Friday, April 3, 2009

லலிதா சஹஸ்ரநாமம்-செளந்தர்ய லஹரியில் மீனாக்ஷி - (கும்பாபிஷேகச் சிறப்புப் பதிவு - 3)

ராஜராஜேஸ்வரம், ஜம்புகேஸ்வரம், நாகேஸ்வரம், ராமேஸ்வரம் என்பதாக எல்லா கோவில்களிலும் ஈசனது பெயரால் குறிக்கப்படுவதே வழக்கம். மதுரைக் கோவில் மட்டுமே 'மீனாக்ஷி கோவில்' என்று அழைக்கப்படுகிறது. என்னதான் சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் புரிந்தாலும், சமயக் குரவர்கள் பாடல்கள் பாடியிருந்தாலும் கோவில் அன்னையின் பெயரால் மீனாக்ஷி கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இங்கே அம்மை-அப்பர் இருவரும் வருடத்தில் 6 மாதங்கள் அரசாக்ஷி புரிவதாகச் சொல்வர். அன்னைக்கு சித்திரைத் திருவிழாவில் அரச பட்டாபிஷேகமும், சுந்தரேஸ்வரருக்கு ஆவணி மூல உத்ஸவத்திலும் நடக்கிறது.

புராணங்களில் மதுரைக்கான மற்ற பெயர்கள் ஸ்ரீ ஹாலாஸ்ய க்ஷேத்திரம், கடம்பவன க்ஷேத்திரம், த்வாதாசந்த க்ஷேத்திரம் போன்றவை.


அம்பிகைக்கான ஸ்லோகங்கள் என்று சொன்னால் உடனடியாக நமக்கு நினைவுக்கு வருவது லலிதா சஹஸ்ரநாமமும், செளந்தர்ய லஹரியும் தான். இதே போல் அம்பிகைக்கான ரூபங்கள் பல இருந்தாலும், இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தியாக 'மீனாக்ஷி, காமாக்ஷி, விசாலாக்ஷி' என்ற மூன்று ரூபங்களைச் சொல்வது வழக்கம். இதில் 'மீனாக்ஷி' என்னும் பெயர் ஸஹஸ்ரநாமத்தில் நேரடியாக ஏதும் வரவில்லை, சரி செளந்தர்ய லஹரியில் பார்த்தால் அங்கும் இல்லை. ஏன் இப்படி? என்று ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?


நன்றாக கவனித்துப் பார்த்தால், செளந்தர்ய லஹரி, லலிதா சஹஸ்ர நாமம் ஆகிய இரண்டிலும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இடுகையில் அதைக் காண்போம்.

சஹஸ்ரநாமத்தில், "வக்த்ர லக்ஷ்மி பரீவாஹ சலன் மீனாபலோசனா" என்று ஒரு நாமம். வக்த்ர லக்ஷ்மி என்பது அன்னையின் முக லாவண்யத்தைக் குறிப்பது. பரீவாஹம் என்பது ப்ரவாஹம் என்பதான பொருள் தரும் வார்த்தை. அதாவது முக லாவண்யம் பிரவாஹமாக பெருக்கெடுத்து ஓடுகிறதாம். இந்த பிரவாஹத்தில் மீன்கள் வேண்டுமே?. நீண்ட கண்களான அம்பிகையின் நேத்ரங்களே மீன லோசனம் (லோசனம் என்றால் கண்கள்). மீனாப' என்பது இங்கே மீன் போன்ற என்று பொருள் தரும். எனவே மீனாக்ஷி என்ற பெயர் நேரடியாக வரவில்லை என்றாலும் "மீனாப லோசனா" என்று சொல்லி மீனாக்ஷி ரூபத்தை லலிதா சஹஸ்ர நாமம் சொல்கிறது.



