Sunday, August 10, 2008

அபிராமியும், லலிதையும்

எழுதுவதை நிறுத்தலாம் என்று தோன்றி இருவாரங்கள்தான் ஆகிறது. அதற்கு ஏகப்பட்ட பில்டப் வேறு செய்து, பின்னர் இன்று அதையெல்லாம் விட்டு மீண்டும் எழுத உட்கார்ந்துவிட்டேன். என் எண்ணத்தை குறிப்பாக சில நண்பர்களுக்கு மட்டும் தனிமடலில் சொன்னாலும், அவர்கள் எல்லோரும் போனிலும், தனிமடலிலும் எனக்கு பலவித அறிவுரைகள் அளித்து எழுத தூண்டியதென்னமோ உண்மை. ஆனாலும் இந்த விஷயத்தை தலையாய பணியாக கொண்டு என்னை 'இம்சித்து' எழுதச் செய்தது என்று ஒருவரை கை-காண்பிக்க வேண்டுமென்றால் அது கே.ஆர்.எஸ் தான். இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு வாழ்த்துக்களைக் கூறி, அவருக்கு பிறந்தநாள் பரிசாக இந்த பதிவினை இட முடிவு செய்தேன்.

இந்த இடுகை பலவிதங்களில் முக்கியமாக தோன்றியது. முதலில் இது கே.ஆர்.எஸுக்கு பரிசான இடுகை, இரண்டாவதாக, இது இந்த வலைப்பூவின் 50ஆம் பதிவு. [பலர் 500-600 பதிவுகளுக்கும் மேல் சென்றிருக்க இதென்ன சிறுபிள்ளைதனமோ தெரியல்ல :-)]. கூடலார் எழுதும் அபிராமி அந்தாதி நிறைவு விழாவிற்கு மதுரையம்பதியில் முன்னோட்டம் விடாவிட்டால் எப்படி?. ஆகவே அந்த விதத்திலும் இந்த இடுகை முக்கியம்.

-----------------------------------------------------------------------------------------------
அபிராமி அந்தாதி பாடல்கள் பலவற்றை படிக்கையில் எனக்கு லலிதையின் சஹஸ்ர நாமங்கள் ஆங்காங்கே நினைவில் வந்தது. இன்னும் பலமுறை தொடர்ந்து படிக்க வேண்டும் என்றாலும், ஆங்காங்கே சில பாடல்களுக்கான நாமங்களை மட்டும் இங்கே காணலாம்.

முதலில் "உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமே" என்கிறார் பட்டர்பிரான். அதாவது ஞானவடிவான அம்பிகை பக்தர்களுக்கு சாரம்/ஞானம் அளித்தவள். ஞானிகளை விசாரதர்கள் என்பது வழக்கம். விஷாரதர் என்றால் உணர்ந்தவர் என்ற பொருளும் உண்டு. லலிதையின் சஹஸ்ர நாமத்தை அளித்த வசினி தேவதைகளை விஷாரதா என்பர். சிருங்கேரியில் அன்னை சாஷாரதையாக இருக்கிறாள். ஆக, சஹஸ்ரநாமத்தில் இருக்கும் சாரதா பட்டர் வாக்கில் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமாக வருகிறாள்.

அடுத்ததாக சிந்தூர மேனியள்/வணத்தினள்' என்று அம்பிகையை பாடியிருக்கிறார் பட்டர். இதே 'நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் பிரும்மாண்ட மண்டலா' என்று வருகிறது சஹஸ்ர நாமத்தில். அதாவது, அன்னை தனது அருண வர்ணத்தில் உலகை மூழ்கடிக்கச் செய்பவள் என்று அர்த்தம். அருண வர்ணம் என்பது உதிக்கும் சூரியனின் சிந்தூர நிறம்.

