Tuesday, October 7, 2008

திதி நித்யா - *நவராத்திரி சிறப்பு இடுகை - 10*


"பிரதிபன் முக்ய ராகாந்த திதி மண்டல பூஜிதா" என்பது லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம். பிரதிபன் என்பது பிரதமையை குறிக்கும் சொல். ராகா என்பது பூர்ணிமையை குறிப்பது. பிரதமை முதல் பூர்ணிமை வரையில் மேலும் பூர்ணிமை கழிந்த பிரதமை முதல் அமாவாசை வரையிலும் வரும் திதிகளாக பூஜிக்கப்படுபவள் அம்பிகை. இதுதான் மேலே இருக்கும் நாமாவளியின் சாரம். ஒவ்வொரு திதியிலும் அம்பாளை என்ன விதமாக பூஜிக்க வேண்டும் என்று தாந்திர சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது, இம்மாதிரி விசேஷங்களால் வழிபடப்படுபவள் அம்பிகை என்றும் இந்த நாமாவளிக்கு அர்த்தம் சொல்லலாம்.

அமாவாசையிலிருந்து பெளர்ணமிவரை அல்லது பெளர்ணமியிலிருந்து அமாவாசை வரையில் ஒவ்வொரு தினத்திற்கும் ஒரு திதி உண்டு என்பது நாம் அறிந்ததே. நமது பண்டைய காலத்திலிருந்தே பெரியோர்கள் பஞ்சாங்கம் என்ற பெயரில் ஒவ்வொரு தினத்தையும், மாதத்தையும், வருடத்தையும் கணக்கிட்டு அதிலிருந்து மன்வந்திரம், யுகம் என்று தொடருவதை நாம் அறிவோம். பஞ்சாங்கத்தில் வருபவையாவது; திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் என்பது. சங்கல்பத்தில் வருவது நினைவிருக்கலாம். இது போலவே ஸ்ரீவித்யை உபாசகர்களுக்கு என்று ஒரு பஞ்சாங்கம் இருக்கிறது. இதன் பெயர் அஷ்டாங்கம் என்பது. இதில் வருவதாவது: யுகம், பரிவ்ரித்தி, வருஷம், மாதம், வாரம், தத்வ தினம், தின நித்யா, கடிகை என்ற எட்டுவிதமாக பிரித்து வைத்திருக்கிறார்கள். இதில் 9 நாட்கள் சேர்ந்தது ஒரு வாரம், 16 மாதங்கள் சேர்ந்தது ஒரு வருடம் என்று மேலே செல்லும். இதில் ஒவ்வொரு திதிக்கும் உரியவளாக அம்பிகையின் அம்சமான ஒரு தேவி உண்டு. இந்த தேவிகள் மகாவித்தையுடன் சேர்ந்து பதினாறு பேர். இவர்கள் எல்லோருமே அம்பிகையின் அங்க தேவதைகள். சாக்ஷாத் அம்பிகையே 16ஆம் நித்ய தேவதை. அம்பிகையின் மஹா மந்திரமான ஷோடசியில் 16 அக்ஷரங்கள் அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு அக்ஷரங்களுக்கும் அதி-தேவதையாக ஒரு நித்யாதேவி இருக்கிறாள். பதினாறாம் அக்ஷரம் சந்திர கலா ரூபமாகையால் ஸாதா பரா என்று சொல்லப்படும் மஹாவித்யை. மற்ற 15 கலைகளும்/நித்யாக்களும் இந்த மஹாவித்யையில் அடக்கம் என்பர். இப்போது எந்த திதிக்கு யார் தேவதை என்று பார்க்கலாமா:


திதி-- நித்யைகள்
----------------------------------------------
பிரதமை-- காமேஸ்வரி
துவிதியை-- பகமாலினி
திருதியை-- நித்யக்லின்னா
சதுர்த்தி-- பேருண்டா
பஞ்சமி-- வஹ்நி வாசினி
சஷ்டி-- மஹா வஜ்ரேஸ்வரி
சப்தமி-- சிவதூதி
அஷ்டமி-- த்வரிதா
நவமி-- குலசுந்தரி
தசமி-- நித்யா
ஏகாதசி-- நிலபதாகா
துவாதசி-- விஜயா
திரயோதசி-- ஜ்வாலா மாலினி
சதுர்த்தசி-- ஸர்வ மங்களா
பெளர்ணமி-- சித்ரா

இந்த 15 நித்யைகளுக்கும் மேலாக மஹா நித்யை என்று கூறப்படும் பராம்பிகை 16ஆம் நித்யை. இதனால் சஹஸ்ர நாமத்தில் வரும் இன்னொரு நாமாவளி, "நித்யா ஷோடசிகா ரூபா" என்பது.