செளந்தர்ய லஹரியில் 4-5 ஸ்லோகங்களில் அன்னையின் கண்களை வர்ணித்தாலும், 56ஆம் ஸ்லோகத்தில் (இங்கே) அம்பிகை மீனாக்ஷியைப் பற்றி மறைபொருளாகச் சொல்லியிருக்கிறார் பகவத் பாதர். அதாவது, அம்பிகே! அபர்ணா!, காதுகள் வரையில் நீண்டிருக்கும் உனது கண்கள், உன் காதுகளில் தங்களைப்பற்றி கோள் சொல்லுகின்றனவோ என்று பயந்த மீன்கள் மூடாத கண்களுடன் நீரிலேயே ஒளிந்து கொண்டிருக்கின்றன. உனது நேத்ரங்களில் வாசம் செய்யும் லக்ஷ்மியும் பகலில் நீலோத்பலங்களை விட்டு உன்கண்களுக்கு வந்து விடுகிறது, இரவில் நீலோத்பலங்கள் மலர அப்புஷ்பங்களில் எழுந்தருளுகிறாள் என்று சொல்லி அன்னையின் கண்களை மீனுக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார். மீன்கள் தனது முட்டைகளை கண்களால் பார்த்தபடியே பொரிக்கச் செய்துவிடுவது போல மீனாக்ஷியின் பார்வை பட்ட மாத்திரத்தில் அவளது சகல குழந்தைகளுமான புல்- பூண்டிலிருந்து ஆரம்பித்து பிரம்மாதி தேவர்கள்வரை எல்லோரையும் தனது கருணா கடாக்ஷத்தால் நனைத்து அறிவை, உயிரை வளர்த்து உய்வித்து விடுகிறாள்.

காளிதாசன் பண்ணிய சியாமளா தண்டகத்தில் வரும் சியாமளா இந்த மீனாக்ஷி தான். இவளே "மந்திரிணீ, மாதங்கி" என்றெல்லாம் மந்திர சாஸ்த்ரத்தில் போற்றப்படுகிறாள். இவளே ஸங்கீதத்திற்கு அதிதேவதையாகச் சொல்லப்பட்டிருக்கிறாள். கானாம்ருதத்தாலேயே மோக்ஷாம்ருதத்தை அளிப்பவளாம் அன்னை மீனாக்ஷி. சியாமளா தண்டகத்தில்,


மாதா மரகத ச்யாமா மாதங்கீ மதசாலிநீ

குர்யாத் கடாக்ஷம் கல்யாணி கதம்பவன வாஸினி

என்று மரகத நிறத்தில் இருக்கும் மீனாக்ஷி, கதம்ப வனத்தில் வசிப்பவளே!, கல்யாணி என்றெல்லாம் போற்றியிருக்கிறார் மகாகவி காளிதாசன்.

மதுரையில் மீனாக்ஷி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இது மற்ற கோவில்களில், ஏன் காமகோட்டம் என்று கூறப்படும் காமாக்ஷிக்கோ, இல்லை சாரதைக்கோ கூட இல்லாத ஒரு சிறப்பு இந்த 8 வித ஆராதனைகள். அவையாவன:

திருவனந்தல் - பள்ளியறையில் - மஹா ஷோடசி
ப்ராத சந்தியில் - பாலா
6-8 நாழிகை வரையில் - புவனேஸ்வரி
12 - 15 நாழிகை வரையில் - கெளரி
மத்யானத்தில் - சியாமளா
சாயரக்ஷையில் - மாதங்கி
அர்த்த ஜாமத்தில் - பஞ்சதசி
பள்ளியறைக்குப் போகையில் - ஷோடசி

அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும் போது, அவளுக்கு செய்யும் அலங்காரங்களும் மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்ப இருக்கிறது. மாலை நேரத்தில் தங்க கவசம், வைரக்கிரீடம் போன்ற அலங்காரங்கள். காலையில் சின்ன பெண் போன்ற அலங்காரம், உச்சி காலத்தில் மடிசார் புடவை, இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டாலான புடவை என்று அலங்காரங்கள்.

எல்லா கோவில்களும் போல இங்கும் பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஹாரதி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது. அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது. மதுரையில் பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காக்ஷி. பள்ளியறை பூஜை சிவ-சக்தி ஐக்யத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம்.

