Sunday, March 1, 2009

ஸ்ரீமுஷ்ணம் - யக்ஞ வராஹத் திருத்தலம்....

கடந்த ஜனவரி 25, தை அமாவாசை தினத்தன்று திருமுதுகுன்றம் என்ற பெயருடைய விருத்தாசலத்தில் இருக்கும் எனது சகோதரியின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். மாலையில் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராஹர் சன்னதிக்குச் செல்லும் பாக்கியம் கிட்டியது. முன்பே இந்த க்ஷேத்திரத்திற்குச் சென்றிருந்தாலும், அது மிக சிறிய வயதில், அவ்வளவாக நினைவில் இல்லை. இந்த இடுகை இப்போது நான் அங்கு சென்ற சமயத்தில் அந்த திவ்ய க்ஷேத்திரத்தை பற்றி அறிந்தது.ஸ்ரீ வராஹ க்ஷேத்திரம் என்று அழைக்கப்படும் இந்த புண்ய க்ஷேத்திரம் ஸ்வயம்வயக்த க்ஷேத்திரம் என்று கூறுகின்றனர். அதாவது பூமியில் யாராலும் தோற்றுவிக்கப்படாது, அனாதி காலம் முதல் இருந்து வரும் க்ஷேத்திரம். இவ்வாறான மற்ற க்ஷேத்திரங்களாவன; வேங்கடாத்ரி, ஸ்ரீரங்கம், கும்பகோணம், அகோபிலம், நரநாராயணம், துவாரகை, மதுரா, ஜனார்த்தனம் போன்றவை. நதிகளில் எப்படி கங்கை முக்கியமானதோ அது போல ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு க்ஷேத்திரங்களில் முக்கியமானது இந்த வராஹ க்ஷேத்திரம் என்று கூறுகின்றனர் இங்குள்ள பட்டர்கள். ஸ்ரீமுஷ்ணத்தில் எல்லா தீர்த்தங்களும் சேர்கின்றனவாம். எல்லா தேவதைகளும் இங்கிருக்கும் ஸ்வேதவராஹனுக்கு சேவை சாதிக்கும் பொருட்டு வசிப்பதாகச் சொல்கின்றனர். இப்பெருமாளை ஆராதித்து வந்தால் வைகுந்த பதவி நிச்சயம் என்று வராஹ புராணம் கூறுகிறதாம்.பெருமாள், கடலில் இருந்து பூமியை மேலே கொணர்ந்ததன் மூலம் தேவர்களுடைய துயரைத் துடைத்து அவர்களுடைய வேண்டுகோளை நிறைவேற்றியவுடன் வைகுண்டம் திரும்ப எண்ணினாராம். அப்போது பூதேவி பெருமாளை வேண்டி அவர் தன்னுடனேயே வாசம் செய்ய விரும்புகிறாள். அவளது வேண்டுகோளை ஏற்று வாசம் செய்யும் இடமே ஸ்ரீமுஷ்ணம் என்று நாரத புராணம் கூறுவதாகச் சொல்கிறார்கள். பூதேவியுடன் வாசம் செய்வதால் பூவராஹர் என்று பெருமாளுக்கு பெயர். தான் ஸ்ரீமுஷ்ணத்தில் தங்கிய சமயத்தில் தனது பரிவாரங்களையும் அங்கேயே தன்னைச் சுற்றித் தங்கச் செய்ததாகவும், அதன்படி சங்கு தீர்த்தத்தில் சங்கும், சக்ர தீர்த்தத்தில் சக்ரமும், பிரம்ம தீர்த்தத்தில் ப்ரம்மாவும், பார்க்கவ தீர்த்தத்தில் கருடனும், கோபுரத்தில் வாயுவும், பலிபீடத்தில் ஆதிசேஷனும், வாயிற்படியில் விஷ்வக்சேனருமாக அவர்கட்கு உரிய இடத்தை நிர்ணயம் செய்து கடமைகளையும் விதித்தார் என்று கூறுகின்றனர். இவர்களது கடமையாக, பகவானை சேவிப்பவர்களை எமதூதர்கள் அண்டாதிருப்பது ஆதிசேஷனுக்கும், இங்கு இறைவனை வழிபடுபவர்களை வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்வது இந்திரனுக்கும் கடமையாம். இந்த க்ஷேத்திரமானது பிரம்மாதி யோகிகளுக்கு வேதாத்யயன பூமியாகவும், தேவர்களுக்கு யாக பூமியாகவும், மனிதர்களுக்கு மோக்ஷ பூமியாகவும் திகழுமென பெருமாளே அருளியிருக்கிறாராம்.

