உடலையே ஆலயமாக எண்ணி ஹிருதய கமலத்தில் இறைவன்/இறைவியை பூஜித்தலே மானஸ பூஜை என்பர். நெஞ்சத் தாமரையில் திருவுருவை ஸ்தாபித்து 'தான்' அழிய நிற்பது ஆதார யோகம், இதை ஞானமார்க்கத்தின் படிக்கட்டு என்கிறார்கள் பெரியவர்கள். நிர்குண பிரம்ம உபாஸனையே மானஸீக பூஜை, ஆனால் சகுண உபாஸனை பழகியவர்களுக்கே நிர்குண உபாஸனை கைகூடும் என்றும் ஆன்றோர் கூறுகிறார்கள். எந்த பூஜையாகிலும் பல கிரியைகள் செய்யப்படுகின்றன. இக்கிரியைகள் ஆன்மாவின் ஸ்தூல, ஸுக்ஷ்ம உடலையும், அதன் மூலமாக ஆன்மாவையும் பண்படுத்தவே. இவ்வாறு பண்பான ஆன்மாவே ஞான வழிக்கு ஏற்றது என்பர். இதையே, உமாபதி சிவாச்சாரியார் "கிரியை எனமருவு மவையாவும் ஞானம் கிடைத்தற்கு நிமித்தம்" என்கிறார். ஞானத்திற்கு நிமித்தம் கிரியைகள். பூசலார் கட்டிய மானஸீக கோவில் நாம் அறிந்ததே. இந்த மானஸ பூஜையை திருநாவுக்கரசர் சொல்கையில் பின்வருமாறு கூறுகிறார்.
காயமே கோவிலாக கடிமனம் அடிமையாக
காயமே கோவிலாக கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனம் மணிலிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈசனாருக்கும் போற்றி அவிக் காட்டினோமே.
ஞான குருவான ஆதிசங்கரர் சகுண உபாசனைக்கு எத்தனை எத்தனையோ ஸ்லோகங்கள், பூஜா கிரமங்கள், சக்ரப் பிரதிஷ்ட்டைகள் செய்து கொடுத்திருப்பது நாம் அறிந்ததே, அவரே நிர்குண ப்ரஹ்மமாக இறைவனை பூஜிக்கவும் நமக்கு பல வழிகளைக்காட்டியிருக்கிறார். அவற்றில் சிவ மானஸ பூஜா, தேவி மானஸ பூஜா, விஷ்ணு மானஸ பூஜா போன்றவை அடக்கம். சிவ மானஸ பூஜா ஸ்லோகங்களுக்குப் பொருள் இங்கே!.
அம்பிகைக்கு ஸஹஸ்ர நாமத்தில் 'ரஹோயாகக் க்ரமாராத்யா, ரஹஸ்தர்ப்பண தர்ப்பிதா' என்று இரண்டு நாமங்கள் உண்டு. இந்த நாமங்கள் இரண்டும் மானஸீக பூஜையைக் குறிப்பனவே. உள்ளுக்குள்ளே இடைவிடாமலும், விறகில்லாமலே வளர்ச்சியுடன் எரிந்து கொண்டிருப்பதும், மோகத்திற்கு சத்ருவாகவும், அற்புதமான ஜ்வலிப்புடன் ஞானாக்னியில் பிருத்வி முதல் சிவன் வரையில் இருக்கும் விச்வத்தை யாகமாக அளிப்பதன் மூலமாக அன்னையை மகிழ்விப்பதை ரஹோயாகக் க்ரமாராத்யா என்பர். ரஹஸ்யமாக செய்யப்படும் தர்பணத்தால் சந்தோஷிப்பவள் என்பது இரண்டாம் நாமத்தின் பொருள். மந்த்ர-தந்த்ர சாஸ்த்திரங்களில் ஒரு நிலைவரை வந்தபின் புரசரணம் என்பதாக தர்ப்பணம், ஹோமம் முதலியவை செய்வது வழக்கம். அவ்வாறான தர்ப்பணத்தால் சந்தோஷிப்பவள் அன்னை என்பதே 'ரஹஸ்யதர்ப்பண தர்ப்பிதா' என்பதன் பொருள். இந்த ரஹஸ்ய தர்ப்பணம் என்பதை ஏதோ மற்றவர்களுக்குத் தெரியாமல் செய்வது என்று பொருள் கொள்ளக் கூடாது. நாம் செய்யும் செயல் எல்லாம் இறைவனை/இறைவிக்கான செயல்களே என்று நினத்து முழுவதுமாக நமது கர்மாக்கள் எல்லாம் பரப்பிரம்ம உபாஸனை என்ற நிலை எய்துதலையே இந்த நாமா குறிப்பிடுகிறது. இதே பொருளில் வருவதுதான்,
ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசநாத்யாஹுதி-விதி
ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம்
என்னும் ஆனந்த லஹரி (செளந்தர்ய லஹரி - 27) ஸ்லோகம். இதில், நான் பேசுவதெல்லாம் உன் மந்த்ர ஜபமாகவும், என் உடலசைவுகள் உன் முத்திரைகளாகவும், என் நடை உன்னை பிரதக்ஷிணம் செய்வதாகவும், நான் புசிப்பதெலாம் உனக்குச் செய்யும் ஹோமமாகவும்,நான் படுப்பது உனக்கு செய்யும் நமஸ்காரமாகவும் ஆகட்டும். இவ்வாறு என் சுகத்திற்காக நான் செய்யக்கூடிய செயல்கள் எல்லாம் உன் பூஜையாகவே ஆகட்டும் என்கிறார். இந்த நிலை அவ்வளவு எளிதல்ல. தவறான செயல்கள் எல்லாம் செய்துவிட்டு அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதல்ல இங்கு சொல்லப்படுவது. இறையுணர்வில் எப்போதும் இருக்கும் ஒருவரது செயல்கள் எல்லாம் இறைவனை மானஸிக வழிபாடாகவே ஆகும் என்பதுதான் இதன் பொருள் என்றே தோன்றுகிறது.
பகவத்பாதர் மானஸீகமாக அன்னையை இன்னும் ஒரு விதத்தில் போற்றி வணங்கியிருக்கிறார், அதன் பெயர் சதுஷ்-சஷ்டி உபசார பூஜை என்பது. இன்னும் 2 பதிவுகளில் செளந்தர்யலஹரி வலைப்பூ முடிவுக்கு வருகிறது. ஆகவே, அங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மாதாவை வணங்கும் விதமாக ஆசார்யார் அருளிய சதுஷ்-சஷ்டி உபசாரங்களை அங்கு சொல்லிட இருக்கிறேன். சதுஷ்-சஷ்டி என்றால் 64. அறுபத்து நான்கு உபசாரங்களை மனதால் அன்னைக்கு அளித்து அவளது அருளை வேண்டிடுதலே இந்த சதுஷ்-சஷ்டி உபசார பூஜை. செளந்தர்ய-லஹரிக்கு வீரை-கவிராஜரது மொழி பெயர்ப்பினை அளித்ததுபோல இந்த 64 உபசாரங்களையும் அருந்தமிழில் அழகாக வடித்து அளித்திருக்கிறார் நமது கவிஞர் + பதிவரான சகோதரி கவிநயா அவர்கள். செளந்தர்ய லஹரியில் இட என்று கேட்டதும் தயங்காமல் உடனடியாக செய்து தந்த அவருக்கு எனது நன்றிகளை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்கள் அனைவரும் நவராத்ரி தினங்களில் தினமும் இங்கே வந்து 64 விதமான உபசாரங்களைச் செய்து அன்னையை வணங்கிட வேண்டுகிறேன்.
16 comments:
மிகவும் சந்தோஷம், மௌலி!
அனுபவித்து எழுகிற பாக்யம் கிடைத்திருக்கிறது. எழுத்தில் வருவது அனுபவமாகவும் (ஆத்ம சாக்ஷாத்காரமாகவும்) கைகூட அன்னை அனுக்ரகிக்கட்டும்!
