Tuesday, May 5, 2009

நரஸிம்ஹ ஜெயந்தி - சிறப்புப் பதிவு-1

நாளை, 07/05/09 அன்று ஸ்ரீ நரஸிம்ஹ ஜெயந்தி. ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் நரஸிம்ஹ அவதாரம் நாம் அறிந்ததே!. ஹிரண்ய கசிபு தனது மரணம் பற்றி பிரம்மாவிடம் கேட்ட வரத்தில், மனிதர்களாலும், தேவர்களாலும், மிருகங்களாலும்,பகலிலும், இரவிலும், விதானம் அமைந்த இல்லம் போன்ற அமைப்பின் உள்ளேயோ அல்லது வானம் பார்த்த பூமியிலோ,போர்ப் படைக்கலன்களாலோ மரணம் சம்பவிக்கக் கூடாது என்று கேட்கிறான். பிரம்மாவும் அவ்வாறான வரத்தை அளிக்கிறார்.


இதன் காரணமாகவே நரஸிம்ஹ அவதாரத்தில் மஹாவிஷ்ணு மனித ரூபமோ, தேவ ரூபமோ இன்றி கழுத்துக்கு மேலே சிங்க முகமும், கழுத்துக்கு கீழே நர (மனித) உருவமும் கொண்டு, வைகாச மாத சுக்ல பக்ஷ சதுர்தசியன்று,ஸ்வாதி நக்ஷத்திரத்தில்,காலையும் அல்லாது, இரவும் அல்லாத மாலை நேரத்தில் தோன்றி, தமது கரத்தில் இருக்கும் நகங்களையே ஆயுதமாகக் கொண்டு மாளிகையின் உள்ளும் இல்லாது வெளியிலும் இல்லாது நிலைவாசலில் ஹிரண்ய கசிபுவை ஸம்ஹரித்தார். தசாவதாரங்களில் இது மிகவும் குறுகிய காலத்தில் நிகழ்ந்த அவதாரம் என்பர். இந்த அவதாரமே பரமசிவனின் சரபேஸ்வர அவதாரத்திற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

நாரத புராணத்தில் நரஸிம்ஹ அவதாரம் பற்றிச் சொல்கையில், நரஸிம்ஹ ஜெயந்தியன்று மாலை புண்யமான இந்த அவதாரம் பற்றி ச்ரவணம் செய்து பூஜை செய்து நமஸ்கரிப்பவர்களுக்கு அனைத்துப் பாபங்களும் விலகி நன்மை உண்டாகும் என்றும் மனோ தைரியமும்,தெளிவான ஞானமும், விரோதிகளிடத்து வெற்றியும் கிட்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாமும் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை இந்த புண்ய தினத்தில் பூஜித்து நல்லன எல்லாம் வேண்டிடலாம். போன வருஷ நரஸிம்ம ஜெயந்திக்கு ருண விமோசன ஸ்தோத்ரத்தினை இங்கே பதிந்தேன். இன்று ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பொருளுடன் பார்க்கலாமா?. [எனக்குத் தெரிந்த அளவில் பொருள் சொல்லியிருக்கிறேன். சில-பல இடங்களில் கொஞ்சம் நெருடலாக இருந்தது, படிப்பவர்கள் ஏதேனும் தவறு கண்டு திருத்தினால் மகிழ்வேன்]

ஸ்லோகத்தைப் பார்க்கும் முன்பு பத்ம பாதர் பற்றிய ஒரு சிறு குறிப்பு. பத்ம பாதர் என்பவர் ஆதிசங்கரரது ப்ரதம சிஷ்யர்களில் ஒருவர், நரஸிம்ஹ வழிபாட்டில் சிறப்புற்று இருந்தவர். பத்ம பாதரது வேண்டுகோளின்படி இந்த ஸ்லோகம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த ஸ்லோகங்களை வாசிக்கையில் இது நமக்காக, என்னைப் போன்ற ஸம்ஸார ஸாகரத்தில் ஆட்பட்ட சாதாரணர்கள் ப்ரார்த்திக்க என்றே செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது. சரி ஸ்லோகங்களைப் பார்க்கலாமா?


