Friday, December 25, 2009

மார்கழி மஹோத்ஸவம் - 4 (கோதாஸ்துதி)


நாகேசய: ஸுதநு பக்ஷிரத: கதம் தே
ஜாத: ஸ்வயம்வரபதி: புருஷ: புராண:!
ஏவம் விதா: ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா:
ஸந்தர்சயந்தி பரிஹாஸகிர: ஸகீநாம்!!

அழகிய திருமேனியுடையவளே!, கொடிய பாம்பில் படுப்பதும், பறவையை வாகனமாகவும் கொண்ட முதுமை கொண்ட ஒருவரை நீ உன் மணாளராக எப்படி வரித்தாய்? என்றெல்லாம் தோழிகள் பரிஹாஸம் செய்யும் சொற்களைத் தாண்டி நீ வரித்திருக்கிறாய் என்றால் அது உனக்கு உள்ள காதலையன்றோ காட்டுகிறது.

நேரடிப் பொருள் இப்படியாக இருப்பினும், ஸ்ரீதேசிகர் இங்கே சொல்லியிருப்பது பின்வருமாறு. கோதை நீ உன் பெருமைக்கு ஏற்ற வரனையே வரித்திருக்கிறாய் என்பது தான். எப்போதும் கைங்கர்யம் செய்பவனாகவும், அழகு, குளிர்ச்சி, மேன்மை, மற்றும் உயர்வு பொருந்திய ஆதிசேஷனை படுக்கையாகவும்ம், வேதஸ்வரூபன் என்று கூறப்படும் சகல சக்திகளையும் உடைய கருடனை வாஹனமாகவும் கொண்ட பரம்பொருளை வரனாக வரித்திருக்கிறாய் என்கிறார்.


த்வத் புக்த மால்ய ஸுரபீக்ருத சாருமெளளே:
ஹித்வா புஜாந்தா கதாமபி வைஜயந்தீம்!
பத்யுஸ் தவேச்வரி மித: ப்ரதிகாத லோலா:
பர்ஹாத்பத்ர ருசி மாரசயந்தி ப்ருங்கா:!!

சகல லோகங்களுக்கும் தலைவியானவளே!, பெருமாள் தனது திருமார்பில் வைஜயந்தி என்னும் மாலையை அணிந்திருக்கிறார். அந்த வைஜயந்தியின் நறுமணத்தால் அம்மாலையின் மீது வண்டுகள் மொய்த்துக் கொண்டிருந்தன. நீ சூடிக்கொடுத்த மாலையை பெருமாள் தனது முடியில் சூடியதால் மணம் மிகுந்த திருமுடிகளாயிற்று. இதன் காரணமாக வைஜயந்தி மாலையைச் சுற்றி வந்த வண்டுகள் அதிலிருந்து அகன்று பெருமாள் தலையில் சூடியிருக்கும், நீ சுடிக் கொடுத்த மாலையைச் சுற்றத் துவங்குகின்றன. அவ்வண்டுகள் அவ்வாறு சுற்றுவது மயில் தோகையால் பெருமாளுக்கு குடை அமைத்தது போல விளங்குகிறது.

ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங்கமாபி
ராகாந்விதாபி லளிதாபி குணோத்தராபி!
மெளளி ஸ்ரஜா தவ முகுந்த கிரிடபாஜா
கோதே பவத்யதரிதா கலு வைஜயந்தீ!!

கோதையே!, பெருமாள் அணிந்திருக்கும் வைஜயந்தி என்னும் மாலையானது எப்போதும் மணம் வீசக்கூடியதுதான், அவனது திருவுளத்துக்கு உவப்பானதுதான், நல்ல செம்மை நிறமும், மென்மையும் உடையதுதான். இத்துணை பெருமையுடயதாக அம்மாலை இருந்தாலும், அது பெருமாளுடைய திருமுடியில் இடம்பெறும் பேறு கிட்டவில்லை. ஆனால் நீ களைந்து கொடுத்த மாலையோ அவனது திருமுடியை அலங்கரித்து வைஜயந்தி மாலையின் தரத்தைத் தாழ்த்திவிடுகிறதே. நீ சூடிக்களைந்த மாலையைத் தலையில் தாங்கி மதிப்பளிக்கிறான் உனது மணாளன்.

த்வந்மெளளி தாமநி விபோ: சிரஸா க்ருஹீதே
ஸ்வச்சந்த கல்பித ஸபீதி ரஸ ப்ரமோதா:!
மஞ்ஜுஸ்வநா மதுலிஹோ விதது: ஸ்வயம் தே
ஸ்வாயாம்வரம் கமபி மங்களதூர்ய கோஷம்!!

பெருமான் தன் தலையில் அணிந்துள்ள, நீ சூடிக் கொடுத்த மாலையை வண்டுகள் சுற்றி வந்து தமது இஷ்டப்படி தேனைக் குடிக்கின்றன. அவ்வாறு அவை மகிழ்ச்சியுடன் தேனைப் பருகி, இனிமையாக ரீங்காரம் பாடுகின்றன. அப்போது அவ்வண்டுகள் ஏற்படுத்தும் ஒலியானது உனது சுயம்வரத்துக்கான மங்கள வாத்தியங்களின் முழக்கமாக இருக்கிறது.

தொடர்ந்து ஸ்துதிப்போம்

6 comments:

Kavinaya said...

வண்டுகள் சூடிக் கொடுத்தவளின் மாலையைச் சுற்றும் உவமைகள் அழகு :)

S.Muruganandam said...

சூடிக் கொடுத்தச் சுடர்க் கொடியாள் திருவடிகளே சரணம் சரணம்.

குமரன் (Kumaran) said...

http://godhaitamil.blogspot.com/2005/12/81.html

இந்த இடுகையில் இருக்கும் முதல் சுலோகத்தின் பொருள் தான் இந்த கோதைத்தமிழ் இடுகையில் வந்திருக்கிறதா? சரி தான். :-)

குமரன் (Kumaran) said...

சூடிக் கொடுத்த சுடர்கொடியே போற்றி போற்றி!

Anonymous said...

Adiyeenum sevichukkareen anna...;)

Thambi

வல்லிசிம்ஹன் said...

கோதை மாலை அழகு. அதைச் சூடியவனும் அழகு.
கோதா ஸ்துதியை நீங்கள் தமிழில் எளிய வார்த்தைகளால் புரிய வைப்பதும் அழகு மௌலி.
மிக்க நன்றி.