ்ணுவின் சக்ராயுதத்தால் மல்லகன் அழிந்தாலும், ஈசன் உருவாக்கிய பூதங்கள் மல்லகனின் ரத்தத்தை குடித்ததால் அசுர குணம் கொண்டு விஷ்ணு மீதே பாய்கின்றனர். ஈசனது பூதகணங்கள் மேல் ஆயுதப் பிரயோகம் செய்யலாகாது என்று பெருமாள் அவர்களை நிலத்தில் தள்ளி அழுத்தி அவர்கள்மீதே பள்ளி கொண்டுவிடுகிறார். பேரருளாளனது த்வ்ய சரீரம் அந்த பூத கணங்கள் மேல் அழுந்தியவுடன் அவர்களது உன்மத்தம் அழிந்து தங்களை மன்னிக்க வேண்டுகின்றனர்.


மண்ணுக்குள் மல்லகன் தியானம் செய்த இடத்தில் தோன்றப்பட்ட குழியில் பந்தகனை புதைத்து அங்கே அன்னைக்கு ஒரு ஜய ஸ்தம்பத்தை ஏற்படுத்துகின்றனர் தேவர்கள். பின்னர் அன்னையின் அருளாணைப்படி அந்த ஜய-ஸ்தம்பத்திலிருந்து பிலம் வரையில் உள்ள இடத்தில் 24 அக்ஷரங்களைக் கொண்ட 24 தூண்களால் ஆன மண்டபத்தை ஸ்தாபித்து, அம்மண்டபத்தின் சுவர்களாகநால்வகை வேதங்களை நிறுத்தி, கருவறையை மூலத்ரிகோணமாக அமைத்து, அதன் நடுவில் ஓங்கார பீடத்தில் அன்னையை இருக்க வேண்டுகின்றனர். கோடி சந்திரர்களின் குளுமையைக் கொண்ட அன்னை, கோடி சூர்யர்களது உதய நேரத்துச் செவ்வொளிப் பிழம்பு நிறத்தில் இருந்த அன்னை, தானே பளபளக்கும் சாளக்ராமச் சிலையாக மாறி, தனது அங்க செளந்தர்யங்கள் அனைத்தும்அந்த மூல விக்ரஹத்தில் இருக்கும்படியான உருவத்தைக் கொள்கிறாள்."சதுஷ் சஷ்டி உபசாராட்யா" என்பதற்கு ஏற்ப, அன்னைக்கு சகலவிதமான உபசாரங்களும் தேவர்களால் செய்யப்படுகிறது. அன்னைக்கு உபசாரமாக தேவ தச்சன் முத்துப் பல்லக்கும், பிரம்மா முத்துக் குடையும், விஷ்ணு நவரத்ன கிரீடமும் அணிவிக்கின்றனர். பரமேஸ்வரன் ஸ்ரீசக்ரகாரமான பதக்கத்தை அணிவிக்கிறார். வாக்தேவியின் வடிவான அன்னை அந்த உபசாரங்களில் மகிழ்ந்து, "இந்த காமகோஷ்ட காயத்ரி மண்டபத்தில் என் நித்ய ஸாந்நித்யம் துலங்கும். நான் இவ்விடத்திலே நித்ய வாஸம் செய்வேன்" என்று கூறுகிறாள். ஸ்ரீபுரத்தைவிட அதிகமாக தனது ஸாந்நித்தியம் உள்ள இடமாக இவ்விடம் இருக்கும் என்பதாக 'ஸ்ரீபுராத் அதிகே அத்ர ஏவ' என்கிறாள். பின்னர் மஹேசனைப் பார்த்து, "இன்று அமரர்களால் நடத்தப்பட்ட இந்த வழிபாடு என்றும் நடக்கட்டும், எனக்கு ஸ்ரீசக்ர பதக்கம் அளித்த தாங்களே இந்த சன்னதியில் என் சிலா ரூபத்தின் முன்னால் ஸ்ரீசக்ரத்தை ஸ்தாபியுங்கள். நீங்கள் ஸ்தாபிக்கும் அந்த ஸ்ரீசக்ரமானது கோடி காமனைகளையும் (விருப்பங்களையும்) நிறைவேற்றுவதாகவும், தர்ம-அர்த்த-காம-மோக்ஷ என்பதில் காமத்தின் கடைசியில் இருக்கும் மோக்ஷ சாம்ராஜ்யத்திற்கு இட்டுச் செல்லவும் காரணமான அது, 'காமகோடி பீடம்' என்று அழைக்கப்படட்டும்" என்று அருளுகிறாள்.