//ஆனந்த லஹரி (செளந்தர்ய லஹரி - 27) ஸ்லோகம்.//
எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்லோகம் :)
//செளந்தர்ய லஹரியில் இட என்று கேட்டதும் தயங்காமல் உடனடியாக செய்து தந்த அவருக்கு எனது நன்றிகளை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.//
அரிதான வாய்ப்பிற்கு என் அம்மாவுக்கும் உங்களுக்கும் நான்தான் நன்றி சொல்ல வேண்டும். மனமார்ந்த நன்றிகள்!
//எழுத்தில் வருவது அனுபவமாகவும் (ஆத்ம சாக்ஷாத்காரமாகவும்) கைகூட அன்னை அனுக்ரகிக்கட்டும்!//
எனக்கும் சேர்த்துதானே சொன்னீங்க கிருஷ்ணமூர்த்தி சார்? :)
சௌந்தர்ய லஹரியை என்னை போன்றவர்களும் அனுபவிக்க வாய்ப்பு தந்த உங்களுடைய பணிக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் மௌலி!
ஆசிக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.
வாங்க கவிக்கா.
//அரிதான வாய்ப்பிற்கு என் அம்மாவுக்கும் உங்களுக்கும் நான்தான் நன்றி சொல்ல வேண்டும். மனமார்ந்த நன்றிகள்!//
உங்கள் வேலைகளுக்கு இடையில் செய்து கொடுத்தமைக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.
/எனக்கும் சேர்த்துதானே சொன்னீங்க கிருஷ்ணமூர்த்தி சார்? /
எல்லோருக்கும் தான்!(என்னையும் சேர்த்து!) ஒரு அற்புதமான விஷயத்தைச்சொல்பவர் மட்டுமில்லை, அதை உள்ளார்ந்து கேட்கிற கொடுப்பினை இருக்கிற அத்தனைபேருக்குமே, அம்பாள் தண்ணொளியாக, எந்த பாரபட்சமும் இல்லாமல் அனுக்ரகிக்கிறாள்!
இதுவும் ஒரு நல்வினையே!
//நான் புசிப்பதெலாம் உனக்குச் செய்யும் ஹோமமாகவும்,நான் படுப்பது உனக்கு செய்யும் நமஸ்காரமாகவும் ஆகட்டும்.//
சூப்பரோ சூப்பர்!
படுப்பதை நமஸ்காரம்-ன்னு சொல்லுறாருன்னா...சும்மா இல்லை! நமஸ்காரமே படுக்கையாகவும் அமையணும்!
//சகுண உபாஸனை பழகியவர்களுக்கே நிர்குண உபாஸனை கைகூடும் என்றும் ஆன்றோர் கூறுகிறார்கள்.//
:)
உண்மை தான்!
//பூசலார் கட்டிய மானஸீக கோவில் நாம் அறிந்ததே//
பூசலார் இந்த மானச பூசைக்கு என்னென்ன கிரியைகள் செய்தார் என்று வெளிப்படையாக நாம் அறியுமாறு இல்லை! ஆனால் அப்பர் சுவாமிகள் அதைக் கோடிட்டுக் காட்டுகிறார்!
//நேயமே நெய்யும் பாலா
நிறைய நீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈசனாருக்கும்
போற்றி அவிக் காட்டினோமே//
நேயம் என்பதை பாலாபிஷேகமாக திருமுழுக்காட்டினார் என்று சொல்லும் கிரியை தான் எத்தனை உயர்ந்த கிரியை!
கோதை இந்தக் கிரியைகளைக் கொஞ்சம் லோக்கல் பாஷையில் "கிரிசை" என்பாள்!
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேட்டீரோ? என்று கிரியைகளைக் காட்டுவாள்!
//அவற்றில் சிவ மானஸ பூஜா, தேவி மானஸ பூஜா, விஷ்ணு மானஸ பூஜா போன்றவை அடக்கம்//
சிவ மானசா பூஜை சொல்லியாகி விட்டது!
தேவி மானசா பூஜை சொல்லப் போகிறீர்கள்!
அப்போ, இன்னும் ஒன்னு தான் பாக்கியா மெளலி அண்ணா?
