Friday, August 21, 2009

விநாயகரை வணங்கிடுவோம் - ஸ்ரீ மஹா-கணபதி நவார்ணவ வேதபாத ஸ்தவம்

எல்லோருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...



முன்பு கணேச ருணஹர ஸ்துதி சொல்லி விநாயக சதுர்த்தி கொண்டாடினோம். இந்த வருஷம், 'ஸ்ரீ மஹா-கணபதி நவார்ண வேதபாத ஸ்தவம்' என்னும் ஸ்தோத்ரத்தைச் சொல்லி நமஸ்கரிப்போமா?. அதற்கு முன்னால் இந்த ஸ்தோத்ரத்தைப் பற்றிய சிறு தகவல். சாதாரணமாக வேத மந்திரங்கள் கொண்டு கணபதி பூஜை செய்வோம், மந்த்ரோபாஸகர்கள் பீஜாக்ஷரம் கொண்ட மந்த்ரத்தை வைத்து ஸ்ரீகணநாதனை ஆராதிப்பர். இரண்டும் தெரியாத நம்மைப் போன்றவர்களுக்காகவே இந்த நவார்ண வேதபாத ஸ்தவம் என்று நினைக்கிறேன். இரண்டும் தெரியாது, ஆனால் வேதசாரமாகவும், மந்த்ர ஸாரமாகவும் வேழமுகத்தவனை வணங்கிட இந்த ஸ்தோத்ரம் நமக்கு வாய்ப்பளிக்கிறது.

"ஸ்ரீகணாதிபதயே நம" என்கிற மந்திரத்தில் ஒவ்வொரு எழுத்தினையும் முதலாகக் கொண்டு 9 ஸ்லோகங்களும், இந்த ஒன்பது ஸ்லோகங்களில் ஒவ்வொன்றின் முடிவிலும் வேத மந்த்ரமும் சேர்த்துச் செய்யப்பட்டது இது என்று பெரியோர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சொல்வதற்கு எளிதாகவும், அழகாகவும் உள்ள இந்த ஸ்தோத்ரத்தை பார்க்கலாம்.


ஸ்ரீகண்ட-தநய ஸ்ரீச ஸ்ரீகர ஸ்ரீதளார்ச்சித
ஸ்ரீவினாயக ஸர்வேச ஸ்ரீயம் வாஸய மே குலே

ஹாலாஹலம் என்னும் கொடிய விஷத்தை உண்டு, அதனை தனது கழுத்திலேயே நிறுத்திக் கொண்ட ஸ்ரீபரமேஸ்வரனின் புதல்வரே!, அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதியே!, உபாஸிப்பவர்களுக்கு அஷ்ட-லக்ஷ்மிகளின் அருளைத் தருபவரே!, மஹா-லக்ஷ்மி நித்யவாசம் செய்யும் வில்வ பத்ரத்தால் பூஜிக்கப்படுபவரே!, தனக்கு மேல் ஒருவர் இல்லாத தலைவரே!, என்னுடைய குலத்தில் மஹாலக்ஷ்மி என்றும் நித்யவாசம் செய்யும்படி அருள வேண்டும். [ஸ்ரீயம் வாஸய மே குலே - வேத வாக்யம்]


கஜானன கணாதீச த்விஜராஜ விபூஷித
பஜே த்வாம் ஸச்சிதாநந்த பிருஹ்மணாம் பிருஹ்மணஸ்பதே

யானை முகத்தோனே!, கணதேவதைகளின் தலைவனே!, சந்த்ரனால் அலங்கரிக்கப்பட்ட சிரஸை உடையவனே!, ஸச்சிதானந்த வடிவானவனே!, வேதங்களுக்குத் தலைவனே!, தங்களை ஸேவிக்கிறேன். [பிருஹ்மணாம் பிருஹ்மணஸ்பதே - வேத வாக்யம்]


ணஷஷ்ட வாச்ய நாசாய ரோகாடவி குடாரிணே
க்ருணா பாலித லோகாய வனானாம் பதயே நம:

