Thursday, April 2, 2009

மீனாக்ஷி கோவில்.. (கும்பாபிஷேகச் சிறப்புப் பதிவு-2)

நேற்றைய இந்த பதிவின் தொடர்ச்சியே இது. இப்பதிவில் உள்ள படங்கள் எல்லாம் கூகிளார் உபயம். எடுத்து வலையேற்றிய அந்த நல்லுள்ளங்களுக்கு முதலில் நன்றி.

தமிழகத்துக் கோவில்களிலேயே கோபுரத்தில் அதிக அளவு பொம்மைகள் இருப்பது மதுரைக் கோவிலில்தான் என்பர். மதுரைக் கோவிலில் தெற்கு கோபுரம் தான் உயரம் அதிகம், 192 அடி என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை. கோபுரத்தில் இருக்கும் பொம்மைகளில் சில கீழே!

மதுரைக் கோவிலுக்கு அதிக அளவு செய்தவர்கள்/ உபயதாரர்கள் என்றால் அது நகரத்தாரே. பல்வேறு காலங்களிலும் பலர் புதுப்பித்தல், மற்றும் பல உபயங்களைச் செய்திருக்கின்றனர். இவர்களுக்கு அடுத்து வருவது டி.வி.எஸ் குடும்பத்தார். பலவிதத்தில் கும்பாபிஷேகம் உட்பட பல உற்சவங்களிலும் இவர்களது பங்களிப்பு உள்ளது. நானறிந்த வகையில் கடந்த 3 கும்பாபிஷேகத்திலும் இவர்கள் பெருமளவு பங்களித்துள்ளனர். தனி நபர்கள் என்று பார்த்தால் தற்போதைய அறங்காவலர் குழுத்தலைவர் கரு. முத்துகண்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன், மற்றும் அவரது குடும்பத்தினர் என்று மதுரை சார்ந்த பெரியவர்கள் முதலில் மனதில் தோன்றுவர். 1962ஆம் வருட கும்பாபிஷேகத்தை தலைமையேற்று நடத்தியவர் பி.டி.ராஜன் அவர்கள். அவர் திராவிட பாராம்பர்யத்தில் இருந்தாலும், அன்னையின் பிரதம பக்தர் என்றால் மிகையல்ல. மதுரைக் கோவிலின் பாராம்பர்யத்தை, அதன் தனிச் சிறப்பை பலவகைகளில் காத்து நமக்கு அளித்திருக்கிறார் என்று என் தந்தை கூறக் கேட்டிருக்கிறேன்.

மதுரைகோவிலில் அம்மன் சன்னதி முன்பு மேலே விதானத்தில் வரையப் பட்டிருக்கும் பலவண்ணப் படங்களில் சில கீழே!


இக்கோவிலில் பல மண்டபங்கள் பிராகாரங்களில், அதில் முதன்மையானது ஆயிரங்கால் மண்டபம், இதில் சப்தஸ்வர ஓசை தரும் ஏழு தூண்கள் உள்ளன. இதே விதமான தூண்கள் வடக்கு கோபுர வாயிலில் உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் எங்கிருந்து பார்த்தாலும் ஒரே வரிசையில் தூண்கள்பலவித வேலைப்பாடுகளுடன் பிரமிக்க வைப்பவை. இது தவிர, கிளிக்கட்டு மண்டபம், அஷ்டசித்தி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், ஞானசம்பந்தர் மண்டபம், திருமலை நாயக்க மண்டபம், திருப்புகழ் மண்டபம், கல்யாண மண்டபம், வசந்தராய மண்டபம் போன்றவை உள்ளது.

மேலே இருப்பது ஆயிரங்கால் மண்டபம், கீழே இருப்பது ஊஞ்சல் மண்டபம். ப்ரதி வெள்ளி மாலையில் அன்னை இங்கே ஊஞ்சலாடுவாள்.

