
நமஸ்கரிக்கயில் அவளது திருவடியை நோக்கிய சமயத்தில் கண்ணாடி போன்ற அவளுடைய நகத்தின் மத்தியில் கோடி பிரம்மாண்டங்களையும், அதனதன் திரிமூர்த்திகளையும், திக்-பாலகர்களையும், சப்தசராசர்ங்களையும், சகல கந்தர்வர்கள், கின்னரர்கள், அஸ்வினி தேவதைகள், வசுக்கள், சித்தர்கள், பிதுர் தேவதைகளையும், ஆதி சேஷன் போன்ற மஹா நாகங்களையும் கண்டனர். சிருஷ்டிக்கு உட்பட்ட எல்லாவற்றையும் பார்த்தார்கள். இவற்றைக் கண்டு ஆச்சர்யமுற்று தேவியே எல்லாவற்றுக்கும் ஆதாரமானவள் என்று அறிந்து ஆனந்தமடைந்தனர். அக்கோலமே புவனேஸ்வரி கோலம். மும்மூர்த்திகளும் தனித்தனியாக அவளை பலவாறு துதித்து வணங்குகின்றனர்.
நவாக்ஷர ரூபமான தேவியை இவ்வாறு வணங்கிய மும்மூர்த்திகளைப் கடைக்கண்ணால் பார்த்து புன்னகைச் செய்தவளாய் பின்வருமாறு சொல்கிறாள். ஹே, தேவர்களே நானே பராசக்தி, எனக்கும் பரமசிவத்துக்கும் எந்த பேதமும் இல்லை. சர்வசம்ஹார காலத்தில் எல்லாம் என்னிடம் ஒடுங்கும். உத்பவ காலத்தில் புத்தி, சம்பத்து, தைரியம், கீர்த்தி, நினைவாற்றல், சிரத்தை, தீர்க்காலோசனை, தயை, நாணம், பசி, தாகம். பொறுமை, தேஜஸ், சாந்தி, இச்சை, நித்திரை, சோம்பல், நரை, திரை, மூப்பு, ஞானம், அஞ்ஞானம், ஆசை, அபேக்ஷை, பலம். பலவினம். உதிரம், சருமம், நேத்ரம், வாக்கு, பொய், மெய், நாடிகள் என்று புத்தியால் கற்பிக்க்கப்படும் பேத ரூபங்களாக எல்லாமும் நானாகவே இருந்து, அதனதன் செயல்களையும், பலனையும் செய்பவளாக இருக்கிறேன். உலகில் பலஹீனமாயிருப்பவனை அசக்தன் என்று கூறுவது அதனால்தான். என்னிடத்திருந்து பிரிந்திருந்தால் உங்களால் ஏதும் செய்ய இயலாது. இவ்வாறாக கூறி செளந்தர்யவதியாகவும், வெண்மையான ஆடை உடுத்தியவளாகவும் ரஜோ குணத்தை கொண்டவளாகவும் உள்ள மஹாசரஸ்வதி என்னும் சக்தியை தன்னிலிருந்து பிரித்து பிரம்மனுக்கு அளித்து, இச்சக்தியை உன் மனைவியாகக் கொண்டு அவளை உன் மனையாளாக மட்டும் நடத்தாது என் அம்சம் என்று நினைத்து இவளுடன் சத்ய லோகத்தில் சிருஷ்டியை தொடங்க பணிக்கிறாள்.
இவ்வாறே உத்தமமான மஹாலக்ஷ்மியை அழைத்து விஷ்ணுவிடம் சேர்பித்து, என்னுடைய நிமித்தமாக கொடுக்கப்பட்ட இவளை மனைவியாகக் கொண்டு லக்ஷ்மி நாராயணனாக வைகுந்தத்தில் வசிக்கப் பணிக்கிறாள். பின்னர் பிரும்மனைப் பார்த்து, ஹே பிர்ம்மனே, மஹா-விஷ்ணு உன்னால் வணங்கப்படுபவனாக இருக்கட்டும். இவன் சத்வகுண சம்பன்னன் ஆகவே உன்னிலும் மேம்பட்டவன். உலகில் சத்ரு பயமும், அசுர பயமும் ஏற்பட்டும் காலங்களில் இவன் பல ரூபங்களெடுத்து உலகின் கஷ்டங்களை போக்குவான் என்றாள். பின்னர் ருத்திரரைப் பார்த்து மனோகரையாகவும், மஹாகாளியாகவும் விளங்கும் கெளரியை ஏற்றுக் கொண்டு தமோ-குணத்தை பிரதானமாகக் கொள்ளச் செய்து கைலாசத்தில் வாழப் பணிக்கிறாள்.
பின்னர் அவர்களைப் பார்த்து நீங்கள் மூவரும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்னும் முத்தொழிலுக்கு கர்த்தாக்களாக விளங்கி அதனையே ப்ராதான்யமாகக் கொள்ள வேண்டும் மகா சம்ஸ்கார காலத்தில் அண்ட சராசரங்களும் அழியும் காலத்தில் நீங்களும் என்னில் ஐக்கியமடைவீர்கள் நான் ஒடுங்கத் தக்கவள் அல்ல, குணங்களோடு கூடிய காலத்தில் சகுணையாகவும். குணங்கள் விலகிய காலத்தில் நிர்குணையாகவும் விளங்குகிறேன். தத்துவங்களுக்கு எல்லாம் மகத்தான சிவ ஸ்வரூபம் நானே. ஆதியில் நான் அகங்கார தத்துவத்தை உருவாக்கி அதிலிருந்து சத்வம் போன்ற முக்குணங்களையும், மகதத்துவமாகிய புத்தியையும் உருவாக்கினேன். பஞ்ச பூதங்களையும் அவற்றிலிருந்து ஞானேந்திரியங்கள் ஐந்தையும், கர்மேந்திரியங்களிலிருந்து ஐந்தும், மகத்தும் சேர்ந்த பதினொன்றே பரமசிவம் என்னும் ஆதி புருஷர். அவர்க் நிர்குணமாக எங்கும் வியாபித்தவர்காக இருப்பார். இப்போது நீங்கள் உங்கள் இடங்களுக்குச் செல்லலாம். எப்போது என்னை தியானிக்கிறீர்களோ அப்போது நான் உங்கள் முன்பு பிரசன்னமாவேன் என்று கூறுகிறாள். அக்கணமே அவர்களுக்கான சக்திகளைத் தவிர அந்த தீவே மறைந்துவிடுகிறது. இவர்கள் தங்கள் லோகங்களை அடைந்திடுகின்றனர்.
இந்த தரிசனத்தை பற்றி பிரம்மா நாரதரிடம் கூறி, அன்னையின் அந்த ரூபமே புவனேஸ்வரி ரூபம் என்று கூறியிருக்கிறார். இவ்வாறாக ஆரம்பிக்கும் தேவி பாகவதம், அம்பிகையின் பல திருவிளையாடல்களையும் சொல்கிறது. ஆனால் இந்த நவராத்திரிச் சிறப்பு இடுகைகளில் இத்துடன் தேவி பாகவதம் முடிவுபெறும். பின்னர் வேறொரு சமயத்தில் மற்றதைப் பார்க்கலாம்.

ஸ்ரீ புவனேஸ்வரி மாதா கீ ஜெ!!!