'ண' என்னும் எழுத்திலிருந்து ஆறாவது எழுத்தான 'ந' என்பதன் பொருளான 'இல்லாமை/ஏழ்மை'யை ஒழிப்பவரும், பிணிகள் என்னும் காட்டினை அழிப்பவரும், தனது தயையால் உலகைக் காப்பவரும், காடுகளுக்கு எல்லாம் தலைவராகவும் இருக்கும் கணபதிக்கு நமஸ்காரம். [வனானாம் பதயே நம: - வேத வாக்யம்]


தியம் ப்ரயச்சதே துப்ய மீப்ஸிதார்த ப்ரதாயினே
தீப்த பூஷண பூஷாய திசாம்ச பதயே நம:

நல்லறிவைக் கொடுப்பவரும், விரும்பியதை அளிப்பவரும், நல்லணிகளால் அலங்கரிக்கப்பட்டவரும், திசைகளின் தலைவருமான கணபதே! தங்களுக்கு நமஸ்காரம். [திசாம்ச பதயே நம: - வேத வாக்யம்]


பஞ்ச பிருஹ்ம ஸ்வரூபாய பஞ்ச பாதக ஹாரிணே
பஞ்ச தத்வாத்மனே துப்யம் பசூனாம் பதயே நம:

சத்யோஜாதன், வாமதேவன், அகோரன், தத்புருஷன், ஈசானன் ஆகிய ஐந்து பிரம்மங்களாக இருப்பவரும், அந்தணனைக் கொல்லுதல், கள் குடித்தல், தர்மம் செய்ய வைத்த பொருளைக் கொள்ளையடித்தல், பிறன்மனைவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தல், மேற்சொன்ன 4 வித இழி செயல்களைச் செய்பவருடன் சகவாசம் கொள்ளுதல் ஆகிய ஐந்து மஹா பாதகங்களையும் அழிப்பவர், நிலம், நீர்,காற்று, தீ, வானம் ஆகிய ஐந்து பூதங்களின் வடிவாக இருப்பவரும், பசுக்களின் தலைவனுமாகிய உங்களுக்கு நமஸ்காரங்கள். [பசூனாம் பதயே நம: - வேத வாக்யம்]


தடித்கோடி ப்ரதீகாசதனவே விச்வ ஸாக்ஷிணே
தபஸ்வித்யாயினே துப்யம் ஸேநாநிப்யச்சவோ நம:

கோடி-மின்னலுக்கு இணையான ஒளி மிகுந்த உடலை உடையவரும், உலகனைத்திற்கும் ஸாக்ஷியாக இருப்பவரும், தபஸ்விகளை தன்மனதில் கொண்டவரும், படைகளுக்கெல்லாம் தலைவருமான தங்களுக்கு நமஸ்காரம்.
[ஸேநாநிப்யச்சவோ நம: - வேத வாக்யம்]


யே பஜந்த்யக்ஷரம் த்வாம் தே ப்ராப்னுவந்த்யக்ஷராத்மதாம்
நைகரூபாய மஹதே முஷ்ணதாம் பதயே நம:

அழிவற்றவரான உங்களை வழிபடுபவர்கள் தங்களுடன் கலந்துவிடுகின்றனர், அவ்வாறான சிறப்பை நல்குபவரும், பலவித ரூபங்களைக் கொண்டவரும், மிகப் பெருமை வாய்ந்தவருமான உங்களுக்கு நமஸ்காரம். [முஷ்ணதாம் பதயே நம - வேத வாக்யம்] {முஷ்ணதாம் என்றால் திருடர் என்ற பொருள் மட்டுமே தெரிகிறது, இங்கு எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை; வேறு பொருள் தெரிந்த்வர்கள் கூறினால் மகிழ்வேன்}