நகரா மண்டபம் என்பது கோவிலுக்கு வெளியே வாயிலருகில் இருப்பது, நாயக்கர் காலத்தில் இங்கிருந்து நகரா, மற்றும் ஷனாய் வாத்தியம் இசைத்தகாரணத்தால் இந்தப் பெயர். கம்பத்தடி மண்டபம் என்பது சுவாமி சன்னதிக்கு எதிரில் துவஜஸ்தம்பம் இருக்கும் மண்டபம். இதில்தான் உலகப்புகழ் பெற்ற மீனாட்சி கல்யாணச் சிற்பம் உள்ளது. மதுரைக்காரர்கள் அடிக்கும் கல்யாணப் பத்திரிகையில் இந்தப் படத்திற்கு ஓரிடம் (முன் பக்கத்திலோ, பின் பக்கத்திலோ) கண்டிப்பாக இருக்கும். இதே மண்டபத்தில் புலிக்காலுடைய கணபதி சிலை உள்ளது.இந்த கம்பத்தடி மண்டபத்திற்கு எதிரில்தான் இறைவனுக்கும் இறைவிக்கும் நடந்த நடனப் போட்டிச் சிற்பம் உள்ளது. இறைவன் நடனமாடும் போது கீழே விழுந்த தனது காதணியை தனது காலால் எடுத்து அண்வதாகவும், இறைவி இந்த செயலை செய்ய நாணப்பட்டு தலை தாழ்த்தியவாறும் இருப்பதாக சிலைகள் உள்ளன. இதனருகில் அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்ரர் சிலைகளும் உள்ளன. ஸ்வாமி சன்னதி நுழைவாயிலில் காய்த்ரி தேவிக்கு மிக அருமையான சிற்பம் உள்ளது.

தமிழகத்தில் வேறெந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக இங்குதான் வருடத்தின் 12 மாதங்களிலும் 10 நாட்கள் விழா நடைபெறுகிறது.ஆடி மாதம் மினாட்சி வயதுக்கு வந்த விழா, ஆவணிமாதம் ஆவணி மூல உத்சவம், (இந்த விழாவில்தான் இறைவன் புட்டுக்கு மண்சுமந்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்) புரட்டாசி நவராத்ரி என்று நீளும். இதனையே தனியாகப் பதிவிடலாம். இந்தகோவில்லின் இன்னுமொரு சிறப்பென்னவென்றால், ஸ்ரீவைஷ்ணவர்களும் இங்கு அம்மன் சன்னதிக்கு மட்டும் வந்துவிட்டுச் செல்வதுதான். மீனாக்ஷி அழகரது சகோதரி என்பதால் அவளை மட்டும் தரிசித்துச் செல்வார்கள்.


ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதுரையில் கலெக்டராக இருந்தவர் எல்லீஸ் என்பவர். அவர் ஒரு நாள் இரவு உறக்கத்தில் இருந்த போது யாரோ ஒரு சிறுமி வந்து அவரை எழுப்பி அவரது மாளிகையை விட்டு வெளியே இழுத்து வந்திருக்கிறாள். அவ்வாறு வந்தபின் பார்த்தால் மாளிகையில் தீ பற்றீ எறிந்தது தெரிந்ததாம். அந்த நேரத்தில் அச்சிறுமி மாயமாக மறைந்துவிட்டாளாம். தன்னைக் காப்பாற்றியது மீனாக்ஷிதான் என்றுணர்ந்த எல்லீஸ் அவர்கள், கோவிலுக்கு பலவிதமான நகைகள், மற்றும் தங்கத்தில் குதிரைச் சேணம் போன்றவை தந்திருக்கிறார். அவை இன்னுமும் கோவிலில் இருக்கிறது. அம்மன் குதிரை வாகனத்தில் பவனி வரும்போது இந்த தங்கத்தாலான சேணம் பூட்டப்பட்டிருப்பதை நான் தரிசித்திருக்கிறேன். இந்த கலெக்டர் பெயரிலேயே அமைந்தது தான் தற்போதுள்ள எல்லீஸ் நகர்.

