Thursday, November 10, 2011

அன்னாபிஷேகம்

பல விசேஷ தினங்களிலும் ஈசனுக்கு பலவித அபிஷேகங்கள் நடந்தாலும், அன்னாபிஷேகம் என்பது ஐப்பசி-பெளர்ணமியில் மட்டுமே செய்யப்படுகிறது. நானறிந்தவரையில் தமிழகத்திலுள்ள எல்லாக் கோவில்களிலும் இன்று மட்டுமே அன்னாபிஷேகம்.

அபிஷேகப்ரியனான ஈசனுக்கு எழுபது விதமான பொருட்களால் அபிஷேகம் செய்யச் சொல்லப்பட்டிருக்கிறது, அதில் அறுவடையாகி வரும் நெல்லை அரிசியாக்கி, அதனைச் சமைத்து சுத்த அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் ஒன்று. இதனால் உணவுத் தட்டுப்பாடு இல்லாது இருக்கும் என்று கூறுகிறார்கள். வெகுசில இல்லங்களில் கூட, தங்களது இல்லத்தில் வழிபடப்படும் சிவலிங்கங்களுக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள்.


அன்னாபிஷேகத்தை தரிசிப்பதன் மூலம் அன்று கோடிலிங்கதரிசனம் செய்த பலன் என்று கூறியிருக்கிறார்கள் பெரியவர்கள். அதாவது அன்னாபிஷேகத்தின் போது அதற்கு உபயோகமாகும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் சிவலிங்கமாகிறதாம், ஆகவே அபிஷேகத்தின் போது பார்க்கும் அன்னங்கள் எல்லாம் சேர்ந்து கோடி லிங்கங்களை தரிசித்ததாகிறதாம்.


மதுரையில் அன்னாபிஷேகம் செய்து முழுப் புடலங்காயை வேகவைத்து அதனையே மாலையாக அணிவித்திருப்பார்கள். புரட்டாசி கடைசியில் நவராத்ரி வந்து, ஐப்பசியில் ஒரே பெளர்ணமி வருமாயின் மதுரையில் அம்பிகைக்கு சாந்தாபிஷேகமும், சுந்தரேசனுக்கு அன்னாபிஷேகமும் ஒரே நாளில் நடைபெறுவதைப் பார்த்திருக்கிறேன். இல்லங்களிலிருந்து அன்னாபிஷேகத்திற்கு அரிசியும், சாந்தாபிஷேகத்திற்கு இளநீர், அரைத்த மஞ்சள் போன்றவை கொடுப்பது மதுரைக்காரர்களுக்கு வழக்கம். சாந்தாபிஷேகம் என்பது நவராத்ரியில் அசுரர்களை வதை செய்து கோபத்தில் இருக்கும் அம்பிகையைக் குளிர்விப்பதற்காக என்று கூறுவார்கள்.

சாதாரணமாக சாயரக்ஷை பூஜையின் முடிவில் அன்னாபிஷேகம் செய்வது வழக்கமானாலும், தஞ்சை பிரகதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரத்து ஈசன் போன்றவர்களுக்கு உச்சிகால பூஜை ஆனவுடனேயே அன்னாபிஷேகம் செய்யப்படுவதாகத் தெரிகிறது. 

அன்னாபிஷேகத்தின் முடிவில் ஈஸ்வரனது மேல் சாற்றியிருக்கும் அன்னதை ஆறு, குளம், கடல்களில் கறைத்தும், கருவறைப் படிகள் மற்றும் இறைவன் முன்னால் படைக்கப்பட்ட அன்னம் மற்றும் காய்கள்,பக்ஷணங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் அளிக்கிறார்கள்.  இந்தப் பிரசாதத்தை ஸ்வீகரிப்பதன் மூலம் குழந்தை பாக்யம் கிட்டும் என்பது நம்பிக்கை.

"சோறு கண்ட இடம் ஸ்வர்கம்" என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம், அது சோற்றால் அபிஷேகம் செய்த சிவனை தரிசிப்பதால் ஸ்வர்கம் என்பதே என்கிறார்கள்.

 ஐப்பசி பெளர்ணமியாகிய இன்றைய நன்னாளில் நாமும் அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அன்னாபிஷேகத்தை தரிசிப்போம், இறையருளைப் பெறுவோம்.

16 comments:

Lalitha Mittal said...

