Wednesday, December 2, 2009

ஸ்ரீ தத்தாத்ரேயர்....

இன்று தத்தாத்ரேய ஜெயந்தி. கலியில் மக்கள் உய்ய வேண்டும் என்பதற்க்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய ரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம ஸ்வரூபமே. சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரபிரம்மத்தின் மூன்று முகங்களே. இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் ஸ்ரீ தத்தாத்ரேய அவதாரம். மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு, ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. மார்க்கண்டேயனைப் போல, ஹனுமனைப் போல தத்தாத்ரேயரும் சிரஞ்சீவி. இவரைப் பற்றி சிறிது அறிவோமா?.
அத்ரி என்று ஒரு மஹரிஷி, இவரது மறுபாதியே அனுசூயை. இவர்கள் தமக்கு புத்திர பாக்கியம் வேண்டி தவமிருந்தனர். அப்போது மும்மூர்த்திகளும் அவர்கள் முன்பு தோன்றி, தாங்கள் மூவரும் அத்ரி-அனுசூயைக்கு மகனாகப் பிறப்பதாக வாக்களிக்கின்றனர். அவ்வாறு தோன்றியவரே தத்தாத்ரேயர். மும்மூர்த்திகளும் தானே வந்து அத்ரி-அனுசூயைக்கு மகனாக பிறந்தமையால் 'த(3)த்த' என்ற பெயர் வந்ததாகச் சொல்வர். இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்ரியின் புதல்வர். ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்துக் வழங்கப் பெறுகிறார். இவர் பிறந்தது மார்கழி மாதத்து பெளர்ணமி, மிருகசீர்ஷ நக்ஷத்திரம். இந்த அவதாரம் நடந்த ஸ்தலம் சுசீந்திரம் என்றும் கூறப்படுகிறது. ஸ்தானுமாலையனாக இறைவன் இங்கே இருக்கிறார்.

யாயாதி ராஜ வம்சத்தில் வந்த கர்த்தவீர்யார்ஜுனன் தத்தரது சிஷ்யர்களுள் ஒருவன். இவனது குல-குரு கர்க்க மஹரிஷியின் மூலம் தத்தாத்ரேயரைப் பற்றி அறிந்து அவரை நோக்கித் தவமிருந்து வரங்களைப் பெறுகிறான். வரங்களை அளித்து அவனுக்கு தர்மோபதேசமும் செய்விக்கிறார் தத்தாத்ரேயர். இந்த கர்த்தவீர்யார்ஜுனனே பின்னாளில் பரசுராமனால் அழிக்கப்படுபவர். இன்றும் களவு போன பொருட்கள் கிடைக்க கர்த்த வீர்யார்ஜுன மந்திரம் என்ற மந்திரத்தை ஜபம் செய்வர். இந்த மந்திரத்தின் ரிஷி தத்தாத்ரேயரே. தத்தாத்ரேயருக்கு ஆத்ம ஞானமாக விளங்குபவள் அன்னை திரிபுரசுந்தரியே. அவளே தத்தாத்ரேயரின் மூன்று முகங்களாக விளங்குகிறாள். தத்தாத்ரேயர் தான் குருவாக இருந்து பரசுராமருக்கு ஸ்ரீவித்யா உபாசனையை அளித்தவர்.


பரபிரம்ம வஸ்துவே மும்மூர்த்திகளாக அருள் புரிகிறது என்பது வேதாந்த சித்தாந்தம். மூன்றாகத் தோன்றிய ஒன்றே ஞான வைராக்கிய சம்பன்னரான ஸ்ரீ தத்தாத்ரேயர். அவதூதரான இவருக்கு தண்டம், கமண்டலம், காஷாய வஸ்த்ரம் போன்றவை கிடையாது. பாரத்தின் பல இடங்களிலும் பாதுகைகளில் இவரை தியானித்து வணங்கக் கோவில்கள் இருக்கிறது. உத்ரப்பிரதேசத்தில் "குரு மூர்த்தி" என்றாலேயே அது தத்தரைக் குறிப்பதாக இருக்கிறதாம். பிரயாகையில் இவரது கோவில் இருப்பதாக தெரிகிறது. அதேபோல இமாலயத்தில், ஆத்ரேய மலைப்பகுதியில் ஒரு குகையில் பலகாலம் தத்தர் தவம் செய்ததாகவும், அந்த குகையின் பெயரே தத்த குகை என்றும் படித்திருக்கிறேன். இதேபோல ஸஹ்யமலையில் காவிரி உற்பத்தி ஸ்தானத்திற்கு அருகிலும், சித்ரதூர்க்கா மலையிலும், குல்பர்கா அருகில் கங்காப்பூர் என்னும் இடத்திலும் இவர் தவம் செய்த குகைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இங்கே கர்னாடகாவில் நேற்று முதல் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மைசூரில் கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகள் தமது தத்த பீடத்தில் மிக விமர்சையாக தத்த ஜெயந்தியை கொண்டாடுகிறார்.