சம்பந்தரால் திருநீற்றுப் பதிகம் பாடப்பட்டது இந்த தலத்திலேயே!. இன்றும் இக்கோவிலுக்குச் செல்கையில் மடப்பள்ளி சாம்பலை நெற்றியில் தரித்துச் செல்வது வழக்கம். முக்குறுணி விநாயகர் சன்னதியில் இருந்து அம்மன் சன்னதி வரும் வழியில் ஓர் இடத்தில் இந்த சாம்பல் மக்களுக்காக இடப்பட்டு இருக்கும். பிறந்த குழந்தைகளை முதலில் அன்னையின் சன்னதியில் விட்டு எடுப்பதும், அக்குழந்தைக்கு மடப்பள்ளி சாம்பலை நெற்றியில் தரிக்கச் செய்து வயிற்று உபாதை போன்றவற்றிலிருந்து குழந்தையைக் காக்க வேண்டுவது வழக்கம். வடக்கு கோபுரத்து மொட்டை கோபுரத்தானுக்கு அர்ச்சனை செய்து குழந்தைகளைக் காத்து-கருப்பு அண்டாது காக்க வேண்டுவர்.

இங்குள்ள முக்குறுணி வினாயகர் திருமலை நாயக்கர் காலத்தில் பிரதிஷ்ட்டை ஆகியது என்பர். நாயக்கர் அன்னைக்கு தெப்போத்ஸ்வம் செய்து வைப்பதற்காக தற்போதைய தெப்பக்குளத்தைத் தோண்டிய போது வினாயகரை நினைவுபடுத்தும் பெரிய கல் ஒன்று பூமிக்கு அடியிலிருந்து கிடைத்ததாகவும், அதில் சிலை வடித்து பிரதிஷ்ட்டை செய்தவரே தற்போது இருக்கும் முக்குறுணி வினாயகர். ஒரு குறுணி என்பது 32 படிகள். வினாயகர் சதுர்த்தி தினத்தில் மூன்று குறுணி அரிசி மாவில் கொழுக்கட்டை செய்து இவருக்கு அளித்து வேண்டுவர். ஆகவே இவருக்கு முக்குறுணி விநாயகர் என்று பெயர்.

வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.

என்று கூறி திரு ஆலவாய் ஈசனை வணங்கி நாளைய பதிவில் சந்திப்போம்.

கோவிலைப் பற்றிய செய்திகளை இன்னும் தொடரலாம் என்றாலும், நாளை முடிந்தால் அன்னையின் சிறப்பினைச் சொல்லும் ஸ்லோகங்கள் மற்றும் பாடல்களைப் பார்க்கலாம்.

24 comments:

Raghav said...

அண்ணா, மீனாக்ஷி அம்மன் கோவில் பற்றி நிறைய தெரிஞ்சுகிட்டேன்.. இவ்வளவும் பொறுமையா பார்க்க முடிந்ததில்லை.

Raghav said...

//ஸ்ரீவைஷ்ணவர்களும் இங்கு அம்மன் சன்னதிக்கு மட்டும் வந்துவிட்டுச் செல்வதுதான்.//

அண்ணா, நான் அம்மனையும், சுந்தரேஸ்வரையும் சேர்த்தே தரிசிப்பேன்.. அப்புடின்னா நான் உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் (எ.கா, சுந்தர் அண்ணா) கிடையாதா :)

தி. ரா. ச.(T.R.C.) said...

Wow wonderful information.Sivamurukan also some time back given lot details about Meenakshi temple.

கிருஷ்ணமூர்த்தி said...

//இந்தகோவில்லின் இன்னுமொரு சிறப்பென்னவென்றால், ஸ்ரீவைஷ்ணவர்களும் இங்கு அம்மன் சன்னதிக்கு மட்டும் வந்துவிட்டுச் செல்வதுதான்//

தவறான தகவல் மௌலி சார்.
நீங்கள் முதலில் குறிப்பிட்டுள்ள TVS குடும்பம் உட்பட எந்த வைஷ்ணவனும், அம்மன் சன்னதிக்கு மட்டும் வந்து விட்டு, மற்றைய சன்னதிகளைப் புறக்கணிப்பதில்லை. பர ந்யாசம் என்று, ஆசார்யானிடத்தில், நாராயணன் ஒருவனுக்கே நான் ஆட்பட்டவன் என்ற உபதேசத்தைப் பெற்றவர், மறந்தும் புறம் தொழா நிலையினர், இப்படிப் பல நிலைகள் உண்டு.

தவிர, அழகனுடைய சகோதரி, இதுவும் பின்னாட்களில், சண்டையும் போட்டுக் கொண்டு, சமரசமும், சமாதானமும் பேசியவர்கள் இட்டுக் கட்டிய கதை தான்.