உபநிஷத் என்றால் குருவின் அருகில் இருந்து அவர் மூலமாக அறியப்படும் மெய்ஞான உபதேசம் என்று பொருள். ரிபு என்ற முனிவர் 12 ஆண்டுகள் ஸ்ரீவராஹரை நோக்கித் தவமிருந்து தரிசனம் பெருகிறார். அந்த தரிசனத்தின் போது வராஹர் ரிபு முனிவருக்கு அளித்த உபதேசம் 'வராஹோபநிஷத்' என்று கூறப்படுகிறது. இந்த க்ஷேத்திரத்தில் இருக்கும் தீர்த்தங்கள் சிறப்புற்றுத் திகழ்கிறது, அவை, நித்ய புஷ்கரிணி, லக்ஷ்மி நாராயண தீர்த்தம், பூமி தீர்த்தம், சக்ர தீர்த்தம், சங்கு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அக்னி தீர்த்தம், வேணு தீர்த்தம் போன்றவையாம்.


கோவில் மேற்கு நோக்கிய அழகிய ராஜ போபுரத்துடன் கூடியது. துவஜஸ்தம்பத்திற்கு மேற்கிலும்,கோபுர வாசலுக்கு கிழக்கிலும் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. துவஜஸ்தம்பம் தாண்டி உள்ளே நுழைந்ததும் புருஷ சூக்த மண்டபம், மிக அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கிறது. நுழைந்தவுடன் வலதுபுரத்தில் (வடக்குத் திசையில்) உடையார் மண்டபம் என்ற பெயரில் உடையார் பாளைத்து ஜமீன் செய்த மண்டபமும் அதன் நடுவில் கண்ணாடி அறையும் உள்ளது. விசேஷ காலங்களில் பெருமாளும் தாயாரும் இங்கு சேவை சார்த்தி அருள்வராம்.

கர்பகிரஹத்தில் சுவாமி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காக்ஷி தருகிறார். முகம் தெற்கு நோக்கியதாக, பூமியை மேலே கொண்டு வந்த வெற்றிப் பெருமிதத்தில் கைகளை இடுப்பில் வைத்து, முகத்தை நிமிர்த்தி கம்பீரப் பார்வை பார்க்கிறார். மூர்த்தி சாளக்ராமத்தால் ஆனதாகச் சொல்லப்படுகிறது. கர்பகிரஹ விமானம் பிராகிருத விமானம் என்று அழைக்கப்படுகிறது. கர்பகிரஹத்தின் முன்பாக உள்ள அர்த்த மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ யக்ஞவராஹ மூர்த்தி, ஸ்ரீதேவி-பூதேவியுடன் மேற்கு நோக்கிக் காக்ஷி அளிக்கிறார். அருகிலேயே ஆதிவராஹரும், ஸ்ரீகிருஷ்ணரும் உள்ளனர். இதற்கும் முன்பாக உள்ள மஹா மண்டபத்தில் போகநாராயணர் தமது தேவியருடன் காக்ஷி தருகிறார்.