தமிழகத்தில் சேந்தமங்கலத்தில் சுயம்பிர்காச அவதூத ஸ்வாமிகள் ஸ்ரீ தத்தரைப் பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டிருக்கிறார், இன்று அந்த இடமே, தத்தகிரி குகாலயம் என்று வழங்கப்படுகிறது. இங்கே விமர்சையாக தத்த வழிபாடு நடக்கிறது. புதுக்கோட்டையில் சாந்தானந்த ஸ்வாமிகள் புவனேஸ்வரி அதிஷ்ட்டானத்திலும், ஸ்கந்தகிரி (சேலம் அருகே) தத்தருக்கு சன்னதி அமைத்திருக்கிறார். இதேபோல செங்காலிபுரத்தில் ராமானந்த பிரம்மேந்திரர் என்னும் யதி, ஸ்ரீ தத்தருக்கு ஆலயம் அமைத்திருப்பதாகத் தெரிகிறது.


நக்ஷத்திரமாலிகா என்ற ஸ்லோகங்களில் இவர் பதினாரு இடங்களில் இருந்தக் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி, கோதாவரிக்கு வடக்கே சிம்ம பர்வதத்தில் ஜனித்து, மாயாபுரியில் நித்திரை செய்து, கங்கையில் ஸ்னானமும், கந்தர்வ பட்டணத்தில் தியானமும், குரு-க்ஷேத்திரத்தில் ஆசமனமும், கர்நாடகத்தில் காலை-சந்தியும், கோலாபுரத்தில் பிக்ஷையும், பாஞ்சாலத்தில் உணவும், தூங்காதீரத்தில் பானமும், பத்ரியில் புராண சிரவணமும், ரைவத பர்வதத்தில் இளைப்பாறுதலும், மேற்குக் கடற்கரையில் சாயரக்ஷை சந்தியும் செய்வதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ தத்தர் நிர்குண உபாசகர்களுக்கு ஸத்குருவாகவும், யோகிகளுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார். இவரை நினைப்பதாலேயே பக்தர்களின் சங்கடங்கள் விலகியோடும் என்று சொல்லப்படுகிறது. இவரை உபாஸித்தால் ஞான மார்க்கத்தில் ஈடுபாடும், தீவிர வைராக்யமும் சித்திக்கும் என்று கூறப்படுகிறது. நாமும் ஞான-வைராக்கியம் சித்திக்க அவரை பிரார்த்திப்போமாக.

கோரக்ஷாத்யை: முய ஸுசிஷ்யை: பரிவீதம்

கோ-விப்ராணாம் போஷணஸக்தம் கருணாப்திம்

கோ-லக்ஷ்மீ சாம்புஜப கிரிஜா ஸகரூபம்

தத்தாத்ரேய ஸ்ரீபாத பத்மம் ப்ரணதோஸ்மி.

கோரக்ஷர் போன்ற முக்கிய சிஷ்யர்களால் சூழப்பட்டவரும், பசுக்களையும், பிரம்மத்தை அறிந்தவர்களையும் காப்பதில் தீவிரமாக இருப்பவரும், கருணைக்கடலாகவும், ப்ரம்ம-விஷ்ணு-சிவனது உருவத்தில் இருப்பவருமான தத்தாத்ரேயரின் பாதகமலங்களை வணங்குகிறேன்.

15 comments:

Anonymous said...

//ப்ரம்ம-விஷ்ணு-சிவனது உருவத்தில் இருப்பவருமான தத்தாத்ரேயரின் பாதகமலங்களை வணங்குகிறேன். //

தம்பி

ambi said...

நுண்ணிய தகவல்கள், அடுக்கடுக்காய் வந்த வண்ணம் இருக்கு. ரொம்ப நன்னி.

ambi said...

//ப்ரம்ம-விஷ்ணு-சிவனது உருவத்தில் இருப்பவருமான தத்தாத்ரேயரின் பாதகமலங்களை வணங்குகிறேன். //

நானும்! நானும். :))

ambi said...

இவருக்கு என்ன பிரசாதம் நைவேத்யம் செய்யபடுகிறது?ன்னும் ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா பக்தகேடிகள் பயன் பெறுவார்கள். :))

மதுரையம்பதி said...

வாங்க அம்பி& தம்பி...

