Thursday, June 18, 2009

32 கேள்விகளும், எனது சுய புராணமும்.

சில நேரங்களில் நம்மை நோக்கி வரும் கேள்விகள், எதிர்பார்ப்புக்கள் நம்மை திகைக்க வைத்துவிடும். அதுபோன்ற ஒன்றே இந்த 32 கேள்விகள் என்று தோன்றுகிறது. அதிலும் இந்தத் தொடரில் என்னை இணைத்திட அழைத்தவர்கள் குமரன் மற்றும் கபீரன்பன். என்னையும் நினைவிலிருத்தி, இம்மாதிரியான தொடர்பில் இணையக் கேட்ட அவர்களுக்கு முதலில் நன்றி.

******************************************************************************

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்கள் பெயர் பிடிக்குமா?

சாதாரணமாக வீட்டுப் பெரியவர்களது பெயரை குழந்தைக்குச் சூட்டுவதை வழக்கமாகக் கொண்ட குடும்பத்தில் என் பெயர் சற்றே மாறுபாடானது தான். அன்னையின் கருவறையில் 8 மாதங்கள் முடிந்த நேரத்தில், அப்போது மதுரைக்கு வந்த பரமாசார்யார் என் தாய் தந்தையர் நமஸ்கரிக்கையில் ஆசிர்வாதம் செய்து புத்ரன் பிறப்பான், சந்திர மெளலி என்று பெயர் வைக்கச் சொன்னாராம் . அதனால் இந்தப் பெயர். சங்கராசார்ய சம்பந்தம் உள்ள பெயர் என்பது மட்டுமல்லாது, ஆசார்யாரே வைத்த பெயர் என்பதால் எனக்கு இந்தப் பெயரும் பூர்வ ஜென்ம பலனே என்று நினைப்பதுண்டு.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

சில மாதங்களுக்கு முன்னர் மிக அரிதான நட்பாக நான் நினைத்த ஒரு தொடர்பு பொய்த்துப் போன பொழுதில் மனத்தில் மிகுந்த பாரமும், வேதனையும் அடைந்தேன். யாராகிலும் நோயாலோ,மன வேதனையாலோ கஷ்டப்படுவதைப் பார்க்க நேர்ந்தால் எனக்கும் கண்கள் கலங்கிடவிடும்.

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

அவ்வளவாக அழகானது கிடையாது எனது கையெழுத்து, ஆனால் பிடிக்கவில்லை என்று பிரயாசை செய்து மாற்றிக் கொள்ள வேண்டிய அளவில் அசிங்கமாக இல்லாததால் அப்படியே விட்டாயிற்று.


4. பிடித்த மதிய உணவு என்ன?

சேப்பங்கிழங்கு/சிறுகிழங்கு ரோஸ்ட், மணத்தக்காளி கீரையை தேங்காய்+சீரகம் அரைத்து விட்டு மசியல், சுண்டைக்காய் வத்தல் குழம்பு, எலுமிச்சை ரசம், மோர்/தயிர் சாதத்திற்கு மாகாணிக் கிழங்கு போன்றவை முன்பு பிடித்த உணவு. கடந்த சில வருஷங்களாக உணவில் நாட்டம் இருப்பதில்லை, பசியெடுக்கும் போது வீட்டில் கொடுப்பதைச் சாப்பிடுவது என்ற பழக்கத்திற்கு வந்துவிட்டேன்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கண்டிப்பாக. நட்பில் தராதரம் பார்ப்பதில்லை.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

நான் ஒரு தீர்த்தக்-கரைப் பாவி. ஆமாம், எனக்கு நீச்சல் தெரியாது, ஆகவே கடல்/பெரிய நதி போன்றவற்றைப் பார்க்கையில் பயம் உண்டு. ஆனாலும் புண்ய நதிகளைக் காணும் போது விடாது கரையோரத்தில் நின்றுஅவசர-அவசரமாக மூழ்கி எழத் தவறுவதில்லை.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள் - அதுவே பேசும் வார்த்தைகளில் இருக்கும் உண்மையை சொல்லிவிடும் என்று நம்புகிறேன்.

8. உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்த விஷயம்: நேரிடையான சொல்/செயல்பாடுகள்.

பிடிக்காத விஷயம் : சட்டென வரும் கோபம் .

9. உங்க சரிபாதிகிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயம் எது?

அவர் ப்ளாக்கர் இல்லை, நான் இடும் இடுகைகளைபயும் படிப்பவரல்ல. ஆகவே இங்கு இல்லாத ஒருவரைப் பற்றி இங்கு எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன்.

10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்?

என் தந்தை...தந்தையாக மட்டுமல்லாது குரு, ஆசான் என்று பல விதங்களில் என்னைப் புடம் போட்டவர். கற்க அவரிடம் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும், சொல்லித்தர அவரில்லை என்பது அவ்வப்போது வருத்தம் தருகிறது.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

சிகப்பு கோடுகள் போட்ட நிற சட்டையும், வெள்ளை வேஷ்டியும்.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க?

"பராத்பரா பரமேஸ்வரா, பார்வதி பதே, பர-பசுபதே" என்னும் பகுளி ராகத்தில் அமைந்த தீக்ஷதர் க்ருதியை எம்.எஸ் அம்மா பாடுவதைக் கேட்டுக் கொண்டே இதை இதை எழுதுகிறேன்.


13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வண்ணமாக உங்களுக்கு ஆசை?

கருநீலம் என்றும் எனது பிடித்தமான கலர்.

14. பிடித்த மணம்?

