Monday, June 15, 2009

துஃக்க ஹந்த்ரி, துஷ்டதூரா, ஸர்வ மங்களா..

இதனை எழுத உட்கார்கையில் என்ன நாமங்கள் மனதி தோன்றுகிறதோ அதை மட்டுமே எழுதுகிறேன். சஹஸ்ர நாமத்தில் வரும் அதே-தொடரில் இது இருக்காது என்பதை மட்டும் இங்கே சொல்லிவிடுகிறேன்.

அன்னையின் ஆயிரம் நாமங்களில் இன்று ஏழு நாமங்களைப் பார்க்கலாமா?



"துஃக்க ஹந்த்ரி" என்றால் துயரத்தைப் போக்குபவள். அன்னையிடம் தமது துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பதுதான் எப்போதும் வழக்கம். ஜகன்மாதாவான பராசக்தியிடம் பகிர்ந்தால் அவள் நமது துக்கத்தை போக்கிடுவாள் என்கிறார்கள் வாக்தேவதைகள். இந்த நாமத்தை அபிராமி பட்டர், 'அல்லலெல்லாம் தீர்க்கும் திரிபுரையாள்' என்று கூறுகிறார்.


அடுத்தது "துஷ்ட தூரா", அப்படியென்றால் கெட்டவர்களிடத்து எட்டாதவள். அதாவது தீய செயல்களைச் செய்பவர்களிடத்து இருந்து விலகியிருப்பவள் என்று பொருள். பண்டாசுர வதத்தின் போது அன்னை அவனுக்கு அருகில், தொலைவில் என்று இங்கும் அங்குமாக அவனை அலைக்கழித்து அவனது கண்களுக்கு அகப்படாது இருந்து அவனை அழித்ததால் இந்த பெயர் என்றும் கூறலாம் தானே?


கடவுளைப் பற்றிச் சொல்லும் போது, "ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்" என்று சொல்வதைப் பார்த்திருக்கிறோம். "ஸமான அதிக வர்ஜிதா"' என்றால் ஈடு-இணையில்லாதவள், தனக்கு சமமானவர்களும், தன்னை விஞ்சியவர்களும் இல்லாத தனிப் பெருமை பெற்றவள் என்று பொருள். இந்த நாமம் லலிதா த்ரிசதியிலும் சொல்லப்படும் ஒரு நாமம்.




கும்பகோணத்தில் வீற்றிருக்கும் அம்பிகையின் பெயரே சர்வ மங்களா என்பதுதான். எந்த மங்கல நிகழ்ச்சிகளுக்கும் காரணமாக இருக்கும் மஞ்சள், குங்குமம், மங்கல வாத்யம், புஷ்பம், போன்ற எல்லாவற்றிலுமும் இருப்பவள் அம்பிகை. நமது அன்றாட வாழ்வில் நிகழும் திருவிழாக்கள், பண்டிகைகள் திருமணம், வளைகாப்பு போன்ற எல்லா மங்கல நிகழ்ச்சிகளுக்கும் காரணம் அன்னையே என்னும் விதத்திலும் அவளை "சர்வ மங்களா" என்று கூறலாம் தானே?. இந்த நாமத்தையே அபிராமி பட்டர், 'மங்கலை, பூர்ணாசல மங்கலை' என்று சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.


ராஜ்ய லக்ஷ்மி, தன லக்ஷ்மி, ஜெய லக்ஷ்மி எல்லாம் தம்முடன் இருந்து அருள வேண்டும் என்று அரசர்கள் அன்னையைத் துதிப்பார்களாம். அதற்காக அந்த அரசர்களாலும், பேரரசர்களாலும் போற்றப்படுபவள்/அர்ச்சிக்கப்படுபவள் என்பதே "ராஜராஜ அர்ச்சிதா". நமக்குத் தெரிந்து வீர சிவாஜி, ராஜ ராஜன், மைசூர் அரசர்கள் அன்னையை பலவாறு துதித்தவர்கள். கவிராஜரகளான காளிதாசன், கம்பன், பாரதியார் போன்றோர்களும் அம்பிகையை போற்றி வணங்கியவர்கள். ஆகவே அன்னையை ராஜராஜ அர்ச்சிதா என்பது பல விதங்களிலும் சரியாகிறது.


