KRS அவர்களது பதிவுகளை நான் படிப்பதை விட்டு பல மாதங்களாகிவிட்டது. இன்று நண்பர் ஒருவர் கே.ஆர்.எஸ் பதிவில் இருக்கும் ஒரு பின்னூட்டத்தைப் பற்றி சாட்-ல் வந்து கூறினார். அதைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு அந்த இடுக்கைக்குச் சென்று படித்தேன். அதிர்ந்தேன், வருந்தினேன். அதன் விளைவே இந்த இடுகை. எனக்கும் கே.ஆர்.எஸ் அவர்களுக்கும் மிகுந்த கருத்து வேறுபாடுகள், அதன் விளைவான மனக் கசப்புகள் உண்டு. இருப்பினும் இந்த குறிப்பிட்ட இடுகையில் இருக்கும் பின்னூட்டம் என்னை மிகவும் பாதித்தது என்றால் மிகையல்ல.
ராமானுஜரை பழிக்க நாம் யார்?, அவர் இருந்த, இருக்கிற இடமென்ன நாம் இருக்கும் இடம், காலம், வாழ்க்கை முறை எங்கே?. ஏனிப்படி எழுதிட வேண்டும்? ஒன்றும் புரிபடவில்லை.ஏதோ சைவத்தை, ஸ்மார்த்த்தை, அத்வைதத்தை தூக்கி நிறுத்துவதாக நினைத்து அப்பின்னூட்டத்தின் மூலம் ஒர் மிகப் பெரிய அசிங்கத்தை அறங்கேற்ரறியிருக்கிறார் அந்த அனானி.
சொப்பு விளையாட்டிலும் எத்துணையோ முறைகள், அதன் மூலம் இறையியலை, குழந்தைகளுக்கு அந்த வயதிலேயே அறிமுகப்படுத்தப்பட்டதையே கட்டுரையாசிரியர் குறிப்பிட்டு, அந்த விளையாட்டின் மூலமாகவும் ஸ்ரீ ராமானுஜர் தமது சிஷ்யர்களுக்கு உபதேசித்ததைச் சொல்லியிருக்கிறார். அங்கே ராகவ் சொல்லியிருப்பது போல சொப்பு விளையாட்டாகத்தான் எனக்கும் ஆன்மீகம் அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து தான் அத்வைதமும், துவைதமும், வசிஷ்டாத்வைதமும் புரியாவைக்கப்பட்டது. அதிலிருந்து தான் இறையனுபூதிக்கான அஸ்திவாரம் என்னுள் விதைக்கப்பட்டது. சொப்பு விளையாட்டில் ஆரம்பித்துப் படிப்படியாக சாஸ்திரமும், ஆசாரமும், சிறிதே அளவு வேதமும் சொல்லிவைக்கப்பட்டது.
ராமானுஜரது அடிப்படைக் கருத்தை இப்படிச் சாடுவது என்பது என்று ஆரம்பித்தால் அனானி ராமானுஜரைச் சுட்டும் ஒரு விரலைத் தவிர மற்ற மூன்று விரல்கள் அனானியாகிய இவரையே சுட்டுகின்றதே?.தன்னை நோக்கியே மடங்கியிருக்கும் அந்த மூன்று விரல்கள் கேட்கும் கேள்விகளை உணர்ந்தாரா இந்த அனானி?. அந்த மூன்று விரல்கள் சார்பாக நாமும் சில கேள்விகளை முன் வைத்தால்இந்த அனானியால் பதிலளிக்க, (நமக்காக வேண்டாம், தமது ஆத்மாவிற்கு நேர்மையாக) இவரால் பதிலளிக்க முடியுமா?. அந்த பதில்கள், இவர் சொல்லும் தர்ம சாஸ்திரத்திற்கு முழு விரோதமானபதிலாகவே இருக்கும். பக்தியில்லாமல் அத்வைதத்தை நேரில் நம்மால் உணர முடியும் என்று எங்கு சொல்லப்பட்டிருக்கிறது?. அவ்வாறாக இருப்பினும் அதனை உணர்ந்தவராக இந்த அனானி இருப்பாரேயாகில் அவரால் இப்படி ஒரு பின்னூட்டத்தை எப்படி எழுத முடிந்தது?.
நமது வழிபாட்டு முறைகளும், சமயமும், சாஸ்திரமும் இப்படி எசலிக் கொள்ளவா சொல்லியிருக்கிறது?. அவரவருக்கு அவரவர் குரு, தெய்வம் உயர்ந்தது, அவற்றைப் பற்றி அவரவர்தமது கருத்தை,அதன் உயர்வைச் சொல்லுவதில் என்ன தவறு?. எந்த யதியானாலும் வணங்கு என்று சொல்லியிருக்கும் சாஸ்திரத்தை, அதை செயல்படுத்திக் காட்டிய பரமாசாரியாரைவேறு இதில் நுழைத்து, கடவுளே! ஏன் இந்த வெறி?. எதைச் சாதிக்க இப்படி ஒரு பின்னூட்டம்?