நகஜாவர புத்ராய ஸுர ராஜார்சிதாய ச
ஸகுணாய நமஸ்துப்யம் ஸும்ருடீகாய மீடுஷே

பார்வதீ தேவியின் சிறந்த புதல்வரும், தேவேந்திரரால் பூஜிக்கப்பட்டவரும், நற்குணங்கள் பொருந்தியவரும், எல்லோருக்கும் எப்போதும் இன்பங்களை அளிப்பவருமான தங்களுக்கு நமஸ்காரம். [ஸும்ருடீகாய மீடுஷே - வேத வாக்யம்]


மஹாபாத கஸங்காத மஹாரண பயாபஹ
த்வதீயக்ருபயா தேவ ஸர்வாநவ யஜாமஹே

பெரிய பாவக்கூட்டங்களிலிருந்து காப்பதற்கும், பெரிய போர்களில் ஏற்படும் அச்சத்தை எங்களிடமிருந்து அகற்றவும் தங்கள தயவினைக் காட்டுவீர்களாக. நாங்கள் உங்களை வணங்குகிறோம். [ஸர்வாநவ யஜாமஹே -வேத வாக்யம்]



நவார்ணவரத்ந நிகம பாதஸம்புடிதாம் ஸ்துதிம்
பக்த்யா படந்தியே தேக்ஷாம் துஷ்டோபவகணாதிப

கணாதிபரே!, ஸ்ரீ கணாதிபதயே நம: என்னும் மந்திரத்தில் ஆடங்கிய ஒன்பது ரத்னங்கள் போன்ற எழுத்துக்களை ஆரம்பத்திலும், வேதவாக்யங்களை முடிவிலும் கொண்ட இந்த ஸ்துதியை பக்தியுடன் படிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டுவதை அருளூவீராக.

48 comments:

Geetha Sambasivam said...

பிள்ளையாரைப் பார்க்கிறதுக்காக வந்தேன். ஸ்லோகம் அப்புறமாப் படிச்சுக்கிறேன். ஜம்முனு இருக்கார் பிள்ளையார். நன்றி. :))))))))

திவாண்ணா said...

{முஷ்ணதாம் என்றால் திருடர் என்ற பொருள் மட்டுமே தெரிகிறது, இங்கு எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை; வேறு பொருள் தெரிந்த்வர்கள் கூறினால் மகிழ்வேன்}

வேறு பொருளில்லை மௌலி.
திருடர்களின் தலைவன்தான். மேலும் தஸ்கராணாம் பதயே, குலுஞ்சானாம். ஸ்தேனாணாம் என்றேல்லாம் இதே போன்ற பொருளில் வருகிறது.
இறைவன் எல்லாருக்கும்தான் தலைவன். திருடர்களுக்கு கடவுள் இல்லைன்னு ஒதுக்க முடியுமா என்ன?

திவாண்ணா said...

பிள்ளையார் சதுர்த்திக்கு பதிவு போட்ட அனைவருக்கும் நமஸ்காரம்!

கபீரன்பன் said...

//வேதசாரமாகவும், மந்த்ர ஸாரமாகவும் வேழமுகத்தவனை வணங்கிட இந்த ஸ்தோத்ரம் நமக்கு வாய்ப்பளிக்கிறது//

வேத வாக்கியங்கங்களை எடுத்துக்காட்டியது நன்றாக இருக்கிறது. இதை ஆக்கியவர் யார்? நல்லதொரு தோத்திரத்தை அளித்தமைக்கு மிக்க நன்றி.

விநாயகப் பெருமானின் அருள் என்றும் வளரட்டும்.

ஷைலஜா said...

இங்கே இனிதான் பிள்ளையார்பிறக்கப்போறார். மௌலியின் பதிவினைக்காலை எழுந்ததும் படித்துவிட்டேன் .படமும் விஷயங்களும் மனசுக்கு நிறைவாக இருக்கின்றன.ஸ்லோகமும் அதன் அர்த்தமும் அருமை மௌலி. அச்செடுத்துப்படிக்கவேண்டும் இன்று.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஹேரம்ப கணபதி அழகா இருக்கார். நல்லதொரு தகவல் அளித்தமைக்கு நன்றி.
கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்
குணமுயர்திடவே அவனுடன் கூடி மகிழ்திடுவோம்

sury siva said...

