Saturday, June 6, 2009

பரமாசார்யார் ஜெயந்தி

நமது பஞ்சாங்க முறையில் சாந்திரமானம், செளரமானம் என்று இருவிதங்கள் இருப்பதும், அவற்றின்படி வருஷத்திய விழாக்கள் சற்றே முன்-பின்னாக கொண்டாடப்படுவதை நாம் அறிவோம். நாடெல்லாம் ஒற்றுமையில் உய்யவே பிறப்பெடுத்த, நாம் கண்முன் கண்ட அத்வைத ரத்னம் ஸ்ரீ பரமாசார்யாரின் திரு-அவதாரம் நிகழ்ந்தது சாந்திர-செளரம் ஆகிய இருவிதத்திலும் வைகாசம்/வைகாசி என்று கூறப்படும் மாதவ மாதம். அவர் அவதரித்த 1894ம் வருஷம் மே 20 அன்று சாந்திரமானத்திலும் அமாவாசை கழிந்து வைகாசம் ஆரம்பித்துவிடுகிறது. நமது செளரமான பஞ்சாங்கத்தின்படி சித்திரை முடிந்து வைகாசி. அவர் அவதரித்த தினம் ஞாயிறு, அனுஷ நக்ஷத்திரம், வருஷத்தின் பெயரோ, 'ஜெய' வருஷம். நாளை வைகாசி அனுஷம், ஆசார்யாளின் அவதார தினம். மஹா பெரியவாளது ஜனன காலம் பலவிதங்களில் சிறப்புற்றது என்று என் தந்தை கூறக் கேட்டிருக்கிறேன். அவற்றில் சிலவற்றைக் காணலாமா?.

பருவங்களில் சிறந்தாகச் சொல்லப்படுவது வஸந்த ருது. 'ரிதூநாம் குஸுமாகர:' என்று ஸ்ரீ க்ருஷ்ணனால் சொல்லப்பட்ட ரிது. இந்த வஸந்த ரிதுவில் வரும் இரு மாதங்களில் சித்திரைக்கு 'மது' என்றும் வைகாசிக்கு 'மாதவ மாதம்' என்றே பெயர். இந்த வைகாசியில் தான் சுப்ரமண்யனது அவதாரமாகக் கருதப்படும் திருஞான சம்பந்தரது குருபூஜை, மற்றும் வைகாச பெளர்ணமியில் (குரு பூர்ணிமா) என்று புத்தரின் மஹாநிர்வாணம் போன்றவையும் நிகழ்ந்திருக்கிறது.

நமது ஆசார்யார் எப்படி அஞ்ஞானத்தை நீக்கும் பகலவனாகத் திழ்ந்தார் என்பது நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். நமது ஆசார்யாளது அவதார தினம் ஞாயிறு என்பதில் எத்தனை சூக்ஷ்மம் நிறைந்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம். ஞாயிற்றுக் கிழமை என்பது ஆதித்யனின் ஆதிக்கம் பெற்ற நாள் என்பர்.க்ருஷ்ண யஜுர் வேதத்தில், 'அநூராதா நக்ஷத்ரம் மித்ரோ தேவதா' என்று ஒரு வாக்கியம். அதாவது அநூராதா நக்ஷத்திரத்தின் தேவதை மித்ரன் என்று பொருள். மித்ரன் என்னும் நாமம் சூர்யனுக்கு/ஆதித்யனுக்குத்தான். கல்யாணப் பத்ரிகைகளில் 'இஷ்ட-மித்ர பந்துக்களுடன்'என்னும் வாக்யத்தைப் பார்த்திருக்கலாம். 'மித்ரன்' என்றால் நண்பன் என்று பொருள். உலக இயக்கத்துக்குக் காரணமானவன் சூர்யன். அவனை நாம் மித்ரனாகக் கொள்ளத்தானே வேண்டும்?. ஞானத்திற்கும் உதாரணமாகச் சொல்வது சூர்யனைத்தான். நவக்ரஹங்களில் சூர்யனைக் கொண்டே மற்ற கிரஹங்களின் ஆதிக்கமும். இவ்வாறான ஞாயிற்றுக் கிழமை ஆதவனின் ஆதிக்கம் பெற்ற நாளில் நமக்கு ஞான-சூர்யனாக அவதரித்தார்.

அநூராதா நக்ஷத்திரத்தின் அதி-தேவதை சூர்யன் என்று பார்த்தோம். அடுத்ததாக அநூராதா நக்ஷத்திரத்தின் சிறப்பைப் பார்க்கலாம். எந்த விசேஷத்திலும் ஹோமத்தின் தொடக்கத்தில் நாம் 'அனுஜ்ஞை' என்று ஒன்று செய்கிறோம். அதாவது ஆரம்பிக்கும் செயல் நல்லபடியாக நடந்து முடிய தெய்வம் மற்றும் வேதவித்துக்களின் அனுமதியைக் கேட்க்கும் விதமான மந்திரம். மணையில் உட்கார்ந்தவுடன் நாம் எல்லோரையும் சொல்லச் சொல்லும் மந்திரம் தான் இது. ஆனால் பொருள் தெரியாததால் திருப்பிச் சொல்வதுடன் முடிந்துவிடுகிறது. அந்த மந்திரத்தில் அநூராதா நக்ஷத்திரத்தின் சிறப்புச் சொல்லப்பட்டிருக்கிறது.


