Tuesday, May 26, 2009

மஹா ரூபா, மஹா மாயா, மஹா சக்தி..


கடந்த சில மாதங்களில் அன்னையின் ஆயிரம் நாமங்கள் என்னும் லேபிளில் எழுதிவந்த தொடரை எழத வாய்ப்பு ஏற்படவில்லை. இதனைத் மீண்டும் இன்று தொடர கவிநயாக்காவின் தூண்டுகோலே காரணம், அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாம் அன்னையின் எட்டு நாமங்களைப் பார்க்கலாம்.

"உந்மேஷ நிமிஷோத்பந்த விபந்த புவனாவளி" என்று ஒரு நாமம். உந்மேஷம் என்றால் கண்களை திறத்தல், நிமேஷம் என்றால் கண்களை மூடுதல், புவனாவளி என்பது வரிசையான பல உலகங்கள். அதாவது, அன்னை தனது கண்களைத் திறந்து-மூடுவதன் மூலம் உலகங்களைப் படைத்தும் அழித்தும் வருகிறாள் என்பது பொருள்.

மனிதர்களாகிய நமக்கு கண்களைக் கொட்டுதல், அதாவது கண்களால் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு முறை கண்களை மூடித் திறப்பது இயல்பு. ஆனால் தேவர்களுக்கு இது போன்ற இயல்பு கிடையாதாம். இந்த மாதிரி இயற்கையான கட்டுப்பாடுகள் இல்லாதவள் அம்பிகை. அவள் எப்போதோ ஒரு முறை கண்களை மூடித் திறக்கும் நேரத்திலேயே ப்ரளயமும், மீண்டும் உலகங்களின் ஆக்கமும் நடத்தி அருள்கிறாள் என்பதாகப் பொருள். இந்த நாமாவளியைத்தான் "பூத்தவளே புவனம் பதினான்கையும்" என்று அபிராமி அந்தாதியில் பட்டர் கூறுகிறார் போல. இதை ஆதி சங்கரரும் செளந்தர்ய லஹரியில் சொல்லியிருக்கிறார்.

இதே போன்ற இன்னொரு நாமம் "ஆ ப்ரம்ஹ கீட ஜநநீ" - பிரம்மன் முதலாக பல நுண்ணுயிர்களை பெற்றவள் என்பது பொருள். ஜநநீ என்றால் பெற்றவள் என்று சொல்லலாம். உலகத்தில் இருக்கும் உயிர்களைப் படைப்பவன் பிரம்மா. அந்த பிரம்மாவையும்,கீடம் என்று சொல்லப்படும் நுண்ணுயிர்களையும் படைப்பவள். உலகனைத்தையும் படைக்கும் பிரம்மாவிலிருந்து நுண்ணுயிர்கள் வரையில் எல்லாவற்றையும் படைப்பவள் அன்னை என்று கூறலாம்.

அன்னையின் கண்களைக் குறிப்பிடும் இன்னொரு நாமம் 'மஹாகாமேச நயன குமுத ஆஹ்லாத கெளமுதீ'. மஹா காமேசன் என்றழைக்கப்படும் ஈசனின் அல்லி போன்ற கண்களை மலரச் செய்யும் கார்காலத்து நிலவாம் அன்னை. கார்த்திகை மாதத்து முழுநிலவுக்குப் பெயர் கெளமுதீ. நிலவு எப்போதுமே குளிர்ச்சி தருவதுதான், இதில் கார்காலமான கார்த்திகையில் அதன் குளிர்ச்சி, முழுமை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று அதை அன்னையின் கண்களுக்கு உவமையாகச் சொல்லியிருக்கிறார்கள் வசினி தேவதைகள்.

