Tuesday, September 30, 2008

ஸ்ரீ பாத ஸப்ததி - *நவராத்திரி சிறப்பு இடுகை - 3*


நாரயாண பட்டத்திரி நாம் எல்லாம் அறிந்த ஒருவர். ஆம்!, குருவாயுரப்பனை போற்றி ஸ்ரீ நாராயணீயம் எழுதியவர் தான். அவர் எழுதிய நாராயணீயத்தை குருவாயூர் கிருஷ்ணனே ஆமோதித்து அவரது ரோகத்தையும் தீர்த்த வரலாறு எல்லோரும் அறிந்ததே. பட்டத்திரி நாராயணீயம் எழுதிப் பலகாலம் கழிந்த பிறகும் மனச் சாந்தியில்லாது தத்தளித்த காலகட்டத்தில் ஸ்ரீ குருவாயுரப்பனே அவர் கனவில் தோன்றி முக்திஸ்தலம் என்னும் க்ஷேத்திரத்தில் இருக்கும் ஸ்ரீ துர்க்கையை தரிசித்து ஸ்தோத்திரம் செய்தால் மனசாந்தி கிடைக்கும் என்று கூறினாராம். அதன்படி, தற்போது குக்போளக்கா என்றழைக்கப்படும் இடம் சென்று துர்க்கையின் ஸ்ரீபாதார விந்தங்களை "ஸ்ரீபாத ஸப்ததி" என்கிற 70 ஸ்லோகங்களை பாடி பிரார்த்தித்து மனநிறைவினையும் அங்கேயே முக்தியையும் பெற்றதாக தெரிகிறது. இவ்வாறாக பத்யம் என்று கூறப்படும் இலக்கிய கட்டுப்பாடிற்கு உட்பட்ட வகையில் 70 ஸ்லோகங்கள் மிக அருமையாக எழுதி அன்னையின் அருளில் அவர் மூழ்கியிருக்கிறார். பத்யம் என்றால் நான்கு வரிகளைக் கொண்டது என்று பொருள். இந்த ஸ்லோகங்களில் வார்த்தைகள் யோகரூடம் என்னும் முறையில் உள்ளது. அதாவது வார்த்தைக்கு இரு முறையான அர்த்தங்களைத் தரும் சொற்களை யோகரூடம் என்று சொல்வது வழக்கம்.

இந்த 70 ஸ்லோகங்களில் அன்னை பராசக்தியின் பாத வர்ணனை, நகங்களது சோபை, இந்திராதி தேவர்கள், ஆதி-சேஷன் பூஜித்த மஹிமை, மகிஷாசுர, சும்ப-நிசும்ப வதங்கள், ஹிமாசலத்தில் பால-லீலைகள், அன்னையின் திருமணக்கோலம், பக்த வாத்ஸல்யம் போன்றவற்றை அனுபவித்துப் பாடியிருக்கிறார். ஸ்ரீ பாத பக்தியானது சரணமடைந்தவர்களிடத்து மிகுந்த கருணையுடன் ஆட்கொண்டு மோக்ஷ சாம்ராஜ்யத்தையே தரவல்லது. இந்த ஸ்லோகங்களைப் படிக்கையில் பல செளந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் மனதில் தோன்றக் கூடும். அப்படிப்பட்ட ஸ்ரீபாதத்தைப் போற்றிய ஸப்ததியிலிருந்து சில ஸ்லோகங்களை மட்டும் இன்று காணலாம்.

ஸேவந்தே குலஸம்பதே நகமயா: சீதாம்சவஸ்த்வத்பதம்
தத்பாகோ நநு வீஷ்யதேஹி நிதாமன்யேக்ஷு சீதாம்கஷு
ஏகோ பாலக ஏவ மெளலிமயி தே யாதோ லலாடாத்மதா
மன்யோ நிர்மல மண்டல தசாமன்யெள து தன்யெள கதெள

பகவதியே!, குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன் உன் பாத நகங்களாக இருந்து கொண்டு உன் பாதங்களைப் பஜித்ததால் தன் குல விருத்தியை அடைந்தான். சந்திரன் பாதங்களை பஜித்ததால் அவன் உன் சிரசிலும் இருக்கிறான், மற்றும் உனது நெற்றியாகவும், கன்னங்களாகவும் தெரிகிறான். அவர்கள் பாக்கியசாலிகள். அதாவது பாதத்தை பூஜித்ததால் சந்திரனது சந்ததிகளுக்கு பிற்காலத்தில் அன்னையின் சிரசிலும், நெற்றியிலும், கன்னங்களிலும் வாசம் செய்யும் பேறு கிட்டியது என்கிறார்.

ராகத்வேஷமுகா ஹி விப்ரமபரா நச்யதி விச்வேச்வரி
த்வத்ஸங்கதிதி முக்திதேசநிலயே மித்யா ஜனை:கத்யதே
உத்யத்வேஷ முதாரவிப்ரமதரம் காத்ரம் ததத்யா த்வயா
ராகோபி த்ரியதேதிகம் சரணயோ: சோணாம்புஜச்சாயயோ.

