Wednesday, December 23, 2009

மார்கழி மஹோத்ஸவம் - 3 (கோதாஸ்துதி)




மாத: ஸமுத்திதவதீ மதிவிஷ்ணுசித்தம்
விச்வோபஜீவ்ய மம்ருதம் வசஸா துஹாநாம்!
தாபச்சிதம் ஹிம ருசேரிவ மூர்த்திமந்யாம்
ஸந்த: பயோதி துஹிது: ஸஹஜாம் விதுஸத்வாம்

தாயே!, நீ சந்திரனது இன்னொரு வடிவமானவள்.நீ விஷ்ணு சித்தரின் மகளாக அவதரித்தாய், சந்திரனோ மஹாவிஷ்ணுவின் மனதிலிருந்து தோன்றியதாக வேதம் கூறுகிறது. சந்திரன் உலகிலுள்ள எல்லோரையும் மகிழ்விக்கும் ஒளியைத் தருகிறான். நீ உனது வாக்கிலிருந்து வந்த அமுத மொழிகளாலும், உனது அழகிய திருமேனி தரிசனத்தாலும் உலகிலுள்ள எல்லோருடைய ஸம்ஸாரதாபத்தை போக்குகின்றாய். கற்றறிந்த பெரியவர்கள் உன்னை பார்கடலில் உதித்த மஹாலக்ஷ்மியின் சகோதரியாகச் சொல்கின்றனர். பாற்கடலில் பிறந்த சந்திரன் மஹாலக்ஷ்மிக்கு சகோதரன் என்றால் உனக்கும் சகோதரனன்றோ.

தாதஸ் து தே மதுபித: ஸ்துதிலேச வச்யாத்
கர்ணாம்ருதை: ஸ்துதிசதை ரநவாப்த பூர்வம்!
தவந்மெளளி கந்த ஸுபகா முபஹ்ருத்ய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம்!!

சிறிதளவே துதித்தாலும் வசப்படும் பெருமாளை, பலரும் செவிக்கு இனிமையான பலநூறு பாடல்கள் பாடி மகிழ்வித்தாலும், உன் தந்தைமட்டுமே 'பெரியாழ்வார்' என்று பெயர் பெற்றார். நீ சூடிக்கொடுத்த மலர் மாலைகளை பெருமாளுக்கு அளித்ததால் அல்லவா, அவருக்கு பெரியாழ்வார் என்ற பெயர் கிடைத்தது. பெருமாளுக்கு உன் மேல் இருக்கும் அன்பாலேயே மற்றவர்களுக்குக் கிடைக்காத அப்பெயரை உன் தந்தை பெற்றார்.

திக் தக்ஷிணாஸபி பரிபக்த்ரிமா புண்ய லப்யாத்
ஸர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத்!
யத்ரைவ ரங்கபதிநா பஹுமாந பூர்வம்
நித்ராளுநாஸபி நியதம் நிஹிதா: கடாக்ஷா:!!

தேவி, தெற்குப் பகுதியில் (ஸ்ரீவில்லிப்புத்தூரில்) நீ அவதரித்ததால் அத்திசை மிகவும் புண்ணியம் செய்ததாக, எல்லாவற்றிலும் மேம்பட்ட திசையாகிறது. ஸ்ரீரங்கப் பெருமான் உலக நன்மையை நினைத்தவாறே உறங்கினாலும், அவன் நீ அவதரித்த தெற்குத் திசையை உற்று நோக்கியவாறே உறங்குகின்றான். உனது அவதாரத்தால்தான் அவனது தெற்கு நோக்கிய பேறு கிட்டியது.

ப்ராயேண தேவி பவதீ வ்யபதேச யோகாத்
கோதாவரீ ஜகதிதம் பயஸா புநீதே!
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதீ ப்ரப்ருதயோசபி பவந்தி புண்யா:!!

விசேஷ காலங்களில் கங்கை போன்ற புனித நதிகள் கோதாவரி நதிக்கு வந்து வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அந்த விசேஷகாலங்களில் கோதாவரி நதி தன்னிடத்தில் கூடும் மற்ற நதிகளை மட்டுமல்லாது உலகத்தையே தூய்மையாக்குகிறது. இவ்வாறு கோதாவரி நதி தூய்மையாக்குவது எங்கனம் என்று பார்த்தால் அது உனது பெயரைத் தாங்கியிருப்பதாலேயே என்று தெரிகிறது. உனது பெயரைத் தரித்ததால்தான் உலகனைத்தையும் தூய்மையாக்கும் சக்தி அந்நதிக்கு வாய்த்தது.