மூஷிக வாஹனத்தில் அமர்ந்திருப்பதால், ஒரு வேளை மூஷிகாணாம் பதயே நமஹ என்றிருக்குமோ ?? !!

ஒரு guess தான்.]

ஸ்துதி மிகவும் அற்புதமாக உள்ளது என்பது நிஸ்ஸந்தேஹம்.

இந்த கணேச நவார்ணவ ஸ்துதியை எனது
வலைப்பதிவில தங்கள் அனுமதியை எதிர்பார்த்து
இட்டிருக்கிறேன்.

சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க சூரி சார். தாராளமாக இடுங்கள். இதற்கு எதற்கு எனது அனுமதி...இது ஒன்றும் நான் செய்ததல்லவே?.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ஷைல்ஸக்கா...நேரம் கிடைக்கையில் சொல்லுங்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கபீரன்பன் சார்.

//விநாயகப் பெருமானின் அருள் என்றும் வளரட்டும்.//

நானும் அருள் வளர வேண்டிக்கொள்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திவாண்ணா.

///தஸ்கராணாம் பதயே, குலுஞ்சானாம். ஸ்தேனாணாம் //

ஆமாம், ஆனால் அங்கே இருப்பதெல்லாம் போல இல்லாது, திடீரென திருடர் என்பது மற்றும் வந்திருக்கிறதே என்று யோசித்தேன்.
வந்து தெளிவித்தமைக்கு நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் பிள்ளையாரைப் பார்த்ததுக்கும் நன்றி கீர்ர்ரம்மா...சாரி,கீதாம்மா. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதற்கு எதற்கு எனது அனுமதி...இது ஒன்றும் நான் செய்ததல்லவே?//

நீங்க செஞ்சிருந்தா எடுத்து இடுவதற்கு, முதற்கண் அனுமதியே கேட்டிருக்க மாட்டோம் :))

இதைச் செய்தவர் யார் என்றும் சொல்லுங்கள் மெளலி அண்ணா!
மிக அழகாக வேத வரிகளை, ருத்ரம்-சமகம் வரிகளைக் கோர்த்து செஞ்சிருக்கார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அநைக ரூபாய மஹதே முஷ்ணதாம் பதயே நம://

//முஷ்ணதாம் என்றால் திருடர் என்ற பொருள் மட்டுமே தெரிகிறது, இங்கு எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை//

ருத்ரம் கனம் சொல்லும் போது, மூன்றாம் அனுவாகையில் சிவபெருமான் முழுக்க முழுக்க திருடராகவே வர்ணிக்கப்படுகிறார்!

* தஸ்கராணாம் பதயே நமோ நமக!
* "வஞ்சிதே" ஸ்தயூனாம் பதயே நமோ நமக!

அதே போலத் தான்
ஸ்ருகா விப்யோ
ஜிகாம் சத்ப்யோ
முஷ்ணதாம் பதயே நமோ நமக!

அந்த ருத்ரம் வரிகளையே இங்கு பிள்ளையாருக்கும் எடுத்தாள்கிறார் என்று நினைக்கிறேன்!

அறியாமை என்னும் மாயையை நம்மிடம் இருந்து அபகரித்துக் (திருடிக்) கொள்பவர்! = முஷ்ணதாம் பதயே!

அதாச்சும் தனியா ஞானம் என்ற ஒன்றை யாருக்கும் கொடுக்கணும்-ன்னு அவசியம் இல்லை!
அதான் தட்சிணாமூர்த்தியும் விரிவுரை எல்லாம் பேசாது மெளனமாகவே அருள் செய்தார்!