சித்திரைத் திருவிழாவில், கள்ளழகர் வைகைக்கு எழுந்தருளுவது, மீனாக்ஷி கல்யாணத்திற்கு அல்ல, மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தருவதற்குத்தான். அதுவும், முன்னாட்களில் தேனூரில் வைகையாற்றங்கரையில் நடந்தது, இப்போது அது தேனூர் மண்டகப்படியாக நடக்கிறது அவ்வளவு தான். சிதம்பரத்தில் இருப்பது போலவே, இங்கே மீனாக்ஷி கல்யாணத்திற்கு பவளக்கனிவாய்ப் பெருமாள் வந்து நடத்துவதாகக் கதை சொல்லுவர்களே தவிர, அந்தப் பெருமாளுக்கு,மீனாக்ஷி கோவிலில் தனி சன்னதியோ, தினசரி வழிபாடோ கிடையாது.

மதுரையம்பதி said...

வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்.

//தவறான தகவல் மௌலி சார்.
நீங்கள் முதலில் குறிப்பிட்டுள்ள TVS குடும்பம் உட்பட எந்த வைஷ்ணவனும், அம்மன் சன்னதிக்கு மட்டும் வந்து விட்டு, மற்றைய சன்னதிகளைப் புறக்கணிப்பதில்லை.//

மன்னிக்கவும் சார், இவ்வாறு புறக்கணிக்கும் பல வைஷ்ணவக் குடும்பங்களை எனக்கு மதுரையில் தெரியும். இன்று அக்குடும்பத்தை சார்ந்த அடுத்த தலைமுறையினர் அவ்வாறு இல்லாமல் எல்லா சன்னதிகளுக்கும் செல்கிறார்கள் என்பது உண்மை.

//பர ந்யாசம் என்று, ஆசார்யானிடத்தில், நாராயணன் ஒருவனுக்கே நான் ஆட்பட்டவன் என்ற உபதேசத்தைப் பெற்றவர், மறந்தும் புறம் தொழா நிலையினர், இப்படிப் பல நிலைகள் உண்டு. //

தவறே இல்லை சார். அவர்கள் செய்வது/செய்தது தவறு/சரி என்னும் நிலை ஏதும் நான் எடுக்கவில்லை. இம்மாதிரியும் நடந்தது/நடக்கிறது என்பதை மட்டுமே சுட்டிக் காட்டினேன்.

//சித்திரைத் திருவிழாவில், கள்ளழகர் வைகைக்கு எழுந்தருளுவது, மீனாக்ஷி கல்யாணத்திற்கு அல்ல, மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தருவதற்குத்தான். அதுவும், முன்னாட்களில் தேனூரில் வைகையாற்றங்கரையில் நடந்தது, இப்போது அது தேனூர் மண்டகப்படியாக நடக்கிறது அவ்வளவு தான்//

மிகச் சரி, அதனால்தான் இந்த தகவல்களை இடுகையில் கொடுக்கவில்லை.

திருமலை நாயக்கர் அரசாட்சியின் போதுதான் அன்னையின் பிரம்மோத்ஸவம் சித்திரைக்கு மாற்றப்பட்டது என்றே கேள்விப்பட்டிருக்கிறேன்.

மதுரையம்பதி said...

//இங்கே மீனாக்ஷி கல்யாணத்திற்கு பவளக்கனிவாய்ப் பெருமாள் வந்து நடத்துவதாகக் கதை சொல்லுவர்களே தவிர, அந்தப் பெருமாளுக்கு,மீனாக்ஷி கோவிலில் தனி சன்னதியோ, தினசரி வழிபாடோ கிடையாது.//

உண்மை.

பவழக்கனிவாய் பெருமாள் திருப்பறங்குன்றத்திலிருந்து மருகனுடன் திருமணத்துக்கு வருவார்...ஆனால் அவருக்கென்று தனி சன்னதி மீனாக்ஷி கோவிலில் இல்லை, அதே போல முருகனுக்கும் இல்லை. இவர்கள் இருவரும் வெளியில் தெற்கு மாசிவீதி / ஆவணி மூல வீதியில் இருக்கும் மண்டபத்திலே தான் இருப்பார்கள்.

