Tuesday, April 14, 2009

விரோதி வருஷத் தமிழ் புத்தாண்டு...

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...


சூரியன் மீன ராசியிலிருந்து மேஷராசிக்கு பிரவேச செய்யும் தினமே புதுவருஷம் பிறப்பதாக சூர்யமான வருஷப் பிறப்பு என்று கூறியிருக்கின்றனர் பெரியோர். இவ்வாறான நாளில் சிறியவர்கள் மங்கள ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி பெரியவர்களை நமஸ்கரித்து ஆசி பெறுதலும், பெரியவர்கள் பித்ரு பூஜை, தேவ பூஜை ஆகியவை செய்தலும், புதுவருஷத்துப் பஞ்சாங்கத்தை பூஜித்தல், கோவில்களுக்குச் செல்லுதல், பஞ்சாங்க ச்ரவணம் செய்தல் போன்றவை செய்ய வேண்டும் என்பது ஆன்றோர் சொல்லியிருப்பது.

பஞ்சாங்கம் என்பது என்ன என்பதே இன்று பலருக்குத் தெரிவதில்லை. ஐந்து பாகங்களைக் கொண்டதால் இது பஞ்ச அங்கம் - பஞ்சாங்கம்.ஐம்புலன்களில் பிரதானமான கண்கள் போன்றது ஜோதிஷம் என்பர். ஜோதிஷம், ஜாதகம் போன்றவற்றிற்கு பஞ்சாங்கம் இன்றியமையாதது. திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் போன்றவை பஞ்ச அங்கங்கள். ஒவ்வொரு நாளும் இந்த ஐந்தும் வேறுபடுகிறது. இந்த ஐந்தும் ஒரு குறிப்பிட்ட முறையில் சுழன்று வருகிறது. இவற்றின் தன்மையைப் பொருத்து நாளின் தன்மை, நமது செயல்களில் அதன் ஆதிக்கம் நடக்கிறது. இவ்வைந்தும் எப்படி சுழல்கிறது என்பதை பின்னர் ஒருமுறை பார்க்கலாம்.

வருஷம் என்பதே காலதேவதை என்று கூறுவார்கள். இவ்வாறான வருஷ தேவதைக்கு 12 மாதங்களே முகம்-கை-கால் போன்ற அவயவங்களாம். லோகத்தைக் காப்பாற்றும் ஈச்வரன் தனது பிரதிநிதிகளாக நவகிரஹங்களை நியமித்திருக்கிறார். இந்த கிரஹங்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பினை ஏற்படுத்தி, அந்த அமைப்பின் மூலமாக நமது செயல்களுக்கு ஏற்ப நன்மை-தீமைகளை வழங்கி வருகிறார்கள். இவர்களின் பதவிக் காலம் ஒரு வருஷம். இதனாலேயே ஒவ்வொரு தமிழ் வருஷமும் நவகிரஹங்களில் ஒவ்வொருவர் அரசராகவும், மந்திரி, ஸேனாதிபதி போன்ற பதவிகளில் வருகின்றனர். ஒரு வருஷத்திற்கு இவர்களில் யார் எந்த பதவியில் (ராஜா, மந்திரி, ஸேனாதிபதி, தான்யாதிபதி..) வருகிறார் என்பதைப் பொருத்து அவ்வருடத்தின் பலன் எவ்வாறு இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு வருஷம் பிறக்கும் போது அந்த வருஷத்தின் மீது நவகிரஹங்களின் ஆதிக்கம் எப்படி இருக்கும்?. அந்த வருஷத்தில் மழை இருக்குமா?, இயற்கைச் சீற்றங்கள் இருக்குமா?, தேசத்தில் யுத்தம் உண்டா?, விவசாயத்தில் எந்த தான்யங்கள் விதைக்கலாம்?, எது அதிக விளைச்சல் தரும்?, அரசர், பெண்களுக்கு நன்மை தரும் வருஷமா?, போன்ற அடிப்படையான விஷயங்களை பஞ்சாங்கத்தின் மூலம் அறிய முடிகிறது. இன்றும் பஞ்சாங்கங்களில் விதை விதைக்கச் சிறந்த நாள் என்றும், சிகிச்சைக்குச் சிறந்த நாட்கள் என்றும் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதை கண்டு உணரலாம்.

ஜோதிஷ சாஸ்திரத்தில் ஒவ்வொரு வருஷத்திற்கும் ஒரு ஸ்லோகமும் அதில் பலனும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி, இன்று பிறக்கும் 'விரோதி' வருஷத்தில், உலக மக்கள் ஒருவருக்கு ஒருவர் விரோத மனப்பான்மை கொண்டவராகவும், பூமியானது சம்பத்துக்கள் நிறைந்ததாகவும், நீர் நிலைகள் நிறைந்தும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழிலும் வெண்பாவடிவில் இந்த ஸ்லோகங்கள் உள்ளது. அதில் இவ்வருடத்து வெண்பாவைப் பார்க்கலாம்.

நீடு விரோதி நிலத்தின் மழை மிகுதி
மேடு காடெல்லாம் விளைவுண்டாம் நீடும்
அரசர் போராலே யழிவு முலகம்
திரமிகு நோய் சேருமெனச் செப்பு.


