Sunday, August 5, 2007

சில விசேஷ கணபதி க்ஷேத்ரங்கள்....

கணபதியை ப்ராதான்யமாக வழிபடுபவர்கள் காணாபத்யர் எனப்படுவர். இவர்களுக்கு கைலாசம் போன்றது மயூரேசம் என்ற தலம். இது பூனா-பெங்களூர் ரயில் பாதையில் ஜெஜீரி ரயில் நிலையத்தருகில் இருக்கிறது. இங்குள்ள விக்னேஸ்வரருக்கு "ஸ்வானந்தேசர்" என்று பெயர். இவர் சுயம்பு மூர்த்தியானாலும் அருகில் பஞ்சலோகத்தில் சித்தி-புத்தி தேவிகள் இருக்கிறார்கள். இந்த ஆலையத்தில் திசைக்கு ஒருவராக எட்டு கணநாயகர்கள் (வக்ரதுண்டர், ஏகநாதர், மகோதரர்,கஜானனர், லம்போதரர், விகடர், விக்னராஜர், தூம்ரவர்ணர்) இருக்கிறார்கள். இதனால் இது விநாயகருக்கான அஷ்டகாய ஷேத்திரமாக கருதப்படுகிறது. ஆதிசங்கரர் தனது குரு கோவிந்த பாதரை சந்திக்கும் முன்பும், பாரத தேச பாதயாத்திரையின் முன்பும் இந்த மயூரேச கணபதியை ஆராதித்ததாக கூறப்படுகிறது. அஷ்ட கணபதி ஷேத்ரங்களாவன,
1.மயூரேசம் (மேலே கூறப்பட்ட இடம்) - ஸ்வானந்தேசர்
2.ஹளபேடு (கர்னாடகா) - நர்த்தன கணபதி
3.காசி - டுண்டி விநாயகர்
4.பாலி - கல்லாள கணபதி
5.விஜயபுரி - விக்னராஜர்
6.தேவூர் - பிரும்ம வரதர்
7.மட் - வரத வினாயகர்
8.சிக்தடேக் - மதுகைடப வரதர்
இவைதவிர, திருநாரையூர் தலத்தில் உள்ள வினாயகர்தான் நமக்கு நம்பியாண்டார் நம்பி மூலமாக தேவாரப்பதிகங்களை மீட்டுத்தந்தவர்.
சுந்தரமூர்த்தி நாயனாருக்கும், சேரமான் பெருமாளுக்கும் முன்னதாக ஓளவையாரை கைலாசத்தில் சேர்ப்பித்த வினாயகர் சேலத்தில் காந்திபாலம் அடியில் இருக்கும் பஞ்சாஷர கணபதி.
ராவணன் காலத்து வினாயகர் கோவில் இலங்கையில் திருக்கோணேஸ்வ்ரத்திற்கு அருகில் இருப்பதாக தெரிகிறது, இவரும் பஞ்சாஷர கணபதிதான். இக்கோவில் ராவணனால் கட்டப்பட்டதாக வரலாறு.
தஞ்சைக்கருகில் நன்னிலம் அருகில் திருச்செங்காட்டங்குடியில் உள்ள வாதாபி கணபதியைத்தான் சிறுதொண்டர் வாதாபி யுத்தத்தில் வெற்றி பெற்று, அங்கிருந்து கொண்டுவந்து இங்கு பிரதிஷ்ட்டை செய்துள்ளதாக வரலாறு. இந்த வாதாபி வினாயகரை பரஞ்சோதி முனிவர் பிரதிஷ்ட்டை செய்த சமயத்தில் அங்கிருந்த பல்லவ அரசன், வினாயகர் அழகில் வியந்து அமைத்ததுதான் ந்மது பிள்ளையார்பட்டி கற்பகவினாயகர். காவிரிக்கரையோரமாக கும்பகோணம்-திருவையாறு வழியில் உள்ள கணபதி அக்ரகாரத்தில் இருக்கும் வினாயகர் அகத்தியரால் பூஜிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.
உருவத்தில் பெரிய வினாயகர் பல தமிழகத்தில் கோவில்களிலும் காண முடிகிறது. அவை, மதுரையில் முக்குறுணி விநாயகர், மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஊர்த்வ விநாயகர் (இரண்டுமே நாயக்கர் காலத்தில் வந்தவை), திருவண்ணாமலை செங்காவி விநாயகர், லால்குடி-அன்பில் உள்ள செவிசாய்த்த வினாயகர், திருவாருர் மாற்றுரைத்த வினாயகர், திருவானைக்கா அன்னைக்கெதிர்லிருக்கும் வினாயகர் (இது ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டது), திருச்செந்தூரிலுள்ள விநாயகர் போன்றவை.
மலைமேல் பிள்ளையார் கோவில்கள் இரண்டு இடங்களில் உள்ளது, அவை திருச்சி மலைக்கோட்டையும், உறையூருக்கருகில் சோழன் பாறையில் உள்ள முக்தி கணபதியுமே. இன்னும் பல வரலாற்றுச் சிறப்புள்ள கோவில்களில் தலபுராணத்தில் பங்கு கொண்ட வினாயகர் சன்னதிகள் இருக்கிறது.

5 comments:

கீதா சாம்பசிவம் said...

அட, பதிய ஆரம்பிச்சு ஒரு வாரம் ஆகப் போகிறது, சாவகாசமா வந்து சொல்லி இருக்கீங்களே! :P

மதுரையம்பதி said...

எதாவது ஆரம்பிக்க வேண்டும், கணபதியில் ஆரம்பிப்பதே வழக்கமல்லவா...அதனால் தான். இதெல்லாம் உங்களுக்கு தெரிந்ததாகத்தான் இருக்கும். ஆனாலும் படித்துவிட்டு தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்....

தி. ரா. ச.(T.R.C.) said...

இத்தனை வினாயகர்களா? திருவலஞ்சுழி பிறை வினாயகரையும்
திருவாரூர் துண்டி, மற்றும் உங்க ஊர் முக்குறுனி வினாயகரை விட்டுவிட்டீர்களே! நல்லா இருக்கு

மதுரையம்பதி said...

இல்லையே தி.ர.ச சார். முக்குறுணி விநாயகரை லேசா சொன்ன ஞாபகம்...பதிவு எழுதுவது புதியதல்லவா, வலஞ்சுழி மனதில் இருந்தது எழுத்தில் வருமுன் மறந்திருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

அடடா. எல்லா ஊருக்கும் ஒரு தடவை சென்று பிள்ளையாரப்பனைக் கும்பிட்ட மாதிரி ஒரு உணர்வு. பல புதிய கணபதிகளைப் பார்த்தேன் மௌலி. மிக்க நன்றி.