திருமணத்தின் போதும், கல்யாணக் கோலத்திலும், பின்னர் இரவு பூப்பல்லலக்கு, யானை வாகன புறப்பாட்டின் போது இவர்களும் வருவார்கள், அவ்வளவுதான்.

மதுரையம்பதி said...

வாங்க திராச. ஆமாம், சிவமுருகன் பதிவுகளைப் படித்திருக்கிறேன். :-).

சில படங்கள் முன்னர் அவரிடமிருந்து பெற்றும் இருக்கிறேன். :-)

மதுரையம்பதி said...

வாங்க ராகவ்.

//அண்ணா, நான் அம்மனையும், சுந்தரேஸ்வரையும் சேர்த்தே தரிசிப்பேன்.. அப்புடின்னா நான் உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் //

ஏன் என்னை போட்டு வாங்கும் முயற்சி. வேண்டாம் விட்டுடுங்க...அழுதுடுவேன் :)

மதுரையம்பதி said...

வாங்க ராகவ்.

//அண்ணா, நான் அம்மனையும், சுந்தரேஸ்வரையும் சேர்த்தே தரிசிப்பேன்.. அப்புடின்னா நான் உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் //

ஞான ஆசாரியனிடம் கேட்க வேண்டிய கேள்வி, ஏன்?, ஏன் என்னிடம் உங்களுக்கு இந்த கொலை வெறி? வேண்டாம் விட்டுடுங்க...அழுதுடுவேன் :)

Sridhar Narayanan said...

//திருமலை நாயக்கர் அரசாட்சியின் போதுதான் அன்னையின் பிரம்மோத்ஸவம் சித்திரைக்கு மாற்றப்பட்டது என்றே கேள்விப்பட்டிருக்கிறேன்.//

ஆம். முன்னர் மாசி மாதத்தில் நடந்தது என்றும் சொல்வார்கள். அதனால் தேரோட்டம் மாசி வீதிகளில் வருகிறது இன்றும். நாயக்கர் சித்திரையில் திருவிழாவை ஒன்றிணைத்தார் என்றும் கேள்விபட்டிருக்கிறேன்.

நிறைய தகவல்கள் சொல்லியிருக்கீங்க. சூப்பர் சூடு பிடிக்குது. கலக்குங்க! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மீனாட்சி புதிரா புனிதமா கேள்விக்கான பதில்களை எல்லாம் இப்படி முன்கூட்டியே கொஸ்டின் பேப்பர் லீக் செய்வதற்கு அடியேனின் வ"ண்"மையான கண்டனங்கள்! :)

//
//ஸ்ரீவைஷ்ணவர்களும் இங்கு அம்மன் சன்னதிக்கு மட்டும் வந்துவிட்டுச் செல்வதுதான்.//

அண்ணா, நான் அம்மனையும், சுந்தரேஸ்வரையும் சேர்த்தே தரிசிப்பேன்..அப்புடின்னா நான் உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் கிடையாதா :)//

ஸ்ரீமான் ராகவ் காரு, :)
அதான் ஸ்ரீ-நிறைந்த மீனாட்சி அன்னையைத் தரிசித்து, அப்பனையும் தரிசிக்கிறீர்களே! அதுனால நீங்க "ஸ்ரீ"-வைஷ்ணவர் தான்! அப்பனைத் தரிசிக்காதவர்கள் என்றால் அவர்கள் "வெறும்" வைஷ்ணவர்கள்! "ஸ்ரீ"-வைஷ்ணவர்கள் அல்லர்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆம். முன்னர் மாசி மாதத்தில் நடந்தது என்றும் சொல்வார்கள். அதனால் தேரோட்டம் மாசி வீதிகளில் வருகிறது இன்றும். நாயக்கர் சித்திரையில் திருவிழாவை ஒன்றிணைத்தார் என்றும் கேள்விபட்டிருக்கிறேன்//

ஸ்ரீதர் அண்ணாச்சி!
திருமலை நாயக்கர் செய்த மிக அருமையான செயல்களில் இதுவும் ஒன்று! நாயக்கர் பிறப்பால் வைணவர் தான்! இப்படி ஒருங்கிணைக்கும் எண்ணம் வந்து செயலாற்றியது மிகவும் நல்ல விஷயம்!