பூஜை அறையில் பூஜையை முடித்து ஆபீஸ்/வெளியில் கிளம்புகையில் பூஜையறைக்குச் சென்று வணங்கிய பின்பே கிளம்புவது வழக்கம். அவ்வாறு செல்கையில் உணரும் கலவையான மணம். அரைத்த சந்தனம், சாம்பிராணி/பத்தி மற்றும் நறுமண மலர்கள் எல்லாவற்றிலிருந்தும் வரும் மணங்களின் கலவை.


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?


அன்பில் திளைக்க வைக்கும் சொற்களுக்குச் சொந்தக்காரர் திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள். பேசுவதிலேயே அஅன்பை வாரி-வழங்கிடும் பெருமாட்டி.

மரியாதைக்குரிய திரு திராச அவர்கள். இவர் பதிவுகள் போட்டு ரொம்ப நாட்களாயிற்று. இதனை வைத்தாவது ஆரம்பிக்கிறாரா என்று பார்க்கலாம்.

திவாண்ணா என்று நான் அழைக்கும், பெருமதிப்பிற்கும், அன்புக்கும் உரிய மருத்துவர் தி.வாசுதேவன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

இத்தொடருக்கான அழைப்பை எனக்கு குமரன் மற்றும் கபீரன்பன் அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய வரிசையிலேயே இந்த கேள்விக்கான பதிலையும் சொல்லிவிடுகிறேன்.

கடந்த 2.5 வருடங்களாக குமரன் எழுதும் எல்லா இடுகைகளையும் படித்து வருகிறேன். குறிப்பாகச் சொல்ல வேண்டுமாயின் கஷ்டமே!. ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல. நான் மிக ரசித்தது என்றால் அவர் கூடலில் எழுதிய "புல்லாகிப் பூண்டாகி" கதையும், கோதைத் தமிழ் வலைப்பூவும்.

கபீரன்பன் அவர்களும் என்னை இந்த தொடருக்கு அழைத்ததால் அவரது இடுகைகளையும் சொல்லிவிடுகிறேன். கபீரன்பன் அவர்கள் எழுதிய எழுதிவரும் கபீர்தாஸ் தோஹா தொடர்கள் மிகவும் விரும்பிப் படிக்கும் ஒன்று. ஒவ்வொரு இடுகையிலும் எடுத்துக் கொள்ளும் தோஹாவுக்குத் தொடர்பான உதாரணங்கள் மற்றும் மற்ற விளக்கங்கள் எப்போதும் வியக்கச் செய்வன.

17. பிடித்த விளையாட்டு:

பெரிதாக ஏதுமில்லை

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம், கண் விழித்திருக்கும் முழுநேரமும் கண்ணாடியுடனேயே!. சமீபத்தில் கண் மருத்துவர் லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாமே என்ற போதும் எனக்கு எனது கவசங்களான கண்ணாடியை இழக்க மனமில்லாததால் வேண்டாமென்று மறுக்குமளவுக்கு இது என் வாழ்வில் ஒன்றாகிவிட்ட ஒன்று.

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

லாரல் அண்ட் ஹார்டி,சார்லி சாப்ளீன் படங்கள், சந்திர பாபு நடித்த படங்கள் மற்றும் கார்டூன்கள்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

அயன் - 5-6 வருடங்கள் கழித்து தியேட்டருக்குச் சென்று பார்த்த படம் இதுதான்.

21. பிடித்த பருவகாலம் எது?

வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

செளந்தர்ய லஹரி முடிந்த பின்னர், சிவானந்த லஹரீ ஸ்லோகங்களுக்கும் பொருள் எழுதவேண்டும் என்று தோன்றியது. அதற்காக மீண்டும் மீண்டும் அதைப் படித்துப் புரிந்து கொள்ளும் முயற்சியில் இருக்கிறேன். சமீபத்தில் திரு சுந்தரண்ணா அளித்த தேசிகர் அருளிய ஸ்லோகங்கள் அடங்கிய புத்தகத்தையும் அவ்வப்போது படித்துப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மிக அரிதாகவே, மாதக்கணக்கில் அது அப்படியே இருக்கும். அவ்வாறு மாற்றினாலும் மாதங்கியே மீண்டும் வேறு ஒரு உடையில் வருவாள் :)

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது : என் அலுவலகத்தில் எனது அறைக்குப் பின்னால் உட்கார்ந்து கத்தும் குருவி மற்றும் அணில்களின் சப்தம். இவற்றை ஈர்ப்பதற்காக வீட்டிலிருந்து அரிசி, மற்றும் பழங்கள் கொண்டுவந்து ஜன்னல் சுவற்றில் வைத்து வருகிறேன்.

பிடிக்காதது : டிராபிக் ஜாமில் கேட்கும் பல ஹாரன்களது சேர்ந்த சப்தம்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?சால்ட் லேக் சிட்டி, அமெரிக்கா - அமெரிக்காவின் மற்ற இடங்கள் இதை விடக் குறைந்த தொலைவு என்றே நினைக்கிறேன்.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

அப்படி ஏதும் இருக்கறதாகத் தெரியல்லையே?. சுலபமாக ஏமாறுவது ஒரு திறமையாக இருப்பின் அது இருக்கிறது அளவுக்கதிகமாகவே!.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பிறரது மனதை வருத்துவது.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அவ்வப்போது புகையிலை/ஜர்தா பீடா போட்டச் சொல்லும் எண்ணம்.

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?