தனியா ஞானம் என்று பக்கம் பக்கமா கொடுக்காதபடிக்கு,
மன மாயையான அறியாமையை அபகரித்தாலே போதும்!
சவித்ரு மண்டல மத்யவர்த்தி யானவன் தானாகவே தெரிவான்!
மேகம் கலைந்தால் பகலவன் தெரிவது போல!

இறைவனை அதான் "கள்வன்" என்று சொல்வதின் தாத்பர்யம்!
திருமங்கை என்ற கள்வனிடமே களவாட வில்லையா?
உள்ளம் கவர் கள்வன்! அதாச்சும் உள்ளத்தைக் கவர்ந்து விட்டால் போதும்! அப்புறம் சொன்ன பேச்சையெல்லாம் அது கேட்கும்! அந்த உள்ளத்தைக் கவர்வது தான் கஷ்டம்!

மன மாயையைக் கவர்ந்து விட்டால், அப்புறம் நமக்குன்னு தனியான யோசனை-ன்னு எதுவும் இருக்காது! அவன் திருவுள்ள உகப்பே-ன்னு இருப்போம்!

மன மாயை என்னும் உள்ளத்தைத் திருடிக் கொள்வதால்,
முஷ்ணதாம் பதி! "வஞ்சிதே" ஸ்தயூனாம் பதி! நமோ நமக!

திருமால் இருஞ்சோலை "வஞ்சக் கள்வன்" மாமாயன்
மாயக் கவியாய் வந்து என் நெஞ்சும் உயிரும் உள்கலந்து நின்றார்!

செம்மான் மகளைத் திருடும் "திருடன்"
பெம்மான் முருகன் பிறவான் இறவான்!

Kavinaya said...

அழகான ஸ்லோகத்திற்கும் பொருளுக்கும் நன்றிகள் மௌலி.

ஸ்ரீகணாதிபதயே நம.

வல்லிசிம்ஹன் said...

புனர்பூஜைக்கு ஸ்லோகம் தந்து உதவியதற்கு நன்றி மௌலி.
சொன்னதையே சொல்லித் தலைல குட்டிண்டு நமஸ்காரம் பண்ணாப் போதுமாங்கற மாதிரி ஸ்ரீ கணேசர் என்னைப் பார்த்த மாதிரி தோன்றியது:)

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி கே.ஆர்.எஸ்

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கவிக்கோ கவிநயாக்கா.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி வல்லியம்மா.

Raghav said...

மெளலிண்ணா, இம்முறை முக்குறுணி விநாயகருக்கு நேரிலே போய் வாழ்த்தி வணாங்கிவிட்டு வந்தாச்சு.. அங்க சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை இங்க பதிவில் படிச்சு மானசீகமா சொல்லிட்டேன்..

குமரன் (Kumaran) said...

எளிமையான துதி தான் இது மௌலி.

முதல் இரண்டு சுலோகங்களில் வரும் வேத வாக்கியங்கள் எங்கிருந்து வந்தன என்று தெரிகிறது. மற்ற வாக்கியங்களும் எங்கிருந்து வந்தன என்று தெரிந்தால் சொல்லுங்கள் மௌலி.

sury siva said...

// முஷ்ணதாம் என்றால் திருடர் என்ற பொருள் மட்டுமே தெரிகிறது, இங்கு எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை; வேறு பொருள் தெரிந்த்வர்கள் கூறினால் மகிழ்வேன்}//

//வேறு பொருளில்லை மௌலி.
திருடர்களின் தலைவன்தான். மேலும் தஸ்கராணாம் பதயே, குலுஞ்சானாம். ஸ்தேனாணாம் என்றேல்லாம் இதே போன்ற பொருளில் வருகிறது.
இறைவன் எல்லாருக்கும்தான் தலைவன். திருடர்களுக்கு கடவுள் இல்லைன்னு ஒதுக்க முடியுமா என்ன?//

தஸ்கராணாம் என்ற சொல் காடுகள் வழியே செல்பவர்களிடம் பொருட்களை அவர்களைத் துன்புறுத்தி, திருடுபவர்களைக் குறிக்குமாம். இதை ஆங்கிலத்தில்
உள்ள டெகாயிட்ஸ் என்ற சொல்லின் பொருளுக்கு அருகாமையில் இருக்கிறது.