பதிவைப்படித்ததே அன்னாபிஷேகத்தை தரிசித்த ஆனந்தத்தை அளித்தது!

நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று மனக்கண்ணால் கற்பனை செய்கிறேன் டெல்லியில் இருந்தபடி!சுகமான பதிவு!

மதுரையம்பதி said...

படங்கள் கூகிளார் உபயம், முதலில் வலையேற்றிய நல்லவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.

மதுரையம்பதி said...

முதல் வருகைக்கு நன்றிகள் லலிதா மேடம். பதிவைப் பப்ளிஷ் செய்தவுடன் உங்கள் பின்னூட்டம் :-)

Vasudevan Tirumurti said...

நல்ல செய்திகள் தெரிந்து கொண்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்னாபிஷேகம் படம் போட்டு எங்களுக்கும் ஸ்வாமியின் அருள் கிடைக்கச் செய்துவிட்டீர்கள். இங்கு இரவுதான் நடக்கும். போய்ப் பார்த்ததே இல்லை. ஆனால் மற்ற பொருட்களை எங்கள் வீட்டு அம்மா மூலம் அனுப்பும் வழக்கம் இருந்து வருகிறது. எல்லா மங்களும் உண்டாகட்டும். நன்றி மௌலி.

கீதா சாம்பசிவம் said...

அருமையான பதிவு. மதுரையில் இருந்தாலும் அன்னாபிஷேஹம் பார்த்ததில்லை. கூட்ட நெரிசலை நினைத்துச் செல்ல முடிந்ததில்லை. நன்றி பகிர்வுக்கு.

மதுரையம்பதி said...

வாங்க கீதாம்மா...நானும் பல முறை முயற்சித்தாலும் மதுரையில் அன்னாபிஷேகம் ஒரே ஒருமுறைதான் பார்த்திருக்கிறேன்..

ஒருமுறை கங்கை கொண்ட சோழ புரம் செல்ல வாய்ப்பினைக் கொடுத்தான் ஈசன்....பெங்களூர் வந்தபின்னர் மனதால் நினைக்கத்தான் முடிகிறது.

மதுரையம்பதி said...

வாங்க வல்லியம்மா....ரொம்ப நாட்கள் கழித்து வந்திருக்கீங்க...வருகைக்கு நன்றி. :)

மதுரையம்பதி said...

திவாண்ணா, வருகைக்கு நன்றிகள் பல. :)

sury said...

சிவன் கோவிலுக்கு இன்று செல்ல இயலவில்லையே என்ற ஆதங்கம் உங்கள் பதிவு வந்து தீர்ந்தது.
எல்லாமே சிவன் தந்தது.
நிற்க. சோறு கண்ட இடம் சொர்கம் என்னும் பழமொழிக்கான உரிய விளக்கம் கண்டேன்.
புரிந்து கொண்டேன். நன்றி பல.
நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க.

சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com

குமரன் (Kumaran) said...

ஐப்பசி பௌர்ணமிக்கு இப்படி ஒரு சிறப்பு இருப்பதே நீங்கள் சொல்லித் தான் தெரியும் மௌலி.

shylaja said...

அண்ணலின் அன்னாபிஷேகத்தைப்பற்றிய அருமையான பதிவு மௌலி...என்றாவது நேரில் தரிசிக்கும் பாக்கியத்தை அந்த சிவமே எனக்கு அருள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மதுரையம்பதி said...

வாங்க ஷைல்ஸக்கா.....ரொம்ப நாட்கள் கழித்து இந்தப்பக்கம் வந்திருக்கிங்க....வருகைக்கு நன்றிகள்

மதுரையம்பதி said...

வாங்க குமரன்....உங்களுக்குத் தெரியாதது ஆச்சர்யமாக இருக்கிறது....வருகைக்கு நன்றிகள் குமரன்.

மதுரையம்பதி said...

வாங்க சூரி சார்...ஆம், எல்லாமே சிவம் தந்தது தான்.

தக்குடு said...

தெரியாத பல அபூர்வமான விஷயங்கள் தெரிஞ்சுண்டதுல ரொம்ப சந்தோஷம் அண்ணா! விஷயம் தெரிஞ்சவா கொஞ்சம் வாயை திறந்தா தானே என்னை மாதிரி கத்துகுட்டி எல்லாம் 2 விஷயம் தெரிஞ்சுக்க முடியும்! :)