ஸ்ரீமத் பயோநிதி நிகேதந சக்ரபாணே!
போகீந்த்ர போக-மணி ரஞ்சித புண்ய மூர்த்தே!
யோகீச! சாச்வத! சரண்யே!பவாப்தி போத!
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்

திருப்பாற்கடலை உறைவிடமாகக் கொண்டவனே!, சக்ராயுதத்தை கையில் தாங்கியவனே!, ஆதிசேஷணின் தலையில் உள்ள ரத்னங்களினால் ஒளிரும் புண்யமான வடிவை உடையவனே!, யோகிகளுக்கெல்லாம் தலைவனே! நிலையானவனே!, தஞ்சமடையத்தக்கவனே!, ஸம்ஸாரமெனும் கடலைக் கடக்க ஓடம் போன்றவனே!, லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப் பெருமானே! எனக்குக் கை கொடுத்து உதவ வேண்டும்.


ப்ரஹ்மேந்த்ர-ருத்ர-மருதார்க்க கிரீடகோடி
ஸங்கட்டிதாங்க்ரி கமலாமல காந்தி காந்த!
லக்ஷ்மி-லஸத் குச-ஸரோருஹ ராஜஹம்ஸ
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்.

பிரம்மா, ருத்ரன், இந்திரன், மருந்துகள் ஸுர்யன் முதலானவரின் கிரீடங்களின் முனைகளால் உறையப் பெற்று, மாசற்று ஒளிரும் தாமரை போன்ற சரணங்களை உடையவனே!, லக்ஷ்மி தேவியின்தனங்களாகிய தாமரை மலருக்கு ராஜஹம்ஸம் போன்றவனே! லக்ஷ்மி நரஸிம்ஹனே!, எனக்கு கை கொடுத்தருள வேண்டும்.


ஸம்ஸார-தாவ-தஹனா (ஆ)தூர-பீகரோரு
ஜ்வாலாவலீபி-ரதிதக்த தநூருஹஸ்ய
த்வத் பாத பத்ம ஸரஸீ சரணாகதஸ்ய
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்

ஸம்ஸாரமென்னும் காட்டுத்தீயால் எரிக்கப்பட்டு அல்லல் படுபவனும், பயம் ஏற்படுத்தும் பரந்த தீயினால் கருகிய ரோமங்களை உடையவனும், உம்முடைய பாதத் தாமரை என்னும் நீர்த்தேக்கத்தை வேண்டியிருப்பவனான எனக்கு, லக்ஷ்மி நரஸிம்ஹனே!, நீ கை கொடுத்தருள வேண்டும்.

ஸம்ஸார-ஜால பதிதஸ்ய ஜகந்நிவாஸ
ஸர்வேந்த்ரியார்த்த படிசார்த்த ஜ்ஜஷோபமஸ்ய
பரோத்கண்டித ப்ரசுர தாலுக மஸ்தகஸ்ய
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்

ஸம்ஸாரம் என்னும் வலையில் வீழ்ந்தவனும், தூண்டிலால் இழுக்கப்பட்ட மீன்போல பொருளாசையால் ஈர்க்கப்பட்ட புலன்களை உடையவனும், துண்டிக்கப்பட்ட தாடைகளையுடைய தலையைக் கொண்டவனுமாகிய எனக்கு, லக்ஷ்மி நரஸிம்ஹனே!, நீயே எனக்கு கை தந்தருள வேண்டும்.


ஸம்ஸார கூப மதிகோர மகாதா மூலம்
ஸம்ப்ராப்ய துக்க சத ஸர்ப்ப ஸமாகுலஸ்ய
தீநஸ்ய தேவ க்ருபணா பதமாக தஸ்ய
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்

தேவனே!, ஆழமான அடித்தளத்தை உடையதும், மிக பயங்கரமானதுமான ஸம்ஸாரமென்னும் கிணற்றை அடைந்து, நூற்றுக்கணக்கான இன்னல்களாலான சர்பங்களால் துன்புற்று, கதியற்றவனாக, இரக்கத்திற்குரியவனான எனக்கு, லக்ஷ்மி நரஸிம்ஹனே!, நீயே கை தந்தருள வேண்டும்.