பிராகாரத்தில், தென்மேற்கு திசை மூலையில் பெருமாளை நோக்கியவாறு அம்புஜவல்லித் தாயார் சன்னதி. சன்னதியின் முன்மண்டபம் ஊஞ்சல் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. வடமேற்கு மூலையில் கோதை நாச்சியார் மற்றும் உடையவர் சன்னதிகள். வடப்புறத்தில் வேணுகோபாலன், மற்றும் விஷ்வக்சேனர் சன்னதிகள் இருக்கிறது. நான் போன நேரத்தில் இந்த மூர்த்திகளை தரிசிக்க இயலவில்லை, அர்ச்சகர் கூறி அறிந்ததே. வடக்குப் பகுதியில் குழந்தையம்மன் சன்னதி என்று ஒரு சன்னதி இருக்கிறது. இது சப்தமாதர்களது சன்னதி. இங்கே சப்த மாதர்கள் அம்புஜவல்லித் தாயாரின் தோழிகள் என்று கூறுகின்றனர். இவர்களைத் தரிசித்தபின் பிரதக்ஷணமாகச் செல்கையில் வடகிழக்குப் பகுதியில் ஸ்ரீ வேதாந்த தேசிகர் சன்னதி. நான் சென்ற நேரத்தில் இச்சன்னதியில் சில வித்யார்த்திகள் ஸ்வரம் பிசகாது வேதம் பயின்று கொண்டிருந்தது கண்ணுக்கும், காதுக்கும் இனிமையாக இருந்தது. இப்பிரஹாரத்தில் அடுத்ததாக வருவது திருமங்கை மன்னன், திருக்கச்சிநம்பி மற்றும் மணவாள மாமுனிகளது சன்னதிகள். கோவிலின் வடக்குத் திசையில் இருக்கும் வாசல் வைகுண்ட வாசலாக கருதப்பட்டு தாழிடப்பட்டிருக்கிறது.

இங்கே பெருமாளுக்கு 2 பிரம்மோத்சவங்கள் (மாசி மற்றும் சித்திரை மாதங்களில்), மற்றும் மார்கழிச் சிறப்பு பகல்-ராப்பத்து உற்சவங்களும் நடக்கிறது. இவை தவிர ப்ரதி-வெள்ளி அம்புஜவல்லித் தாயாருக்கு டோலோர்சவமும், வைகாசி விசாகம், ஆவணியில் ஸ்ரீஜெயந்தி, புரட்டாசி கொலு, மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுவதாகச் சொல்கிறார்கள். பங்குனி உத்திரத்தன்று இங்கும் திருக்கல்யாண வைபவம் மற்றும் அக்ஷய திருதியை அன்று கருட சேவையும் நடைபெறுமாம்.

கல்லால மரத்தின் கீழ் இருந்து வேதத்தை அருளிய ஈசனைப் போல இங்கே, நித்ய புஷ்கரிணி தீர்த்தத்தின் அருகில் இருக்கும் அஸ்வத்த மரமானது மிக பழமையானதாக, யுக-யுகாந்தரங்களாக இருப்பதாகவும், அதன் அடியில் இருந்து ஸ்வேத வராஹப் பெருமாள் தேவர்களுக்கு வேதாத்யயனம் செய்து வைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இங்கே பெருமாளே யக்ஞரூபமாகவும், யக்ஞாங்கமாகவும், யக்ஞத்துக்கு உரியவனாகவும், யக்ஞத்தை புசிப்பவனாகவும், யக்ஞேஸ்வரனாகவும், யக்ஞபலத்தை தருபவனாகவும் இருக்கிறானாம். இம்மரத்தடியில் உட்கார்ந்து வேத பாராயணம், மந்திர ஜபம் போன்றவை செய்தால் அளவற்ற பலன் என்று கூறுகிறார்கள்.