//இவருக்கு என்ன பிரசாதம் நைவேத்யம் செய்யபடுகிறது?//

ஆஹா....அம்பி, எனக்கு தெரியல்லையே....இப்படி ஒரு கேள்வி வருமுன்னு எதிர்பார்க்கல்ல....:)

Raghav said...

அண்ணா, தினம் ஒரு பதிவா.. அட்டகாசம்..

சிறு வயதில் என் நண்பன் தத்தாத்ரேயர் பற்றி நிறைய சொல்லிக் கேட்டுள்ளேன்.

//அவதூதரான இவருக்கு //
அவதூதர்னா ? கொஞ்சம் விளக்குங்களேன் அண்ணா..

மதுரையம்பதி said...

வாங்க ராகவ்...அவதூதர் பற்றி ஆச்சார்ய ஹ்ருதயத்தில் சதாசிவர் பற்றின முதல் 2-3 பதிவுகள்ள சொல்லியிருக்கார் திவாண்ணான்னு நினைக்கிறேன்..பாருங்களேன்... பின்னூட்டத்தில் அம்பி கேள்விக்கு அவர்/திரச பதில் சொன்ன நினைவு..
சரியா நினைவில்லை...பிறகு தேடி லிங்க் தரேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து "ஆச்சார்ய" வடிவாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய ரூபம்//

ஆச்சார்யன் திருவடிகளே சரணம்!
ஆதி குருவானவன் திருவடிகளே சரணம்!
அனைத்து குருவானவன் திருவடிகளே சரணம்!

மேலக்கோட்டைக்கு அருகே தத்தாத்ரேயரின் முக்கிய சன்னதி உள்ளது! சில அவசரமான காரணங்களுக்காக ஆபத் சன்னியாசம் வாங்கிக் கொள்பவர்கள், பின்னாளில் குரு முகமாகத் தீட்சை பெற வேண்டி இந்த தத்தாத்ரேயரிடம் பெற்றுக் கொள்கிறார்கள்! தம் தண்டு, பவித்திர, காஷாயாதிகளை இவரிடம் வைத்து வாங்கிக் கொள்கிறார்கள்!

இப்படிச் செய்த பெரும் ஆச்சார்யர் இருவர்? யார் யார்? (புதிரா புனிதமா-வை இக்கட ஷிப்ட்டு சேஸ்தாவு) :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ambi said...
இவருக்கு என்ன பிரசாதம் நைவேத்யம் செய்யபடுகிறது? ன்னும் ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா பக்த கேடிகள் பயன் பெறுவார்கள். :))//

பக்த கேடிகள் பயன் பெறுவோம்-ன்னு உங்களையும் சேர்த்துச் சொல்லுங்க கேடி லிஸ்ட்டில்! :)
பிரசாதம் = சந்தனம்! வேணுமா? :)

ஓ நைவேத்தியப் பிரசாதமா? சாரி நீங்க ரொம்ப உஜாரு-ன்னு மறந்தே போனேன்!

தத்+ஆத்ரேயப் பெருமானின் பிரசாதம் தம்பிட்டுருண்டை! தம்பிட்டு உண்டே-ன்னு கன்னட வழக்கு! தத்த பீடத்திலும் இதுவே!

வெறுமனே கோதுமை-வெல்லம் கலந்த உருண்டை! சத்து மாவு டைப் தான்! அவ்வளவு சுவை கிடையாது! ஆனால் யோகிகள் உண்பது! உங்களுக்கு ரொம்ப வேண்டி இருக்கும் அம்பி! ஏற்பாடு பண்ணுறேன்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தத்தாத்ரேயருக்கு ஆத்ம ஞானமாக விளங்குபவள் அன்னை திரிபுரசுந்தரியே. அவளே தத்தாத்ரேயரின் மூன்று முகங்களாக விளங்குகிறாள்//

இது தத்தாத்ரேயர் பதிவா இல்லை அன்னையின் பதிவா-ன்னு சந்தேகம் வந்துச்சி!
ஆனா உங்க பதிவு-ன்னு பார்த்தப்பறம் வந்த சந்தேகம் ஓடியே போயிரிச்சி! :)

குமரன் (Kumaran) said...

தத்தாத்ரேயருக்கு இருக்கும் இவ்வளவு ஆலயங்களில் அண்மையில் கட்டப்பட்ட ஆலயம் / சன்னிதி எங்கள் ஊரில் (மினசோட்டாவில்) இருக்கிறது. நேற்று கோவிலுக்குச் சென்ற போது தத்தாத்ரேயரின் தரிசனமும் பெற்று வந்தேன். மும்மூர்த்திகளின் அம்சமாக மூன்று திருமுகங்களும் திருக்கைகளில் அம்மூவரின் சின்னங்களும் கண்டேன். நால்வேதங்களும் நான்கு நாய்களாக அவர் திருமுன் அமர்ந்திருப்பதையும் கண்டேன்.