இந்த புதுவருஷம் பெயருக்கு ஏற்றார் போல விரோதத்தை அதிகமாக்கும் என்று இருக்கிறதே என்று பயம் கொள்ள வேண்டாம். விரோதம் எப்போது வரும்?, ஒருவருக்கு அநியாயம், அதர்மம் நடக்கும் போது விரோதம் உருவாகும். நாம் எல்லோருக்கும் நன்மை செய்ய உறுதி செய்து கொள்வதன் மூலமாக விரோதத்தை தவிர்ப்போம். எங்கு விரோதம் வளரும் என்று தோன்றுகிறதோ அந்த நிகழ்வுகளை விலக்குவோம். விரோதம் தவிர்க்க வேண்டும் என்னும் விசேஷ பலனைப் பெற இறைவனை, பராம்பிகையை இறைஞ்சுவோம்.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

7 comments:

Geetha Sambasivam said...

விரோதி வருஷம் என்பதால் விரோதம் வரும்னு அபத்தமாகவே எல்லாரும் நினைக்கிறாங்க. மதுரையிலே கும்பாபிஷேஹம் செய்ததுக்குக் கூட அதான் காரணம்னு பொதிகையிலே நேர்முக வர்ணனையிலே விளக்கமும் கூட வந்தது. அப்படி எல்லாம் இல்லைனு விளக்கி இருக்கீங்க ஓரளவுக்கு. மக்கள் மனம் தான் மாறணும், புத்தாண்டு வாழ்த்துகள். பொதுவாய் இந்த வருஷம் விளைச்சல், மழை எல்லாம் நல்லாவே இருக்கும்னு சொல்றாங்க. எல்லாத்துக்கும் மேலே ஒருத்தர் இருக்கார். அவர் பார்த்துப்பார்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் சகலமகிழ்ச்சிகளையும் கொண்டு வரட்டும்.
பதிவாப் போயிடுச்சோ?? :)))))))

தி. ரா. ச.(T.R.C.) said...

108umaஎன்ன மௌலி(குமரன் கவனிக்க) வெறும் பஞ்சாங்க படனம் மட்டும்தானா. பானகம் நீர்மோர் யார் தரது? நல்ல விஷயங்களை நல்ல நாளில் சொல்ல வேண்டும். நன்றி. சிறுவயதில் எனது தாத்தா பஞ்சாங்க படனம் செய்யும் போது எல்லோருக்கும் நீர்மோர் , பனகம், பனஓலை விசிறி வழங்கிய ஞாபகம் வருகிறது

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா.. சரியாக பாயிண்டில் பிடித்தீர்கள். உங்களுக்கும், மாம்ஸுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். :-)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திராச சார். புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும். :-)

ஆமாம், வெயில் காலம், புது வருஷ ஆரம்பம்....உத்தம புண்ய காலத்தில் தான-தருமங்கள் செய்ய ஒரு வாய்ப்பு...அதான் பானகம்-நீர் மோர், விசிறி தானம் போன்றவை.

படனத்துடன் 4 வைதீகர்களை அழைத்து வஸ்த்திரமும் வழங்கப்பட்டது :-)...

sury siva said...

// உலக மக்கள் ஒருவருக்கு ஒருவர் விரோத மனப்பான்மை கொண்டவராகவும்,......//

ஏதோ மற்ற 59 வருஷங்களிலேயும் உலக மக்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்புடனும், சினேகத்துடனும், தியாக மனப்பான்மையுடனும் இருந்தது போலவும், ஏதோ இந்த விரோதி வருஷத்திலே தான் புதியதாக விரோதம் சம்பவிக்கும் என்று சொல்வது போல (பயமுறுத்துவது போல ) அல்லவா தோன்றுகிறது !!!

1949ம் வருஷம் ஏப்ரல் மாதம் முதலிட்ட 12 மாதங்கள், அதாவது சென்ற விரோதி ஆண்டில் இது போன்ற மக்கள் விரோதம், பிணி அதிகரிப்பு போன ஏதேனும் பெரிய அளவில் நடந்திருக்கிறதா எனத் தெரிந்தால் ஆறுதலாக
இருக்கும்.
Madam Geetha Sambasivam said:
//பொதுவாய் இந்த வருஷம் விளைச்சல், மழை எல்லாம் நல்லாவே இருக்கும்னு சொல்றாங்க. எல்லாத்துக்கும் மேலே ஒருத்தர் இருக்கார்.//
திஸ் இஸ் ஓகே.அடுத்து வரும் கிரக நிலைகள் படி பார்த்தால் பெரிய கெடுதி, பிணி வரும் என்று தோன்றவில்லை.
கீதா மேடம் சொல்வதே நடக்கவேண்டும் என்று பகவானைப் பிரார்த்திப்போம்.

அவர் பார்த்துப்பார்.
BESTEST PREDICTION .
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். (and for all visitors to this blog our blessings)

சுப்பு தாத்தா.
http://arthamullavalaipathivugal.blogspot.com

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க சூரி சார்..

புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)

//ஏதோ இந்த விரோதி வருஷத்திலே தான் புதியதாக விரோதம் சம்பவிக்கும் என்று சொல்வது போல (பயமுறுத்துவது போல ) அல்லவா தோன்றுகிறது !!!//

இல்லையே!, அது என்னுடைய வார்த்தையல்ல...'நீடு விரோதி' என்பதாக அதிக விரோதம் ஏற்படும் என்று வெண்பாவில் வருவதை வைத்து அவ்வாறான எதிர்பார்ப்பும், பயமும் பரவியிருக்கிறது.

நான் இடுகையை முடிக்கும் போது, விரோதம் ஏற்படுவது நம் கையில் தான் இருக்கு....நாம் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் விதத்தில் எதிர் கொண்டால் விரோதத்தை தவிர்க்கலாம் அப்படின்னு தானே சொல்லியிருக்கேன் :-)

திவாண்ணா said...

ஸ்வைன் ஃப்ளூ வந்தேவிட்டது!