இந்த திதி நித்யா தேவிகள் அனாதியான ஆத்ம சக்திகள் என்பர். ஆத்ம ஞானத்தினால் பெருகுவது ஆத்ம சக்தி. இப்படி ஆத்மசக்தி ஏற்படுவதைக்கண்டு சந்தோஷிப்பவள் என்பதைத்தான் "நித்யா பராக்ர-மாடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகா" என்று சஹஸ்ரநாமத்தில் குறிப்பிடப்படுகிறாள். ஸ்ரீவித்யை உபாசனையில் தலைசிறந்தவர்களான வசிஷ்டர், ஸனகர், ஸனந்தனர், ஸனத்குமாரர், சுகபிரம்மம் ஆகிய ஐவர். இவர்களது அனுஷ்டான வழியைச் சொல்லும் சுபாகம தந்திர பஞ்சகம் என்னும் மார்க்கத்தை அனுசரித்ததே சமயாசாரம். இதில் சுபாகம பஞ்சகம் என்பதில் இந்த திதி நித்யா பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த தேவதைகள் இரண்டிரண்டாக சேர்த்து எட்டு வர்கங்களாக இருப்பதால் ஸ்ரீ சக்ரத்தின் எட்டு தளங்களில் இரண்டு இரண்டு தேவதைகளாக பூஜிக்கத்தக்கவர்கள்.

நவாவரண பூஜையிலும், சுவாஸினி பூஜையிலும் இந்த திதி நித்யா பூஜை முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு திதிக்கும் ஒரு நித்யையாக சுவாஸினிகள் வரிக்கப்பட்டு, 16ஆவது நித்யையாக ஒரு வயதில் மூத்த சுமங்கலியை பராபட்டாரிகாவாக ஆவாஹனம் செய்வர். ஒவ்வொரு நித்யைக்கும் அவரவர்கட்குரிய தியான ஸ்லோகம் சொல்லி ஆவாஹனம் செய்து, மூலமந்த்ரத்தால் பூஜிக்கப்பட்டு பஞ்சோபசாரம், தீபாராதனை போன்றவை செய்யப்படும். இதன் பிறகே திரிசதி அல்லது சஹஸ்ரநாமத்தின்படி சுவாஸினிகள் பூஜிக்கப்பட்டு பின்னர் போஜனம் செய்விக்கப்படும். சென்னை-நங்கநல்லூரில் இருக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் அம்மனை தரிசிக்கும் முன் உள்ள 16 படிகளில் ஒவ்வொரு படிக்கும் இந்த வித்யைகளின் பெயரை வைத்து, அவர்களுக்கான சக்ரமும் அந்த படிகளின் அருகில் இருக்கும் கைப்பிடிச் சுவரில் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இதனாலும் இந்த கோவில் மிகுந்த சிறப்பினை அடைந்துள்ளது என்றால் மிகையில்லை.

சக்ர ராஜம் என்றால் அது எப்படி ஸ்ரீசக்ரத்தைக் குறிக்கிறதோ அதுபோல தந்த்ர ராஜம் என்ற நூல் திதி நித்யா தேவிகளைக் குறிக்கும் தந்திர சாஸ்த்ர நூல். இந்த திதி நித்யா பற்றி இன்னொரு புத்தகம் இருக்கிறது, அதன் பெயர் நித்யா ஷோடசிகார்ணவம் என்பது. இவை தவிர அகஸ்தியர் தீந்தமிழில், வித்யைக்கு ஒன்றாக 16 விருத்த பாக்களை அருளியிருக்கிறார். அதன் பெயரே "ஷோடச விருத்தம்" என்பது தான். இவ்வாறான சிறப்புக்களை உடைய திதி நித்யா தேவிகளை இந்த நவராத்திரியில் துதித்து அவர்களது அருளைப் பெறுவோமாக.

7 comments:

Sumathi. said...

ஹலோ மெளலி,
அட இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?இதெல்லாம் எனக்கு கொஞ்சம் புதுசு தான். ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. நல்லாயிருக்கு.

கவிநயா said...

எல்லாமே புதுசுதான் மௌலி. கொஞ்சம் புரிஞ்சும் புரியாமலும் கூட இருக்கு... அப்படியே "ஷோடச விருத்தத்தையும்" சொல்லிடுங்களேன் :)

மதுரையம்பதி said...

வாங்க சுமதியக்கா...இந்த பதிவுக்கு உங்களது முதல் வருகைன்னு நினைக்கிறேன்.நன்றி

மதுரையம்பதி said...

வாங்க கவிக்கா. ஷோடச விருத்தம் தனிப்பதிவாக பின்னர் போடறேன்...:)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அருமையான நவராத்திரி இடிகை மெளலி அண்ணா.
நவாவர்ணம் பற்றி மேலோட்டமாகத் தொட்டுச் சென்று தம்பியின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்தமைக்கு நன்றி! :)

//ஏகாதசி-- நிலபதாகா
துவாதசி-- விஜயா//

லக்ஷ்மீ தந்த்ரம், பாஞ்சராத்ர சூத்ரங்களில் இந்தப் பெயர்கள் வருகின்றன மெளலி அண்ணா.
நிலபதாகா என்பது நீளாதேவியா?

குமரன் (Kumaran) said...

வாவ். நிறைய தகவல்கள். இதுவரை அறியாதவை. நன்றி மௌலி.

குமரன் (Kumaran) said...

வாவ். நிறைய தகவல்கள். இதுவரை அறியாதவை. நன்றி மௌலி.