அத்ரி மகரிஷி - சதி அனசூயா தம்பதிகளுக்கு பிரம்மனின் அம்சமாக ஒரு மகனும் (பெயர் நினைவில்லை), சிவனின் அம்சமாக ஒரு மகனும் (துர்வாச மகரிஷி), விஷ்ணுவின் அம்சமாக ஒரு மகனும் (தத்தாத்ரேயர்) பிறந்தனர் என்று படித்த நினைவு.

தத்த கீதை என்றொரு நூலை (மொழிபெயர்ப்பைப்) படித்த நினைவு இருக்கிறது.

கீதா சாம்பசிவம் said...

//அத்ரி மகரிஷி - சதி அனசூயா தம்பதிகளுக்கு பிரம்மனின் அம்சமாக ஒரு மகனும் (பெயர் நினைவில்லை), சிவனின் அம்சமாக ஒரு மகனும் (துர்வாச மகரிஷி), விஷ்ணுவின் அம்சமாக ஒரு மகனும் (தத்தாத்ரேயர்) பிறந்தனர் என்று படித்த நினைவு. //

ஆமாம், குமரன். தத்தனை மகாவிஷ்ணு தன் சக்தியால் மூன்று பேரின் அம்சங்களையும் சேர்த்து உருவாக்கி அத்திரி ரிஷிக்குத் தத்தம் செய்து கொடுக்கின்றார் சாஸ்திரோக்தமாய். அந்த வகையில் உலகின் முதல் ஸ்வீகார புத்திரர் தத்தாத்ரேயரே. குஜராத் ஜுனாகட் மாவட்டத்தில் தத்தாத்ரேயருக்கு மலைக்கோயில் உண்டு. ஆயிரதெட்டு படிகள் எனச் சொல்லப் படுகின்றது. செல்லுவதும் கொஞ்சம் கஷ்டமே. நாகா சாதுக்கள் இங்கே கூடுகின்றனர் வருஷத்துக்கு ஒரு முறை. போல் பம் என்று சொல்லிக் கொண்டு வருவார்கள். அதே போல் கைலையிலும் தத்தாத்ரேயர் இன்னும் சுயரூபமாய் தவம் செய்து கொண்டு இருப்பதாயும் சொல்லுவார்கள். இவரின் மனைவியே லீலாவதி. இருவருக்கும் சண்டை வந்தே சாபம் ஒருத்தருக்கொருத்தர் சாபம் போட்டுக் கொண்டு சுந்தர மஹிஷமாகவும், மஹிஷியாகவும் பிறக்கின்றனர் என்றும் ஒரு புராணம் சொல்லுகின்றது. பதிவாய் ஆயிடுச்சோ?? நிறுத்திக்கிறேன். :P:P:P

கவிநயா said...

//ப்ரம்ம-விஷ்ணு-சிவனது உருவத்தில் இருப்பவருமான தத்தாத்ரேயரின் பாதகமலங்களை வணங்குகிறேன். //

நானும். அவரைப் பற்றி அறியத் தந்த உங்களுக்கும் நன்றி மௌலி.

கிருஷ்ணமூர்த்தி said...

மீள்பதிவானாலும், நீண்ட நாள் கழித்து மௌலியின் பதிவில் நல்ல விஷயங்களைத் திரும்பப் படிக்கிற ஆனந்தம் கிடைத்திருக்கிறதே!

தத்தாத்ரேயன் திருமூர்த்தி அம்சமானாலும், ஸ்ரீ மகா விஷ்ணுதான்! பத்தினி அனகா என்று அழைக்கப் படும் மகாலக்ஷ்மிதான்! பிரதம சிஷ்யனாக கார்த்த வீர்யார்ஜுனன், பின்னாளில் பரசுராமர் முன்னால் தன்னுடைய அகம் ஒடுங்கி, மரணத்தை ஏற்றுக் கொண்டவனாக தத்த சரிதத்தில் சொல்லப் படுகிறான்.

ஜெய குரு தத்த! ஸ்ரீ குரு தத்த!

Radha said...

//தத்தாத்ரேயரின் பாதகமலங்களை வணங்குகிறேன்.//
Me too.
Thanks very much for the post.

//அத்ரி-அனுசூயைக்கு மகனாக பிறந்தமையால் 'த(3)த்த' என்ற பெயர் வந்ததாகச் சொல்வர். //
I wish Google transliteration s/w provides us the facility to use super-scripts to represent Sanskrit words correctly. Also I am not aware of any software which gives me the "sha" in "shivam". If you are aware, please let me know.
~
Radha