15 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

வக்த்ர லக்ஷிமி பரீவாஹ சலன் மீனப லோசனா
அடுத்தது கண்களைப் பற்றிய வர்ணனை
அவளுடைய முகத்திலிருந்து வரும் அழகு இருக்கிறதே அது அப்படியே பிரவாகமாகிய நதி போல அதுவும் ஒரு நதி அல்ல இரண்டு நதிகள் பெருக்கெடுத்து ஓடிவந்து இரு கண்களாக மாறி விடுகிறதாம். ஒரு நதியின் பெயர் தயா.நாம் எவ்வளவு தப்பு செய்தாலும் தாயினும் சாலப் பரிந்து நம்மை மன்னிக்கும் தயாநதி போன்ற கண்கள். மூககவி காமட்சி அம்மன் பேரில் 100 ஸ்லோகங்கள் தயா சதகம் என்ற பெயரில் பாடியுள்ளார். மற்றோரு நதி கருணா.பக்தர்கள் மீது எப்பொழுதும் கருணை கொண்டவள்.ஆக இரண்டு கண்களும் இரண்டு தடாகங்கள் என்றால் அதில் மீன்கள் இருக்க வேண்டாமா? லலிதா தேவியினுடைய கருவிழியில் உள்ள கரு மணிகள்தான் மீன்கள். அது இரண்டும் இந்த பக்கமும் அந்த பக்கமும் ஓடிக்கொண்டே இருக்குமாம். இதைத்தான் ஆதி சங்கரர் அப்படியே எடுத்து"" வதன சௌந்தர்ய லஹரி"" என்கிறார் சௌந்தர்ய லஹரியில்.காளிதாஸரும் ""லலிதா கடக்ஷவீக்ஷ் ஐஸ்வர்ய அவ்யாஹ்த"" லலிதாவின் கடைக்கண்னின் ஒரு ரேகை பட்டாலும் கூடசெல்வம் கொழிக்குமாம்.

Kavinaya said...

//இதில் 'மீனாக்ஷி' என்னும் பெயர் ஸஹஸ்ரநாமத்தில் நேரடியாக ஏதும் வரவில்லை, சரி செளந்தர்ய லஹரியில் பார்த்தால் அங்கும் இல்லை. ஏன் இப்படி? என்று ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?//

இந்த கேள்வி எனக்கும் இருந்தது. விளக்கத்துக்கு நன்றி மௌலி.

//மீனாக்ஷி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள்.//

அப்படியா? ஒரு நாள் முழுக்க இருந்து பார்த்தால் எவ்வளவு நல்லா இருக்கும் :) ஆசை இருக்கு; ஆசி?

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திராச...மிக அருமையாகச் சொன்னீர்கள். நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா..

//அப்படியா? ஒரு நாள் முழுக்க இருந்து பார்த்தால் எவ்வளவு நல்லா இருக்கும் :) ஆசை இருக்கு; ஆசி?//

நடக்கும்...அவளருள் உங்களுக்கு இல்லாமலா இத்தனை கவிதைகள் எழுத முடிகிறது?...அருள வேண்டியதை அருள வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக அளிப்பாள், விசனம் வேண்டாம் :)

திவாண்ணா said...

//மூக்குத்தி தீபாராதனை//
அது என்னது?

திராச சார் எழுதினதும் அருமையா இருக்கு! அழகான கற்பனை!

Anonymous said...

//மதுரைக் கோவிலுக்கு அதிக அளவு செய்தவர்கள்/ உபயதாரர்கள் என்றால் அது நகரத்தாரே. பல்வேறு காலங்களிலும் பலர் புதுப்பித்தல், மற்றும் பல உபயங்களைச் செய்திருக்கின்றனர்//

அதே போல் மதுரைகாரர்கள் அதிகமாக அங்கிருந்துதான் பெண் எடுப்பார்கள் என்றும் ஒரு செய்தி உண்டு....:)

தம்பி

Anonymous said...

/சாயரக்ஷையில் - மாதங்கி //

சாயரக்க்ஷையில் பெங்களூர் வந்தாலும் BTM மாதங்கியை தரிசனம் செய்யலாம்....:)

தம்பி

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க தம்பியாரே!


//அதே போல் மதுரைகாரர்கள் அதிகமாக அங்கிருந்துதான் பெண் எடுப்பார்கள் என்றும் ஒரு செய்தி உண்டு//

அப்படியெல்லாம் தெரியவில்லையே கணேசன்...

//சாயரக்க்ஷையில் பெங்களூர் வந்தாலும் BTM மாதங்கியை தரிசனம் செய்யலாம்//

அப்படியா? :-)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திவாண்ணா...