அதே சமயம், முஷ்ணதாம் என்ற சொல், வயலில் உற்பத்தியாகும் தானியங்கள் அல்லது வயல் சார்ந்த பொருட்களை மற்றவர்கள் அறியாவண்ணம் இரவு நேரத்தில் அபஹரிப்பவர்களைக்குறிப்பதாம். அப்படி பார்க்கும்பொழுது,
வயலில் விளையும் தானியங்களை இரவு நேரத்தில் வந்து உண்ணும் பிராணிகள் ( எலி போன்றவைகள்) இந்த‌
" முஷ்ணதாம் " இல் அடங்குகிறது.

நிற்க. பதயே என்று சொல்லுக்கு தலைவன் என்று ஒரு லிமிடெட் ஆக பொருள் கிரகிக்கவேண்டியதில்லை.
அப்படி நினைக்கும்பொழுது தான், திருடர்களுக்குத் தலைவனா ! என்று வியப்புடன் அல்லது ஐயத்துடன், இந்த‌
வாக்கியத்தை அணுகவேண்டியிருக்கிறது. அதைத் தவிர்த்து, அச்சொலுக்கு " எல்லாவற்றையும் ஆட்கொள்பவன், நல்லவர், கெட்டவர் யாவரையுமே தன்வயப்படுத்தி அவர்களையும் தன்பால்
ஆக்ரஹித்து தன்னை ஒப்புக்கொள்ளச்செய்பவன், தனக்கு அடங்கச்செய்பவன் " எனவும் சொல்லலாமாம். ருத்ரம் 3வது அனுவாகம் " நமஹ ஸஹமானாய... நிவ்யாதின ஆவ்யானினாம் பதயே நமோ நம்ஹ .." இதை விளக்குவதாகவும் சொல்கிறார்கள்.

சுப்பு ரத்தினம்.

sury siva said...

// முஷ்ணதாம் என்றால் திருடர் என்ற பொருள் மட்டுமே தெரிகிறது, இங்கு எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை; வேறு பொருள் தெரிந்த்வர்கள் கூறினால் மகிழ்வேன்}//

//வேறு பொருளில்லை மௌலி.
திருடர்களின் தலைவன்தான். மேலும் தஸ்கராணாம் பதயே, குலுஞ்சானாம். ஸ்தேனாணாம் என்றேல்லாம் இதே போன்ற பொருளில் வருகிறது.
இறைவன் எல்லாருக்கும்தான் தலைவன். திருடர்களுக்கு கடவுள் இல்லைன்னு ஒதுக்க முடியுமா என்ன?//

தஸ்கராணாம் என்ற சொல் காடுகள் வழியே செல்பவர்களிடம் பொருட்களை அவர்களைத் துன்புறுத்தி, திருடுபவர்களைக் குறிக்குமாம். இதை ஆங்கிலத்தில்
உள்ள டெகாயிட்ஸ் என்ற சொல்லின் பொருளுக்கு அருகாமையில் இருக்கிறது.

அதே சமயம், முஷ்ணதாம் என்ற சொல், வயலில் உற்பத்தியாகும் தானியங்கள் அல்லது வயல் சார்ந்த பொருட்களை மற்றவர்கள் அறியாவண்ணம் இரவு நேரத்தில் அபஹரிப்பவர்களைக்குறிப்பதாம். அப்படி பார்க்கும்பொழுது,
வயலில் விளையும் தானியங்களை இரவு நேரத்தில் வந்து உண்ணும் பிராணிகள் ( எலி போன்றவைகள்) இந்த‌
" முஷ்ணதாம் " இல் அடங்குகிறது.

