திருவாரூரில் பிறந்தால் முக்தி, திருச்சிற்றம்பலத்தை தரிசித்தால் முக்தி, மதுரை வீதிகளில் நடந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது ஆன்றோர் வாக்கு. இதுபோலவே தாம்ரபர்ணி நதியை தரிசித்தாலோ, நினைத்தாலோ, அதில் ஸ்நானம் செய்தாலோ, அதன் நீரைப் பருகினாலோ எல்லா பாபங்களும் அகலும் என்கிறது தாம்பரணி மஹாத்மீயம். சரி, நவகைலாயம் பற்றி எழுத என்று ஆரம்பித்து இந்த நதி மஹாத்மீயம் எதற்கு என்றால், நவகைலாய க்ஷேத்திரங்கள் பலவற்றிற்கும் தாம்ரவர்ணிக்கும் இருக்கும் தொடர்புதான். இந்நதியின் கரையில் இருக்கும் கோவில்களில் இந்த நவகைலாச தலங்களும் வந்துவிடுகிறது. அது மட்டுமன்றி, மற்ற தலங்களையும் பற்றி அங்காங்கே தொட்டுச் செல்ல எண்ணம். நமது திருநெல்வேலிச் சீமையின் மைந்தர்கள் பலர் இங்கே வருகிறார்கள், அவர்களும் பின்னூட்டத்தில் தமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
சரி நவகைலாசங்கள் என்பது எந்தெந்த ஸ்தலங்கள் என பார்க்கலாம். பாபநாசம் / பாப விநாசம் சேரன்மாதேவி கோடகநல்லூர் குன்னத்தூர் முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேந்த மங்கலம் - சேர்ந்த பூ மங்கலம்.
சரி, எப்படி இந்த ஊர்களை மட்டும் நவகைலாசங்கள் என்று கூறுகிறார்கள் இது ஏதும் ஏட்டிக்குப் போட்டியாக வந்த ஸ்தலங்களா? என்பதைமுதலில் பார்த்துவிடலாம்.
ரோமச முனிவர் அப்படின்னு ஒருத்தர். மஹா தபஸ்வி, அகஸ்தியரின் சிஷ்யர். அகஸ்தியரும்-லோபா முத்திரையும் ஹிமவான் மகள் திருமணத்தின் போது வடகோடு உயர்ந்த சமயத்தில் தெற்கே வந்து சமன் செய்த காலத்தில் ரோமச முனிவர் அகஸ்தியரை வணங்கி அவரிடம் உபதேசம் பெறுகிறார். ரோமசரும் தபஸ் பலகாலம் செய்கிறார். ஆனாலும் ஈசனது தரிசனம் கிட்டவில்லை. அப்போது தனது குரு அகஸ்தியரிடமே முறையிட்டு ஈசனின் தரிசனத்துக்கும், முக்திக்குமான வழியை கேட்கிறார். அகஸ்திய முனிவர் சற்றே சிந்தனை வயப்பட்டு பின்னர் ரோமசரிடம், தாமிரபரணி உற்பத்தியாகும் இடத்திற்கு சென்று ஈசனை வழிபட்டு நவகிரஹங்களையும் வழிபடச் சொல்கிறார். அவ்வாறு சொல்லி பின்னர் ஆற்றில் 9 மலர்களை இட்டு, அவை முறையே கரை ஒதுங்கும் இடங்களில் ஈசனது லிங்கங்களை நிறுவி நவகிரஹ வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
இவ்வாறாக அகஸ்தியரால் நீரில் விடப்பட்ட ஒன்பது மலர்கள் கரை ஒதுங்கிய இடங்களே மேலே சொல்லப்பட்ட 9 சிவ-க்ஷேத்திரங்கள். இவ்விடங்களில் எல்லாம் உமாபதியை வணங்கி தரிசனம் பெற்று முக்தியடைந்தாராம் ரோமசர். மேலே கூறப்பட்டஇந்த க்ஷேத்திரங்கள் முறையே,சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன், கேது மற்றும் சுக்கிரன் ஆகியவை. இவற்றை பார்க்கையில் தஞ்சையை ஒட்டிய நவக்கிரஹ க்ஷேத்திரங்கள் நம் மனதில் நிழலாடுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட சிவ ஸ்தலங்களை மேலக்கைலாயங்கள் (முதல் மூன்று), நடுக்கைலாயங்கள் (4,5,6) மற்றும் கீழக்கைலாயங்கள் என்று கூறுகிறார்கள்.

அடுத்து, தாம்ரபரணி நதியின் கதையை பார்க்கலாமா?, இல்லை பாபநாசத்தில் ஆரம்பித்து நவக்கிரஹ க்ஷேத்திரங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாமா என்பதை பின்னூட்டிச் சொல்லுங்கள், அதன்படி செய்யலாம்.