ஸம்ஸார பீகர-கரீந்த்ர-காபிகாத-
நிஷ்பிஷ்ட மர்ம வபுஷ்: ஸகலார்த்தி நாச!
ப்ராண-ப்ரயாண-பவபீதி ஸ்மாகுலஸ்ய
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்

லக்ஷ்மியுடனிருக்கும் நரஸிம்ஹ பெருமாளே!, இன்னல்கள் அனைத்தையும் போக்குபவனே!, ஸம்ஸாரமெனும் பயங்கர யானையின் துதிக்கையால் அடிபட்டு, நசுக்கப்பட்ட உறுப்புக்களை உடையவனும், பிறப்பு-இறப்பு என்னும் வாழ்க்கையின் அச்சத்தினால் அல்லல்படுபவனுமான எனக்கு கை கொடுத்தருள வேண்டும்.


ஸம்ஸார ஸர்ப்ப கந-வக்த்ர-ப யோக்ர-தீவ்ர
தம்ஷட்ரா-கரால-விஷதக்த விநஷ்ட-மூர்த்தே!
நாகாரி வாஹன! ஸுதாப்தி நிவாஸ! செளரே!
லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்

லக்ஷ்மியுடனிருக்கும் நரஸிம்ஹ பெருமாளே!,கருடனை வாஹனமாகக் கொண்டவனே, அமுதத்தைக் கொண்ட பார்க்கடலில் வசிப்பவனே!, வஸுதேவரின் புதல்வனே!, வாழ்க்கை என்னும் பாம்பின்வாயிலிருக்கும் கொடும் பற்களின் நஞ்சால் பொசுக்கப்பட்டு உருவிழந்த எனக்கு கை கொடுத்தருள வேண்டும்.


ஸம்ஸார வ்ருக்ஷ மகபீஜ மநந்த கர்ம
சாகா சதம் கரண பத்ர மநங்க புஷ்பம்
ஆருஹ்ய து:க்க பலிநம் பததோ தயாளோ!
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

பாவங்களை விதையாகவும், அளவற்ற செய்கைகளை எண்ணற்ற கிளைகளாகவும், புலன்களை இலைகளாகவும், ஆசையை மலர்களாகவும், துயரங்களை பழங்களாகவும் கொண்ட வாழ்க்கை என்னும் மரத்தின் மீது ஏறி, கீழே விழும் நிலையில் இருக்கிறேன். இரக்கமுடையவனே!, லக்ஷ்மி நரஸிம்ஹனே!, நீ எனக்கு கை தந்தருள வேண்டும்.

------------------ அடுத்த பதிவில் (நாளை) முடிவுறும்-------------------------

5 comments:

Anonymous said...

//நாளை, 07/05/09 அன்று ஸ்ரீ நரஸிம்ஹ ஜெயந்தி. ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் நரஸிம்ஹ அவதாரம் நாம் அறிந்ததே!.//

அப்பபப, நாளைக்கு நம்ப வல்லியம்மா வீட்ல தடபுடலா இருக்கும்....:)

தம்பி

Raghav said...

அஹோபிலம் சென்று தரிசிக்க வேண்டும் என்று ரொம்ப நாளா ஆசை. தெள்ளிய சிங்கர் அருள் கிடைக்கணும்னு வேண்டிக்கிறேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்

ஆசார்யாள் சங்கரரும், நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம் என்னாது, அவளை முன்னிட்டு, லக்ஷ்மி நரஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம் என்றே சொல்வது இன்னும் சிறப்பு!

சுவாதி நட்சத்திரம் சாந்தமான நட்சத்திரம்...
பெரியாழ்வார் நட்சத்திரம்! அடியேன் நட்சத்திரமும் கூட! சாந்தாமாகத் தானே இருந்தாகணும்? :)
ஆனால் அதே சாந்த நட்சத்திரத்தில் தான் "உக்கிரமானவர்" என்று சொல்லப்படும் எங்கள் அழகியசிங்கப் பிரான், நரசிம்மப் பெருமாளும் தோன்றினார்! :)

மதுரையம்பதி said...

தம்பி, ராகவ், மற்றும் கே.ஆர்.எஸ், வருகைக்கு நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

நரசிம்ம ஜெயந்தியன்று இந்த ஸ்தோத்ரத்தைப் பொருளுடன் படிக்கத் தந்ததற்கு நன்றி மௌலி.

லக்ஷ்மி-லஸத் குச-ஸரோருஹ ராஜஹம்ஸ = லக்ஷ்மி தேவியின் தனங்களாகிய தடாகத்தில் நீந்தும் ராஜஹம்ஸம் போன்றவனே! என்பது சரியான பொருள் என்று நினைக்கிறேன்.