நிற்க. பதயே என்று சொல்லுக்கு தலைவன் என்று ஒரு லிமிடெட் ஆக பொருள் கிரகிக்கவேண்டியதில்லை.
அப்படி நினைக்கும்பொழுது தான், திருடர்களுக்குத் தலைவனா ! என்று வியப்புடன் அல்லது ஐயத்துடன், இந்த‌
வாக்கியத்தை அணுகவேண்டியிருக்கிறது. அதைத் தவிர்த்து, அச்சொலுக்கு " எல்லாவற்றையும் ஆட்கொள்பவன், நல்லவர், கெட்டவர் யாவரையுமே தன்வயப்படுத்தி அவர்களையும் தன்பால்
ஆக்ரஹித்து தன்னை ஒப்புக்கொள்ளச்செய்பவன், தனக்கு அடங்கச்செய்பவன் " எனவும் சொல்லலாமாம். ருத்ரம் 3வது அனுவாகம் " நமஹ ஸஹமானாய... நிவ்யாதின ஆவ்யானினாம் பதயே நமோ நம்ஹ .." இதை விளக்குவதாகவும் சொல்கிறார்கள்.

சுப்பு ரத்தினம்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி குமரன். நீங்கள் கேட்டிருப்பதற்கு திவாண்ணா/சூரி சார் சொல்லியிருக்காங்க பாருங்க.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க சூரி சார்.

தஸ்கராணம், முஷ்ணதாம் வேறுபாடுகளை அருமையாக விளக்கியிருக்கீங்க. மிக்க நன்றி.

Geetha Sambasivam said...

அருமையான விளக்கத்துக்கு நன்றி சூரி சார்.

Radha said...

நன்றி மௌலி அண்ணா.
குள்ளக் குள்ளனே ! குண்டு வயிரனே !
வெள்ளிக் கொம்பனே! விநாயகனே சரணம் !!
~
ராதா

pudugaithendral said...

பகிர்தலுக்கு நன்றி


ஜம்முனு இருக்கார் பிள்ளையார்.

Anonymous said...

//ஜம்முனு இருக்கார் பிள்ளையார். நன்றி// Geetha mami,it is the exact picture which is discribed in the ganapathi moolamanthra japam(diyana slokam).
Thambhi

Geetha Sambasivam said...

@தம்பி,
கணபதி அதர்வ சீர்ஷம் தெரிஞ்சால் அனுப்புங்க. இல்லைனா லிங்க் இருந்தால் கொடுங்க. நன்றி!

ம்ம்ம்?? இதுதான் தி.வா. கேட்டுட்டிருந்த பிள்ளையாரா????

திவாண்ணா said...

//ம்ம்ம்?? இதுதான் தி.வா. கேட்டுட்டிருந்த பிள்ளையாரா????//
இவரை பரிவார தேவைதைகளோட தேடிண்டு இருக்கேன். யாரும் பாத்து இருக்கீங்களா?

Geetha Sambasivam said...

பிள்ளையாரைப் பார்த்திருக்கேன், தேவதைகளை எங்கே வச்சிருக்கார், தெரியலை! கணேசா, சொல்லுப்பா!

தி. ரா. ச.(T.R.C.) said...

you can be angry with me but not with my reply mauli. No ack for my reply?

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும், மீள்வருகைக்கும் நன்றி திராச ஐயா.

உங்களிடம் கோபமா?...அடுக்குமா?...
ஏதோ விடுபட்டுவிட்டது, அதுக்காக இப்படியா?....மன்னியுங்கள் ஐயா :-)

மெளலி (மதுரையம்பதி) said...

திவாண்ணா,

நீங்க தேடும் படம் நெய்வேலி டவுண்ஷிப்ல 19த் அல்லது 4த் ப்ளாக் பிள்ளையார் கோவிலில் படமாக 15 வருடங்கள் முன்பு பார்த்திருக்கிறேன். யாரேனும் அங்கிருப்பவர்களிடம் விசாரித்தால் தெரியலாம்.