ஸ்ரீ வராஹ மூர்த்தியின் நான்கு பாதங்கள் நான்கு வேதங்களாகவும், வராஹம் எழுப்பும் சப்தம் சாம கோஷமாகவும், அதன் தந்தம் யூபஸ்தம்பமாகவும், நாவே வேள்வித்தீயாகவும், உடலில் இருக்கும் உரோமங்கள் தர்பைப் புல்லாகவும் அதன் உமிழ்நீரானது நெய்யாகவும், மூக்கு சுருவம் என்று சொல்லப்படும் ஹோமக் கரண்டியாகவும், எலும்புகள் மந்திரமாகவும், ரத்தம் சோமரசமாகவும், அதன் பிராணன் அந்தராத்மாவாகவும், இதயம் தக்ஷிணையாகவும், தலை பிரம்மனாகவும், குடல் உத்காதாவாகவும், குறி ஹோதாவாகவும், சரீரம் யக்ஞசாலையாகவும் நடை ஹவ்பகவ்யம் என்றும் வாயு புராணத்தில் கூறப்பட்டிருக்கிறதாம். [இந்த குறிப்பு அங்கிருந்த அர்ச்சகர் சொல்லச் சொல்ல சிறு தாளில் எழுதிக் கொண்டேன், தவறுகள் இருக்கலாம், தெரிந்தவர்கள் பிழைதிருத்தம் செய்தால் நலம்]

கோபாயேத் அநிசம் ஜகந்தி குஹநா போத்ரீ பவித்ரீ க்ருத
ப்ரஹ்மாண்ட: ப்ரள்யோர்மிகோஷ குருபிர் கோணாரவை: குர்குரை
மத் தம்ஷட்ராகுர கோடி-காட-கடநா-நிஷ்கம்ப-நித்யஸ்திதி:
ப்ரஹ்ம ஸ்தம்ப மஸெளத் அஸெள் பகவிதீமுஸ்தேவ் விச்வம் பரா:

என்று ஸ்ரீவேதாந்த தேசிகர் தமது தசாவதார ஸ்தோத்ரத்தில் இந்த அவதாரத்தைப் போற்றுகிறாராம். இதன் பொருள், மஹாப் பிரளய காலத்தில் கரைபுரண்டு பொங்கியெழும் சமுத்திரத்தின் அலைகளின் ஓசைபோல் குர்-குர் என்று மூக்கிலிருந்து வரும் சப்தத்தால் இவ்வுலகினைப் பரிசுத்தமாக்கிய பன்றியாக அவதரித்த பெருமான், எல்லா உலகங்களையும் காப்பாற்றக் கூடியவர். மகிமை பொருந்திய இந்த பூமிதேவி அந்த வராஹப் பெருமானின் கோரைப் பல்லின் நடுவில் ஒரு கோரைக் கிழங்கு போல கெட்டியாக அசைவற்று இருத்தப் பெற்றாள். இவ்வாறாக பூமிதேவியே உறைந்திருப்பது இப்பெருமானின் பல் நுனியில் என்றால் அந்த உருவத்தில் பெருமை சொல்லவும் தகுமோ? என்பதாம்.

கலியில் வேங்கடவனே பலப்பிரதாயகன் என்பர். அவனது அஷ்டோத்திரத்திலும் முத்தாய்ப்பாக "ஸ்ரீயக்ஞ வராஹாய நம:" என்ற நாமம் வரும். இவ்வாறான பெருமைசேர் ஸ்வேத வராஹனைத் தொழுது நாமும் நமக்கு விதிக்கப்பட்ட யக்ஞாதிகளில் நாட்டம் ஏற்படப் பிரார்த்தனை செய்வோம்.

24 comments:

மதுரையம்பதி said...

இந்த இடுகையில் உள்ள படங்கள் அனைத்தும் கூகிளாரின் உபயம். இப்படங்களை வலையேற்றியவர்களுக்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தைப் பற்றிய இந்தப் பக்திக் கட்டுரைக்கு நன்றி மௌலி. உங்களுடன் நானும் இந்தத் திருக்கோவிலுக்கு வந்து பூவராகமூர்த்தியைத் தரிசித்தேன் இப்போது.

