Saturday, September 22, 2007

திருகருகாவூர் தல தேவார பாடல்கள் -1


சில தினங்கள் முன் திருஞான சம்பந்தர் திருகருகாவூரில் பாடிய தேவாரப்பாடல்களை (10) படிக்க கிடைத்தது. அவற்றைசில பதிவுகளாக இங்கே தருகிறேன். நான் எனக்குப் புரிந்த வரையில் பொருளையும், தொடர்புடைய புராணத்தையும் எழுதியிருக்கிறேன்.
ஏதேனும் தவறிருப்பின் தமிழறிஞர்கள் திருத்த வேண்டுகிறேன்.


பாடல் - 1


முத்திலங்கு முறுவல் லுமையுஞ்சவே
மத்தயானை மறுகவ் வுரிவாங்கியக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூரெம்
அத்தர் வண்ணம் மழலும் அழல் வண்ணமே


தன்னுடைய முத்துப்போன்ற பற்கள் ஒளி வீசுமாறு புன்முறுவல் பூத்து அருகில் வீற்றிருக்கும் உமாதேவியார், அச்சம் அடையும்படி மதங்கொண்டு வந்த யானையை நிலைகுலையும்படி வீழ்த்தி, அதன் தோலை உரித்து அந்த கனத்த தோலைப் போர்வையாக போர்த்திக் கொண்ட கருகாவூர் கடவுளாம் எந்தையின் திருமேனி நிறம்சுடர் விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பு போன்ற சிவந்த நிறமாகும்.


கயாசூரன் என்பவன் நான்முகனிடம் வரம் பெற்று, எல்லாத் தேவர்களையும் வென்றபின் காசியை அடைந்தான். முனிவர்களும், பக்தர்களும் அவன் வரவுகண்டு அஞ்சி மணிகர்ணிகை கட்டத்தில் எழுந்தருளியிருக்கும் விச்வேச்வரரை வணங்கி நின்றனர். அவர்களைக் கொல்வதற்கு முற்பட்ட கயாசூரனை தனது கோடி சூரியப்பிரகாசத்துடன் பேருருத்தாங்கி நின்று தம் திருவடியால் உதைத்து வீழ்த்தினார். யானையுருக் கொண்ட கயாசூரனைத் தன் திருக்கரங்களின் நகங்களால் கீறி அவன் தோலை உரித்தார். அப்போது ஈசனின் திருமேனிப் பிரகாசத்தைக் கண்ட உயிரினங்கள் கண்பார்வையிழந்தன. எனவே பெருமான் அவர்களது கண்ணொளி மங்கியதைப் போக்க உரித்த தோலை தன்மேல் போர்வையாக அணிந்தார் என்கிறது புராணம்.
இவ்வாறாக முதல் வரி ஈசன் அடியவர்க்கு அருளும் கருணையையும், இரண்டாம், மூன்றாம் வரிகளில் அவன் பகைவர்களை அழிப்பதையும் சுட்டுகிறது.
கத்தை- தடித்த தோல்அத்தர் - அத்து + அவர்; அத்து என்றால் வழி; அத்தர் = வழிக்கோலுபவர். உயிர்கள் தோன்ற வழிக்கோலுபவர் என்பது பொருள்.

பாடல் - 2


விமு தவல்ல சடையான், வினையுள் குவார்க
கமுத நீழல் அகலாதோர் செல்வமாம்
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம் அழலும் அழல்வண்ணமே.


மனதால் நினைத்தவரும், கண்ணால் காண்பவரும் விம்மும்படியான திருச்சடையுடைய பெருமானுக்கு திருத்தொண்டு இயற்ற எண்ணினாலே அவனுடைய திருவடி நிழலில் அமர்ந்திருக்கும் பெரும் புண்ணியம் உண்டாகும். அப்பெருமையுடைய திருவடிகளையுடைய, மணம் கமழுகின்ற அழகியமுல்லை மலர் நிறைந்த கருகாவூர் அமுதரின் திருமேனியின் நிறம், சுடர்விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பினது சிவந்த நிறமாகும்.அனைத்து உயிர்களையும் தனதருளால் காப்பதால் அமுதர் என்கிறார். மேலும், விரிசடை என்பது ஞானத்தைக் குறிப்பது. கங்கையை தலையில் கொண்டு பிரவாகத்தை ஒரே சீராக நமக்கருளுவதால் விம்மும்படியான சடையான் என்கிறார்.வினை உள்குவார் - திருத்தொண்டையே மனதில் இருத்தி இருப்பவர், ஈசன் திருவடியெனும் பெருஞ்செல்வத்தை அடைவார்.

