Saturday, September 29, 2007

திருகருகாவூர் தல தேவார பாடல்கள் -3
பாடல் - 7

வெந்த நீறு மெய்பூசிய வேதியன்

சிந்தைநின்ற வருள் நல்கிய செல்வத்தன்

கந்தமெளவல் கமழும் கருகாவூர் எம்

எந்தை வண்ணம் எரியும் எரிவண்ணமே.

நிலையாமைத் தத்துவத்தை உணர்த்தும் திருநீற்றினை தன் திருமேனியில் பூசியுள்ள வேதங்களின் இருப்பிடமானவனும், பக்தர்களின் மனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் திருவருட்செல்வனும், முல்லை மணம் கமழும் கருகாவூரில் விளங்குபவனுமாகிய எம் தந்தையாகிய இறைவனின் திருமேனி நிறம் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் நிறம் போன்ற செம்பவழ நிறமாகும்.
நிலையாமையை உணர்த்தும் திருநீற்றை பல்வேறு சமயத்தாரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். திருமாலடியார்களும் திருநீற்றின் சிறப்பினைப் போற்றியுள்ளனர். "கரியமேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரியகோலத்தடங்கண்ணன்" என்று திருவாழ்மொழியிலும் இருப்பதாக அறிகிறேன்.

கந்தம் - சந்தனம்/வாசனை ; மெளவல் - முல்லை ;

பாடல் - 8

பண்ணினேர் மொழியாளையொர் பாகனார்
மண்ணு கோலம்முடையம் மலரானொடும்
கண்ணனேட வரியார் கருகாவூர் எம்
அண்ணல்வண்ணம் அழலும் அழல்வண்ணமே.

இன்னிசை பாடுதல் போல இனிய மொழி பேசும் உமையவளை தனது திருமேனியில், வாம பாகத்தில் கொண்டு விளங்குபவரும், தாமரையில் அமர்ந்து படைப்புத் தொழிலியற்றும் ப்ரம்மாவும், திருமாலும் தேடிக் காண்பதற்கரிய மூர்த்தியாய் நின்றவரும், கருகாவூரில் கோயில் கொண்டுள்ளதலைமையுடைய எம் அண்ணலாகிய சிவபிரானின் நிறம் சுடர்விட்டுக் கனன்று எரியும் தழலின் நிறம் போன்ற செந்நிறமாகும்.

மலரான் - பிரம்மன்; மண்ணுக்கோலம் - படைப்புத்தொழில்; வாம பாகத்தில் அன்னை உமையாளைக் கொண்ட திருக்கோலந்தான் அர்த்தநாரிசுவரர். அடி-முடி காண சென்ற பிரும்மா, திருமால் முயன்றதையும் இங்கு குறிப்பிடுகிறார்.
பாடல் - 9

போர்த்தமெய்யினர் போதுழல் வார்கள் சொல்
தீர்த்தமென்று தெளிவீர் தெளியேன்மின்
கார்த்தண்முல்லை கமழும் கருகாவூர் எம்
ஆர்த்தர் வண்ணம் அழலும் அழல்வண்ணமே.


தெளிவு பெற்றவர்களே, பாயினை உடம்பில் போர்த்தியும், இருளில் விளக்கின்றித் திரிபவர்களும் சொல்வதை உண்மையென்று நம்பாதீர்கள். கார் காலத்தில் பூக்கும் குளிர்ச்சியும், மணமும் உடையதான முல்லை வனமாம் கருகாவூரில் எழுந்தருளியிருக்கும் எனக்கு ஆப்தமானவராகிய கடவுளின்திருமேனி நிறம் கனன்று எரியும் செந்தீயின் நிறமாகும்.
தீர்த்தம் - உண்மை; கார் - கார் காலம்; தண் - குளிர்ச்சி ;

பெளத்த, சமண சமயத்தவர்களைத்தாம் பாயினை போர்த்தியவர்கள் என்றும் இருளில் விளக்கின்றி இருப்பவர் என்றும் கூறுவதாக சொல்கிறார்கள். சம்பந்தர் காலத்தில் இந்த இரு சமயங்கள் தமிழகத்தில் வேரூன்றியதால் இப்படி சொல்லியிருக்கலாமென தோன்றுகிறது.

