
ஒருநாள் கைலாயத்தில் அன்னையும் அப்பனும் ரிலாக்ஸா இருக்கும் போது அவரகளைக் காண பேய் உருவில் தலைகிழாக ஒருவர் நடந்து வருவதைக் காண்கிறார் பார்வதி. உடனே பார்வதி தேவி, "சுவாமி, இந்த கோலத்தில் வரும் இந்த பெண் யார்?" என்று கேட்கிறார். அதற்கு பதிலாக ஈசன், 'பார்வதி, வருபவள் உனக்கும் எனக்கும் அம்மை' என்கிறார். வந்தவர், இறைவன் தன்னை 'அம்மையே' என்று அழைத்ததைக் கேட்டவுடன் ஆனந்த கண்ணீர் பெருக இறைவனை தரிசித்தார்.
'அம்மா உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று ஈசன் வலிந்து கேட்க, 'பிறவா வரம் தாரீர் பெம்மானே, மீறி பிறந்தாலும் உம்மை மறவா வரம் தாரீர்' என்று கேட்டு, இறைவனையே மெய்சிலிர்க்க வைத்த பெருமைக்குரியவர். காரைக்கால் அம்மையார் என்று நாம் அழைக்கும் புனிதவதியார். மூன்றாம்/நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த இவர், அறுபத்து மூவரில் வெகு சிலரேயான பெண் நாயன்மார்களில் ஒருவர். இவரது ஜெயந்தி தினம் இன்று.
சோழவள நாட்டில் உள்ள கடற்கரை துறைமுகமாகிய காரைக்காலில் வியாபர குடும்பத்தவரான தனதத்தன் என்பவரது செல்வத் திருமகளாய் பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் புனிதவதி. சிறுவயது முதலே ஈசனிடம் மாறாத அன்பு பூண்டு வந்தவர். இவருக்கு பரமதத்தன் என்னும் நாகப்பட்டினத்தைச் சார்ந்த வியாபாரி ஒருவருடன் திருமணம் செய்வித்தனர் பெற்றோர். ஈசனிடம் மாறாத அன்பு கொண்டதால் இத்தம்பதிகளைத் தேடி சிவனடியார்கள் வருவர். அவர்களுக்கு புனிதவதியார் தலைவாழையில் உணவு படைத்து மகழ்வதுண்டு.

இவ்வாறான காலத்தில் வாணிபத்தின் பொருட்டு கடல் பிரயாணம் செய்த பரமதத்தன் பாண்டிய நாட்டில் வேறு ஒரு வணிகரின் மகளை மணந்து கொண்டு ஒரு பெண் குழந்தைக்கு தந்தையும் ஆனான். அக்குழந்தைக்கு தனது முதல் மனைவி பெயரான புனிதவதி என்றே பெயரிட்டு வளர்த்து வருகிறான். இதனை அறிந்த புனிதவதியார் கணவனை பார்க்க பாண்டிய நாடு வந்தார். பரமதத்தன் தன் இரண்டாம் மனைவி, மகளுடன் புனிதவதியாரைக் கண்டு காலில் விழுந்து வணங்குகிறான். கணவனுக்குரிய தனது உடல் இப்போது அவனுக்கு தேவையில்லை என்பதை உணர்ந்த புனிதவதியார் இறைவனை வணங்கி பேய் வடிவம் பெறுகிறார். அந்த வடிவத்துடன் தலைகிழாக கையிலைக்கு நடந்து சென்று பரமசிவன் பார்வதி தரிசனம் பெறுகிறார். இறுதியில் தொண்டை நாட்டில், திருவாலங்காட்டில் முக்தி பெற்றார் என்கிறது திருத்தொண்டர் புராணம். சேக்கிழார் இவரைப்பற்றிச் சொல்லும் போது பின்வறுமாறு சொல்கிறார்.
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போதுன் அடியின் கீழிருக்க என்றார்
அன்னை காரைக்காலில் பிறந்தமையால் காரைக்கால் அம்மையார் என்று போற்றப்படுகிறார். இவர் நால்வருக்கும் மூத்தவர். இவர் திருவாலங்காட்டு ஈசன் மேல் இருபது திருப்பதிகங்கள் பாடியுள்ளார். அவை திருவாலங்காட்டு மூத்த திருப்பதிங்கள் என்றழைக்கப்படுகிறது. அது மட்டுமல்லாது அற்புத திருவந்தாதியும், இரட்டை மணிமாலை போன்றதும் இவர் எழுதியதே.
கீழே இருப்பது காரைகாலம்மை அருளிய திருவந்தாதியிலிருந்து சில பாடல்களும் அவற்றிற்கு எனக்குத் தெரிந்த பொருளும். இந்த பதிவினை படிப்பவர்கள் நான் கூறியுள்ள பொருளில் ஏதேனும் தவறு இருப்பின் சுட்டிக்காட்டி திருத்த வேண்டுகிறேன்.
பிரானென்று தன்னைப்பன் னாள்பர வித்தொழு வார்இடர்கண்
டிரான்என்ன நிற்கின்ற ஈசன்கண் டீர்இன வண்டுகிண்டிப்
பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்துபொம் மென்றுறைவாய்
அராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன் நீள்முடி அந்தணனே.
பொருள் : பிரானே! என்று தன்னை எல்லாநாட்களிலும் எப்போதும் தொழுபவரது இடர்களை பார்த்துக் கொண்டிராது களைபவன். வண்டுகள் சூழும் கொன்றை மலர்களை, செம்பொன் போன்ற செஞ்சடையில் அணிந்த அந்தணன்.
இனிவார் சடையினிற் கங்கையென் பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணில்என் செய்திகை யிற்சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந் தன்றுசெந் தீயில்முழ்கத்
தனிவார் கணைஒன்றி னால்மிகக் கோத்தஎஞ் சங்கரனே.
பொருள் : தலையில் உள்ள ஜடாமுடியில் கங்கை என்பவளை கொண்டு, கனிவாக மலைமகளையும் அருகிலிருத்தி, முப்புரங்களையும் ஒரே கணையால் எரித்த சங்கரனே.
சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாவென் றாழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஓவாது நெஞ்சே உரை.
பொருள் : நீண்ட சடையுடைய சங்கரனை, அந்த சடையில் சீற்றமுள்ள நாகத்தைச் சூடியுள்ள புண்ணியனை நம்மை எப்போதும் காக்கும் ஈசனை எப்போது மனதில் நினை.