முக்தி-க்ஷேத்திரத்தில் வசிக்கும் தேவியான ஈஸ்வரியே!, உன் பாதார-விந்தங்களை சேவிப்பதால் ராகத்-வேஷம் நீங்கிவிடும் என்று ஜனங்கள் கூறுகிறார்கள். ஆனால் உன்னுடைய சரீரமே பார்ப்பவர்களுக்கு மன மயக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அதைவிட சிறந்த சிவப்பு நிறமுடைய (ராகம் = சிவப்பு) உன்பாதங்களிடத்து உன் சரீரமே துவேஷத்தைக் கொண்டும் இருக்கிறது. சரீரத்திலேயே ராகம், துவேஷம் ஆகியவற்றை வைத்திருக்கும் உன்னை நமஸ்கரிப்பவர்களுக்கு இந்த இரண்டிலுமிருந்து எவ்வாறு விடுதலை கிடைக்கும் என்று நிந்தா ஸ்துதியாக சொல்கிறார். அன்னையின் பாதங்கள் இவ்விரண்டையும் போக்கவல்லது என்பதை இவ்வாறு கூறியிருக்கிறார். இதே கருத்துடைய ஸ்லோகம் மூக-பஞ்சசதீயிலும் காணலாம்.
த்ரைலோக்யம் வசயந்தி பாபபட லீமுச்சாடயந்த்யுச்சகைர்
வித்வேஷ ஜனயந்த்ய தர்மவிஷயே ப்ரஸ்தம்பயந்த்யாபதம்
ஆகர்ஷந்த்யபி வாஞ்சிதானி மஹிஷஸ்வர்வைரிணோ மாரணாஸ்
சித்ரம் த்வத்பதஸித்த சூர்ணநிவஹ: ஷட்கர்மணாம் ஸாதகா:

அம்பிகே!, உன் திருவடித்துளியை (அம்பாளின் பாத தூளி பற்றி செளந்தர்ய லஹரியிலும் பார்த்திருக்கிறோம்) சிரசில் தரிக்கும் பக்தர்கள் ஆறு கர்மங்களையும் சாதித்துவிடுகின்றனர். ஆறு கர்மங்களாவது, வச்யம், உச்சாடனம் (இது மந்திர உச்சாடனம் என்ற பொருளில் அல்ல, விரட்டுவது என்னும் பொருளில், அதாவது கெட்டவற்றை விலக்குவது/விரட்டுவது என்று கொள்ள வேண்டும்), வித்வேஷணம் (வெறுப்பினை உருவாக்குவது), ஸ்தம்பனம் (ஸ்தம்பிக்க வைப்பது), ஆகர்ஷணம், மாரணம் (மரணம்) என்பவை. இதே போல மூகரும் அன்னை காமாக்ஷியை நமஸ்கரித்தலால் கிடைக்கும் மந்திரார்த்தங்களைப் பாடியிருக்கிறார்.

நாமும் இந்த நன்னாளில் அன்னையின் பாதாரவிந்தங்களில் வணங்கி அவள் அருளைப் பெறுவோமாக.

8 comments:

pudugaithendral said...

அன்னையின் பெருமையை நவராத்திரியில் கேட்பது புண்ணியம். சொன்ன உங்களுக்கு புண்ணியம்.

பகிர்தலுக்கு நன்றி.

Anonymous said...

http://video.google.com/videoplay?docid=-1207324479426665161&hl=en

an


அன்னையின் அருளுடன்

ஐயனின் ஆசியையும்

இணைத்துக் கொள்ளுங்கள்..

Kavinaya said...

ஆஹா, 'ஸ்ரீபாத ஸப்ததி' யும் முழுசும் கேட்கணும்னு ஆசை வந்திருச்சு :) சௌந்தர்ய லஹரி முடிச்சோன்ன அடுத்து நீங்க அதுதான் ஆரம்பிக்கணும். நன்றி மௌலி.

அன்னையின் திருவடிகள் சரணம் சரணம்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க புதுகையக்கா...சொல்பவர், கேட்பவர், வாசிப்பவர் எல்லோருக்கும் அருளுவாள் அன்னை.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க அனானி. பரமாச்சார்யார் அருளில் தான் வண்டி ஓடுகிறது. குருவருளை தேடித் தந்ததுக்கு நன்றிங்க.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா...கேட்கறதுக்கு நான் சுட்டியே குடுக்கல்லயே எங்கிருந்துக்கா கேட்டீங்க ? :)

எனது நண்பர் ஒருவர் போன்ல பேசும்போது ஸ்ரீபாத ஸப்ததி பற்றிச் சொன்னார், அவருக்கு மதுரையில் ஏதோ பழைய புத்தகக் கடையில் கிடைத்ததாம்.

அவரிடம் போன்ல சில ஸ்லோகங்களைச் சொல்லச் சொல்லி போட்டதுதான் இந்த போஸ்ட். நான் மதுரை போகும் போது புத்தகம் கைக்கு வரும் :)

குமரன் (Kumaran) said...

அறிமுகத்திற்கு நன்றி மௌலி. கண்ணனின் கதையை நாராயணீயமாகப் பாடியதைப் போல் தேவி பாகவதத்தையும் பட்டாத்திரி பாடியிருக்கிறார் என்று இன்று தான் தெரிந்தது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அங்கே பாதுகா சஹஸ்ரம்! இங்கே ஸ்ரீபாத சப்ததி!
இந்தத் திருவடித் தூளிக்குத் தான் எத்தனை மகிமை!

த்வத் பாத தூளி பரிதத் ஸ்புரித உத்தமாங்கா என்று மேல் பட்ட மாத்திரத்தில் உத்தம அங்கமாக்கும் உத்தமியின் திருவடிகளே சரணம்!