பாடல் - 3


பழகவல்ல சிறுத்தொண்டர் பாவின்னிசைக்
குழகரென்று குழையா வழையாவரும்
கழல்கொள்பாட லுடையார் கருவூரெம்
அழகர்வண்ணம் அழலும் அழல்வண்ணமே.


இடைவிடாது வழிபட்ட சிறுதொண்டர் இன்னிசைப்பாட்டின் தன்மையாக இருப்பவன் என்று உள்ளம் உருகப் பாடி அழைக்க, அவர் முன் தோன்றி காட்சியளித்தவரும், பாமலர் சூடிய திருவடிகளையுடையவருமான கருகாவூரில் விளங்கும் எனது அழகிய பெருமானின் திருமேனியின்நிறம், கனன்று எரியும் நெருப்பினது சிவந்த நிறம் போன்றது.


முதலடியில், நல்ல இசைப்பாணர் ஒருவர் இன்னிசையால் மனமுருகிப்பாடி, திருக்கருக்காவூர்ப் பெருமானை அழைத்தபோது பெருமான் அவருக்குக் காட்சியளித்ததை குறிக்கின்றது. அழகென்பது அகம்-புறம் எல்லாம் இனிமையாக இருத்தல், இறைவடிவே அழகின் வடிவம். கழல்கொள் இடல் பாடல் உடையார் - பக்தர்கள் மலர் கொண்டும், பாமாலை கொண்டும் செய்யும் அர்ச்சனையாவையும் ஈசன் திருவடிக்கே.

9 comments:

கீதா சாம்பசிவம் said...

sollave illaiyee?mmmm, came just to look. Yet to read the article. will come later. May be you are too busy to come to my blog now-a-days. :(

கீதா சாம்பசிவம் said...

என்னத்தைச் சொல்லறது? யாரையுமே காணோம்? தினம் வந்து பார்த்துட்டுப் போறேன்!

மதுரையம்பதி said...

கீதாம்மா, நான் திரட்டிகளில் சேர்ப்பதில்லை....அதனால் பதிவிட்டிருப்பது எல்லோருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. நானும் 2-3 பதிவுகளுக்கு ஒரு முறைதான் மின்னஞ்சல் அனுப்புகிறேன். :-)

கீதா சாம்பசிவம் said...

ஹிஹிஹி, அவசரக் குடுக்கை, என்னைத் தான் சொல்லிக்கிறேன்! :)))))

குமரன் (Kumaran) said...

மௌலி. முதல் பாடலையும் விளக்கத்தையும் மட்டுமே படித்திருக்கிறேன். 2 நிமிடங்களில் ஒரு மீட்டிங்க் போகவேண்டியிருப்பதால் விரைவாக ஒரு பின்னூட்டம். :-)

அருமையாக இருக்கிறது முதல் பாடல். அத்தர் என்றால் தந்தை என்றும் ஒரு பொருள் உண்டு. அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே என்று சுந்தரும் பாடுவாரே. இராகவனுக்கு இந்த இடுகையின் சுட்டியை அனுப்பினீர்களா?

அழலும் அழல் வண்ணம் என்னும் போது 'நெருப்பும் எரிந்து போகும் நெருப்பின் வண்ணம்' என்ற பொருள் தோன்றுகிறது. தேவ தேவன், சத்யஸ்ய சத்யம் போன்றது இந்த சொற்றொடர் என்று தோன்றுகிறது.

மதுரையம்பதி said...