பராசக்தியின் பக்தர்களில் முக்கியமானவர் மன்மதன். அன்னையை வணங்கும் பக்தர்களை குறிப்பிடும்படியாக 'மஹேச-மாதவ-விதாத்ரு-மன்மத-ஸ்கந்த-நந்தி-இந்திர-மனு-சந்திர-குபேர-அகஸ்திய-க்ரோத-பட்டாரக வித்யாத்மிகாயை' என்பதாக ஒரு நாமம் உண்டு. இதில் த்ரிமூர்த்திகளுக்கு அடுத்தபடியாக மன்மதனுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மன்மதனுக்கு பிறகுதான் ஸ்கந்தன் இந்திரன், குபேரன் எல்லாம். இதையே பட்டர் ''காமன் முதல் சாதித்த புண்ணியர்' என்று கூறுகிறார்.

"சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்பட்டு" என்பது அந்தாதி கூறும் அன்னையின் உடை. அதாவது சிறிய இடையினில் கட்டப்பட்ட பட்டு என்கிறார். இதை சஹஸ்ரநாமத்தில், 'அருணாருண கெளஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ' என்ற நாமம் கூறுகிறது. அருணகிரணம் போன்ற சிவப்புப் பட்டு வஸ்தரத்தை இடையில் அணிந்தவள் என்பது பொருள்.

'பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளி' என்கிறார் பட்டர் இங்கே. அதாவது அம்பிகையின் குரலினிமையில் தோன்றியதுதான் பண் என்பது பொருள். வாக்தேவதைகள் அன்னையின் குரலினிமையை 'நிஜஸல்லாப மாதுர்ய விநிர்பர்த்ஸித கச்சபி' என்று கூறுகிறார்கள். கலைமகள் கையில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. அந்த வீணையின் நாதத்தை பழிக்கும் மதுரமான குரலுடையவள் அம்பிகை என்கின்றனர்.

'பவாரண்ய குடாரிகா' என்பது அம்பிகையின் நாமம். பவம் என்னும் சம்சார காட்டில் இருந்து நம்மை வெட்டி தன்னகத்தே சேர்ப்பவள் என்று பொருள். சம்சாரத்தில் எப்படி நாம் உழல்கிறோம்?. ஒவ்வொரு ஜன்மத்திலும் தாயின் வயிற்றில் பிறப்பதால் தானே சம்சார பந்தம்?. இதையே பட்டர் 'தாயர் இன்றி மங்குவர் வழுவாப் பிறவியை' என்கிறார் இங்கே.

'சர்வமங்களா' என்பது அன்னையின் இன்னொரு நாமம், மங்கலப் பொருள்கள் எல்லாமாக இருப்பவள் அம்பிகை என்பதே இதன் பொருள். இதையே பட்டர் 'மங்கலை, பூரணாசல மங்கலை' என்று இங்கே கூறியிருக்கிறார்.
------------------------------------------------------------------------------------------------
இப்படியாக இன்னும் எழுதலாம், மணி அதிகாலை 3.00 ஆகிறது, காலை எழுந்து 'அனுஷ்டானங்கள்' இருப்பதால் இந்த இடுகையினை இத்துடன் முடிக்கிறேன். மேலே உள்ள எட்டு நாமங்களுக்கான பாடல்களை குமரன் பதிவில் உள்ள இடுகைகளுக்கான லிங்க் தர வேண்டும். அதனை பின்னர் செய்கிறேன்.

பிறந்தநாள் கொண்டாடும் கே.ஆர்.எஸுக்கும், அம்பிகையின் அலங்கார மாலையாகிய அந்தாதியை சிறப்பாக அளித்த குமரனுக்கும் அன்னை பராசக்தி, அபிராமி சகல செளபாக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் அருள வேண்டுகிறேன்.

18 comments:

ஜீவா (Jeeva Venkataraman) said...

//பிறந்தநாள் கொண்டாடும் கே.ஆர்.எஸுக்கும், அம்பிகையின் அலங்கார மாலையாகிய அந்தாதியை சிறப்பாக அளித்த குமரனுக்கும் அன்னை பராசக்தி, அபிராமி சகல செளபாக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் அருள வேண்டுகிறேன்.//
ரிப்பீட்டு!

சரி, போய் தூங்குங்க!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சரி, போய் தூங்குங்க!//

சரி இப்போ மறுபடியும் எழுஞ்சிக்கோங்க!:)

உத்திஷ் டோத்திஷ்ட மெளலீச உத்திஷ்ட மதுராம்பதே!
உத்திஷ்ட லலிதா தாசா
கர்த்தவ்யம் தைவ மாஹ்னிஹம்!

