Sunday, August 5, 2007

கடல் கடந்த கணபதி வழிபாடு.....

விநாயகர் வழிபாடு நம் நாட்டில் மட்டுமன்றி கடல் கடந்தும் பரவியிருக்கிறது. இந்திய நாகரிகம் பரவிய இடங்களிலெல்லாம் இவரது வழிபாட்டினை உணரமுடிகிறது. இந்திய வியாபாரிகள் (முக்கியமாக தமிழர்) கடல் கடந்து சென்று வியாபாரம் செய்யும் காலத்தே அவர்கள் தமது வழித்துணையயக விநாயகர் உருவத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற கணபதி அந்தந்த நாடுகளில் குடியேறியுள்ளார்.


திரு சமன்லால் எழுதியுள்ள 'இது அமெரிக்கா' நூலில் மெக்ஸிக்கோ, பெரு போன்ற நாடுகளில் பழங்காலத்திலிருந்தே விநாயகர் வழிபாடு இருந்ததாகவும், இந்நாடுகளில் இவர் அறுவடைத் தெய்வமாக போற்றுவதாக பல ஆதாரங்களைத் தந்துள்ளார். சர் மோனிர் வில்லியம்ஸ் என்பவர் ரோம் நாட்டுக் கடவுளுக்கும் நமது விநாயகருக்கும் பல ஒற்றுமை இருப்பதாக கூறியுள்ளார். பெளத்த மதத்தில் விநாயகரை அருசுக் கடவுள் என்று கூறியுள்ளனர். மகாயான புத்த மதத்தில் விநாயகர் ஒரு முக்கிய தெய்வமாக விளங்குகிறார் எனத்தெரிகிறது. இவ்வாறாக பெளத்த மதத்துடன் விநாயகர் வழிபாடு பல இடங்களுக்கு பரவியிருக்கலாம்.


கி.மு 3ஆம் நூற்றாண்டில் அசோகரது மகன் விநாயகர் வழிபாட்டை நேப்பாளத்தில் பரவச்செய்ததாக தெரிகிறது, மேலும் இலங்கையில் உள்ள அசோக ஸ்தூபியில் விநாயக உருவம் செதுக்கப்பட்டுள்ளது. திபெத்திலும் நேப்பாளத்திலும் பல நர்த்தன விநாயகர் உருவங்கள் உள்ளன. நேப்பாளில் இவரை "டஸாகஸ் ப்டாக்' என்றழைக்கின்றனர். பர்மாவில் கணபதிக்கு 'மகாபைனி' என்று பெயர். கம்போடியாவில் இவருக்கு "பிரஹ் கணேஷ்" என்றே பெயர்.


கி.பி 414-ஆம் ஆண்டிலேயே ஜாவா, பாலி தீவுகளில் விநாயக வழிபாடு இருந்ததாக சீன யாத்திரிகர் பாகியான் தனது பிரயாண குறிப்பில் கூறியுள்ளார். ஜப்பானியர் கணபதியை மங்கள மூர்த்தியாக வழிபட்டு வருகிறார்கள். அவர்கள் தமது மொழியில் 'ஷோ-டென்' என்ற பெயரில் வழிபடுகிறதாக அறிகிறோம். ஜப்பானில் இரட்டை விநாயகர் சிலைகள், ஒன்றையொன்று தழுவிய நிலையில் உள்ளது. இதற்கு 'குவான்ஷி தியென்' என்றும் 'கங்கி-தென்' என்றும் பெயராம்.


சீனாவில் குங்-ஷிங் என்ற இடத்தில் உள்ள விநாயகர் சிலை கி.பி 531-ல் செதுக்கப்பட்டதாக கண்டறிந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் காபூலுக்கு அருகில் ஸகர்தார் என்ற இடத்தில் பல இந்து தெய்வ சிலைகள் கிடைத்துள்ளன அதில் விநாயகர் சிலையும் கிடைத்துள்ளது. மேலும் குப்தர் கால விநாயகர் சிலைகள் கிடைத்துள்ளதாக தெரிகிற்து. இச்சிலைகள் தற்போதைய அரசியல் மாற்றங்களில் என்ன ஆயிற்றோ தெரியவில்லை.


அடுத்த பதிவில் சில சிறப்பான விநாயக க்ஷேத்திரங்களைக் காணலாம்.

4 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மெளலி ஐயா
கோவிலை விடுங்க...கடல் கடந்த கணபதிக்கு எங்க அலுவலக trading desk சிறந்த எடுத்துக்காட்டு!

