Sunday, October 30, 2011

ஸ்கந்த சஷ்டி - 2011....

ஸ்ரீ சங்கர பகவத் பாதர் 72 விதமான மதங்களை கண்டித்து ஷண்மதங்களை ஸ்தாபித்து இந்து சமயத்தை புனருத்தாரணம் செய்தார் என்பதை நாமறிவோம். ஷண்முகனைப் பற்றிச் சொல்லுகையில் "முக்திதான ஈச ஸூனோ" என்ற வாக்யத்தைச் சொல்லுகிறார் சங்கரர். அதாவது ஜீவனானது பிறப்பு-இறப்பினைக் கடந்து முக்தியை அளிக்கவல்ல தெய்வமாக ஷண்முகனைக் கூறுகிறார்.


சாதாரண மனிதர்களுக்கு நான்கு வகையான நிலைகள் உண்டு, அவை: பால்யம், கெளமாரம், யெளவனம், வார்த்திகேயம் என்பதாகும். இவற்றில் முதல் மூன்று மட்டுமே தேவர்களுக்கு உண்டாம், அதாவது அவர்களுக்கு மூப்பு என்பதே கிடையாது. நமது ஷண்முகனோ என்றும் பதினாராக இருப்பவன், ஆகவே அவனது வழிபாட்டு முறைக்கு கெளமாரம் என்று கூறுகிறார்கள் என்று தோன்றுகிறது. ப்ரம்மம் என்பது காலத்திற்கு அப்பாற்பட்ட மாறுபாடற்ற உண்மை, அதை குமரனாகக் கொள்ளூம் சமயத்தை கெளமாரம் என்றால் சரிதானே?.


சுக்குக்கு மிஞ்சின மருந்தில்லை

ஸுப்ரமண்யனுக்கு மிஞ்சின தெய்வமில்லை


என்பது பல காலமாக சாதாரணர் முதல் கற்றுணர்ந்த பெரியோர்வரை பலரும் கூறும் சொலவடை.இதையே ஸனத்குமார ஸம்ஹிதையில், கலியுகத்தில் ஸுப்ரமண்ய பூஜை ப்ரதானமாகவும், அவனே ப்ரம்மம் என்றும் கூறியிருப்பதாகத் தெரிகிறது. ஸுப்ரமண்யன் ப்ரணவஸ்வரூபியாக இருப்பதால் ப்ரணவத்தை முதலாகக் கொண்ட எல்லா மந்த்ரங்களும் குமரனை வழிபடுவதாகச் சொல்லும் வழக்கம் இருக்கிறது. மந்திர சாஸ்திரத்தில், பிரணவமற்ற மந்திரங்கள் ஏதுமில்லை. எந்த பீஜாக்ஷரங்கள் இணைந்த மந்திரமானாலும் முதலில் ப்ரணவம் சேர்த்தே இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. "சுக்ல வர்ணா ஷடாநனா" என்னும் லலிதா சஹஸ்ர நாமம் இந்த இடத்தில் நினைவில் வருகிறது.


ஷண்மதாசார்யரான பகவத்பாதர், ஏன் பஞ்சாயதன பூஜை என்று செய்திருக்கிறார்கள்?. அதிலேன் ஸுப்ரமண்யத்தை சேர்க்கவில்லை என்று சிந்திக்கையில் இன்னொன்று நினைவுக்கு வருகிறது. ஷண்முகனது இன்னொரு பெயர் குஹன் அல்லவா?. இதயமாகிற குகையில் எப்போதும் விற்றிருக்கும் அவனுக்கு பஞ்சாயதனத்தில் இடம் கொடாது, அந்த பஞ்சாயதன பூஜை தொடங்கும் முன்னரே, அவனைப் பூஜிக்க 'ஆத்ம பூஜை' என்ற ஒன்றை முதலில் செய்யச் சொல்லியிருக்கிறார் என்று தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால், பஞ்சாயதனம் மட்டுமன்றி எல்லா வித பூஜைகளின் போதும், கணபதி பூஜையும், ஆத்ம பூஜையும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே குஹனாக ஒவ்வொரு ஜீவனுள்ளும் மறைந்திருக்கும் ஸுப்ரமண்யனுக்கு பஞ்சாயதன பூஜையில் மட்டுமல்லாது எல்லா பூஜைகளின் ஆரம்பத்திலும் வரும் ஆத்ம பூஜையில் அவனை வழிபட்டச் சொல்லியிருக்கிறார் என்று தோன்றுகிறது.