:)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சூப்பர் பதிவு!
டின்னருக்கு கூப்பிட்டு இருக்காக!
ஓசிச் சாப்பாடு கொட்டிக்கிட்டு மீண்டும் தெம்பா வாரேன்! :))

கவிநயா said...

படிக்கத் திகட்டா அன்னையின் கருணை.
ஓதத் திகட்டா அவள்திரு நாமங்கள்.

நீங்கள் எழுத வேண்டுமென்பது அவள் விருப்பமானால் அதனை யாரால் தடுக்க முடியும்? :) நிறைய எழுதுங்கள்.

கண்ணன், குமரனோடு, 50-வது பதிவிற்கு உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

கீதா சாம்பசிவம் said...

மஹேச-மாதவ-விதாத்ரு-மன்மத-ஸ்கந்த-நந்தி-இந்திர-மனு-சந்திர-குபேர-அகஸ்திய-க்ரோத-பட்டாரக வித்யாத்மிகாயை'

இது பத்திக் கேள்விப் பட்டு இருக்கேன், ஆனால் மன்மதன் மட்டும் முன்னால் வரக் காரணமும் சொல்லி இருக்கலாமோ???

//[பலர் 500-600 பதிவுகளுக்கும் மேல் சென்றிருக்க இதென்ன சிறுபிள்ளைதனமோ தெரியல்ல :-)].//

உ.கு.??????? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

50-வது பதிவுக்கு வாழ்த்து சொல்லிக்கிறேன், கொஞ்சம் கோபத்தோடயே! :P

அது சரி, கே.ஆர்.எஸ். ஜீவா, கவிநயா, போன்ற அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மட்டும் தனி போஸ்டா போட்டிருந்தீங்களா என்ன?? ஒரு 5 நிமிஷம் முன்னாலே பதிவே இல்லை, அப்புறம் திடீர்னு பார்த்தா பதிவு, அதுவும் ஏற்கெனவே போட்ட 4 பின்னூட்டங்களோட, மீண்டும் வேதாளம் வேலை ஆரம்பிச்சுடுச்சோ??? :P :P :P

ambi said...

அருமையான கம்பேரிசன். அபிராமி அந்தாதி லலிதா சஹஸ்ர நாமத்தின் தமிழ்க் வெர்ஷன் மாதிரி இருக்கு போலிருக்கே! 50க்கு வாழ்த்துக்கள். :)


//காலை எழுந்து 'அனுஷ்டானங்கள்' இருப்பதால் இந்த இடுகையினை இத்துடன் முடிக்கிறேன்.//

அண்ணா அப்படியே 'சரணாகதி' செய்ய மறந்துடாதீங்க. :)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

I am back! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

50ஆவது இடுகை பரிசு இடுகையாய் அமைந்ததும் அன்னையின் அருள் தான்!

50இலும் ஆசை வரும்! 50க்கு வாழ்த்துக்கள் அண்ணா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இதில் த்ரிமூர்த்திகளுக்கு அடுத்தபடியாக மன்மதனுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது//

ஸ்ரீவித்யா உபாசனையில், மன்மதனைப் பற்றிய குறிப்புகளை முத்துஸ்வாமி தீட்சிதரும் நவாவர்ணக் கிருதிகளில் சொல்லுவார்!

அனங்கன் என்று மன்மதனுக்குப் பெயர்! அன்+அங்கம்=அங்கம் இல்லாதவன் மன்மதன்!

அனங்கா த்யுபாசிதாய
அஷ்டதளாப் ஜாஸ்திதாய
தனுர் பானா தரா கராய
தயா சுதா சாக ராய
ன்னு கிருதியில் வரும்-னு நினைக்கிறேன்!

அனங்க குசுமா, அனங்க மதனா, அனங்க மேகலா...ன்னு மொத்தும் எட்டு அனங்க தத்துவத்தைச் சொல்லுவார்!