சுற்றுலாத் தலம் என்று இல்லாவிடினும் எனது பூர்வீகர்கள் வசித்த சின்னமன்னூர் (கம்பம்- தேனி அருகில்).ஆஸ்டிரேலியா நான் போகாத ஒரு கண்டம், அதனால் மட்டுமல்லாது கங்காரு மீது ஒரு காதல், ஆகவே அங்கு செல்ல விருப்பம் இருந்தது சில-பல வருஷங்கள் முன்பு. பசுமையான வயல்வெளிகளுக்கு இடையில் இருக்கும் புராதனக் கோவில்கள், அதிலும் விழா இல்லாத காலங்களில்.

30. எப்படி இருக்கணும்ன்னு ஆசை?

வேதம் பயின்று (குறிப்பாக சுக்ல யஜுர்வேதம்), அதன் வழி வாழ ஆசை

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.

சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!

33 comments:

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மௌலி என்னையும் அழைக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியதே!!
ரொம்ப நன்றி. எட்டு,ஆறு என்று எல்லாவற்றையும் தாண்டி வந்த பிறகு ,இதென்ன 32 !! என்று வியந்து வந்தேன். கடைசியில் என்னையே சங்கிலியில் கோர்த்துவிட்டீர்கள்.

உங்களது பூர்ண்மான பக்தியைத் தவிர வேறு ஏதும் உங்களைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை.

உங்களைப் படித்துவிட்டு , இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறேன்.
ஓகேயா.
அன்னை அருள் நிலைக்கட்டும்.

கவிநயா said...

//நேரிடையான சொல்/செயல்பாடுகள்//

பதில்களும் அப்படியே. வாழ்த்துகள் மௌலி.

நான் கூப்பிட நினைச்சவங்களையெல்லாம் நீங்க கூப்பிட்டுட்டீங்க :)

Raghav said...

மெளலிண்ணா.. இந்த தொடரை ஆரம்பித்தவரை பாராட்டியே ஆக வேண்டும். அதிகநாள் பழகியும் தெரியாத விஷயங்களை வெளிக் கொண்டு வர உதவும் பதிவு. பரமாச்சார்யாரால் பிறக்கும் முன்னரே பெயர் சூட்டப்பட்டது எவ்வளவு சிறப்பு.

Raghav said...

//உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அவ்வப்போது புகையிலை/ஜர்தா பீடா போட்டச் சொல்லும் எண்ணம்//

கூடிய சீக்கிரம் இந்த சாத்தான் உங்களை விட்டு ஒழியணும்னு பரமாச்சார்யரை வேண்டிக்கிறேன்.

மதுரையம்பதி said...

வாருங்கள் வல்லியம்மா. உங்களது அனுபவங்கள் பலவற்றைப் படித்தவன் என்கிற முறையில், நீங்கள் இந்தக் கேள்விகளுக்கு அழகாக பதிலளிப்பீர்கள் என்று தெரியும்.

என்னிடம் ஏதும் ஸ்பெஷலாகத் தெரிந்து கொள்ள இல்லையம்மா. எல்லோரும் போல ஒரு சராசரி நபர் அம்புட்டுத்தான்.

படிச்சுட்டு, நிதானமா உங்கள் பாணியில் பதில் எழுதுங்கள். :)

மதுரையம்பதி said...

வாங்க கவிக்கா. நன்றி.

நீங்கள் எப்போதும் எதிர்ப்புக்காட்டும் பான்/பீடா வகையையும் சொல்லிட்டேன். அதை எழுதுகையில் நீங்க பின்னூட்டத்தில் ஏதாவது சொல்வீங்கன்னு பார்த்தேன்...:)

மதுரையம்பதி said...

வாங்க ராகவ்.

//பரமாச்சார்யாரால் பிறக்கும் முன்னரே பெயர் சூட்டப்பட்டது எவ்வளவு சிறப்பு.//

அந்தச் சிறப்புக்கு உரியவனாகிட, அந்தச் சிறப்பைக் கட்டிக்காக்க...என்னால் முழுதாக முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.

கவிநயா said...

//நீங்கள் எப்போதும் எதிர்ப்புக்காட்டும் பான்/பீடா வகையையும் சொல்லிட்டேன். அதை எழுதுகையில் நீங்க பின்னூட்டத்தில் ஏதாவது சொல்வீங்கன்னு பார்த்தேன்...:)//

'நேரிடையான பதில்கள்' னு சொன்னதில் அதுவும் அடக்கம் :) சீக்கிரம் சாத்தானிடமிருந்து விடுதலை கிடைக்கட்டும் :)

குமரன் (Kumaran) said...

ஆசாரியரின் திருவாக்கினால் வைக்கப்பட்டப் பெயரா? இனிமேல் மௌலி என்று மட்டும் அழைப்பதை விட்டுவிட்டு சந்திரமௌலி என்று முழுப்பெயரையும் சொல்லி அழைக்கப் போகிறேன். அது தான் சரி என்று தோன்றுகிறது. :-)

எனக்கும் நீச்சல் தெரியாது. ஆனால் கடலிலோ அருவியிலோ குளிக்க நீச்சல் தெரியவேண்டியதில்லையே. ஆற்றில் என்றால் தான் அடித்துக் கொண்டு போய்விடும் என்று பயம் இருக்கும். அங்கேயும் குளத்திலும் கரையோரமாக முங்கி எழ வேண்டியது தான். :-)