இப்படிக் காலம் காலமாக இருந்து வரும் பிரம்மோற்சவத்தை மாற்றுவது குறித்து பல ஆட்சேபணைகள் எழுந்தாலும், அதையும் மீறி, நல்ல நோக்கத்துக்கு செயலாற்றிய ஆன்மீகத் துணிவு, திருமலை நாயக்கருக்கு இருந்தது வியப்பிலும் வியப்பு! மகிழ்விலும் மகிழ்வு!

ambi said...

//அவர் திராவிட பாராம்பர்யத்தில் இருந்தாலும், அன்னையின் பிரதம பக்தர் என்றால் மிகையல்ல.//

இவர் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதார் உறவு கலவாமை வேண்டும்னு வெளிப்படையாக இருந்து இருக்கார் போலிருக்கு. :))

அவரது மகன்(ர்) பழனிவேல் ராஜனும் நெற்றியில் குங்குமம் பளிச்சுனு இட்டு இருப்பார்.

ambi said...

அடுக்கடுக்காய் தகவல் வந்து கிட்டே இருக்கு. தொடரட்டும். எங்க ஊர் மாகாத்மியத்தை தான் டீலுல விட்டுடீங்க. பரவாயில்லை. :))

மதுரையம்பதி said...

வாங்க அம்பி....

//எங்க ஊர் மாகாத்மியத்தை தான் டீலுல விட்டுடீங்க. பரவாயில்லை. :))//

இல்லப்பா, மதுரைக்குச் சென்றால்தான் உங்க ஊர் தகவல்கள் கிடைக்கும்...இப்போதைக்கு போகல்ல...அதான் எழுத முடியல்ல..
ஆனா கண்டிப்பாக எழுதுவேன்...:)

மதுரையம்பதி said...

//அவரது மகன்(ர்) பழனிவேல் ராஜனும் நெற்றியில் குங்குமம் பளிச்சுனு இட்டு இருப்பார்.//

ஆமாம், பழனிவேல் ராஜனாரும் மீனாக்ஷியிடத்து மிகுந்த பக்தி உடையவர்தான்....

மதுரையம்பதி said...

வாங்க ஸ்ரீதர்....

//நிறைய தகவல்கள் சொல்லியிருக்கீங்க. சூப்பர் சூடு பிடிக்குது. கலக்குங்க! :)//

உங்களுக்குப் பிடித்திருந்தால் சந்தோஷமே! :)

மதுரையம்பதி said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கே.ஆர்.எஸ்.

கீதா சாம்பசிவம் said...

வருகைப் பதிவு. எ.பி. இருக்கு, ஆனாலும் சொல்லலை! :))))))))

கவிநயா said...

மீனாக்ஷி கோவில் பற்றி படிக்கையில் அம்மா வீட்டு ஏக்கம் போல் கண்ணில் குளம் கட்டுது :( தகவல்களுக்கு மிக்க நன்றி.

மதுரையம்பதி said...

வாங்க கவிக்கா...

உங்களது இந்தியப் பயணத்தின் போது அன்னையை தரிசிக்கப்பீர்கள் அல்லவா? அப்பறம் ஏன் இந்த விசனம்?. :)

மதுரையம்பதி said...

வாங்க கீரியம்மா...வந்து கீரியமைக்கு நன்றி :-)

குமரன் (Kumaran) said...

ஆகா. ஒரு முறை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வந்ததைப் போன்றே உணர்கிறேன் மௌலி. மிக்க நன்றி.

கம்பத்தடி மண்டபத்தில் சிவபெருமானின் பல திருவுருவங்களும் இருக்கின்றன. அதனால் அந்த மண்டபத்தை வலம் வந்தால் கயிலாயத்தை வலம் வந்த புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். கோவிலைப் பற்றி நிறைய தகவல்களை மிக அருமையாகத் தொகுத்துவிட்டீர்கள்.

குமரன் (Kumaran) said...

//அடியேனின் வ"ண்"மையான கண்டனங்கள்! :)
//

இரவி.

நீங்க வன்மையா கண்டிக்கலை. வண்மையா கண்டிச்சிருக்கீங்க. பெரிய வள்ளல் தான் நீங்க. கண்டிக்கிறதையும் வள்ளல்தனமா தான் கண்டிக்கிறீங்க. :-)