குமரன்,

நிதானமாக இன்னுமொருமுறை வாருங்கள்... :-)

அத்தர் -> தந்தை பொருளும் உண்டு.

/தேவ தேவன், சத்யஸ்ய சத்யம் போன்றது இந்த சொற்றொடர் என்று தோன்றுகிறது/

இதை எழுதும் போது நானும் நீங்கள் மேல் கூறியதை நினைத்தேன் குமரன்.

//இராகவனுக்கு இந்த இடுகையின் சுட்டியை அனுப்பினீர்களா? //

எனக்கு இராகவனுடன் பழக்கம் இதுவரை கிடைக்கவில்லை....அவர் மின்னஞ்சல் முகவரியும் எனக்குத் தெரியாது. அவருக்கு நீங்கள் தெரியப் படுத்துங்களேன்?.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அத்தர் வண்ணம் மழலும் அழல் வண்ணமே//

அத்தன்=அப்பன்,குரு
அத்தன் என்பது பெரும்பாலும் தந்தை என்ற சொல்லாகவே புழங்கி வரும்!

அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் என்று திருவெம்பாவையிலும் வரும்.

அருணகிரியும்
அத்தன் அன்னை இல்லம் வைத்த சொர்ணம் வெள்ளி...என்று சிதம்பரத் திருப்புகழில் பாடுவார்.

அழலும் அழல் = ஒளிரும் நெருப்பு

நெருப்பு எரியும் போது அழல் என்றும் தகிக்கும் போது தழல் என்றும் சொல்லுவர்.
வேள்வியிலும் முதலில் தோன்றுவது அழல். பின்னர் கனன்று எரிவது தழல்.

அழல் செந்நிறம்;
தழல் நீறு பூத்த வெண்ணிறம்;
சிவபெருமான் திருமேனியின் செந்நிறத்தை அழலும் அழல் என்கிறார். ஒளிர் விடும் அழல் என்று கூறுகிறார்.

தி. ரா. ச.(T.R.C.) said...

மௌளி மிக நல்ல பதிவு. எனக்கு ரொம்ப நாளாகவே திருக்கருகாவூர் போக வேண்டும் என்ற ஆசைஉண்டு. இப்போது கொஞ்சம் தீர்ந்தது உங்கள் பதிவின் மூலமாக

தன்னுடைய முத்துப்போன்ற பற்கள் ஒளி வீசுமாறு புன்முறுவல் பூத்து அருகில் வீற்றிருக்கும் உமாதேவியார், அச்சம் அடையும்படி மதங்கொண்டு வந்த யானையை நிலைகுலையும்படி வீழ்த்தி, அதன் தோலை உரித்து அந்த கனத்த தோலைப் போர்வையாக போர்த்திக் கொண்ட கருகாவூர் கடவுளாம் எந்தையின் திருமேனி நிறம்சுடர் விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பு போன்ற சிவந்த நிறமாகும்.

இதையே மஹாகவி காளிதாஸன் குமார சம்பவத்தில் பார்வதியிடம் தோழி கேட்பது போல் கேட்கிறான்
" மீனாக்ஷி தேவியே நீயோ தங்க ரேகையில் இழைத்த காஞ்சிபுரம் பட்டு சேலைகட்டிகொண்டு இருப்பாய் கல்யாணத்தில். பரமசிவனோ கிழிந்த கருத்த யானைத்தோலை அணிந்து இருப்பார்.
கல்யாணத்தில் மணமகனின் வேஷ்டியையும் மணப்பெண்ணின் புடவையையும் முடி போட்டு விடுவார்களே அப்போது நன்றாகவா
இருக்க்கும்.பேசாமல் வேறு நல்ல அழகான ஆளைப்பார்"
.

கவிநயா said...

நன்றாக விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள் மௌலி.

//குழகரென்று குழையா வழையாவரும்//

இந்த வரி ரொம்பப் பிடித்தது. சொல்லும்போதே மனம் குழைந்து விடுகிறதே. தி.ரா.ச. ஐயா சொன்ன குமாரசம்பவ சம்பவத்தையும் ரசித்தேன் :)