பாடல் - 10

கலவமஞ்ஞை யுலவும் கருகாவூர்
நிலவுபாடல் உடல்யான்றன் நீள்கழல்
குலவுஞான சம்பந்த்தன் செந்தமிழ்
சொலவலாரவர் தொல்வினை தீருமே.

கலவம் - கலாபம் - மஞ்ஞை - மயில்; நிலவு பாடல் - நான்மறை; குலவு - வணங்கி போற்றும்; தொல்வினை - முற்பிறப்பின் பாவம்

தோகை விரித்தாடும் மயில் உலவுகின்ற கருகாவூரில் எழுந்தருளியிருப்பவனும், என்றைக்கும் விளங்குகின்ற அருள்மிக்க பாடல்களார் அர்ச்சிக்கப்படுபவனுமான இறைவனின் திருவடிகளை போற்றி துதிக்கும் ஞானசம்பந்தன் செந்தமிழை சொல்லும் வல்லமை பெற்றவர்களுடைய பாவங்கள் முற்றிலும் தீர்ந்துவிடும்.
மொத்தமாக 11 பாடல்களைக் கொண்ட இந்த திருகருகாவூர் பதிகத்தில், ஒரு பாடல் (8ஆம் எண்ணில் இருக்க வேண்டியது) கிடைக்காததால் இது 10 பாடல்களாக முடிவுருகிறது. இதில் கடைசிப் பாடலில் தனது பெயரையும், பாடலால் உண்டாகும் பலனையும் கூறி முடிக்கிறார் ஞானசம்பந்தர்.

2 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கரிய மேனிமிசை வெளிய நீறுசிறி தேயிடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை,
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தியுள்ளப் பெற்றேற்கு,
அரிய துண்டோ எனக்கின்று தொட்டுமினி யென்றுமே?

இது தான் நீங்க குறிப்பிட்ட திருவாய்மொழிப் பாசுரம், மெளலி.
ஆனா ஒரு சின்ன திருத்தம்
வெளிய நீறு என்பது இங்கு திருநீற்றினைக் குறிக்கவில்லை! பச்சைக் கர்ப்பூரப் பொடியினைக் குறிக்கிறது. அதனால் தான் அடுத்த அடியில் மேனி முழுதும் பூசப்படும் நீறாகச் சொல்லாமல் "சிறிதே இடும்" என்கிறார்.

மேலும் நீறு என்னும் சொல் பாசுரங்களில் நிறைய வரும். பாத தூளியையும் நீறு என்றே குறிப்பர்கள் ஆழ்வார்கள்.
"மாயன் தமர் அவர் அடி நீறு கொண்டு" என்று திருவாய்மொழியில் வேறொரு இடத்தில் வரும்.

மேலும்,
"நீறு செவ்வே இடக்கண்ணில் நெடுமால் அடியார் என்று". = பச்சைக் கருப்பூரப் பொடியைச் சற்றே அஞ்சனத்தில் கலந்து பூசிக் கொண்டு ஒளிர்வதாக பல இடங்களில் குறிப்பிடுவார்.

ஆனா அதுக்காக பெருமாள் நீறினை ஒரு பொருட்டாகக் கருத மாட்டார் என்று சொல்லவில்லை!
திவ்யதேசங்கள் ஒன்றில் ஆண்டுக்கு ஒரு முறை, விபூதி பூசிக் காட்சி தரும் பெருமாள் பற்றி அறிந்திருக்கீங்களா? சுவையான நிகழ்ச்சி! பதிவாப் போடட்டுமா?

மதுரையம்பதி said...

நன்றி கே.ஆர்.எஸ் அண்ணா....முழுப்பாடலையும் தந்தமைக்கு.

//ஆனா அதுக்காக பெருமாள் நீறினை ஒரு பொருட்டாகக் கருத மாட்டார் என்று சொல்லவில்லை!//

கண்டிப்பாக நீர் அந்த நிலையில் இல்லை...சொல்ல மாட்டீர். :-)

//திவ்யதேசங்கள் ஒன்றில் ஆண்டுக்கு ஒரு முறை, விபூதி பூசிக் காட்சி தரும் பெருமாள் பற்றி அறிந்திருக்கீங்களா? //

அறிந்ததில்லை, ஆவலாக இருக்கிறது தயவு செய்து பதிவிடுங்கள்.