கடந்த 2 1/2 வருடங்களாக அனைத்து இடுகைகளையும் படித்து வருவதற்கு ரொம்ப நன்றி சந்திரமௌலி. ரொம்ப தான் பொறுமை உங்களுக்கு. :-) எனக்கும் 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதையும் கோதைத் தமிழ் வலைப்பதிவும் ரொம்ப பிடிக்கும். எனது எழுத்தின் முகடுகள் கோதைத் தமிழ் வலைப்பதிவில் இருக்கும் இடுகைகள் என்று எண்ணுவதுண்டு. முழு ஈடுபாட்டுடன் எழுதப்பட்டவை அவை. அதில் எழுதி 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. (அப்படியென்றால் இப்பொழுது எழுதுபவை முழு ஈடுபாடு இல்லாமல் எழுதுபவையா என்று கேட்காதீர்கள். உண்மையைச் சொல்ல வேண்டி வரும். :-) )

கபீரன்பன் எழுதும் இடுகைகளைக் கண்டு மிகவும் வியப்பதுண்டு. மிகப் பொருத்தமான மிக ஆழமான கதைகளையும் கருத்துகளையும் கபீர்தாசரின் தோஹாக்களுடன் இணைத்து அருமையாக எழுதுகிறார்.

எனக்கு கண்ணாடி அணிவதும் தொடுஆடி அணிவதும் வெறுத்துப் போய்விட்டன. அதனால் ஒளிக்கற்றை மருத்துவம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். என் மருத்துவர் $2000 ஆகும் என்று சொல்கிறார். அங்கே எவ்வளவு ஆகிறது சந்திரமௌலி? குறைவாக இருந்தால் அங்கேயே வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

ஓ நீங்க சின்னமனூர் ஜமீனா? :-) இந்த 'சின்னமனூர் ஜமீன்'ங்கற தொடரை நிறைய தடவை கேட்டிருக்கேன். இப்பத் தான் தெரியும் அது கம்பம் தேனி பக்கமா இருக்குன்னு. :-)

அதென்ன சுக்ல யஜுர் வேதம் படிக்க ஆசை? தென்னாட்டில் நிறைய பேர் கிருஷ்ண யஜுர் வேதிகள் தான் என்று கேள்விபட்டிருக்கிறேன். எங்கள் குடும்பமும் கிருஷ்ணயஜுர்வேதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்; வேதம் படித்தவரைத் தான் சுற்றத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன்; யாரையும் காணோம் - மூன்று நான்கு தலைமுறைகளாக. :-)

ஷைலஜா said...

மௌலி!
இயல்பான உங்க பதில்கள் மனசை ஈர்க்கிறது.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அடச்சே! இன்னுமா அந்த வாயில் போட்டுக் குதப்பித் துப்புற பழக்கத்தை விடல நீங்க? காரில் பாதி நேரம் குதப்பிக்கிட்டே தானே வந்தீங்க? பெட்ரோல் போட நிறுத்தினோமோ இல்லையோ, பொட்டிக் கடை பொட்டிக் கடையா நிறுத்தினோம், அதுவும் சிற்றஞ் சிறு காலே! பாவம் அந்த ஓட்டுநர்! :)

நான் சொல்லித் தானே கேட்கலை, அட்லீஸ்ட் என்னைய விட நல்லவங்களான கவிக்கா சொல்லியாச்சும் கேளுங்க!
இல்லீன்னா ஒவ்வொரு பதிவிலும் நிறைய டெக்னிக்கல் கொஸ்டின் கேப்பேன்-ன்னு மட்டும் இங்கிட்டு பணிவோடு சொல்லிக்கறேன்! :))

//சில மாதங்களுக்கு முன்னர் மிக அரிதான நட்பாக நான் நினைத்த ஒரு தொடர்பு பொய்த்துப் போன பொழுதில்//

:)
நண்பர்கள் பொய்க்கலாம்!
ஆனால் நட்பு பொய்க்காது!

அது பின்னூட்டம் போட்டுக் கொண்டும் கேள்வி கேட்டுக் கொண்டும் தான் இருக்கும்! :)
நகுதற் பொருட்டு அன்று நட்டல்! மிகுதிக் கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சந்திர மெளலி என்று பெயர் வைக்கச் சொன்னாராம்//

இதை முன்னாடியே சொல்லி இருக்கீங்களே!
ஒரு நாள் கூட தவறாமல், காமகோடி ஆராதனா மூர்த்தியான சந்திர மெளலீஸ்வர பூஜை நடப்பதே மிகுந்த சிறப்பல்லவா? அந்தச் சிறப்பைத் தாங்கி நிற்பதும் ஒரு சிறப்பு தான்!

கேள்வி: காமகோடி சந்திரமெளலி உடனுறை அம்பாளின் திருநாமம் என்ன?

//மோர்/தயிர் சாதத்திற்கு மாகாணிக் கிழங்கு//

மாகாணிக் கிழங்கா? அப்படின்னா? :)

//நான் ஒரு தீர்த்தக்-கரைப் பாவி//

தெரியும்! தெரியும்! அதான் தீர்த்த சம்மேளனம் ஃபோட்டோவை ஆர்க்குட்-ல பார்த்தேனே! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆகவே இங்கு இல்லாத ஒருவரைப் பற்றி இங்கு எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன்//

ஹிஹி! அண்ணி கிட்ட அந்தப் பயம் இருக்கட்டும்! :)
அட, பதிவில் குறிப்பட்ட இன்னும் சிலர் கூடத் தான் இங்கு இல்லை! ஆனாலும் குறிப்பிடலையா? சும்மாச் சொல்லுங்கண்ணே! அண்ணி கிட்ட பிடிச்ச விஷயம் மட்டும் சொல்லுங்க! போதும்! :)