மெளலி (மதுரையம்பதி) said...

திவாண்ணா,

நீங்க தேடும் படம் நெய்வேலி டவுண்ஷிப்ல 19த் அல்லது 4த் ப்ளாக் பிள்ளையார் கோவிலில் படமாக 15 வருடங்கள் முன்பு பார்த்திருக்கிறேன். யாரேனும் அங்கிருப்பவர்களிடம் விசாரித்தால் தெரியலாம்.

மெளலி (மதுரையம்பதி) said...

திவாண்ணா,

நீங்க தேடும் படம் நெய்வேலி டவுண்ஷிப்ல 19த் அல்லது 4த் ப்ளாக் பிள்ளையார் கோவிலில் படமாக 15 வருடங்கள் முன்பு பார்த்திருக்கிறேன். யாரேனும் அங்கிருப்பவர்களிடம் விசாரித்தால் தெரியலாம்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு/மீள்வருகைக்கு நன்றி கணேசன், கீதாம்மா & திவாண்ணா.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி புதுகையக்கா, ராதா சார்.

திவாண்ணா said...

அஹா! நெய்வேலியிலே வேண்டியவங்க இருக்காங்க. பாத்துக்கறேன். என்ன கோவில்ன்னு நினைவு இருந்தா சொல்லுங்க.

கிருஷ்ண மூர்த்தி S said...

http://www.vedicastrologer.org/homam/maha_ganapati_homam.pdf

இந்த பி டி எஃப் கோப்பில் முப்பத்தைந்தாம் பக்க வாக்கில் கணபதி அதர்வசீர்ஷோபநிஷதம் இருக்கிறது.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.

மெளலி (மதுரையம்பதி) said...

திவாண்ணா,

முந்தைய பதிலில் சொல்லியது போல ப்ளாக் 4த் அல்லது 19த் ப்ளாக் சரியாக நினைவில்லை. சித்தி வினாயகர் கோவில்.

மெளலி (மதுரையம்பதி) said...

திவாண்ணா & கணேசன்,

வல்லப கணபதி என்ற வகையில் இப்படம் தியான ஸ்லோகத்தில் சொல்லியபடி இருந்தாலும் இப்படம் முழுதாக தியான ஸ்லோகத்தில் சொல்லியபடி இல்லை என்பது எனது எண்ணம்.

பீஜாபுர பலம் அப்படின்னா கொய்யா என்று படித்த நினைவு. ஆனால் இந்த பதிவில் இருக்கும் வினாயகர் தாடிமீ பலம் (மாதுளை) அல்லவா கையில் வைத்திருக்கிறார்?.

மெளலி (மதுரையம்பதி) said...

அதே போல கையில் சூலம் வைத்திருக்கிறார் இந்த வினாயகர்....த்யான ஸ்லோகத்தில் சூலம் இருப்பதாக எனதறிவுக்கு எட்டவில்லை..

திவாண்ணா said...

சரிதான். இவர் வாஞ்சாகல்ப கணபதின்னு படத்திலேயே பேர் போட்டு இருக்கு. நான் தேடறது மஹாகணபதி.
பீஜ பூர பலம். விதைகள் நிறைந்த பலம். கொய்யா மாதுளை இரண்டுக்குமே பொருந்துமே. தாடிமீ பலம் மாதுளை மட்டுமே.

திவாண்ணா said...

ஆணி எப்பவுமே இருக்கும்தான். கொஞ்சம் குறைஞ்சது தற்காலிகமா. இன்னிக்கு ஞாயித்து கிழமைன்னு பேரானாலும் நிறைய வேலகள் காத்துகிட்டு இருக்கு.

Geetha Sambasivam said...

பிள்ளையார் யாராய் இருந்தால் என்ன?? நல்லா ஜாலியா இருக்கார், அதர்வசீர்ஷோபநிஷத்துக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி சார். சேமிச்சுக்கறேன்.