நேற்று மஹா பெரியவரது ஜெயந்தி, வைகாசி அனுஷம். நேற்று எழுத ஆரம்பித்தாலும், முடிக்க நேரமில்லை, ஆகவே இன்று இடுகிறேன்.

காசியாத்திரை கிளம்பி, ராமேஸ்வரம் செல்லும் வழியில் காரைக்குடி வழியாக வந்த பரமாசார்யார், காரைக்குடி, சாக்கோட்டை, இளையாற்றங்குடி போன்ற இடங்களில் தங்குகிறார். அவ்வாறான நேரத்தில் நகரத்தார் பகுதியில் பரமாசார்யார் பயணம் செய்யும் காலத்தில், ஸ்ரீமடத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்ய, ராமஸ்வாமி ஐயர் என்னும் பெரியவரைப் பணிக்கின்றனர் நகரத்தார்.
அப்போது முதல் பரமாசார்யாரின் அத்யந்த சிஷ்யராக விளங்கி, பரமாசார்யார் பெயர் சொல்லி விளிக்கும் பாரிஷதர்களில் ஒருவரானார் பெரியவர் ராமஸ்வாமி. ஆசார்ய ஸ்வாமிகள் நகரத்தார் எல்லையைத் தாண்டிய பின்னரும் அவருடன் ராமேஸ்வரம் வரையில் சென்று பின்னர் காரைக்குடிக்கு வருகிறார் பெரியவர் ராமஸ்வாமி.
இதன் பின்னர், ஒரு சில முறை பரமாசார்யாரை சோழ தேசத்தில் தரிசித்தாலும், கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷங்களுக்குப் பிறகு பெரியவர் ராமஸ்வாமிக்கு மீண்டும் ஜகத்குருவின் தரிசனமும், அருளும் மீண்டும் கிடைக்கும்படியான ஒரு வாய்ப்பை அருளுகிறாள் கொப்புடையாள்.
மனைவி திடமாக இருக்கும் போதே மூத்த பெண்ணை நல்ல வசதியான இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தாயிற்று. வேலையின் காரணமாக மூத்தவன் சென்னையிலும், இளைய மகன் சிங்கப்பூரிலும் இருக்கிறார்கள். தனது ஜேஷ்ட புத்திரனுக்கும் மணமாயிற்று. ருதுவாகும் முன்னர் திருமணம் செய்து வைக்கும் காலம் அது. தனது 5ம் வயதிலேயே தாயை இழந்த கடைசிப் பெண்ணை எப்படி நல்ல வரன் பார்த்துக் கல்யாணம் செய்து வைப்பதென்று கவலையில் காரைக்குடியில் கொப்புடைநாயகியின் கோவில் பேஷ்காராக இருக்கிறார் பெரியவர் ராமஸ்வாமி.
கவலைகள் நீங்க இறைவனை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுதல் ஒன்றே வழி என்பது இயல்பாக இருந்த காலமது. பெரியவரும் தனது கடைக்குட்டிப் பெண்ணின் திருமணம் நல்லபடி நடக்க வேண்டுமே என்ற கவலையை கொப்புடையாளின் பாதத்தில் சமர்பித்து, அனுதினமும் வேத விதிப்படி அனுஷ்ட்டானங்களைச் செய்து, பராசக்தியை வழிபட்டு வருகிறார்.
நமது ஸ்ரீ சரணருக்கு பீடாரோகணப் பொன்விழா நடத்த பக்தர்கள் முடிவு செய்து நாளும் குறித்திருக்கும் செய்தி தெரியவருகிறது. குல குருவான காமகோடி பெரியவரின் பீடாரோகணப் பொன்விழா தரிசனத்திற்காக காரைக்குடியில் இருந்து கலவையை (அப்போது ஸ்ரீசரணர் காம்ப் கலவையில்) நோக்கிச் செல்கிறார் பெரியவர் ராமஸ்வாமி. செல்லும் வழியிலேயே பெரியவர் தனக்கு கனாகாபிஷேகத்தை மறுத்து ஸ்ரீசங்கர பகவத்பாதருக்குக் கனகாபிஷேகத்தைச் செய்யச் சொன்னதும், ஸ்ரீ சரணர் கலவையை விட்டுக் கிளம்பி காஞ்சிபுரத்தை அடுத்திருக்கும் ஊர்களில் இருப்பதாகவும் தெரியவருகிறது. பெரியவரும் தனது பயணத்தை திசை திருப்பி காஞ்சியை அடைகிறார்.