//கருநீலம் என்றும் எனது பிடித்தமான கலர்//

இப்படி எல்லாம் என்னைப் பார்த்து காப்பியடித்தால் எப்படி? :)

//லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாமே என்ற போதும்//

வேண்டாம்! 90% கேஸ்கள் கண்ணெரிச்சல் மற்றும் புத்தகம் படிக்கக் கண்ணாடி போட வேண்டி வரும் கால கட்டத்தில், இதனால் இன்னும் சிரமம் ஆவதாக பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்! மருத்துவரான தங்கையும் சொல்லுவா!
சின்னஞ் சிறு பசங்க-ன்னா லேசர் ஓக்கே! நீங்க? :))

//மாதங்கியே மீண்டும் வேறு ஒரு உடையில் வருவாள் :)//

எந்த மாதங்கியைச் சொல்லுறீங்க? ஆனா ரெண்டு பேருமே ஒரே மாதங்கி தான்! ஸோ கேள்வி வாபஸ் வாங்கிக்குறேன்! :)

//இவற்றை ஈர்ப்பதற்காக வீட்டிலிருந்து அரிசி, மற்றும் பழங்கள் கொண்டுவந்து ஜன்னல் சுவற்றில் வைத்து வருகிறேன்//

குட்!

//வேதம் பயின்று (குறிப்பாக சுக்ல யஜுர்வேதம்), அதன் வழி வாழ ஆசை//

ததாஸ்து!
அப்படியே ஆகட்டும்!
வேத சிகரோ ஜ்வல பாரிஜாதமான எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் அப்படியே அருள்வானாக!

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ்.

//அது பின்னூட்டம் போட்டுக் கொண்டும் கேள்வி கேட்டுக் கொண்டும் தான் இருக்கும்! :)//


நீங்களாக ஏதோ கற்பனையில் சிலவற்றைச் சொல்லியிருக்கீங்க. அதை அப்படியே விட்டுவிடுகிறேன்.

//காமகோடி சந்திரமெளலி உடனுறை அம்பாளின் திருநாமம் என்ன?//

காமகோடி மடத்தில் திரிபுரசுந்தரி;

மாகாணி என்பது ஒருவிதமான வேர்தான். மோரில் இட்டு ஊறுகாய் செய்வார்கள்.

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி ஷைல்ஸக்கா.

Anonymous said...

//கேள்வி: காமகோடி சந்திரமெளலி உடனுறை அம்பாளின் திருநாமம் என்ன?//

Thripurasundhari sameetha sri chandhramovlishvaraya namaha:

Thambi

மதுரையம்பதி said...

வாருங்கள் குமரன்.

//ஆசாரியரின் திருவாக்கினால் வைக்கப்பட்டப் பெயரா? இனிமேல் மௌலி என்று மட்டும் அழைப்பதை விட்டுவிட்டு சந்திரமௌலி என்று முழுப்பெயரையும் சொல்லி அழைக்கப் போகிறேன். அது தான் சரி என்று தோன்றுகிறது.//

ஆமாம் குமரன், அவரால் பிறக்கும் முன்பு கூறப்பட்டது. இதை நான் அவ்வளவாக யாரிடமும் கூறியாதில்லை. ஆனால் இந்தத் தொடரில் முதல் கேள்வியாக வந்துவிட்டது. மறைக்க முடியவில்லை.

//எனக்கும் நீச்சல் தெரியாது. ஆனால் கடலிலோ அருவியிலோ குளிக்க நீச்சல் தெரியவேண்டியதில்லையே.//

ஹைட்ரோ ஃபோபியா தான் காரணம் என்று தோன்றுகிறது.

//(அப்படியென்றால் இப்பொழுது எழுதுபவை முழு ஈடுபாடு இல்லாமல் எழுதுபவையா என்று கேட்காதீர்கள். உண்மையைச் சொல்ல வேண்டி வரும். //

ஹிஹிஹி

//கபீரன்பன் எழுதும் இடுகைகளைக் கண்டு மிகவும் வியப்பதுண்டு. மிகப் பொருத்தமான மிக ஆழமான கதைகளையும் கருத்துகளையும் கபீர்தாசரின் தோஹாக்களுடன் இணைத்து அருமையாக எழுதுகிறார்.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

//என் மருத்துவர் $2000 ஆகும் என்று சொல்கிறார். அங்கே எவ்வளவு ஆகிறது சந்திரமௌலி? குறைவாக இருந்தால் அங்கேயே வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். //

இங்கு அவ்வளவெல்லாம் இல்லை குமரன். 7-8 ஆயிரத்தில் நல்ல மருத்துவ மனைகளில் செய்கிறார்கள்.
செய்து கொள்ளும் முன்பு கே.ஆர்.எஸ் சொல்லியிருப்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

//ஓ நீங்க சின்னமனூர் ஜமீனா? :-) இந்த 'சின்னமனூர் ஜமீன்'ங்கற தொடரை நிறைய தடவை கேட்டிருக்கேன்.//

ஜமீனும் இல்லை விரால் மீனுமில்லை :).
இன்றைய தேதியில் அங்கு ஒரு 10x10 இடம் கூடக் கிடையாது. கடந்த 30 வருடங்கள் முன்பு இருந்த சில ஏக்கர் நிலங்களையும் விற்றுவிட்டார்கள் :(

//அதென்ன சுக்ல யஜுர் வேதம் படிக்க ஆசை? தென்னாட்டில் நிறைய பேர் கிருஷ்ண யஜுர் வேதிகள் தான் என்று கேள்விபட்டிருக்கிறேன்.//

எனது மூதாதயர்கள் சுக்ல யஜுர் வேத அத்யயனம் செய்தவர்கள். எனது பாட்டனார் வரை. வேதாப்யாசம் செய்ய ஆரம்பிக்கையில் முதலில் அவரவருக்கானதையே செய்யவேண்டும். அதில் முழுமை பெற்ற பிறகே மற்றவற்றுக்குச் செல்ல வேண்டும் என்பர், அதனால் தான் குறிப்பாக அதைச் சொன்னேன்.