கெளமாரத்தைப் பின்பற்றும் பலரும் தமது பூஜையில் ஸுப்ரமண்யனது வேலுக்கே பலவித உபசாரங்களும் செய்வதைப் பார்த்திருக்கிறோம். ஆறுபடைகளில் முதலான திருப்பரங்குன்றத்தில் அபிஷேக ஆராதனைகள் எல்லாம் வேலுக்கே. ஸுப்ரமண்யனுக்கு இணையானது அவன் கையில் இருக்கும் வேல் என்றால் மிகையல்ல. 'கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று உய்வாய் மனமே' என்று அருணகிரிநாதர் சொல்வதிலிருந்து பார்த்தால் முருகனது கழலடிகளைப் பணிவதற்கு முன்னராக அவனது கையிலிருக்கும் வேலைப் பணியவேண்டும் என்பது தெரிகிறது. வேலைப் பணிவதே என் வேலை என்று சொல்லுவதன் பொருள் புரிகிறதன்றோ?. இந்த வேல் சக்தியின் அம்சம் என்பார்கள். இன்றும் ஷண்முக ஸ்தலங்களில், அவர் தன் அன்னையிடம் வேல் வாங்கும் படலம் விழாவின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்படுவதைப் பார்க்கிறோம். இதையே புஜங்கத்தில் சங்கரரும் எறும்பு முதல் ப்ரும்மாவரையிலான அனைத்துயிரையும் ஈன்ற அன்னை பராசக்தியே முருகனின் கைவேலாக இருப்பதாகச் சொல்லுகிறார். இந்த வேலுக்காக என்றே ஆதிசங்கரர் ஒரு ஸ்லோகம் செய்திருக்கிறார். அது,



சக்தே பஜே த்வாம் ஜகதோ ஜநித்ரீம்

ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம்ந

மோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே

பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸந்நிதத்ஸ்வ

[சக்தியான வேலே, ஜகத்திற்குத் தாயும், ஸுகத்தைக் கொடுப்பவளும், நமஸ்கரித்தவர்களுடைய மனோ வியாதியைப் போக்குபவளுமான உன்னை வணங்குகிறேன். ஸ்ரீ குஹனின் கைக்கு அலங்காரமான சக்தியே!, தங்களுக்கு பல நமஸ்காரங்கள். என்றும் என் ஹ்ருதயத்தில் இருக்க வேண்டும்]


ஸுப்ரமண்ய புஜங்கம் என்று செந்திலாதிபன் மேல் முப்பது மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறார் ஆதி சங்கரர். அதிலிருந்து 6 ஸ்லோகங்களையும், திரு.அ வெ.ரா கிருஷ்ணசாமி ரெட்டியாரது தமிழாக்கத்தையும் பார்க்கலாமா?


ஸதா பாலரூபாபி விக்னாத்ரி ஹந்த்ரீ

மஹாதந்திவக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா

விதீந்த்ரா திம்ருக்யா கணேசாபிதாமே

விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி:


என்றும் இளமை எழிலன் எனினும்
இடர்மா மலைக்கே இடராவான்

துன்றும் கரிமா முகத்தோன் எனினும்

சிம்ம முகச்சிவன் மகிழ்நேயன்

நன்றே நாடி இந்திரன் பிரமன்

நாடித் தேடும் கணேசனெனும்

ஒன்றே எனக்கு சுபம் திருவும்

உதவும் மங்கள மூர்த்தமதே.

****

ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்

ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்

சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே

முகாந்நிஸ்ஸரந்தே கிராஸ்சாபி சித்ரம்


சொல்லுமறியேன் சுதி அறியேன்

சொற்கள் சுமக்கும் பொருளறியேன்

சொல்லைச் சொல்லும் விதி யறியேன்

எல்லை யிலாதோர் ஞான வொளி

இதயத் தமர்ந்து அறுமுகமாய்

சொல்லை வெள்ள மெனப் பெருகும்

தோற்றம் கண்டேன் சுடர் கண்டேன்.

****

மயூராதிரூடம் மஹாவக்ய கூடம்

மனோஹாரிதேஹம் மஹச்சித்த கேஹம்

மஹீதேவதேவம் மஹாதேவ பாவம்

மஹாதேவ பாலம் பஜே லோக பாலம்


மயில்மீது ஆர்த்து உயர்வாக்கிற் பொதிந்து

மனத்தைக் கவரும் உடலான்

பயில்வோர்கள் உள்ளக் குகைக்கோவில் தங்கி

பார்ப்பவர் தெய்வ மானான்

உயிராகும் மறையின் பொருளாகி நின்று

உலகைப் புரக்கும் பெருமான்

கயிலாய மேவும் அரனாரின் செல்வக்

கந்தன் பதம் பணிகுவாம்.