ருத்த்யாஸ்ம ஹவ்யைர் நமஸோபஸ்த்ய
மித்ரம் தேவம் மித்ரதேயம் நோ அஸ்து
அநூராதான் ஹவிஷா வர்த்யந்த:
சதம் ஜீவ சரத: ஸவீரா:


அதாவது, மித்ர தேவனை ஹோமத்தாலும், நமஸ்காரத்தாலும் உபசரித்து நிறைவு காண்போமாக!. மித்ரனே எமக்குக் கொடையருள்வாயாக!, அநூராதா நக்ஷத்திரங்களை அவியளித்துப் போற்றி வளர்த்தவாறு நாங்கள் பராக்ரமசாலிகளோடு நூற்றாண்டுகள் வாழ்வோமாக! என்று பொருள். இங்கு பராக்ரமம் என்பது உடல் வலிமை மற்றுமன்றி புலன்களை வெல்லுதலும் வீரமாகக் கொள்ள வேண்டும். அநூராதா நக்ஷத்திரங்கள் என்று கூறியுள்ளதன் காரணம் இந்த நக்ஷத்திரத்திற்குத் தொடர்புடைய விசாகத்தைச் சேர்த்தே. விசாகத்துக்கு 'ராதா'என்று ஒரு பெயர் உண்டு. அடுத்தநக்ஷத்திரமான அனுஷம் 'அநூராதா'. ராத்/ராதா என்றால் மகிழ்ச்சி, ஆராதனை, செழிப்பு போன்றவற்றைக் குறிக்கும். இவ்வாறாக சிறப்பான நக்ஷத்திரத்தில் உதித்து, நமக்கெல்லாம் ஆன்ம செழிப்பினையும், ஆராதனைக்கு வழிகாட்டியாகவும் உள்ள பரமாசார்யார் கருவிலேயே திருவுடையார் என்றால் மிகையல்லதானே?.மேலே கூறிய வேத வாக்யத்தின் படி நூறு வருஷங்கள் வாழ்ந்து நம்மை வழிப்படுத்தினவர். ஆஹா! அவரது வாழ்வும் வேதமும் எப்படியெல்லாம் பொருந்துகிறது என்று பார்க்கப்-பார்க்க பரவசமன்றோ?.

சாதாரணமாக ஜீவன் முக்தர்களது ஜெயந்தி என்பது அவர்களது பிறந்த திதியை வைத்தே சொல்லப்படுவது. அது மட்டுமல்லாது சாந்திரமானப்படி/செளரமானப்படி என்பதில்லாமல் ஒரு தினத்தில் பரமாசார்யரது ஜெயந்தி கொண்டாடுவதென்றால் அது பிறந்த திதியை அடிப்படையாக வைத்துக் கொள்ளலாம். வைகாச சுக்ல பஞ்சமி (ஆதிசங்கரர்), ராம நவமி, விநாயக சதுர்த்தி, கோகுலாஷ்டமி,என்பது போல பரமாசார்யரது ஜன்ம தினம் கொண்டாட வேண்டுமானால் அந்த புண்ய தினம், வைகாச மாத பெளர்ணமைக்கு அடுத்த தேய்பிறைப் பிரதமை.

ப்ரதமையில் சுபகார்யம் செய்யக்கூடாது என்ற பொதுக் கருத்து உண்டு. ஆனால் க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை திருவிழாக்கள் ஆரம்பிக்க, கோவில்களில் கொடியேற்றம் போன்றவற்றுக்கு விசேஷமாக ஜ்யோதிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது. பாக யஜ்ஞயங்களில் வரும் ஸ்தாலீபாகம், மற்றும் இஷ்டி போன்றவை ப்ரதமையில் செய்யவேண்டியதே!. வைதீகம் தழைக்கவந்த மஹானை ப்ரதமையில் வணங்கிடுதலும் சரிதான் என்றே தோன்றுகிறது. இதுமட்டுமன்றி, பரமாசார்யாரின் இஷ்ட தெய்வம் காமாக்ஷி காஞ்சியில் ஆவிர்பஹித்ததும் ஒரு தேய்பிறை பிரதமையில் தான் என்று தெரிகிறது.