மதுரையம்பதி said...

//'நேரிடையான பதில்கள்' னு சொன்னதில் அதுவும் அடக்கம் :) சீக்கிரம் சாத்தானிடமிருந்து விடுதலை கிடைக்கட்டும் :)//


ஹிஹி...நன்றிக்கா...

KABEER ANBAN said...

//எனக்கு இந்தப் பெயரும் பூர்வ ஜென்ம பலனே என்று நினைப்பதுண்டு//

அந்த பெயரை வாய்விட்டு சொல்ல வைப்ப‌தால் இன்னும் எத்தனை பேர் பாவங்களை கரைப்பதற்கு திருவுள்ளம் கொண்டதோ அந்த மகாத்மா.
அவரருள் என்றும் துணை இருக்கும்

//அவர் ப்ளாக்கர் இல்லை, நான் இடும் இடுகைகளைபயும் படிப்பவரல்ல.//

அதே அதே :)))
வாழ்த்துகள்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

////காமகோடி சந்திரமெளலி உடனுறை அம்பாளின் திருநாமம் என்ன?//

காமகோடி மடத்தில் திரிபுரசுந்தரி;//

அடியேன் மதுரையம்பதியில் கேட்கும் கேள்விகளுக்கு, வெறுமனே "வருகைக்கு நன்றி"-ன்னு கூறாமல், பல நாள் கழித்து, பதில் சொல்லியமைக்கு, அடியேனின் அனந்த கோடி நன்றிகள்-ண்ணா! :)

திரிபுரசுந்தர்யாம்பிகா சமேத சந்த்ரமெளலீஸ்வர ஸ்வாமி திருவடிகளே சரணம்!

sury said...

நண்பர் ஜீவா அவர்களின் பதிவில் ஹ்யுமிலிடி எனும் சொல்லுக்கு அடக்கம் எனவும்
வி நயம் எனவும் பணிவு எனவும் பல்வேறாகப் பொருள் சொல்கையில் விநயத்துக்கு
உதாரணமாக யார் இருப்பார் என நினைத்துக்கொண்டிருந்தேன்.

தங்களது 32 கேள்வி பதில்களையும் பார்த்தபின் தாங்களே விநயத்தின் உருவமெனத்
திகழ்கிறது. பரமாசார்யாரால் பெயர் வைக்கப்பட்டவரா தாங்கள் !! கொடுத்துவைத்தவர்கள் நீங்கள்.
பரமாசார்யார் அருள் கிடைத்த ஒருவர் வேறு எவ்வாறு இருக்க இயலும் !!

திவா அவர்களை நான் அழைத்து எனது பதிவில் போட்ட அதே தருணத்தில் நீங்களும்
அழைத்திருக்கிறீர்க‌ள். ஒரே முகூர்த்த‌ நேர‌ம். இர‌ண்டு ந‌ண்ப‌ர் வீட்டிற்கும் செல்ல‌வேண்டுமே !!
திவா ஸார் என்ன‌ செய்ய‌ப்போகிறாரோ ! இர‌ண்டு நிக‌ழ்ச்சிக‌ளுக்கும் வ‌ருவாரென‌வே
நினைக்கிறேன்.

த‌ங்க‌ள் ப‌தில்க‌ளைக் க‌ண்ட‌பின் என‌து ப‌தில்க‌ள் " கான‌ ம‌யிலாட‌க் க‌ண்டிரு ந்த‌ வான்கோழி
தானும் அதுவாக‌ப் பாவித்துத் த‌ன் பொல்லாச்சிற‌கை அவிழ்த்தாடினாற் போலுமே க‌ல்லாதான்
க‌ற்ற‌ க‌வி" என்ப‌து போல் தான் இருக்கின்ற‌ன‌.

நிற்க. வித்யா ததாதி வி ந்யம் எனும் சுபாஷிதானியில் இரண்டு த வுமே மூன்றாவது
எழுத்து த வரிசையில். இரண்டாவதாக வரும் தா, அந்த வரிசையில் மூன்றாவது த ஆக‌
இல்லாது நான்காவதாக வரும்பொழுது ததாதி என்னும் சொல்லுக்குப் பொருள் வேறு படும்
என்று என் நண்பர் ஒருவர் கூறுகிறார்.

அது சரிதானா ? ச்ர‌ம‌த்திற்கு ம‌ன்னிக்க‌வும்.


