Sunday, May 3, 2009

ஸ்ரீ பிரம்மேந்திரர் ஜெயந்தி : ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர ஸ்தவம்....

சுமார் 220 வருடங்கள் முன்பு பரபிரம்மத்துடன் கலந்தவர் சதாசிவ பிரம்மேந்திரர். அவர் பற்றிய அரிய கருத்துக்களை திவாண்ணா என்று நான் அழைக்கும் டாக்டர். வாசுதேவன் அவர்கள் மிக அருமையாக ஒரு தொடர் கட்டுரையை சில காலம் முன்பு தமது ப்ளாக்கிலும், பின்னர் எனது வேண்டுகோளுக்கு இணங்க இங்கும் இட்டார்கள். அவர் சொன்னவற்றில் லேசாகத் தொட்டுச் சென்ற ஒரு விஷயத்தைப் பார்க்கலாமா?.

ஸ்ரீ சதாசிவர் அப்போதைய காஞ்சி ஆசார்யாரான (57ஆம் ஆசார்யார்) பரமசிவர்-II என்பவரிடம் தீக்ஷை பெற்றவர். ஸதாசிவ பிரம்மேந்திரர் கைவல்யம் அடைந்து சுமார் 120 வருடங்கள் கழித்து நடந்த நிகழ்ச்சி இது. அப்போது சிருங்கேரியில் ஆசார்யராக இருந்தவர் ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள். அவருக்கு ப்ரம்ம ஞானத்தில் ஏதோ சந்தேகம் எழுந்ததாம். அப்போது அதைப் பற்றி கலந்து உரையாடித் தெளிய யாரும் இல்லாத நிலையிருந்ததாம். அதாவது ப்ரம்ஹ ஞானத்தை அடைந்தவர், உணர்ந்தவர் மட்டுமே தெளிவிக்க முடியும் என்பதால் அவ்வாறான ஒருவரைத் தேடியபோது, ஸ்ரீசதாசிவர் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறார். தமது விஜய யாத்திரையில் தென் பகுதிக்கு வரும் போது சதாசிவ பிரம்மேந்திரரது அதிஷ்டானத்தை அடைந்து பிரார்த்தனை செய்ய முடிவு செய்கிறார்.



சிருங்கேரி மடத்தின் கிளை ஒன்று கரூர் அருகில் இருக்கும் மஹாதானபுரம் என்னும் கிராமத்தில் இருக்கிறது. அங்கு வந்த ஸ்ரீ ஆசார்யர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானத்திற்கு பல்லக்கில் போகிறார். போகும் பல்லக்கு மிகவும் நிதானமாகச் செல்வதாக உணர்ந்து போகிகளிடம் காரணம் கேட்கிறார். போகிகள் தாம் பல்லக்குடன் முன்னே செல்கையில் தம்மை யாரோ பின்புரம் தள்ளுவதாக உணர்வதால் எதிர்த்துச் செல்வது சிரமாக, அதிக நேரம் பிடிப்பதாகச் சொல்கின்றனர். தமது திருஷ்டியில் இது பிரம்மேந்திரரைப் பார்க்கச் செல்லும் முறையல்லஎன்று உணர்ந்து, பல்லக்கிலிருந்து இறங்கி தமது கை நீட்டி அது நீளூம் வரையில் நடந்து, பிறகு ஒரு நமஸ்காரம் செய்து பின்னர் இன்னொரு கை தூரம் நடந்து மீண்டும் நமஸ்காரம் செய்வதுமாகச் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து நெரூரை அடைந்தாராம்.


நெரூரை அடைந்த ஆசார்யார் தமது அனுஷ்டானங்களைக் காவிரிக் கரையில் முடித்துக் கொண்டு பிரம்மிந்திராளது அதிஷ்டான வளாகத்தினுள் சென்று கொண்டு, வேறு யாரையும் உள்ளே விட வேண்டாம் என்றும் தாமே திரும்பி வந்து பேசும் வரையில் எந்த விதத்திலும் தன்னுடன் தொடர்பு கூடாது, எல்லோரும் திருமதிலுக்கு வெளியிலேயே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார். அன்ன ஆகாரமின்றி, யாரிடமும் ஏதும் பேசாது அதிஷ்டானத்தின் முன்பு தியானத்தில் அமர்ந்து விட்டாராம். மூன்று நாட்கள் இவ்வாறாக இருந்திருக்கிறார். காலை-மாலையில் காவேரிக் கரைக்கு வந்து ஸ்னாநாதிகளை முடித்துக் கொண்டு செல்வாராம். ஏதும் பேசுவதோ, அல்லது பிக்ஷை எடுத்துக் கொள்ளவோ இல்லையாம். பக்தர்கள் எல்லோரும் திருமதிலுக்கு வெளியே அன்ன ஆகாரமின்றி ஆசார்யாரது பிக்ஷைக்குப் பின்னரே உணவு எடுத்துக் கொள்வதாக உறுதியெடுத்து காத்திருந்தார்களாம். மூன்றாம் நாள் இரவு மதிலுக்குள்ளிருந்து இருவர் பேசிக்கொள்வது காதில் கேட்டதாம். ஒரு குரல் ஆசார்யாரது குரலாக இருப்பதை உணர்ந்தனர், இன்னொன்று சதாசிவ பிரம்மத்தினுடைதாக இருக்கலாம் என்று நினைத்து, மறுநாள் ஆசார்யார் சொல்வார் என்றும் ஆசார்யார் சதாசிவ பிரம்மத்திற்கு பூஜை செய்தால் அதன் மூலம் அவரது குருவாக சதாசிவத்தை ஏற்றது தெரியும் என்றும் முடிவு செய்து காத்திருந்தனராம்.

