Friday, July 29, 2011

புண்யகீர்த்தி; முக்தா; லீலா விக்ரஹ தாரிணீ; பக்தநிதி



தேவீ பாகவதம், செளந்தர்ய லஹரி போன்றவை அம்பிகையின் கீர்த்தியைச் சொல்வதாக இருக்கும் முக்கிய நூல்கள். இவற்றில் உள்ள ஒவ்வொரு ஸ்லோகங்களும் நமது நியாயமான விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு உதவக்கூடியதாக இருக்கிறதாலேயே ஒவ்வொரு ஸ்லோகங்களுக்கும் உரிய பலன்களைத் தனியாகச் சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள். இந்த ஸ்லோகங்களில் என்ன இருக்கிறது என்று பார்த்தோமானால் அவை அம்பிகையின் கீர்த்தியைப் செல்லுவதே. இந்தக் கீர்த்திகளைப் பாராயணம் செய்வதால் நமக்கு புண்யத்தை, முக்தியை அருளுபவள் என்பதாகத் தெரிகிறது. இவ்வாறு புண்யத்தை அருளும் கீர்த்தியுடையவள் புண்ய கீர்த்தி.


இன்றும் நாம் சர்வாலங்காரங்களுடன் இருக்கும் பெண்களை மஹாலக்ஷ்மி போல் இருக்கிறாள் என்றும் அம்பாளே நேரில் வந்தது போல இருக்கிறது என்றும் கூறுவதைப் பார்க்கிறோம், சில பெண்களைப் பார்த்தவுடன் கை கூப்பி வணங்குகிறோம், முக்தா என்றொரு நாமம், முக்தா எனறால் செளந்தர்ய ஸ்வரூபமானவள் என்று பொருள், இதே முக்தா என்னும் நாமத்திற்கு மூடன் என்றும் பொருள் சொல்லப்படுகிறது. முன்பு க்ஷயவினிர்முக்தா என்றொரு நாமத்தைப் பார்த்தோம், இந்த நாமத்தின் அடுத்ததாக வருவதே முக்தா. தொடராக இந்த இரண்டையும் அடுத்தடுத்துச் சொல்லுகையில் '(க்ஷயவினிர்முக்தா-முக்தா' என்கையில்), இந்த நாமத்தை "அமுக்தா" என்பதாகப் பிரித்துச் சொல்லுவது ஒருமுறை. இவ்வாறு அம்பிகையை வணங்காதவர்களை அமுக்தர்களாக, மூடர்களாகச் சொல்லுகிறார்கள் சில பெரியவர்கள்.

ஜனனம் என்று ஒன்று இருந்தால்தானே மரணம்?, அம்பிகையை அஜா, அதாவது ஜனனமற்றவள் என்று கூறுகிறது இன்னொரு நாமம். க்ஷயவினிர்முக்தா என்றால் மரணமில்லாதவள் என்றும் பொருள். அப்படியென்றால் பல சரீரங்களில் ஸதியாக, காளி,மாரி கெளமாரி போன்ற சப்தமாதர்களாக எல்லாம் தோன்றியிருக்கிறாளே என்றால், அது அவளது லீலைகள். மிகச் சுலபமாக பல லீலைகளைச் செய்வதற்கு ஏற்ப அவதாரங்கள் எடுக்கிறாள். இப்படி பல லீலா வினோதங்களுக்கு ஏற்ப அவதரிக்கிறாளே,அந்த மரணமில்லா மஹாசக்தி, அவளை லீலா விக்ரஹ தாரிணீ என்கிறார்கள் வசின் தேவதைகள். இந்த நாமத்தைப் பற்றி யோக வாசிஷ்ட்டத்தில் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.

உபாசகர்களுக்கு, பக்தர்களுக்கு இவளே சர்வ நிதியும், ஆகவேதான் இவளை பக்தநிதி என்கிறார்கள். இவள் பக்தர்களை மட்டுமல்லாது சகல ஜீவராசிகளுக்கும் வழிகாட்டியாக இருப்பதால் நியந்த்ரீ, அதாவது வழிகாட்டி. அகில உலகத்திற்கும் இவளே ஈச்வரி. நிகிலம் என்றால் பிரபஞ்சம் என்று பொருள். நிகிலேச்வரி என்பது பிரபஞ்சத்திற்கு ஈச்வரி என்பதாகச் சொல்வது.

5 comments:

Kavinaya said...

பக்தநிதி, ரொம்ப பிடிச்சிருக்கு :)

அன்னையின் திருவடிகள் சரணம்.

குமரன் (Kumaran) said...

அம்பிகையின் திருநாமங்களுக்குத் தொடர்ந்து பொருள் சொல்லிக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் மௌலி.

இப்போதெல்லாம் வீட்டைச் சுற்றி இருக்கும் புல்லை வெட்டும் போது லலிதா சஹஸ்ரநாமம் எனக்கு மனப்பாடம் ஆன வரையில் ஆங்காங்கே நினைவிற்கு வருகிறது. அப்போதெல்லாம் நீங்கள் சொன்ன விளக்கங்களும் நினைவில் வருகிறது.

மதுரையம்பதி said...

வாங்க கவிக்கோ....உங்களுக்குப் பிடிச்சா அம்பிகைக்கும் பிடித்ததாகத்தான் இருக்கும். வருகைக்கு நன்றி.

மதுரையம்பதி said...

வாங்க குமரன், முடிந்த போது கண்டிப்பாக எழுதுவேன்...

ஆஹா!, பாடம் ஆகிவருவதும், அதைச் சொல்லுகையில் என் நினைவு வருவதும் அவள் கடாக்ஷம்....அது எப்போதும் நாம் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

தக்குடு said...

உபாசகாளோட புண்ணியம் கீர்த்தி எல்லாமே அவள் தான். படிக்கர்துக்கு ரொம்ப அழகா இருக்கு அண்ணா! குமரன் அண்ணா சொன்ன மாதிரி தொடர்ந்து எழுதவும்!