'தாப த்ரய அக்நி ஸந்தப்த ஸமாஹ்லாதந சந்த்ரிகா' - தாப த்ரயம் என்பது மூன்று விதமான இடர்களைக் குறிக்கும். முன்வினையால் விளையும் துன்பமாகிய 'ஆதியாத்மிகம்', இப்பிறப்பில் பிற உயிர்களால் விளையும் துன்பமாகிய 'ஆதிபெளதிகம்'மற்றும் 'ஆதிதெய்விகம்' எனப்படும் இயற்கைச் சீற்றங்கள் போன்றவை நம்மை வருந்தச் செய்பவை. இந்த மூன்றிலிருந்தும் காக்கும் குளிர் நிலவாம் அம்பிகை. இதத்தான் அபிராமி பட்டர், 'அல்லலெல்லாம் தீர்க்கும் திரிபுரையாள்' என்பார். இதே போல 'பிணிக்கு மருந்தே' என்றும் 'அபிராமி என்னும் அருமருந்தே' என்றும் அபிராமி பட்டர் கூறுவதற்கு ஏற்ற நாமம் 'ஸர்வ வியாதி ப்ரசமநீ' என்பது. எல்லா வியாதிகளையும் தீர்க்கும் அரு-மருந்தானவளாம் அம்பிகை.

"மஹா ரூபா", "மஹா மாயா", "மஹா சக்தி" என்று மூன்று நாமங்கள். மஹா ரூபா என்றால் பெரிய ரூபம், மஹத் ரூபம் என்பது பொருள். அணு பரிமாணம், மத்ய பரிமாணம், மற்றும் மஹத் பரிமாணம் என்பதில் இறை சக்திக்கு மட்டுமே அணு மற்றும் மஹத் பரிமாணங்கள் சாத்தியம். மற்றபடி உலகில் இருக்கும் எல்லாம் மத்ய பரிமாணம் என்ற சொல்லில் அடங்கக்கூடியது. விஸ்வரூப தரிசனத்தில் சகல லோகங்களையும் அன்னை தன்னகத்தே கொண்ட அந்த ரூபத்தை மஹா ரூபா என்று கூறுவது சரிதானே?

மாயை என்பது இல்லாததை இருப்பது போல தோன்றச் செய்வது. இவ்வாறான மாயைகளுக்கு எல்லாம் மாயையாக இருப்பவள் பராம்பிகை, ஆகவே மஹா மாயா. இந்த மஹா மாயாவே, மகமாயி என்றும் சொல்லப்படுகிறவள். க்ருஷ்ணாவதாரத்தில் ஜனனத்தின் போது வசுதேவரால் சிறைச்சாலையில் மாற்றி வைக்கப்பட்ட பெண் குழந்தை இந்த மாயாவே. அதனால்தான் கம்சன் அக்குழந்தையைக் கொல்ல எத்தனிக்கும் போது மறைந்து அவனுக்கு எச்சரிக்கை செய்கிறாள். சங்கீத மூம்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷதர் தமது பாடல்கள் பலவற்றில் அன்னையை 'மாயே!' என்று விளித்துள்ளதைப் பார்க்கலாம்.

ஈரேழு உலங்களையும் படைத்து, காத்து ரக்ஷ்க்கும் அவளை மஹாசக்தி என்று வசினி தேவதைகள் கூறுவதில் வியப்பொன்றும் இல்லை. ஈசனுக்கே சக்தியாக இருப்பவள் மஹா சக்தி தானே?. இதைத்தான் தேவி பாகவதத்தில் "சிவோபிசவதாம் யாதி குண்டலின்யா' என்பதாக, அதாவது சக்தியிழந்த சிவனும் சவமாகிறான் என்பதான அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அவளருளால் அவளை வணங்குவோம், அருள இரைஞ்சுவோம்.

5 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மஹா காமேசன் என்றழைக்கப்படும் ஈசனின் அல்லி போன்ற கண்களை மலரச் செய்யும் கார்காலத்து நிலவாம் அன்னை//

பொதுவா ஈசனைத் தான் சூரியன்/சந்திரன்-ன்னு உவமித்து, அவன் அருளைப் பார்த்து பூக்கும் தாமரை/அல்லியாக அன்னையைச் சொல்லுவார்கள்! ஆனால் அம்பாள் இங்கு காட்சியையே மாற்றிவிட்டாள்! மதுரை-ன்னா சும்மாவா? :)

//கார்த்திகை மாதத்து முழுநிலவுக்குப் பெயர் கெளமுதீ//

கமுதி-ன்னு ஒரு ஊரு வேற இருக்குல்ல திருநெல்வேலியில?

