Tuesday, September 25, 2007

திருகருகாவூர் தல தேவார பாடல்கள் -2

பாடல் - 4

பொடிமெய்பூசி மலர்கொய்து புணர்ந்துடன்
செடியரல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர்
கடிகொள்முல்லை கமழும் கருகாவூரெம்
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே.

மெய்யில்/உடம்பில் திருநீறு பூசிக்கொண்டு, நன் மலர்களைக் கொண்டு தன்னை வழிபாடு செய்வாருடைய உள்ளத்திலுள்ள துன்பங்களை நீக்கிஅருள் நெஞ்சமுடையவராகச் செய்யும் பெருங்குணமுடையவரும், மணம் பரப்பும் முல்லை மலர்கள் எங்கும் திகழும் கருகாவூரில் எழுந்தருளி இருக்கும் எங்கள் அடிகளாகிய இறைவனின் நிறம், கனன்று எரியும் அனலின் செக்கர் நிறமாகும்.

செடியர் - துன்பமுடையவர்; கடி - மணம்; இறைவன் யோக நிலையில் இங்கு குடிகொண்டுள்ளதால் அடிகள் என்று அழைக்கப்படுகிறார்.

பாடல் - 5

மையலின்றி மலர்கொய்து வணங்கிடச்
செய்ய உள்ளம் நல்கிய செல்வத்தர்
கைதண் முல்லை கமழும் கருகாவூரெம்
ஐயர் வண்ணம் அழலும் அழல்வண்ணமே.

அறியாமை அகன்று அழகிய மலர்களைக் கொய்து தன்னை வணங்குபவர்கட்கு ஞானம் பொருந்திய நீதிசேர்ந்த உள்ளைத்தை அளித்த அருட்செல்வராகியவரும், தாழையின் மீதும் படர்ந்த முல்லை மலர்கள் மணம் பரப்பும் கருகாவூரின் கண் விளங்குபவருமாகிய எம் தலைவரான இறைவனின் திருமேனியின் நிறம் கனன்று விளங்கும் அனலின் நிறம் போன்ற சிவந்த நிறமாகும்.

மையல் - அறியாமை; செய்ய உள்ளம் - நீதிநிறைந்த உள்ளம்; கைதை - தாழை; இறைவன் உண்டு என்ற ஞானநிலையே மையல் இல்லாத நிலையாகும். பந்த-பாச உணர்விலிருந்து விலகிய நிலையினையும் குறிக்கும்.

பாடல் - 6

மாசிறொண்டர் மலர்கொண்டு வணங்கிட
ஆசையார வருணல்கிய செல்வத்தர்
காய்சினந்த விடையார் கருகாவூரெம்
ஈசர்வண்ணம் எரியும் எரிவண்ணமே.

ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று குற்றங்களையும் நீக்கிய தொண்டர்கள், அழகிய மலர்கள் கொண்டு அர்ச்சித்து வணங்க, அவர்களுடையவிருப்பங்கள் எல்லாம் நிறைவேற்றி திருவருள் பாலிப்பவரும், மிகுந்த சினத்துடன் விளங்கும் ரிஷபத்தை வாகனமுமாக கொண்ட எம் கருவூர் பெருமானாகிய ஈசரின் திருமேனியின் நிறம் எரிகின்ற தழலைப் போன்ற செம்பவள நிறமாகும்.

மாசு - முக்குற்றம் ; ஆசையார அருள் நல்கிய - நெஞ்சத்து ஆசையெல்லாம் பூர்த்தி செய்கின்ற; விடை - ரிடபம்/தரும தேவதை ; ஈசன் - எல்லோருக்கும் ஆதாரமான தன்மையைக் குறிக்கும்.

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆகா
சென்ற பதிவில் பஞ்சபூத தலங்ளின் அழகான படம்! இங்கு என்ன இருக்குமோ என்று ஆசையுடன் ஓடி வந்தேன். படமே போடாம கவுத்திட்டீங்களே தலைவா! :-)

//செடியரல்லா உள்ளம் //
செடியர் - துன்பமுடையவர்

கரெக்டாச் சொல்லி இருக்கீங்க
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே என்ற பாசுரம் நினைவுக்கு வருது.

//கடிகொள்முல்லை கமழும் கருகாவூரெம்//

முல்லை வன நாதர் பெயர் பொருத்தம் பதிகத்தில் வந்துவிட்டது பாருங்க.

//மையலின்றி மலர்கொய்து//

மலர் கொய்யும் போது மையல் வருமா?
கிறங்கும் மலர் வாசனையில், இயற்கை அழகில், இன்பம் துய்க்கும் எண்ணம் தான் முதலில் தோணும். வாசத்தில் வசமிழப்போம்! அதுவே மையல். மயக்கம்.
மலர்கள் இறைவனுக்கு உரியது என்ற எண்ணம் வராமல் தடுக்கும் மயக்கம்.

அதனால் தான் மையல் இன்றி மலர் கொய்தல்! பற்று விலக்கி கர்மாக்களைச் செய்து அதனால் பூக்கும் மலரை இறைவனுக்கே அர்ப்பணம் செய்வது.
என்ன அழகா இரண்டே சொற்களில் மையலின்றி மலர் கொய்துன்னு சொல்லிட்டார் சம்பந்தப் பெருமான்! அடடா!

மலர் கொய்தலும், அதை மாலையாக்கலும் குறித்து பல விதிமுறைகள் உள்ளன. மலர்கள் அரும்பி விரியும் முன்னரே பறித்தல் என்பதும் அதில் ஒன்று. அதைத் தத்துவத்தோடு இணைத்துச் சொல்லி விளங்க வைப்பார் அனந்தாழ்வான்.

மெளலி (மதுரையம்பதி) said...

//. படமே போடாம கவுத்திட்டீங்களே தலைவா! :-)//

மன்னியுங்கள் கே.ஆர்.எஸ் அண்ணா....ஏதோ எழுதிக்கொண்டே வந்தேன், சட்டென படம் தேடாது பப்ளிஷ் பண்ணிவிட்டேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@mauli சார் அமர்க்களமாக இருக்கு.. அதுவும் கேஆர்ஸ் விளக்கம் இன்னும் பிரமாதம்.நற்கருபச் சாற்றினிலே தேன்கலந்து

Kavinaya said...

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் அழகு. விளக்கங்களும்தான் :) நன்றி மௌலி.