மன்மதன்-காம தகனம்-அவனைத் தகித்த போது அம்பாளின் நிலை என்ன?-ஸ்ரீ வித்யா உபாசனையில் அனங்கன் எப்போது வந்தான்?...

உம்ம்ம்ம்
மெளலி அண்ணா எழுத வேண்டிய விசயம் எவ்வளவோ இருக்கு போல-ன்னு உரக்கச் சொல்லக் கூடாது-ன்னு நானும் எவ்வளவோ முயன்று தான் பார்க்கிறேன்! ஆனால் முடியலையேப்பாஆஆஆஆ! :))

தி. ரா. ச.(T.R.C.) said...

பொன் விழாவுக்கு வாழ்த்துக்கள். கருத்துக்கள் நவராத்திரி பதிவுக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

மதுரையம்பதி said...

நன்றி ஜீவா,கவிக்கா,கே.ஆர்.எஸ்

மதுரையம்பதி said...

வாங்க கீதாம்மா, உங்க கீர்ர்ர்ர்ர் இல்லன்னா அந்த பதிவு வீணே...:)
கிர்ர்ர்ர்ர்ர்ருக்கு நன்றி

நீங்க, கே.ஆர்.எச் இருவரும் மன்மதனுக்கு ஏன் முன்னிடம் அப்படின்னு கேட்டிருக்கற மாதிரி இருக்கு...பின்னர் ஒரு தனிப் பதிவு போடறேன்.

மதுரையம்பதி said...

வாங்க அம்பி, திரச...வாழ்த்துக்களுக்கு நன்றி.

மதுரையம்பதி said...

வாங்க அம்பி, திரச...வாழ்த்துக்களுக்கு நன்றி.

மதுரையம்பதி said...

//கருத்துக்கள் நவராத்திரி பதிவுக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளது//

வாங்க திரச...இதென்ன சேமிக்கும் பழக்கம் இங்குமா?.நவராத்ரிக்கு அம்பாள் பற்றி எழுத விஷயமா இல்லை?..அப்போதைக்கு போதே சொல்லிட்டு போங்க தலைவா!!!

மதுரையம்பதி said...

//அது சரி, கே.ஆர்.எஸ். ஜீவா, கவிநயா, போன்ற அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மட்டும் தனி போஸ்டா போட்டிருந்தீங்களா என்ன?? ஒரு 5 நிமிஷம் முன்னாலே பதிவே இல்லை, அப்புறம் திடீர்னு பார்த்தா பதிவு, அதுவும் ஏற்கெனவே போட்ட 4 பின்னூட்டங்களோட,//

எழுதியவுடன், முதல்ல அபிராமி பதிவு லின்க் எல்லாம் குடுக்காம பதிவை பப்ளிஷ் பண்ணினேன். அப்போது அவர்களது கமெண்ட். பிறகு நேற்று காலை லிங்க் கொடுக்கும் போது நீங்க பார்த்திருகிறீர்கள்..எனவே பதிவைக் காணோம். அஷ்டே

மதுரையம்பதி said...

//மன்மதன்-காம தகனம்-அவனைத் தகித்த போது அம்பாளின் நிலை என்ன?-ஸ்ரீ வித்யா உபாசனையில் அனங்கன் எப்போது வந்தான்?...

உம்ம்ம்ம்
மெளலி அண்ணா எழுத வேண்டிய விசயம் எவ்வளவோ இருக்கு போல-ன்னு உரக்கச் சொல்லக் கூடாது//

உம்ம்ம்...எழுதலாம் கே.ஆர்.எஸ்...கொஞ்சம் கொஞ்சமா எழுதலாம் :)

குமரன் (Kumaran) said...

பாருங்க. நீங்க ஆகஸ்டுல எழுதுனதை படிக்கிற வாய்ப்பு எனக்கு இப்பத் தான் கிடைச்சிருக்கு. :-)

அபிராமி அந்தாதி பொருளுரை எழுதும் போதெல்லாம் வந்து இந்தத் தொடர்பை சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இங்கே மிக அழகாக அவற்றைத் தொடுத்தும் எழுதிவிட்டீர்கள். மிக்க நன்றி.