பின் குறிப்பு: த‌மிழ் நாட்டில் பொதுவாக‌ எல்லோருமே க்ருஷ்ண‌ ப‌க்ஷ‌ ய‌ஜுர்வேதி ஆக‌வே
இருக்கின்ற‌ன‌ர். 1984ல் ஸ்ருங்கேரிக்குச் சென்ற‌பொழுது அங்கு ருத்ர‌ம் ச‌ம‌க‌ம் நானும்
ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் சேர் ந்து சொன்னேன். ஆனாலும் அவ‌ர்க‌ளுடன் சேர‌ இய‌ல‌வில்லை
ப‌ல்வேறு இட‌ங்க‌ளில். முடி ந்த‌பின், ப‌க்க‌த்தில் இரு ந்த‌ ஒருவ‌ர் என்னிட‌ம் கேட்டார்.
நீங்க‌ள் ய‌ஜுர்வேத‌த்தில் என்ன ப‌க்ஷ‌ம். (கிட்ட‌த்த‌ட்ட‌ இது தொனிக்கும் க‌ன்ன‌ட‌த்தில் கேட்டார்.)
அது என்ன‌ ப‌க்ஷ‌ம் ! என‌க்குப் புரிய‌வில்லை. த‌ஞ்சைக்குத் திரும்பி வ‌ரும்பொழுது கேட்ட‌பொழுது
தான் தெரி ந்த‌து. அவ‌ர் என‌து ருத்ர‌ம் சொல்லும் இன்டொனேஷ‌ன்ஸ் கேட்டு அவ்வாறு
வின‌வினார் என‌வும் புரி ந்த‌து.
என‌க்கு த்தெரி ந்த‌ அள‌வில் ப்ருஹ‌த் எனும் சொல்லும் ஒலியும் சுக்ல‌ ய‌ஜுர்வேத‌த்தில்
இர‌ண்டு சாகைக‌ள் காண்வ‌ ம‌ற்றும் மாத்யாம்பின‌ என‌ப்ப‌டுகின்ற‌ன‌. ச‌த‌ப‌த் ப்ராம்ஹ‌ண‌ம் எனும்
க‌டைசி 6 அதிகார‌ங்க‌ள் ப்ரும்ம‌ வித்தையில் இருக்கிற‌தாம். தைத்ரீய‌ உப‌னிஷ‌த் க்ருஷ்ண‌
ய‌ஜுர்வேத‌மாம்.
த‌ங்க‌ள‌து விள‌க்க‌ம் விழைகிறேன்.

சுப்பு ர‌த்தின‌ ச‌ர்மா.
http://arthamullavalaipathivugal.blogspot.com

மதுரையம்பதி said...

வாங்க கபீரன்பன் சார்

//அந்த பெயரை வாய்விட்டு சொல்ல வைப்ப‌தால் இன்னும் எத்தனை பேர் பாவங்களை கரைப்பதற்கு திருவுள்ளம் கொண்டதோ அந்த மகாத்மா. //

மிகச்சரியாகச் சொன்னீர்கள்

//அவரருள் என்றும் துணை இருக்கும்//

என்றும் வேண்டும் அவரருள்...

மதுரையம்பதி said...

வாங்க சூரி சார்.

//தங்களது 32 கேள்வி பதில்களையும் பார்த்தபின் தாங்களே விநயத்தின் உருவமெனத் திகழ்கிறது.//

ரொம்ப உயர்த்துகிறீர்கள். பலரும் என்னை வித்யா கர்வீ அப்படின்னு எல்லாம் சொல்லி ஏசிவருவதைப் படித்ததில்லை போலும் :)

//ஒரே முகூர்த்த‌ நேர‌ம். இர‌ண்டு ந‌ண்ப‌ர் வீட்டிற்கும் செல்ல‌வேண்டுமே !!
திவா ஸார் என்ன‌ செய்ய‌ப்போகிறாரோ ! இர‌ண்டு நிக‌ழ்ச்சிக‌ளுக்கும் வ‌ருவாரென‌வே
நினைக்கிறேன்.//

நா ம் இருவரும் கூப்பிட்டதால் தான் அவர் சத்தமின்றி இருக்கார் போல :)

// கான‌ ம‌யிலாட‌க் க‌ண்டிரு ந்த‌ வான்கோழி
தானும் அதுவாக‌ப் பாவித்துத் த‌ன் பொல்லாச்சிற‌கை அவிழ்த்தாடினாற் போலுமே க‌ல்லாதான்
க‌ற்ற‌ க‌வி" என்ப‌து போல் தான் இருக்கின்ற‌ன‌.//

கண்டிப்பாக இருக்காது...உங்கள் வயதும், அனுபவமும் மிகப் பெரியது...இவ்விரண்டின் ஆற்றலை அறிவேன்.

நான் இன்னும் உங்க இடுகைஇயைல் படிக்கல்லை, ஆனாலும் உங்கள் அனுபவம், சொல்லும் முறை எப்போதும் அருமையானது. சற்றுநேரம் கழித்து வந்து படிக்கிறேன்.

மதுரையம்பதி said...

//இரண்டு த வுமே மூன்றாவது
எழுத்து த வரிசையில். இரண்டாவதாக வரும் தா, அந்த வரிசையில் மூன்றாவது த ஆக‌
இல்லாது நான்காவதாக வரும்பொழுது ததாதி என்னும் சொல்லுக்குப் பொருள் வேறு படும்//

ஆமாம் என்றே தோன்றுகிறது. ஆனாம் மாறிவந்தால் அதன் பொருள் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. தேடிப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன் ஐயா!

மதுரையம்பதி said...

சுக்ல யஜுர், க்ருஷ்ண யஜுர் என்னும் வேறுபாட்டால் சிருங்கேரி மடத்தில் சொல்ல இயலவில்லை என்பது எனக்குச் சரியாக விளங்கவில்லை. நான் ருத்ரம் கற்ற ஆசான் சுக்ல யஜுர் வேதிதான், ஆனால் என்னால் ஸ்ரீ மடத்தில் அவர்களுடன் சொல்ல முடிந்ததே. சிலரது வழக்கம் சந்தை பிரித்துச் சொல்லும் போது கொஞ்சம் நிரடும்...மற்றும் வட-இந்தியர்களும் கொஞ்சம் மாறுபாடு தெரியும்.