இவ்வாறு பிலாகாசமாக, அரூபமாக இருந்த அன்னை, காமாக்ஷியாக உருக்கொண்டது ஒரு ஆச்வயுஜி பூர்வ பல்குனித் திருநாளில், அதாவது ஐப்பசி மாதத்துப் பூர நக்ஷத்திர தினத்தில். இப்போதும் காஞ்சியில் அன்னை காமாக்ஷிக்கு ஐப்பசி பூரத்தில் பாலாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.

ஜெய ஜெய காமாக்ஷி!
ஜெய ஜெய காமாக்ஷி!

19 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

காமாட்சி அம்மன், காஞ்சியில், காமகோடி பீடேஸ்வரியாக எழுந்தருளப் பெற்ற கதையை விவரித்துச் சொன்னமைக்கு நன்றி-ண்ணா!

ஒரு ஐயம் உங்களைக் கேட்கத் தோனுகிறது:

ஏகாம்ர பிலத்தில் முடிவடையும் நாபி ஸ்தானம் (மேகலை-காஞ்சி) என்னும் போது, அன்னை ஏகாம்ரத்தில் அல்லவா குடி கொண்டிருப்பாள்!

அப்படி இருக்க, ஏகாம்ரம் என்னும் மா மரம் தனிக் கோவிலில் (ஏகாம்பரேஸ்வரர்) இருக்க, அன்னையின் கோயில் தனியாக இன்னொரு இடத்தில் இருப்பது ஏனோ?

மேலும், எது ஏகாம்ரம் என்னும் நாபி ஸ்தலம்? ஏகாம்பரேஸ்வர் ஆலயமா? இல்லை காமாட்சியம்மன் ஆலயமா?

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ்.

ஏகாம்ர பிலத்தில் முடிவடைவதாக அர்த்தம் தொனித்தால் அது எனது பிழை. கைலாசத்தில் ஈசனது பீடத்தின் கீழே ஆரம்பிக்கும் பிலமானது, பூலோகத்தில் ஏகாம்ரம் இருக்குமிடத்தருகில் முடிவடைகிறது என்றே சொல்லப்பட்டிருக்கிறது.

ஏகாம்ரத்தில் ஈசன் குடி கொண்ட புராணம் பின்னர் வரும்.

நாபிஸ்தலம் என்பது காமாக்ஷி இருக்குமிடமே!. நாபிஸ்தலம் என்பதற்கு தக்ஷ யக்யத்தின் முடிவில் நடந்ததே அடிப்படை. அதைக் கொண்டே காஞ்சியை நாபி ஸ்தலம் என்றும், பராசக்தியின் விராடஸ்வருபத்தில் அப்பகுதியே நாபிஸ்தலமாகவும் சொல்வர்.

கிருஷ்ணமூர்த்தி said...

'ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்னு' அம்பிகையைக் கதை வடிவில், பாவனையாக நன்றாக அனுபவித்து வருகிறீர்கள்!

"பாவனை அதனைக் கூடில்
அவனையும் கூடலாமே" நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி இது!

Radha said...

நன்றி மௌலி சார் ! சற்றே பெரியதாக இருந்தாலும் முழுதும் படித்து விட்டேன். :-)

சும்மா தூங்கி கொண்டே இருந்தாலும் இறைவனுக்கு பிடிப்பதில்லை போல. இதே போல தான் ஸ்ரீ பாகவதத்தில் ஒரு கதை. எங்கோ ஒரு குகையில் யுகக் கணக்காக தூங்கி கொண்டிருந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு கண்ணன் வலியச் சென்று அருள் செய்வான்.