விருத்தாசலம் என்ற பெயர் தவறாக விருதாஜலம் என்று தட்டச்சு ஆகியிருக்கிறது. சரி செய்துவிடுங்கள்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அருமையாக ஸ்ரீமுஷ்ண வராகப் பெருமாளின் தரிசனம் செய்து வைத்தமைக்கு நன்றி-ண்ணா!

நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு "வராஹஸ்ய" பவதி-ங்கிற செளந்தர்யலஹரி தான் ஞாபகம் வருது! துன்பக் கடலில் மூழ்கி இருப்போரை மீட்டு எடுக்கும் வராகத்தின் கோடு...

ஸ்ரீமுஷ்ணம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றில்லையாயினும், மிகவும் சிறப்புள்ள அபிமானத் தலம்!

//பூமிதேவி அந்த வராஹப் பெருமானின் கோரைப் பல்லின் நடுவில் ஒரு கோரைக் கிழங்கு போல கெட்டியாக அசைவற்று இருத்தப் பெற்றாள்//

பெருமாளுக்கு இங்கு கோரைக் கிழங்கால் செய்த லட்டு போன்ற உணவே நிவேதனம் என்பது இன்னொரு உபரித் தகவல்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பூமிப் பிராட்டியுடன் கூடியுள்ள ஸ்ரீமுஷ்ண வராகப் பெருமாளைப் பற்றிச் சொல்லும் போது...வராக சரம ஸ்லோகம் நினைவுக்கு வருகிறது!

பார்த்தனுக்கு கண்ணன் சொன்ன "சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்னும் சரமச் செய்யுளைப் போன்றே, பூமிப் பிராட்டிக்கும் சொன்ன சரமச் செய்யுள் ஒன்று உண்டு! அதைச் சொல்லுங்களேன்!

அப்படியே முடிந்தால் ஸ்ரீ+முஷ்ணம் பெயர்க் காரணம் என்னன்னும் சொல்லுங்கண்ணா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஸ்ரீமுஷ்ணம் பற்றிய இன்னொரு அருமையான தகவல்!

சுவாமிப் புறப்பாட்டின் போது, பெருமாள் மசூதியின் முன் நிற்பார்! அவருக்குப் பட்டு வஸ்திரமும், மாலையும், இனிப்பு மிட்டாயும் மசூதியில் இருந்து தரப்படும்!

பின்னர் பெருமாளுக்கு மசூதியின் முன்பே தீப ஆரத்தி எடுப்பார்கள்! அவ்வமயம் அவர்கள் மறை நூலில் இருந்தும் காஜி ஓதுவார்கள்!

பின்னரே பட்டாசு வெடித்து, சுவாமி ஊருலா கண்டு அருளுவார்!
நவாப் ஒருவருக்கு பெருமாளின் அஸ்வத்த மரத்து நித்ய புஷ்கரிணித் தீர்த்தம் குணம் செய்து வைத்ததால் இத்தனை நன்றிக் கடனாக மசூதியில் மண்டகப் படி!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பெருமாளே
யக்ஞரூபமாகவும், யக்ஞாங்கமாகவும்,
யக்ஞத்துக்கு உரியவனாகவும்,
யக்ஞத்தை புசிப்பவனாகவும், யக்ஞேஸ்வரனாகவும்,
யக்ஞபலத்தை தருபவனாகவும்//

அருமை! அருமை!
அவனே யக்ஞம்! அவனே யக்ஞ பலம்! அவனை வணங்குவதே யக்ஞமாகி விட்டதே!

//இம்மரத்தடியில் உட்கார்ந்து வேத பாராயணம், மந்திர ஜபம் போன்றவை செய்தால் அளவற்ற பலன் என்று கூறுகிறார்கள்//

அந்த அஸ்வத்த மரத்தின் கீழ் அமர்ந்து பல பேர் காயத்ரி சொல்லிவிட்டு வருவார்கள்! நீங்களும் சொல்லிட்டு வந்தீங்களா?