இவ்வாறான விசேஷ பலன்களைக் கொண்ட தினத்தில் மீண்டும் சங்கர விஜயம் இந்த பூலோகத்தில் ஆரம்பித்தது. நம் கண்முன்னே வாழ்ந்து காட்டிய ஞான சீலர், கர்மா, பக்தி, ஞானம் ஆகியவற்றில் ஏதோ ஒன்றை மட்டும் இல்லாது மூன்றையும் கைக் கொண்டு நம்மை உய்விக்க வந்த உத்தமர். இன்றைய தினம் (07/06/09) அவரது ஜயந்தியாக உலகம் முழுவதிலுமுள்ள அவரது சிஷ்யர்களால் கொண்டாடப்படுகிறது. பரமாசார்யாருக்கு நாம் செய்யும் பூஜை என்பதில் முதலாவதானது அவர் சொற்படி வாழ்தலே!. நாமும் அவரை படங்களிலும், சிலா ரூபத்திலும் மட்டும் வணங்குவதுடன் நில்லாது அவரது சொற்களின்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, வைராக்யம், தவம் போன்றவை சித்திக்க வேண்டுவோமாக!.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!
காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

[பரமாசார்யார் தேகவிதேகம் அடைந்த நாளில் எனது தந்தை கூறியதை அடிப்படையாகக் கொண்டு எழுதியது இக்கட்டுரை]

14 comments:

தங்க முகுந்தன் said...

காஞ்சி மகா பெரியவாள் ஸ்ரீசந்திரேந்திர சரஸ்வதி சுவாமிகளுடைய ஜயந்தி தினமான இன்று அவருடைய கட்டுரையைத் தாங்கிவரும் தங்கள் பதிவுக்கு முதல் எனது ஆத்மார்த்தமான நன்றிகள்!
மகா பெரியவாளை நானும் 3 தடவைகளுக்கு மேல் நேரடியாகப் பார்க்கும் புண்ணியம் பெற்றதோடு மட்டுமல்ல ஒரு தடவை அவரோடு பேசும் சந்தர்ப்பமும் கிடைத்ததை இன்றும் பெரும் பேறாகக் கொண்டுள்ளதோடு அவரை மானசீகமாகத் தொழுதும் வருகின்றேன்.
அவரால் நிறைந்த ஆசீர்வாதம் பெற்றது மறக்கமுடியாத ஒரு தனி இன்பம்.
இலங்கையில் எப்படி இப்போது பிரச்சனை என்று அன்று 1989இல் என்னிடம் கேட்டு அந்த மக்களுக்காகவும் அவர் ஆசி சொல்லியதை நான் இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும்.
தங்களின் ஆத்மீகமான பதிவுகள் எம்போன்றோருக்கு ஒரு பெரும் கொடை.
தங்களின் இப்பணிக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.
என்றும் வேண்டும் இன்ப அன்பு.

மதுரையம்பதி said...

வாங்க தங்க முகுந்தன் சார். முதல் வருகைக்கு நன்றி.

இவ்விடுகையும் அவர் அருளே!.

பெரியவாளது ஆசிர்வாதங்களைப் பெற்றவர் என்பதைக் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.

உங்களது அனுபவங்களைப் இடுகைகளால பகிர்ந்து கொள்ளுங்களேன்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

மிக்க நன்றி மௌலி சார்,
>>காஞ்சியில் ஆவிர்பஹித்தது<<
இதுபற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்ல வேண்டுகிறேன்!

கீதா சாம்பசிவம் said...

அருமையான பதிவுக்கு நன்றி.

கீதா சாம்பசிவம் said...

//க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை திருவிழாக்கள் ஆரம்பிக்க, கோவில்களில் கொடியேற்றம் போன்றவற்றுக்கு விசேஷமாக ஜ்யோதிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.//

சில அபூர்வ அசாதாரண ஜனனங்களும் ஏற்படுவதுண்டு, கிருஷ்ண பக்ஷ பிரதமை அன்று. :))))))))))))

மதுரையம்பதி said...

வாங்க ஜீவா.... அன்னை காமாக்ஷி காஞ்சியில் வாசம் செய்ய வந்தது ஒரு ப்ரதமைத் திதியில் தானாம்.

காமாக்ஷி பற்றித் தனியாக 2-3 இடுகைகள் எழுதி வருகிறேன். அவற்றில் இது பற்றியும் சொல்வேன். :)

மதுரையம்பதி said...

வாங்க கீதாம்மா...

ஏது வழிதவறி வந்துட்டீங்களா?...இந்தப் பக்கமெல்லாம் வரமாட்டீங்களே? :)

கபீரன்பன் said...

பெரியவரை நினைவு கூர்ந்த இடுகைக்கு மிக்க நன்றி

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!

குமரன் (Kumaran) said...

பரமாசார்யார் திருவடிகளே சரணம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

பரமாச்சாரியரைப் பற்றி நினைவுகூர்ந்ததற்கு நன்றி மௌளி

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றிங்க குமரன்.

மதுரையம்பதி said...

வாருங்கள் கபீரன்பன்....

மதுரையம்பதி said...

வாங்க திராச. உங்களுக்கெல்லாம் நான் நினைவு படுத்த வேண்டுமா என்ன?...அனுதினமும் அவர் நாமம் உரைப்பவரல்லா நீங்கள்? :)

Kailashi said...

காஞ்சி காமாக்ஷி அவதாரம் காஞ்சி பெரியவரின் ஜன்ம தினத்தன்று அவர் பாதம் பணிவோம்.