காஞ்சியில் "24 அக்ஷரங்கள் காயத்ரி மண்டபம்" பற்றி தங்கள் பதிவுகளை படித்து தெரிந்து கொண்டேன். நன்றி. (ஸ்ரீ ரங்கத்திலும் இந்த ஐதீகம் உண்டு என்று தங்களுக்கு தெரிந்து இருக்கலாம்.)
~
ராதா

மதுரையம்பதி said...

வருகைக்கும் திருவாய் மொழியை சொன்னதற்கும் சேர்த்து நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி ராதா சார்.

ரங்க விமானம் பற்றி விசேஷமாகச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் இதே போல என்பது இப்போதுதான் தெரிந்தது. தகவலுக்கு நன்றி.

கவிநயா said...

எனக்கு பிடிச்ச மாதிரி நெறய கதைகளோட... :) தகவல்களோட... மிக்க நன்றி மௌலி.

கருணா கடாக்ஷியின் திருவடிகள் சரணம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

இவ்வாறு பிலாகாசமாக, அரூபமாக இருந்த அன்னை, காமாக்ஷியாக உருக்கொண்டது ஒரு ஆச்வயுஜி பூர்வ பல்குனித் திருநாளில், அதாவது ஐப்பசி மாதத்துப் பூர நக்ஷத்திர தினத்தில். இப்போதும் காஞ்சியில் அன்னை காமாக்ஷிக்கு ஐப்பசி பூரத்தில் பாலாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.

இன்று ஆடிப் பூரம். ஆணடாள் மற்றும் காமாக்ஷிக்கு உகந்தநாள். நல்ல பதிவை பதிவை படிக்க வாய்ப்பளித்த மௌளிக்கு நன்றி.

இன்று காலையில் பேப்பரில் படித்தேன் இன்று காமாக்ஷியை வணங்கினால் சுகப்பிரசவம் நடக்கும் என்று.என் மருமகளுக்கு மருத்துவர் கொடுத்த தேதி முடிந்து பிரசவம் ஆக வேண்டியது தள்ளிப்போகிறது.காமாக்ஷிக்கும் நாபிகமலத்திற்கும் தொப்புல்கொடிக்கும் சம்பந்தம் உண்டு.ஆகவேதான் பிரசவ சமயத்தில் அருள்புரிகிறாள். நம்ப முடியவில்லையா?.

ஆபீஸுக்குப் போகும் வழியில் ஆடிட்டர் சாவல்லி சஸ்திரியாரின் தனி முயற்சியில் கட்டபட்டு ராஜா அண்ணாமலைபுரத்தில் அழகாக அமைந்திருக்கும் காமாக்ஷி அம்மனை வழிபட்டு வணங்கி சுகபிரவசவத்திற்காக வேண்டினேன். கோவிலைவிட்டு வெளியே வந்து சிங்கப்பூரில் இருக்கும் என் மருமகளுக்கு போன் செய்து இது பற்றி கூறினேன்.அவள் உடனே '"அப்பா எனக்கு வலி இப்பொழுதுதான் ஆர்ம்பித்து விட்டது மருத்துவமனைக்கு அம்மாவுடன் செல்கிறேன்""என்றாள்.காமாக்ஷி கைகொடுப்பாள்.... கொடுத்தாள்.

காமப்பரிபந்தி காமினி காமேஸ்வரி
காமபீட மத்யகதே
காமதுகா பவகமலே காமகலே
காமகோடி காமாக்ஷி

பத்துவிரல் மோதிரமும்
முத்து மூக்குத்தியும்
ரத்தினப் பிரகாசமும்
பச்சைவைடூர்யத்தினால்
முடிந்திட்ட மோகன தாலி அழகும்
அத்தி வரதன் பெற்ற சக்தி உமையே
உன் பெருமையை அடியானாற் சொல்ல திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே

தி. ரா. ச.(T.R.C.) said...

காமாக்ஷி தேவியின் அருளால் அன்றே சுகப்பிரசவம் ஆண்குழந்தை.

தமிழ் மாறன் said...