காஞ்சியில் ஆசார்ய ஸ்வாமிகளின் தரிசனம் ஆயிற்று. ஸ்ரீமடத்திலேயே நான்கு நாட்கள் தங்கியிருக்க உத்தரவாகிறது. நான்காம் நாள் காரைக்குடி திரும்ப முடிவு செய்து ஆசார்யரது உத்தரவு பெறச் செல்கிறார் பெரியவர். ஸ்ரீ சரணரும், பெரியவரது மனத்தில் இருந்த கவலையை உணர்ந்தவராக," சீக்ரமாகவே பெண்ணின் திருமணம் நடைபெறும், தேடி வந்து பெண் கேட்பார்கள், நல்ல வரனாக அமையும்" என்று ஆசிர்வதித்து அனுப்புகிறார்.
காஞ்சியிலிருந்து வந்தவுடனேயே பெண் கேட்டு வந்தவர்கள், பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கூறுகின்றனர். அன்று முதல் மீண்டும் விசனத்தில் மூழ்கியவாறு ஒரு வருஷம் கழிகிறது. முன்பு பெண்ணை வேண்டாம் என்று சொன்னவர்களே தங்களது முடிவினை மாற்றிக் கொண்டு மீண்டும் பெண் கேட்டு அனுப்ப, உடனடியாகத் திருமணம் நிச்சயமாகிறது. நடமாடும் தெய்வமான ஸ்ரீ சரணரின் ஆசிகள் மெய்யான சந்தோஷத்தில், பெரியவர் தனது பெண்ணின் திருமணம் முடிந்தவுடன் சென்னைக்கு தம்பதியை அழைத்துச் சென்று சாதுர்மாஸ்ய பிக்ஷைக்கு ஏற்பாடு செய்து அவர் அருளைப் பெறச் செய்கிறார்.
அன்று முதல் ஸ்ரீசரணர் சென்னையில் இருந்த காலம் முழுவதும் அவருடனே இருந்த பெரியவர், பின்னர் புதுக்கோட்டை வந்து தனது மூத்த மகளது இல்லத்தில் தங்குவதும், சென்னையில் தனது ஜேஷ்ட புத்ரனது இல்லதிலுமாக இருந்து வந்தார்.
பலவருஷங்கள் கழிகிறது, நமது ஆசார்யாள் காஞ்சியில் இருக்கும் போது, அவருக்கு, பெரியவர் காலம் ஆன தகவல் தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக மடத்து சிப்பந்தி ஒருவரைப் புதுக்க்கோட்டை அனுப்பி, பெரியவருடைய பதிமூன்று நாள் காரியங்களையும் வைதீக விதிப்படி நடத்தித் தர உத்தரவிடுகிறா. அதே போல, காஞ்சியில் இருக்கும் கோவில்களில் பதிமூன்றாம் நாள் மோக்ஷதீபம் ஏற்றவும் உத்தரவிட்டதாகச் சொல்கிறார்கள்.
இவ்வாறாக தனது சிஷ்யர்களது மனக்கிலேசத்திற்கு ஒளஷதமாக மட்டுமல்லாது, அவர்களுக்கு மோக்ஷ சாம்ராஜ்யத்தையும் அடைய அருள் புரிந்திருக்கிறார் நமது ஸ்ரீ சரணர்.
இங்கு கூறப்பட்ட பெரியவர் ராமஸ்வாமி, எனது தாயின் தந்தை. மஹா பெரியவர் அருளாசி வழங்கியது எனது தாயின் திருமணத்திற்கு. பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கூறி பின்னர் அதே பெண்ணை ஒரு வருஷம் கழித்து திருமணம் செய்தவர் எனது தந்தை என்பதைக் கூறவும் வேண்டுமா? :-)
இந்த நிகழ்ச்சி எனது தாய், தந்தை மற்றும், பெரியம்மா, ஆகியோரால் எனக்குச் சொல்லப்பட்ட ஒரு நிகழ்வு.