எதிர் பார்த்தது போலவே ஸ்ரீ ஸ்வாமிகள் மறுநாள் வெளியில் வருகையில் ஸ்ரீ சதாசிவ பிரம்மத்தை போற்றி 45 ஸ்லோகங்களை [ஸ்ரீ சதாசிவேந்த்ர ஸ்தவம்] எழுதி எடுத்து வந்து சதாசிவ பிரம்மத்திற்குதாம் பூஜை செய்ய ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னாராம். அங்கிருந்து கிளம்பும் போது ஸ்ரீ சதாசிவ பிரம்மத்தின் படத்தை பல்லக்கில் வைத்து சிருங்கேரிக்கு எடுத்துச் சென்றதாகச் சொல்கிறார்கள். இப்போதும் சிருங்கேரி ஆசார்யர்கள் தமது தமிழக விஜயத்தில், குறிப்பாக பட்டமேற்ற பிறகு வரும் முதல் பயணத்தில் நெரூர் வந்து பூஜைகள் செய்து காணிக்கைகள் அளிப்பதைக் காணலாம்.

இவ்வாறாக பிரம்மத்தில் கலந்து 130 வருடங்கள் கழித்தும் தன்னை நோக்கி சிரத்தையுடன் வந்தவருக்கு அனுக்ரஹித்துள்ளார் சதாசிவர். மேற் சொன்ன நிகழ்ச்சியின் போது சிருங்கேரி ஆசார்யார் எழுதிய 45 ஸ்லோகங்களில் சிலவற்றை சொல்லி நாமும் அந்த பரபிரம்மத்தை வணங்குவோம்.

பரமசிவேந்த்ர கராம்புஜ ஸம்பூதாய ப்ரணம்ர வரதாய

பததூத பங்கஜாய ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய.

பரமசிவேந்திரர் என்னும் மஹானின் கரகமலத்தால் உண்டானவரும், [இங்கு சொல்லப்பட்டிருக்கும் பரமசிவேந்திரர் காமகோடி பீடத்து யதி, சதாசிவருக்கு ஸன்யாசம் அளித்தவர்]நமஸ்கரித்தவர்களுக்குப் பரதத்துவத்தை அருளுபவரும், கால்களில் தாமரையை ஜெய்த்தவருமான ஸ்ரீ சதாசிவேந்த்ரரை நமஸ்காரம் செய்கிறோம்.

கரமாஹி த்விஜ பதயே சமதம முக திவ்ய ரத்னவாரிதயே

சமனாய மோஹ விததே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய


காமம் என்னும் பாம்புகளுக்கு கருடனாக இருப்பவரும், சமம், தமம் போன்ற உத்தம ரத்னங்களிருக்கும் சமுத்ரமுமான ஸ்ரீ சதாசிவேந்த்ரரை மோக சமூகம் அடங்குவதற்காக நமஸ்காரம் செய்கிறோம்.

ப்ரணதாய யதி வரேண்யைர் கண நதாப்ய ஹார்ய விக்ன ஹ்ருதே

குணதா ஸீக்ருத ஜகதே ப்ரணதிம் குர்ம: ஸதாசிவேந்த்ராய

யதிச்ரேஷ்டர்களால் நமஸ்கரிக்கப்படுபவரும், விக்னேஸ்வரராலும் போக்க முடியாத விக்னங்களைப் போக்குபவரும், குணங்களால் உலகத்தையே தாஸபாவமடையச் செய்தவருமான ஸ்ரீ சதாசிவேந்த்ரரை நமஸ்காரம் செய்கிறோம்.