அனைவருக்கும் வணக்கம். இப்பதிவிற்கு தொடர்பில்லாத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். நானும் மதுரக் காரன் தான். அன்னை மீனாக்ஷி மேல் இயற்றப்பட்டுள்ள தமிழ் பதிகங்கள், துதிகள் எனக்கு வேண்டும். உங்களிடம் கேட்டால் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்கள் பதிவுகளைப் படித்ததில் கிடைத்தது. தயவு செய்து உதவவும். நன்றி.

Anonymous said...

//எல்லோரையும் ஜெயித்து ஸர்வ-லோகங்களுக்கும் சக்ராதிபதியாகி இன்னல்களைச் செய்கிறான் பண்டன். அவனை வதைக்க தேவர்கள் செய்த யாகத்தில் ஞான வடிவாக உதித்தவளே ஸ்ரீ லலிதை. இதைக் கூறுவதே லலிதோபாக்யானம்.//

//pandasuravathokthiyuktha sakthi sena samanvitha//- sri lalitha sahasranamam.

srry for english...:)

Thambhi.

Anonymous said...

///அப்படி இருக்க, ஏகாம்ரம் என்னும் மா மரம் தனிக் கோவிலில் (ஏகாம்பரேஸ்வரர்) இருக்க, அன்னையின் கோயில் தனியாக இன்னொரு இடத்தில் இருப்பது ஏனோ?
//

kamaakshiku oru vasanamey undu.
"kanji kudiyaaley! kambanchoorunnaley!"
itthukku 2 artham undu,
1)Ambalukku entha oru uthchavathilum ingum kanji naivethyam kidayathu,
2)Ambaluku kambankali ellam ingu neivethyam kadayathu.

ulartham,
1) kaanchikku kanji enrum oru peyar undu, antha arthaththil kanjiyil kudiirruppavaley!(kanji kudiyaley)
2) swamiyin devyanama Ekkampareshwarar, ella aalayangalilum swamiyin neivedhyamey ambalukkum neveethikka padum, aanaal kanchiyil ambaluku thani madapuli, & thani nevedyam.(kambanchoorunnaley(Ekkambanchoorunlaleyy...:))

again srry for english...

courtsy.........mahaperiyava

Thambhi.

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி தம்பியாரே!...:)

மதுரையம்பதி said...

வாருங்கள் தமிழ் மாறன். உங்களது முதல் வருகைக்கு நன்றி.

நீங்கள் மதுரையில் இருப்பதாகக் கூறியிருக்கிறீர்கள்...ஆகவே ஒரு எளிதான வழி சொல்கிறேன்...மினாக்ஷி கோவிலுக்குச் செல்லுங்கள், அங்கே யானை கட்டும் மண்டபம் எதிரில் ஒரு புஸ்தகக் கடை இருக்கிறது. அங்கே நீங்கள் எதிர்பார்க்கும் புத்தகம் கிடைக்கும். குறிப்பாக புத்தகத்தின் பெயர் எனக்கு நினைவில் இல்லை, ஆனால் மினாக்ஷி பிள்ளைத்தமிழ் முதல் மதுரைப் பதிகங்கள் மற்றும் பல துதிகள் அடங்கிய புத்தகம் அங்கே இருக்கிறது...

மதுரையம்பதி said...

வாங்க திராச சார். வாழ்த்துக்கள்.

sury said...

அன்னை காமாட்சியின்
அருள் பெற்றவர் நீங்கள்.
உங்கள் பதிவினை படிப்பதே
ஒரு இனிய அனுபவம்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

மதுரையம்பதி said...

வாங்க சூரி சார்.

//அன்னை காமாட்சியின்
அருள் பெற்றவர் நீங்கள்//

பெரியவர்..உங்கள் வாக்கு பலிக்கட்டும்.

//உங்கள் பதிவினை படிப்பதே
ஒரு இனிய அனுபவம்.//

உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சி தருகிறது. நன்றி சார்.

Kailashi said...

நாம் எல்லோரும் உய்ய அன்னை காமாக்ஷி காஞ்சியில் கோவில் கொண்ட வரலாற்றை அருமையாக தந்துள்ளீர்கள் மௌலி ஐயா.

Anonymous said...

இறைஅறிவு இவர்களுக்கு என்றும் நிலைக்க வித்cதிடு விநாயகா.//chithram