*********ஸ்துதி தொடரும்***********

5 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கோதை ஸ்துதி தொடர்வதும், அதை நாங்கள் தொடர்வதும் மிக்க மகிழ்ச்சி!

//மதிவிஷ்ணுசித்தம்//

சுவாமி தேசிகன் மிகவும் அழகான சொல் விளையாடுகிறார் இவ்விடத்தில்!

மதி விஷ்ணு சித்தம் = மதியாகிய சந்திரன் பெருமாளின் சித்தத்தில் தோன்றியவன் (மனோ காரகன்) என்பது ஒரு பொருள்!
மதி விஷ்ணு சித்தம் = திரு-மதியாகிய கோதை, விஷ்ணு சித்தத்தால், விஷ்ணு சித்தருக்கு உதித்தாள் என்பது இன்னொரு பொருள்!

பாற்கடல் கடைந்த போது....
மகாலக்ஷ்மியின் திருமண விருந்தாக பாற்கடல் அமுதம் தரப்பட்டது = அது "தேவோப ஜீவ்யம்" = தேவர்களுக்கு ஜீவன் தர வல்லது!

அதே போல் கோதையின் திருமண விருந்தாக பாசுரக்கடல் அமுதம் தரப்பட்டது = அது "விச்வோப ஜீவ்யம்" = அது உலகத்துக்கு ஜீவன் தர வல்லது!

இதையே "விச்வோபஜீவ்ய" என்று சுலோகத்தில் சொல்கிறார் தேசிகன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஸ்துதி லேச வச்யாத்//

தேசிகர் இறைவனை வர்ணிக்கும் அழகே தனி! வடமொழியில் ஒற்றைச் சொல்லால் ஒரு பெரிய குணத்தையே வர்ணித்து விடுவார்! இங்கிட்டு பாருங்கள்! ஸ்துதி லேச வஸ்யன்!

ஸ்துதி ரொம்ப பண்ண வேணாம்! லேசா பண்ணாலே வசியம் ஆயிருவானாம்! = லேச வஸ்யன்! பேரே சூப்பரா இருக்கு! இனி நான் அவனை லேச வஸ்யா, லேச வஸ்யா-ன்னு தான் கூப்பிடப் போறேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இவ்வாறு கோதாவரி நதி தூய்மையாக்குவது எங்கனம் என்று பார்த்தால் அது உனது பெயரைத் தாங்கியிருப்பதாலேயே என்று தெரிகிறது//

கோதாவரி ஆற்றை கோதா-வரி ஆறாக்கிய சுவாமி தேசிகனின் வார்த்தை விளையாட்டு! :)

கோதையின் பெயரைத் தாங்குவதால், நாம மாத்ர சம்பந்தம் ஏற்பட்டு, நாம தீட்சை பெறுகிறாள் கோதாவரி!
அதான் கங்கேச-யமுனேச-கோதாவரி-ன்னு சொல்லி,
அதுக்கு அப்புறமாத் தான் சரஸ்வதி, நர்மதே, சிந்து, காவேரி ஜலேஸ்மின் சன்னிதம் குரும் என்று சிறப்பு பெறுகிறது!

இதில் கங்கேச-யமுனேச-கோதாவரி
* கங்கை = மகாலக்ஷ்மி
* யமுனை = கண்ணன்
* கோதா-வரி = கோதை
என்று திருமகள்-கண்ணன்-மண்மகளாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் சுவாமி தேசிகன்!

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கே.ஆர்.எஸ்

குமரன் (Kumaran) said...

சந்திர சஹோதரியான, சூடிக் கொடுத்த சுடர்கொடியான, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையான, தன் அவதாரத்தால் தக்ஷிண திசையை உத்தர திசை (ஸர்வோத்தரா) ஆக்கியவளான, கண்களை மூடித் தூங்கினாலும் அரங்கனைத் தான் அவதரித்த தென் திசை நோக்கி உறங்க வைத்தவளும் ஆன, பாகீரதியை விட மிகப் புண்ணியமான நிலையைக் கோதாவரிக்குத் தந்தவளும் ஆன கோதா தேவியின் திருவடிகளே சரணம்!