பூணூல் போடாதவர்களுக்கு ராமானுஜர் பூணூல் போட்டு வைத்தார் என்றால் அப்போது அவரைச் சுற்றியிருந்த அந்த மக்களது பக்தியை அவர் உணர்ந்தார், அந்த பக்தியால் இறையனுபூதிபெறச் செய்ய முடியும் என்று உணர்ந்ததால் அவ்வாறு செய்தார். ராமானுஜர் இறைவனை உணர்ந்த்வர், அவர்காலத்தில் வாழ்ந்தவர்கள் இறைவனுடன் பேசியும், இறையுத்தரவு பெற்றும் காரியங்களைச் செய்திருக்கிறார்கள். அவருடன் இருந்த ப்ரதம சிஷ்யர்கள் பலர் குருபக்தியிலும், தெய்வபக்தியிலும் சிறந்தவர்களாயிற்றே?. அவர்களைப் போலா நாம் இன்று இருக்கிறோம்?.அதனைச் சாட,குறை சொல்ல நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?. அன்றாட அலுவல்கள் எல்லாவற்றையும் இறைவழியாக, பக்திவழியாகச் செயத அவர்களெங்கே நாமெங்கே?. ஏனிந்த அசிங்கம்?
ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் எழுதிய "சத தூஷணி" என்னும் அத்வைத மறுப்புக்குக் எதிராக "சத பூஷணி" என்று மறுப்பு எழுதிய ஆசார்யார்கள் அதனை பிரஸ்தாபிக்காது விடுவது கூட ஒரு சகிப்புத்தன்மை ஏற்படுத்தும் முயற்சியும், இன்னொரு யதியின் செயலைக் குறைகூறுதலும் கூடாது என்பதற்காகத்தானே?. அப்படியிருக்கையில் சனாதனியாக, வைதீகத்தின் பால் தமக்கு இருக்கும் மரியாதையை காண்பித்துக் கொள்ளும் இந்த அனானி ஏன் இப்படி ஒரு பழிக்கும் பின்னூட்டத்தை இட்டார்? இவற்றை அறியாதவரா இந்த அனானி, அல்லது வசதியாக மறந்துவிட்டாரா? யாமறியேன் பராபரமே.
அனானி சொல்லியிருக்கும் சாஸ்திரங்களை ராமானுஜர் மதிக்காதோ அல்லது அவற்றை அவர் பின்பற்றாதோ இருக்கவில்லையே?. அவரது வாழ்க்கையில் பல்வேறு காலங்களில் அவர் சாஸ்திரத்திற்கும் சம்பிரதாயத்திற்கும் குடுத்த உயர்வு அழுத்தமாக அவரது வரலாற்றில் பதிவாகியிருக்கிறதே?. அனானி தம்மை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் முறை அத்வைதத்தையோ, வைதீகத்தையோ தூக்கி நிறுத்தும் முயற்சி என்றால் இவ்வாறான பிற ஆசார்யர்களை பகவத்பாதரோ அல்லது பரமாசாரியரோ எங்காவது பழிக்கச் சொல்லியிருக்கிறார்களா என்பதையும் அந்த அனானி நினைத்துப் பார்க்கட்டும். அத்வைத ஸ்தாபகராகட்டும், அதன் வழிவந்த ஆசார்யார்களாகட்டும் குலாசாரத்தைக் கடைபிடியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்களே, அதையெல்லாம் செய்யத் துவங்கினால் இந்த த்வேஷமே வரக்கூடாதே?, இடுகையில் இருக்கும் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு அந்த ஆசார்யரை வணங்கிவிட்டு அல்லவா சென்றிருப்போம்?
சங்கரரர் ஆகட்டும், ராமானுஜர் ஆகட்டும் அவர்கள் காலத்திற்குத் தேவையான சில விஷயங்களைச் செய்தார்கள். இன்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவர்களது சித்தாந்தம், அவர்களது இறை பக்தி, அனுபவம் போன்றவை மட்டுமே. அவர்களது செயலில் குறை கண்டுபிடிப்பது அல்ல. எந்த யதியையும், அதிலும் குறிப்பாக சங்கரர், ராமானுஜர், மாத்வர் போன்ற ஆசார்யர்களைக் குறைகூறுவது நமது வேத-மாதாவையே பழிப்பது போன்றது என்று உணர்வோம். இவற்றை இனியாவது தவிர்க்க உறுதி எடுப்போம்.
இது எனது கருத்து மட்டுமே. கே.ஆர்.எஸ் அவர்களது இடுகையில் பின்னூட்டமிடுவதில்லை என்பதால் இங்கு இட்டிருக்கிறேன். இது பற்றி இதற்கு மேலும் தொடர்வது வேண்டாத வேலை என்பதால் இந்த இடுகைக்கு பின்னூட்டப் பெட்டி மூடப்படுகிறது. இதனால் கே.ஆர்.எஸ் அவர்களது இடுகைகளுக்கு/சிந்தனைகளுக்கு எல்லாம் நான் வக்காலத்து வாங்குவதாக அர்த்தம் எடுத்துக் கொண்டாலும் அதுபற்றிக் கவலையில்லை. அதே சமயத்தில் கே.ஆர்.எஸ் அவர்களுடைய எல்லாக் கருத்துக்களுக்கும் நான் ஏற்பது இல்லை என்பதையும் சொல்லி இதை முடிக்கிறேன்.
ஸர்வ-வேதாந்த-ஸித்தாந்த-கோசரம் தம்-அகோசரம்
கோவிந்தம் பரமாநந்தம் ஸத்குரும் ப்ரணதோஸ்ம்யஹம்