//அதன் தந்தம் யூபஸ்தம்பமாகவும்//
//குடல் உத்காதாவாகவும்//

புரியலை! புதசெவி ப்ளீஸ்!

//கலியில் வேங்கடவனே பலப்பிரதாயகன் என்பர். அவனது அஷ்டோத்திரத்திலும் முத்தாய்ப்பாக "ஸ்ரீயக்ஞ வராஹாய நம:" என்ற நாமம் வரும்//

வேங்கடமும் ஆதி வராகத் தலம் அல்லவா!
அங்கும் முதல் வழிபாடு வராகப் பெருமாளுக்குத் தானே!

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ். நான் இங்கு சொல்லாது விட்டதை நீங்க ஒரு இடுகையாக உங்க இஷ்டைலில் எழுதிடுங்க.

மதுரையம்பதி said...

வாங்க குமரன். தவற்றினை சுட்டியமைக்கு நன்றி, திருத்திவிட்டேன்.

கவிநயா said...

ஸ்ரீமுஷ்ணம் பற்றிய விவரங்களுக்கு மிக்க நன்றி மௌலி.

//கர்பகிரஹத்தில் சுவாமி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காக்ஷி தருகிறார். முகம் தெற்கு நோக்கியதாக, பூமியை மேலே கொண்டு வந்த வெற்றிப் பெருமிதத்தில் கைகளை இடுப்பில் வைத்து, முகத்தை நிமிர்த்தி கம்பீரப் பார்வை பார்க்கிறார்.//

இதை எங்கே பார்த்திருக்கேன்னு தெரியல, ஆனால் மனதில் பதிந்து விட்ட, ரொம்ப பிடித்த திருக்கோலம் :)

Raghav said...

மெளலி அண்ணா, ஸ்ரீமுஷ்ணத்தை உங்க பதிவில் நல்லபடியா தரிசிச்சேன்.

மதுரையம்பதி said...

வாங்க ராகவ். அடுத்து நீங்க போக இருக்கும் கோவில்கள் லிஸ்டில் இத்தலத்தையும் சேர்த்துக்கோங்க...மிக அருமையான கோவில். பெருமாள் நம்மிடம் பேசு என்று சொல்லிக் கேட்கக் காது கொடுத்துக் காத்திருக்கும் கோலம்.

மதுரையம்பதி said...

வாங்க கவிக்கா...நன்றி...

KABEER ANBAN said...

Aalaya tharisanththiRkku Nandri.
bhoo varaahar aruL perukattum.
Nawab patri KRS sonna thagavalukkum nandri.

கிருஷ்ணமூர்த்தி said...

ஸ்ரீ வராக உவாச:
ஸ்த்திதே மநஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதி யோ நர:
தாதுஸாம்யே ஸ்த்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம் |
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் ||
- வராக சரம ஸ்லோகம்

அதாவது, நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை ஒரு கணமேனும் மகாவிச்வாசத்துடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல் ஸ்மரணை இன்றி கிடக்கும்போது நான் அவனைப்பற்றி நினைக்கிறேன்!

இதையே உறுதியாய் பூமாதேவி பற்றிக்கொண்டாள். பிறகு கலியுகத்தில் பகவத் ஆக்ஞையின் பேரில் ஆண்டாளாக அவள் அவதாரம் செய்தபொழுது இந்த பொருளையே தம் திருப்பாவை வாயிலாக பரப்பினாள்.

மிக நன்றியோடு இங்கே இருந்து எடுக்கப்பட்டது:
http://bhakthi.wordpress.com/category/tiruppavai/page/4/

கீதா சாம்பசிவம் said...

ஸ்ரீமுஷ்ணம், அபி அப்பா தயவாலே கிடைச்சது. போயிட்டு வந்தோம், இன்னும் படிக்கலை, படிச்சுட்டு வரேன்.