****
யதா ஸந்நிதானம் கதாமானவா மே

பாவம் போதிபாரம் கதாஸ்தே ததைவ

இதி வ்யஞ்ஜயன்ஸிந்து தீரேய ஆஸ்தே

தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்


என்றன் சந்நிதி யடையும் மனிதர்

எப்போ தெனினும் மப்போதே

இந்தப் பிறவியின் சாகரக் கரையை

எய்திக் களித்தோ ராகின்றார்

மந்தரு மறிய மறையை விளக்கிச்

செந்தில் சாகரக் கரையதனில்

கந்தரன் சக்தி பாலன் அமர்ந்தான்

தூயன் பாதம் துதிக்கின்றேன்.


****
யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா:

ததைவாபத: ஸந்நிதெள ஸேவதாம் மே

இதீவோர்மிபங்க்தீர் ந்ருணம் தர்சயந்தம்

ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்


கடலில் தோன்றும் அலையும் அழிந்து

காட்சி மறைவது போல்

திடமாய்ச் சந்நிதி சேவித் திடுவார்

தீமை யழிந்து படும்

படமாய் மனதில் பதியச் செய்ய

பரவைக் கரையில் குகன்

இடமே யமர்ந்தான் இதயமலர் மேல்

ஏற்றித் தியானம் செய்கின்றேன்.


****
கிரெள மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா:

ததா பர்வதே ராஜதே தேஸ்தி ரூடா:

இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூட:

ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து


என்றன் இருக்கை யறிந்தே யெவரும்

இம்மலை ஏறி வரின்

எந்தைக் கயிலை மலை மீதேறும்

இனிய பலன் கொள்வார்

கந்தன் இதனைச் சுட்டிக் காட்டிக்

கந்தமான கிரிமேல்

சிந்தை மகிழ மூவிரு முகமாய்த்

திருக்கொலு வமர்ந்தே யிருக்கட்டும்.


****
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா!

சக்தி வேல் முருகனுக்கு அரோஹரா!
ஞான வேல் முருகனுக்கு அரோஹரா!

7 comments:

Jayashree said...

நான் ஸுப்ரமண்ய புஜங்கம் படிக்கறபோது ஏதோ ஓரளவுக்கு புரிந்தாலும் யாராவதுவரிக்கு வரி சொன்னா நன்னா இருக்கும்னு நினத்துக்கொண்டே தான் படித்தேன் . ஸ்வாமிக்கு கேட்டுவிட்டது போல இருக்கு . Thanks Mouli அருமை!! பகை கடிதல் அர்த்தம் கண்ணபிரானிடம் கேட்டு கிட்ட தட்ட ஒரு வருஷம் ஆச்சு . அவரும் எழுதினா தெரிஞ்சுக்கலாம் . .



"""கருதா மறவா நெறிகா ணஎனக்
கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்
வரதா முருகா மயில்வா கனனே
விரதா கரசூர விபாட ணனே.


உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்
கருவா யுயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவா யருள்வாய் குகனே""
Happy skantha sashtti

sury siva said...

மிகவும் அழகான தெளிவான சிறப்பான உரை சுப்ரமண்ய புஜங்கத்திற்கு.

வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
http://kandhanaithuthi.blogspot.com

மதுரையம்பதி said...

வாங்க ஜெயஸ்ரீ மா, சூரி சார்...இருவரது வருகைக்கும் நன்றிகள் பல.

S.Muruganandam said...

சுப்ரமணிய புஜங்கத்தின் அனைத்து பாடல்களுக்கும் அடுத்த பதிவில் விளக்கம் கொடுத்தால் எல்லாருக்கும் பயன்படுமே மௌலி ஐயா.

மதுரையம்பதி said...

வாங்க கைலாஷி ஐயா...ரொம்ப நாட்கள் கழித்து இந்தப்பக்கம் வந்திருக்கீங்க...நலமா?.

நான் பொருள் சொல்லைங்க....இன்னொருவர் செய்த தமிழாக்க கவிதையை அப்படியே தந்திருக்கிறேன்...அவ்வளவே. எல்லாவற்றையும் போடுவது உபயோகம் ஆகுமென்றால் செய்கிறேன்.

Lalitha Mittal said...

ஆறுமோ ஆவல்?ஆறு முகனின் புஜங்கத்தில் ஆறு பதங்கள் மட்டும்

தமிழில் படித்தபின் முழுவதையும் தமிழில் படிக்க்ணும் என்ற ஆவல்!

மதுரையம்பதி said...

வாங்க லலிதா மேடம்....ஆறுமோ ஆவல்...மிக அருமையான கிருதி...நினைவு படுத்தியமைக்கு நன்றிகள் பல. :)