திராச அவர்கள் எப்போதும் போல அருமையாச் சொல்லியிருக்கார். :-)

மூக்குத்தி தீபாராதனை என்பது அர்த்தஜாமத்தின் போது மூலஸ்தான மீனாக்ஷிக்கு பண்ணும் கடைசி தீபாராதனை. அது முடிந்தபின் திரை போடப்பட்டு அன்னையது வைர மூக்குத்தி பின்பக்கமாக மறைக்கப்பட்டுவிடும். அவ்வாறு மூக்குத்தி மறைக்கப்பட்டபின் அன்னை தனது மூலஸ்தானத்தில் இருந்து பள்ளியறைக்கு எழுந்தருளிவிடுவதாக ஐதீகம். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திராச,
மீனாட்சி நேத்ர தரிசனம் செய்து வைத்தமைக்கு நன்றி!
மூக்குத்தி தரிசனம் அபாரமாக ஜொலிக்கிறது!

//இதில் 'மீனாக்ஷி' என்னும் பெயர் ஸஹஸ்ரநாமத்தில் நேரடியாக ஏதும் வரவில்லை, சரி செளந்தர்ய லஹரியில் பார்த்தால் அங்கும் இல்லை. ஏன் இப்படி? என்று ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?//

:)
அழகைக் கூட்ட அழகுபடுத்தலாம்!
அழகுக்கே அழகு படுத்து-ன்னு சொன்னா எப்படி? செளந்தர்யத்தை எப்படிச் செளந்தர்யப் படுத்த முடியும்?
அதான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதே போல் மதுரைகாரர்கள் அதிகமாக அங்கிருந்துதான் பெண் எடுப்பார்கள் என்றும் ஒரு செய்தி உண்டு....:)

தம்பி//

உங்களுக்கு அப்படித் தான் வேணும்ன்னா நேராவே கேட்டு வாங்கிக்குங்களேன் கணேசரே! எதுக்கு இப்படி ஒரு பிட்டைப் போடறீங்க?

//சாயரக்க்ஷையில் பெங்களூர் வந்தாலும் BTM மாதங்கியை தரிசனம் செய்யலாம்....:)//

சாயரட்சை மட்டுமல்ல! அடியேனுக்கு முக்காலமும் மடி-தவழ் தரிசனம் ஆச்சுதே! :)

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

மதுரையில் குடமுழுக்கு அமோகமாக நடக்கும் வேளையில் நல்ல பதிவுகள்

படிக்கிறேன் - கொஞ்சம் அலுவல் அதிகம் - இனி தொடர்ந்து வருகிறேன்

நல்வாழ்த்துகள்

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க சீனா சார்...

ஆமாம், வருட கணக்குகள் முடிக்கும் நேரமல்லவா?...இந்த நேரம் உங்களுக்கு வேலைப் பளு அதிகமாகத்தான் இருக்கும்....நேரம் கிடைக்கையில் வந்து படிங்க. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கே.ஆர்.எஸ்

குமரன் (Kumaran) said...

தடாதகைப் பிராட்டியார் சித்திரையிலிருந்து ஆவணி வரை 4 (அ) 5 மாதங்கள் தானே ஆட்சி செய்கிறார். ஆவணியிலிருந்து சித்திரை வரை 7 (அ) 8 மாதங்கள் சுந்தரபாண்டியர் தானே ஆட்சி செய்கிறார். ஏன் அப்படி?

லலிதா சஹஸ்ரநாமத்திலும் சௌந்தர்யலஹரியிலும் மீனாட்சி அம்மனைப் பற்றி வந்தது வியப்பாக இல்லை; ஆனால் காளிதாசன் எழுதிய சியாமளா தண்டகம் தான் வியப்பாக இருக்கிறது. நகரேஷு காஞ்சி என்று வடக்கிலும் காஞ்சிபுரம் புகழ் பெற்றிருந்தது போல் சியாமளாவும் வடக்கில் புகழ் பெற்று இருந்தாள் போலும்.

நான்கைந்து முறை பள்ளியறை பூசையைக் காணும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

மூக்குத்தி தீபாராதனை பற்றி இன்று தான் அறிந்து கொண்டேன். நன்றி. :-)