ந சாஹமதி சாதுரீ ரசித சப்த ஸங்கைள் ஸ்துதிம்

விதாது மபிச க்ஷமோ நச ஜபாதி கேப்யஸ்திமே

பலம் பலவதாம் வர ப்ரகுரு ஹேது சூன்யாம் விபோ

ஸதாசிவ க்ருபாம் மயி ப்ரவர யோகினாம் ஸத்வரம்


மிகச் சாதுர்யம் நிரம்பிய சப்தங்களால் ஸ்துதி செய்யும் சாமர்த்யம் எனக்கில்லை. ஜபம் முதலியவை செய்வதற்கும் பலமில்லை. பலம் உள்ளவர்களில் சிரேஷ்டரான ஸ்ரீ சதாசிவரே!சமர்த்தரே!, யோகிகளில் ஸ்ரேஷ்டரே!, உமது அவ்யாஜ கருணையை சீக்கிரத்தில் என்பால் செலுத்த வேண்டும்.

ஸ்தீகார்ச்சன ப்ரீத ஹ்ருதம்புஜாய பாகாப்ஜ சூடா பரரூப தர்த்தே

சோகாப ஹர்த்ரே தரஸாநதானாம்பாகாய புண்யஸ்ய நமோயதீசே

கொஞ்சம் பூஜித்தாலேயே சந்தோஷமடையும் மனமுடையவரும், சந்திரனை தலையில் பூஷணமாக அணிந்தவரான பரமசிவனின் மற்றொரு ரூபமானவரும், நமஸ்கரித்தவர்களுக்குவிரைவில் துக்கத்தைப் போக்குகின்றவரும், புண்யத்தின் பயனாக இருப்பவருமான ஸ்ரீ சதாசிவேந்த்ர யதீஸ்வரருக்கு நமஸ்காரம் செய்கிறோம்.


நாளை சதாசிவ பிரம்மேந்திரர் ஜெயந்தி. இந்த புண்ய தினத்தில் நாமும் ஸ்ரீ சதாசிவேந்த்ரரை வணங்கி அத்வைதானுபவம் வேண்டுவோம்.

9 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

படங்கள் திவாண்ணாவின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டவை. அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திவாண்ணா said...

நல்ல நாள் நல்ல நினைவுகள்!
நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மானச சஞ்சரரே! பிரம்மனி மானச சஞ்சரரே!
ஜெயந்தித் திருநாளில், சதாசிவப் பிரம்மேந்திர மகானுக்கு வந்தனங்கள்!

அதிகம் அறியப்படாத சதாசிவேந்த்ர ஸ்தவம் கொடுத்தமைக்கும் நன்றி-ண்ணா!

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி திவாண்ணா.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ்.

Anonymous said...

//கொஞ்சம் பூஜித்தாலேயே சந்தோஷமடையும் மனமுடையவரும், சந்திரனை தலையில் பூஷணமாக அணிந்தவரான பரமசிவனின் மற்றொரு ரூபமானவரும், நமஸ்கரித்தவர்களுக்குவிரைவில் துக்கத்தைப் போக்குகின்றவரும், புண்யத்தின் பயனாக இருப்பவருமான ஸ்ரீ சதாசிவேந்த்ர யதீஸ்வரருக்கு நமஸ்காரம் செய்கிறோம்.//

Thambi.

Anonymous said...

மகா பெரியவரியவரின் அடியவர் எவரையும் திரிகரணத்தின் ஒரு கரணத்தினாலும் துன்புறுத்தார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அப்படி செய்யும் நபர் பெரியவரின் அடியவர் அல்லர் என்பதையும் உண்ர்ந்திட வேண்டும்.

ஆன்மாவால் தெரிந்து கொள்வது------ உணர்வு
அறிவால் தெரிந்து கொள்வது ------ அறிவு

உங்கள் அனானி கண்டனப் பதிவு கண்டே அங்கு சென்று அறிந்தேன், அங்கு செல்வதுமில்லை, பின்னூட்டுவதுமில்லை. இனியும் அப்படியே. அது நானில்லை. நீங்கள் அறிவதற்காகவே தந்துள்ளேன்,

குருவே சரணம்,

மெளலி (மதுரையம்பதி) said...

ஐயா அனானியாரே!,

அந்த சாப்டர் பற்றி ஏதும் பின்னூட்டம் வேண்டாமுன்னுதான் அங்கு பின்னூட்ட்ப் பெட்டியையே முடினேன். நீங்க இங்க வந்து போட்டிருக்கீங்க...சரி விடுங்க.

ஒரு சிறு வேண்டுகோள்...
நீங்க இனிமேல் உங்கள் பெயரிலேயே (ஜி மெயில் ஐடி மூலமாக) வந்து கமண்ட் போடுங்க...அது தான் நல்லது. அப்படி ஜி.மெயில் இல்லாதவராக இருப்பின், தங்களது பெயரையாவது பின்னூட்டத்தின் முடிவில் தெரிவித்தல் நலம்.

Kavinaya said...

நல்ல பதிவுக்கு நன்றி மௌலி.

ஸ்ரீ சதாசிவேந்த்ர யதீஸ்வரரின் திருவடிகள் சரணம்.