//மாயை என்பது இல்லாததை இருப்பது போல தோன்றச் செய்வது. இவ்வாறான மாயைகளுக்கு எல்லாம் மாயையாக இருப்பவள் பராம்பிகை, ஆகவே மஹா மாயா//

இந்த மாயை என்னும் சொல்லே இவளை மாயோனோடு தொடர்பு படுத்திக் காட்டுகிறது!
மாயை என்பதன் வேர்ச் சொல் = மை!
அதாச்சும் கருப்பு!

அம்பிகையும், பெருமாளும் கருமை வண்ணமாகவே காட்டப்படுகிறார்கள்! அவன் மாயோன் என்றால் இவள் மாயோள்!

இல்லாததை இருப்பது போல தோன்றச் செய்வது என்பது வெறும் உலகியல் மாயை!
அன்னையை மாயை என்று சொல்வது அந்தப் பொருளில் அல்ல!
மேற்சொன்ன "மை", "கருமை", "மாயோள்" என்ற பொருளில் தான்!

கருமை என்கிற வண்ணம், ஒளிச்சிதறலில் எதையும் பிரதிபலிப்பதில்லை! It absorbs all frequencies of light! எல்லா அலைவரிசைகளையும் தன்னுள்ளே அடக்கி விடுகிறது! அதே போலத் தான் மாயோளான அன்னையும்! எந்த பேதா பேதமும் இன்றி, அனைத்தையும் தன்னுள்ளே அடக்கி விடுகின்றாள்!

வெள்ளை ஒளியில் நிறங்கள் ஒளிந்திருந்தாலும் அவை நிறம் பிரியும்! ஆனால் கருமையில் அப்படியில்லை! உள்ளில் அடங்கியது, அடங்கியது தான்! அதான் ஈசனை வெண்மையாகவும் அன்னையை மை-நிற மாயோளாகவும் காட்டினார்கள்!

கண்ணனுக்கு முன் தோன்றிய மாயோளை, பெருமாளின் மாயா சக்தி என்றே குறிப்பிடுவது வழக்கம்! இப்படி அனைத்தையும் ஆகர்ஷிக்கச் செய்து தன்னுள் ஒடுங்கச் செய்பவளே மாயோள், மாயை, மகா மாயை!

குமரன் (Kumaran) said...

கவிநயா அக்காவுக்கு நன்றி. அதனால் தானே அன்னையின் ஆயிரம் நாமங்கள் தொடர் மீண்டும் தொடர்கிறது. மௌலிக்கும் நன்றி.

Kavinaya said...

அன்னையின் நாமங்களை மீண்டும் சொல்ல வந்திருப்பதற்கு நன்றிகள் மௌலி. தொடர்வீங்கன்னு நம்பறேன் :)

//மஹா காமேசன் என்றழைக்கப்படும் ஈசனின் அல்லி போன்ற கண்களை மலரச் செய்யும் கார்காலத்து நிலவாம் அன்னை.//

வெகு அழகு! நீங்க பொருள் சொன்னப்புறம் எனக்கு ரொம்ப பிடிச்சிட்டது :)

//இந்த மஹா மாயாவே, மகமாயி என்றும் சொல்லப்படுகிறவள்.//

ஓ... அப்படி யோசிச்சதில்லை.

மஹா சக்தி திருவடிகள் போற்றி போற்றி!

S.Muruganandam said...

அன்னையின் அருள் மழை் தொடரட்டும் மதிரையம்பதி ஐயா.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கைலாஷி சார். உங்களை விடச் சிறியவன், மெளலி என்று குறிப்பிட்டால் மகிழ்வேன். :)