ஒவ்வொரு ஸ்தலத்திற்கும் ஒரு தேவதை ப்ரத்யக்ஷமாக இருப்பது நாம் அறிந்ததே!. மதுரையென்றால் மீனாக்ஷி, ஸ்ரீரங்கம் என்றால் ஸ்ரீரங்க நாதன், திருவானைக்கா என்றால் ஜம்புகேஸ்வரன், திருமலையில் வேங்கடேஸ்வரன், குன்றங்களில் குமரன் என்பதாக அந்தந்த க்ஷேத்ரங்களுக்கு என்று குறிப்பிட்ட தெய்வங்கள் மக்களைக் காப்பதாக அர்த்தம். இவ்வாறான க்ஷேத்ரங்களையும், அந்த க்ஷேத்ரங்களில் அருளும் இறைவனை/இறைவியையும் காப்பவள் என்ற பொருளே "க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ பாலிநீ" என்பது. சாதாரணமாக வருஷோர்சவ கொடியேற்றத்திற்கு முன்பாக அந்த ஊர் காவல் தெய்வங்களுக்கு விழா எடுப்பது ஒரு மரபு. அவ்வாறான காவல் தெய்வமாக பல ஊர்களிலும் சக்தி வீற்றிருந்து முதல் விழாவை ஏற்கிறாள். இது தவிர இன்னொரு முறையிலும் இந்த நாமத்தை அணுகலாம். நமது உடலே இறை வசிக்கும் க்ஷேத்ரம், அதில் இருக்கும் ஆன்மாவே க்ஷேத்ரக்ஞன், ஆக நமது உடல் மற்றும் ஆன்மாவைக் காப்பவள் என்றும் ஆன்றோர்கள் கூறுகின்றனர்.





மேலே சொன்னதில் ஊர் காவல் தெய்வங்களாக இருக்கும் அன்னையைச் சொன்னோம், ஆனால் காவல் தெய்வங்களாக பெண் தெய்வங்கள் மட்டுமா இருக்கின்றன என்று பார்த்தால் இல்லை என்ற பதிலே வருகிறது. பல ஊர்களிலும் சாஸ்தா, ஐயனார், கருப்பண்ண ஸ்வாமி, சங்கிலிக் கருப்பு, முனீஸ்வரர் போன்றவர்கள் காவல் தெய்வங்களாக இருப்பதைக் காணலாம். இவர்களும் அன்னையை வணங்குபவர்கள் தான் என்பதையே "க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா" என்ற நாமம் கூறுகிறது. சிவன் கோவில்களில் இருக்கும் "பைரவரை க்ஷேத்ர பாலர்" என்றும்கூறுவர். பல கோவில்களில் இன்றும் அர்த்த ஜாம பூஜை முடிந்து கர்பகிரஹத்தைப் பூட்டி அதன் சாவியை க்ஷேத்ர பாலர் சன்னதிகளில் வைத்து விடுகிறார்கள். க்ஷேத்ரபாலரே கோவிலுக்கு காவல் புரிபவர் என்பதாகச் சொல்லப்படுவதால் இந்தச் செயல். சாக்த வழிபாட்டில் ஈடுபடும்மெய்யன்பர்களுக்கு க்ஷேத்ரபாலரே மெய்காவல் புரிவார் என்று சொல்வது வழக்கம். காளிகா புராணத்தில் அன்னை காளியை சாந்தப்படுத்த ஈசனே சிறு குழந்தையாக வந்து அவளது ஸ்தனங்களில் பானம் பண்ணியதால் க்ஷேத்ரபாலர் என்றானதாகச் சொல்லப்படுகிறது. இதை வைத்தே, அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்' என்று கூறுகிறார் பட்டர்.


மங்களாம்பிகை எல்லோருக்கும் மங்களம் அருளட்டும்.

அன்னையின் நாமங்கங்கள் தொடரும்...

2 comments:

Kavinaya said...

'க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ பாலிநீ' -க்கு நமஸ்காரங்கள்.

மிக்க நன்றி மௌலி.

குமரன் (Kumaran) said...

புவனேஸ்வரி மாதாவின் படம் மிக அருமை.

மிகவும் அருமையாக இருக்கிறது மௌலி. எழுதும் போது இருந்த மன நிலை எழுத்தில் மிகவும் நன்றாகத் தெரிகிறது. அபிராமி அந்தாதி வரிகளையும் சொல்லி வந்தது மிக அருமை.