Friday, January 8, 2010

மார்கழி மஹோத்ஸவம் - 5 (கோதாஸ்துதி)



விச்வாயமாந ரஜஸா கமலேந நாபெள
வக்ஷ:ஸ்த்தலே ச கமலா ஸ்தந சந்தநேந!
ஆமோதித:-அபி நிகமைர் விபுரங்க்ரி யுக்மே
தத்தெ நதேந சிரஸா தவ மெளளிமாலாம் !!

உலகங்களை ஆளுகின்ற பிரபுவின் நாபியிலிருக்கும் கமலத்தின் மணமும், அவனுடைய திருமார்பில் வசிக்கும் மஹாலக்ஷ்மியின் திருமுலையில் சாற்றப்பட்டிருக்கும் சந்தன மணமும் அவனை மணக்கச் செய்கின்றன. வேதங்கள் அவனுடைய திருவடியைப் பற்றியே பேசி அவனது திருவடிகளை மணக்கச் செய்கின்றன. இவ்வாறாக இறைவனது திருமேனி முழுவதும் மணமிகுந்து இருந்தாலும், அதனால் திருப்தியில்லாது அவற்றை எல்லாம் விஞ்சச் செய்யும்படியான உயர்ந்த பரிமளத்தைப் பெறுவதற்காகவே நீ சூடிக் கொடுத்த திருமாலைகளை தலையில் தரித்து பரிமளம் நிறைந்து காக்ஷியளிக்கிறான்.


சூடா பதேந பரிக்ருஹ்ய தவோத்தரீயம்
மாலாமபி த்வதளகை ரதிவாஸ்ய தத்தாம்!
ப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே
செளபாக்ய ஸம்பதபிஷேக மஹாதிகாரம் !!


கோதே!, உன்னுடைய மேலாடையையும், உன் தந்தையால் செய்யப்பட்டு, உன் குழற்கற்றையில் நீ அணிந்த மலர்மாலையையும் ஆர்வத்துடன் சூடிக் கொள்கிறான் ஸ்ரீரங்க ராஜன். மங்கள ஸ்வரூபனாக இருக்கும் அவன், உனது மேலாடை மற்றும் மலர் மாலையை அணிவதாலேயே மங்களத்தை அருளும்
பெருமையைப் பெறுகிறான். இதன் காரணமாகவே அவன் ரங்க ராஜனாக முடிசூடுவதற்கு வேண்டிய தகுதியைப் பெறுகிறான்.


துங்கை ரக்ருத்ரிமகிர: ஸ்வயமுத்தமாங்கை:
யம் ஸர்வகந்த இதி ஸாதர முத்வஹந்தி!
ஆமோத மந்யமதிகச்சதி மாலிகாபி:
ஸ:அபி த்வதீய குடிலாளக வாஸிதாபி:!!


வேதங்கள் யாராலும் இயற்றப்படாத நித்யமானது. அவ்வேதங்களின் உயந்த முடிகளான உபநிஷதங்கள் பெருமாளை எல்லா நறுமணங்களும் நிறம்பியவன் என்று ஆதாரத்துடன் கூறுகின்றன. அப்படிப் புகழப்பட்ட பெருமாள், உன்னுடைய சுருண்ட கூந்தலில் சூடப்பட்ட மலர் மாலையை அணிந்து ஒப்புயர்வற்ற அற்புத மணத்தை அடைகிறான். இவ்வாறான அளவிட முடியாத ஆனந்த மணமானது கோதை சூடிக் கொடுத்த மாலையால் அல்லவோ பெருமாளுக்கு கிடைக்கிறது?.


தந்யே ஸமஸ்த ஜகதாம் பிதுருத்தமாங்கே
த்வந்மெளளி மால்யபர ஸம்பரணேந பூய:!
இந்தீவர ஸ்ரஜமிவாதததி த்வதீயாநி
ஆகேகராணி பஹுமாந விலோகிதாநி!!


கோதே!, எல்லா உலகிற்கும் தந்தையானவன் பெருமாள். உனது மாலையை அவன் தனது திருமுடியில் சூடிக் கொள்வதால் அவனது அன்பினை கண்டு ஆனந்தித்து பெருமதிப்புடன் அவனை அரைக்கண்ணால் காண்கிறாய் நீ.அவ்வாறு நீ உனது கண்களால் அவனைப் பார்ப்பது பெருமாளுக்கு கருநெய்தல் மலர்களால் இன்னுமொரு மாலையை அவனுக்கு அணிவித்தது போல காக்ஷி தருகிறது.

***ஸ்துதி தொடரும்***

4 comments:

Geetha Sambasivam said...

உள்ளேன் ஐயா!

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி அம்மா!

வல்லிசிம்ஹன் said...

அன்பு மௌலி, அருமையான விளக்கங்களுடன்,
தேசிகர் தொடுத்த கோதாஸ்துதியை உங்கள் எழுத்து மூலம் மீண்டும் படிக்கக் கொடுத்து வைத்திருக்கிறோம். மிகவும் நன்றி.
இந்த மார்கழியிலாவது ஆண்டாளை எல்லோரும் நினைக்க
ஏதுவாக நீங்கள் செய்தது எங்கள் அதிர்ஷ்டம்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க வல்லியம்மா. எல்லாம் உங்கள் ஆசிர்வாதங்கள். உங்களைப் போல இணையத்திலுள்ள பல பெரியவர்களது ஆசியே, இதைச் செய்யத் துண்டியது. தொடர்ந்து படித்து ஊக்கமளித்தமைக்கு நன்றிகள்.