//இந்த 64 உபசாரங்களையும் அருந்தமிழில் அழகாக வடித்து அளித்திருக்கிறார் நமது கவிஞர் + பதிவரான சகோதரி கவிநயா அவர்கள்//
வாழி வாழி நயகவி கவிநயா! :)
சூப்பரு-க்கா! வெயிட்டிங் ஃபார் 64! :)
//செளந்தர்ய லஹரியில் இட என்று கேட்டதும் தயங்காமல் உடனடியாக செய்து தந்த அவருக்கு எனது நன்றிகளை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.//
நாங்களும் நன்றியைச் சொல்லிக்கறோம்!
முன்பு அம்மன் பாட்டு நூறாம் இடுகைக்கு, இதே போல் சோடச உபசாரங்களை, VSK ஐயா ஆக்கித் தந்தார்! இதோ சுட்டி!
//உடலையே ஆலயமாக எண்ணி ஹிருதய கமலத்தில் இறைவன்/இறைவியை பூஜித்தலே மானஸ பூஜை என்பர். நெஞ்சத் தாமரையில் திருவுருவை ஸ்தாபித்து 'தான்' அழிய நிற்பது ஆதார யோகம், இதை ஞானமார்க்கத்தின் படிக்கட்டு என்கிறார்கள் பெரியவர்கள்//
>>>>>>>>>>>>>>>>>>>>
உளன்கண்டாய் நன்னெஞ்சே என்கிறது ஆழ்வார்பாடலும். சித்தர்பாடல்களும் உடலையே கோயிலாய்க்கொண்டு இதயத்தில் இறைவனைக்காணச்சொல்கிறது.
அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் ஆங்கோர் பொந்திடைவைத்தேன் என்கிறார் பாரதியும். இதயப்பொந்தில்தான் இறைவனைப்பொறியாய் வைத்துள்ளதைக்குறிப்பிடுகிறார் அதனால் வெந்ந்துதணியும் மன இருள்காடு!
மானஸபூஜைப்பதிவில் மனம் மிகஒன்றிப்போனேன் மௌலி.
மானச பூஜை என்றவுடன்...
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்ற திருமூலர் வாக்கும்,
"மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூ இட வல்லார்க்கு.." என்ற பெரியாழ்வார் திருமொழியும் நினைவிற்கு வருகின்றன.
நேரம் கிடைக்கும் பொழுது சௌந்தர்ய லஹரி பக்கம் வர வேண்டும்.
நன்றி மௌலி அண்ணா ! :-)
~
ராதா
//எல்லோருக்கும் தான்!(என்னையும் சேர்த்து!) ஒரு அற்புதமான விஷயத்தைச்சொல்பவர் மட்டுமில்லை, அதை உள்ளார்ந்து கேட்கிற கொடுப்பினை இருக்கிற அத்தனைபேருக்குமே, அம்பாள் தண்ணொளியாக, எந்த பாரபட்சமும் இல்லாமல் அனுக்ரகிக்கிறாள்!
இதுவும் ஒரு நல்வினையே!//
நன்றாக சொன்னீர்கள். நன்றி கிருஷ்ணமூர்த்தி சார் :)
தங்கள் மின்னஞ்சலையும் கண்டேன் மௌலி ஐயா :-) காத்திருக்கிறேன் அன்னைக்கு நடக்கும் 64 உபசாரங்களைப் படித்து வணங்க.
வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ்.
வாங்க ஷைல்ஸக்கா. கருத்துக்களுக்கு நன்றி.
வாங்க ராதா சார். திருமூலரையும், ஆழ்வாரையும் எடுத்துக் காட்டியது அருமை. நன்றிகள் சார்.
வாங்க குமரன். ஐயாவை கவனித்தீர்கள் போலிருக்கு.. :). கழுகுக் கண்களையா உமது கண்கள் :). அப்படி விளிக்கையிலேயே நினைத்தேன் :)
நன்றி குமரன்.
// காத்திருக்கிறேன் அன்னைக்கு நடக்கும் 64 உபசாரங்களைப் படித்து வணங்க.//
Thambi
Post a Comment