Thursday, March 19, 2009

கொள்ளு...சாஸ்திரம்....கொள்கை


புராண காலத்தில் உஷஸ்தி என்று ஒரு மஹரிஷி. அவர் தமது மனையாளுடன் காட்டுவழியே செல்கிறார். அப்போது அகோரமான பசியை உணர்கிறார். கையில் உண்பதற்கு ஏதும் இல்லை. காட்டிலும் சுற்றுவட்டாரத்தில் ஏதும் காய்-கனிகள் கண்ணில் படவில்லை. அப்போது அதே வழியில் வந்த குதிரை வண்டிக்காரன் குதிரைக்காக தான் வைத்திருந்த வறுத்த கொள்ளு தானியத்தை சாப்பிடுகிறான். இதைக் கண்ட ரிஷி அவனிடம் தன் பசியினைப் போக்கிக் கொள்ள யாசகம் செய்கிறார். குதிரை வண்டிக்காரனோ, ஐயகோ!, இது எச்சில் பட்டதாயிற்றே, உங்களுக்கு எப்படி தர இயலும், அவ்வாறு தந்தாலும் அது பாபமாயிற்றே என்று சொல்கிறான்.

'பரவாயில்லை, கொஞ்சம் தா' என்று ரிஷி கூற, குதிரையோட்டி தனது இரு கைகளிலும் கொள்ளைக் கொண்டு வந்து கொடுக்கிறான். உஷஸ்தி முனிவர் தமது பத்னிக்கும் தந்து தானும் உண்கிறார். ரிஷி பத்னியோ, தன் கணவருக்கு மீண்டும் பசித்தால் இருக்கட்டும் என்று தமக்கு அளித்ததை தனது புடவைத் தலைப்பில் முடிந்து வைத்துக் கொள்கிறார். இதை ரிஷி கவனிக்காது கொள்ளு தானியத்தினை உண்ட பின் மீண்டும் பிரயாணத்தைத் தொடர்கிறார். சற்று நேரம் ஆன பின்னர் ரிஷி பத்னி தனது பர்த்தாவான உஷஸ்தியிடம், இன்னும் கொஞ்சம் கொள்ளு வேண்டுமா?, என்று கேட்கிறார். அப்போது ரிஷி, சீச்சீ யாருக்கு வேண்டும் அந்த எச்சில் கொள்ளூ" என்று விலக்குகிறார்.

நம்மைப் போலவே, ரிஷி பத்னிக்கும் ஆச்சர்யம், சற்று நேரம் முன்பு இந்த கொள்ளு ஆசாரக் குறைவாகத் தெரியவில்லை, ஆனால் இப்போது இது அனாசாரமாக ஆகிவிட்டதன் காரணம் என்ன என்று நினைக்கிறார். அப்போது மஹரிஷியே தமது பத்னிக்கு பதில் உரைக்கிறார். போகும் உயிரைக் காப்பாற்றுவதே தர்மம் என்ற முறையில் நியம-நிஷ்ட்டை, ஆச்சாரம் போன்ற நித்ய தர்மத்தை உதறி அதர்மமான செயலைச் செய்தார். ஆனால் தனது அனாசாரச் செயலுக்கு பிராயச்சித்தம் என்று சில கர்மாக்களை (உபவாசம் உள்பட), செய்து கொள்ள வேண்டும் என்று கூறி, தாம் செய்த ஒருவேளை அபசாரத்திற்கு பலநாட்கள் பரிகாரம் செய்ய வேண்டியிருக்கும் என்று கூறுகிறார். அக்கொள்ளை அப்போது உண்ணாதிருப்பின் அது ஆத்ம ஹத்திக்கு வழியாகிவிடும். ஆத்ம ஹத்தி பண்ணிக் கொள்வது மஹா பாபம் என்பதால் அனாசாரமான கொள்ளை உண்டதாகவும், இப்போது அவ்வாறான நிலை இல்லாததால் மீண்டும் செய்ய அவசியமில்லை என்று கூறுகிறார்
உஷஸ்தி மிகப் பெரிய தபஸ்வி, அவரே தமது அனாசாரமான ஒரு செயலுக்கு பல பிராயச்சித்தங்களைச் செய்ய வேண்டியிருந்தால், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் அறிந்தே செய்யும் தவறான செயல்களுக்கு எத்துணை ஜன்மம் எடுத்து பிராயச்சித்தம் செய்ய வேண்டியிருக்குமோ தெரியாது. எப்போது அந்த மஹரிஷி போல பிராயச்சித்தம் செய்துகொள்வது நமக்கு கடினம் என்று தோன்றுகிறதோ, அப்போதே தர்மத்துக்குப் புறம்பான செயல்களை, அவரவர் தமது ஆசாரத்திற்கு புறம்பான செயல்களை தவிர்க்க வேண்டும். இம்மாதிரியான அதர்ம, அனுஷ்டானங்களுக்கு எதிரான கார்யங்களில் இருந்து அம்பிகை நம்மைக் காக்கட்டும்.

8 comments:

மதுரையம்பதி said...

கதை மூலம் பிருஹதாரண்ய உபநிஷத்.
படங்கள் : கூகிளார்...

கீதா சாம்பசிவம் said...

தெரிஞ்ச விஷயம், பலமுறை வந்திருக்கு போலிருக்கே! என்றாலும் நினைவூட்டலுக்கு நன்னிங்கோ!

மதுரையம்பதி said...

வாங்க கீதாம்மா..

//தெரிஞ்ச விஷயம், பலமுறை வந்திருக்கு போலிருக்கே! என்றாலும் நினைவூட்டலுக்கு நன்னிங்கோ!//

உங்களுக்கு தெரியாததை நான் எழுத முடியுமா என்ன? :-)

வேற யாரும் இணையத்தில் எழுதியிருக்காங்களா?, எனக்கு தெரியாது...

கவிநயா said...

//நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் அறிந்தே செய்யும் தவறான செயல்களுக்கு எத்துணை ஜன்மம் எடுத்து பிராயச்சித்தம் செய்ய வேண்டியிருக்குமோ தெரியாது.//

அச்சோ! பயமுறுத்தீட்டீங்க! நினைவு வச்சுக்கறேன். :)

மதுரையம்பதி said...

வாங்க கவிக்கா...

//அச்சோ! பயமுறுத்தீட்டீங்க! நினைவு வச்சுக்கறேன். :)//

இது பயமுறுத்தல் இல்லை...எச்சரிக்கை என்று சொல்லலாமோ என்னமோ? இயன்றவரை, சிலவற்றைத் தவிர்க்க மனதார முயல வேண்டும் என்பதே செய்தி.

Anonymous said...

anna, me present...:)

BY,
Thambi

திவா said...

//anna, me present...:)

BY,
Thambi//

Thambi, me too!

கபீரன்பன் said...

I had read it differently !. To quench his thirst he accepts the water though it is tainted by the other person's use. when offered food he politely refuses saying that he has sufficient strength now to go in search for his food.

Any way the moral is for everyone same for everyone to see !:)

Thanks for the post.