மதுரையம்பதி said...

வாங்க கீதாம்மா. அத்தி பூத்தாற்போல ஏது இந்த பக்கம்?.. :-)

நிதானமா படிச்சுட்டு வாங்க. :-)

மதுரையம்பதி said...

வாங்க கிருஷ்ணமூர்த்தி சார். முதல் வருகைக்கு நன்றி. :-)

வராக சரம ஸ்லோகத்திற்கும், பதிவு லிங்க்கிற்கும் மிகவும் நன்றி.

மதுரையம்பதி said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க கபீரன்பரே!... :-)

கீதா சாம்பசிவம் said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர். ஊருக்குப் போயிருந்தேனே, தெரியுமில்லை?? அப்புறம் என்ன கேள்வி, அத்தி, ஆவக்காய் எல்லாம்??? அதோட கணினியிலே வேறே பிரச்னை! படிச்சாலும் பின்னூட்டம் கொடுக்க முடியலை! :((( இன்னிக்கு இது வரை ஓகே! இனிமேல் தெரியலை!:))))))

கிருஷ்ணமூர்த்தி said...

வரவேற்புக்கு நன்றி. பின்னூட்டம் தான் முதல்முறையே தவிர, உங்களுடைய வலைப் பதிவுகளை அவ்வப்போது வந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

மதுரையம்பதி said...

//பின்னூட்டம் தான் முதல்முறையே தவிர, உங்களுடைய வலைப் பதிவுகளை அவ்வப்போது வந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.//

நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கிருஷ்ணமூர்த்தி said...
//அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்//

வேண்டுகோளை ஏற்று, வராக சரம சுலோகம் எடுத்துத் தந்தமைக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி ஐயா!

வராகரைப் பற்றிய பதிவில், அவர் சரமச் செய்யுளும் இருப்பது, இங்கு கூடும் அடியார்க்கு எல்லாம் ஒரே இடத்தில் படிக்க ஏதுவாகும் அல்லவா? நன்றி!

இப்படியான சத்சங்கத்தில், கொடுத்தும் கொண்டும் இருப்பதே குணானுபவத்தின் பெருமை!

நேயம் சத்ஜன சங்கே சித்தம்!
தேயம் தீன ஜனாயச வித்தம்!
பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்!

ஷைலஜா said...

மௌலி

இந்தப்பதிவிற்கு போனவாரம்பின்னூட்டமிட்டேன்.......உடனேயே காணாமபோயிட்ட்டதே;;(காக்காகொண்டுபோனதா:))

சரிவிஷயத்துக்குவரேன்
இந்தஸ்ரீமுஷ்ணம்பதிவு
ரொம்ப அருமை
\இன்னும்வராஹமூர்த்தியப்
பாக்காதஏக்கம் ஜாஸ்தி ஆகிறது.

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
கிருஷ்ணமூர்த்தி said...
//அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்//

வேண்டுகோளை ஏற்று, வராக சரம சுலோகம் எடுத்துத் தந்தமைக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி ஐயா!

வராகரைப் பற்றிய பதிவில், அவர் சரமச் செய்யுளும் இருப்பது, இங்கு கூடும் அடியார்க்கு எல்லாம் ஒரே இடத்தில் படிக்க ஏதுவாகும் அல்லவா? நன்றி!

இப்படியான சத்சங்கத்தில், கொடுத்தும் கொண்டும் இருப்பதே குணானுபவத்தின் பெருமை!

நேயம் சத்ஜன சங்கே சித்தம்!
தேயம் தீன ஜனாயச வித்தம்!
பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்!

March 6, 2009 12:44 AM
<<<<<

ம்ம்ம் நெறய அறிஞ்சிருக்கீங்க எல்லாரும்...சத்சங்கத்துல நுழைவதே மகிழ்ச்சியா இருக்கு.நன்றிமதுரைக்காரருக்கு.