//என‌க்கு த்தெரி ந்த‌ அள‌வில் ப்ருஹ‌த் எனும் சொல்லும் ஒலியும் சுக்ல‌ ய‌ஜுர்வேத‌த்தில்
இர‌ண்டு சாகைக‌ள் காண்வ‌ ம‌ற்றும் மாத்யாம்பின‌ என‌ப்ப‌டுகின்ற‌ன‌. ச‌த‌ப‌த் ப்ராம்ஹ‌ண‌ம் எனும்
க‌டைசி 6 அதிகார‌ங்க‌ள் ப்ரும்ம‌ வித்தையில் இருக்கிற‌தாம். தைத்ரீய‌ உப‌னிஷ‌த் க்ருஷ்ண‌
ய‌ஜுர்வேத‌மாம்.//

திவாண்ணாவிடம் கேட்டுச் சொல்கிறேன். எனக்குத் தெரியவில்லை.

sury said...
This comment has been removed by the author.
sury said...

அது சரி, அப்படி ஒரு சத்சங்கம் இருக்கிறதா !

ஏன் இல்லை !

உங்கள் பதிவுக்கு வருவதே அதற்குத்தானே !

சுப்பு ரத்தினம்.

மதுரையம்பதி said...

சூரி சார், நீங்களே உங்கள் பின்னூட்டத்தை டெலிட் பண்ணிவிட்டீர்களா என்ன?.
அப்படி ஏதும் நீங்கள் எழுதிவிடவில்லையே?.

நேற்று சென்னையில் இருந்தேன், ஆகவே பதிலளிக்க இயலவில்லை. இன்று பார்த்தால் பின்னூட்டம் டெலிட் ஆகியிருக்கிறதே?.

உங்களுக்கு ஆக்ஷேபணை இல்லையென்றால் அதுவும் இங்கு இருக்கவே நான் விரும்புகிறேன் :)

sury said...

என்னுடைய பின்னூட்டத்திற்கு ஒரு அட்டேச்மென்ட் செய்யவேண்டுமென நினைத்துத் தவறுதலாக‌
ஒரு வீடு போன்ற தோற்ற முடைய பட்டன் வந்தது. அதை ப்ரெஸ் செய்ததால் டெலிட் ஆகிவிட்டது.
ஷியர் ஆக்ஸிடன்ட். நாட் அட் ஆல் இன்டன்ஷனல்.
அதற்கு நகல் வைத்துக்கொள்ளாததால், திரும்பவும் அதை பதிவிட முடியவில்லை. அது உங்களிடம்
இருக்குமானால் பதிவிடலாம். எந்த வித ஆக்ஷேபணையுமில்லை.

மற்றபடி, த்விஜன் ஒருவனுக்கு விதிக்கப்பட்ட வேத விதி முறைகள் பிரமிக்க வைக்கின்றன. லெளகீக வாழ்க்கையில்
ஒருவர் அவற்றினை எல்லாம் செய்வோம் என்று ஆசைப்படுவது கூட ஈச்வர சங்கல்பம்.

சுப்பு ரத்தினம்.

Kailashi said...

//அதனால் இந்தப் பெயர். சங்கராசார்ய சம்பந்தம் உள்ள பெயர் என்பது மட்டுமல்லாது, ஆசார்யாரே வைத்த பெயர் என்பதால் எனக்கு இந்தப் பெயரும் பூர்வ ஜென்ம பலனே என்று நினைப்பதுண்டு.//

உண்மை, உண்மை

//பூஜை அறையில் பூஜையை முடித்து ஆபீஸ்/வெளியில் கிளம்புகையில் பூஜையறைக்குச் சென்று வணங்கிய பின்பே கிளம்புவது வழக்கம். அவ்வாறு செல்கையில் உணரும் கலவையான மணம். அரைத்த சந்தனம், சாம்பிராணி/பத்தி மற்றும் நறுமண மலர்கள் எல்லாவற்றிலிருந்தும் வரும் மணங்களின் கலவை.//

அருமை அருமை

//சிவானந்த லஹரீ ஸ்லோகங்களுக்கும் பொருள் எழுதவேண்டும் என்று தோன்றியது.//

வரணும், வரணும்

திவா said...

இது சூரி சார் பதிவிலே இட்டது....
---
நேரம் இல்லைன்னு சொல்லி மௌலிகிட்டேந்து தப்பிக்கப்பாத்தா நீங்க வேற கூப்படறீங்களே!ஹ்ம்! வேற வழியில்லை. இனியும் போடாட்டா அது உங்ககிட்ட வெச்சு இருக்கிற மதிப்புக்கு பொருந்தாது.
அது சரி எங்கே போடலாம்? ஆன்மீகம்? சரி வராது. சித்திரம்...ம்ஹூம். ஆ! கதை கதையாம்ல போடலாமா? செய்யப்போறது அதுதானே?
---

திவா said...

ததா3மி = கொடுக்கிறேன்
ததா4மி = நிலை நிறுத்துகிறேன்.
ருத்திரத்தில் ஜம்பே ததாமி வருது இல்லை? அது பின்னால் சொன்னது.
சூரி சார் மத்ததெல்லாம் சரியாதான் சொல்லி இருக்கார். மந்திரங்கள்கிருஷ்ண ய்ஜுர்- சுக்ல யஜுர் -- ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்தாலும் சொல்லுகிற விதம் வேறு படுகிறது.

திவா said...

http://kathaikathaiyaam.blogspot.com/2009/06/32.html