Annie, என்ற பெண்ணின் டெஸ்க்கில் நர்த்தனப் பிள்ளையார் பார்த்து எனக்கு ஒரே வியப்பு.

Annette Brown என்ற பெண்ணின் மேசையில் ஹேரம்ப கணபதி குட்டிச் சிலை...எனக்கு ஒரு லெக்சரே கொடுத்தாள் அந்தப் பெண்...

அதுவும் அவள் கருப்பின மக்கள் பேசும் ஆங்கில ஸ்டைலில் பிள்ளையாரைப் பற்றியும் தும்பிக்கை பற்றியும் சொன்ன போது....சிரித்து மதித்து குதித்து ரசித்தேன்!

மதுரையம்பதி said...

நன்றி கே.ஆர்.எஸ்.

நான் இங்கு வந்து போகும் எங்களது வெளிநாட்டுக் கஸ்டமர்களுக்கு வினாயகர் சிலை தான் பரிசாக கொடுப்பேன், அத்துடன் ஒரு டீ சர்ட்.(வினாயகர் படம் போட்டு அவர் உடலின் தத்துவத்தை விளக்கியிருக்கும்.)

குமரன் (Kumaran) said...

மௌலி,

விநாயகர் வழிபாடு பல நாடுகளிலும் இருக்கின்றன என்பதை லிப்கோவின் 'விநாயக புராணம்' புத்தகத்தில் இருந்த படங்களின் மூலம் சிறுவயதில் அறிந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் எந்த வடிவில் பிள்ளையாரை வணங்குகிறார்கள் என்று படத்துடன் இட்டிருப்பார்கள். அந்தப் படங்களில் நீங்கள் சொன்ன கட்டிக் கொண்டுள்ள இரட்டைப் பிள்ளையார்களையும் பார்த்திருக்கிறேன்.

விநாயகர் வழிபாடு இந்தியாவிலிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியதற்கு வாய்ப்புகள் நிறைய இருந்தாலும் அமெரிக்க நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலிருந்து பரவியிருக்குமா என்ற ஐயம் எனக்குண்டு. யானை முகத்துடன் கூடிய கடவுளை பல நாகரிகத்தினரும் வழிபட்டிருக்கிறார்கள். அவ்வளவு தான்; அதனை நாம் அந்தக் கடவுளர்கள் எல்லாம் விநாயகர் என்று சொல்லிவிட முடியாது. இங்கேயே வைணவ விக்னேசர் என்று ஒரு விஷ்வக்சேனரின் முதன்மைத் தளபதி ஒருவரை யானைமுகத்துடன் வைணவக் கோவில்களில் பார்க்கலாம்; அவர் கணபதி தான் என்று சொன்னால் வைணவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். நீங்களும் இந்த விக்னேசரைப் பார்த்திருப்பீர்கள் - யஸ்ய த்விரத வக்த்ராத்யா பாரிசத்யா பரச்சதம் விக்னம் நிக்னந்தி சததம் விஷ்வக்ஷேனம் தமாஸ்ரயே என்ற சுலோகத்திலும் இந்த விக்னேசரைப் பற்றிய குறிப்பு வருகிறது.

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். உங்கள் அலுவலக்த்தில் இருக்கும் விநாயகர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்களா அவர்களின் கடவுளர்களா? ஒரு முறை என் கணினிக்கு அருகில் இருந்த குட்டிப் பிள்ளையாரைப் பார்த்துவிட்டு ஒரு கொரியப் பெண் புத்தர் என்று சொன்னாள். அவர்கள் நாட்டில் ஒரு புத்தருக்கு யானைமுகமாம். அவருக்கு வைணவ விக்னேசரைப் போல் இரண்டு தந்தங்களும் இருக்குமாம். உங்கள் அலுவலகத்தினர் வைத்திருப்பதும் அப்படி அவர்களின் கடவுளர் திருவுருவங்களோ?

மௌலி. வெளிநாட்டினருக்கு நான் நம் கடவுளர்களின் சிலைகளைப் பரிசாகக் கொடுப்பதில்லை - அவர்கள் பார்வையில் அது வெறும் கலைப்பொருள். நம் பார்வையில் அவை கடவுளர். சிலை வழிபாட்டை மறுக்கும் மதத்தைச் சேர்ந்த அவர்களுக்குக் கடவுளர் சிலைகளைப் பரிசளிப்பது அவர்கள் நம்பிக்கைக்குத் தகாது என்றும் தோன்றும். மற்றபடி யானை, மயில் போன்ற கலைப்பொருட்களைத் தந்திருக்கிறேன்.