Monday, February 9, 2009

சதாசாரம், சிஷ்டாசாரம் அறிமுகம்....


தர்மங்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரம் வேதங்களும், வேதாங்கங்களும் என்றே சொல்லியிருக்கிறார்கள். வேதங்களை அறிந்துணர்ந்த ரிஷிகள் அதற்கு கிரந்தங்களை, ஸ்ம்ருதிகளை அளித்துள்ளனர். இவற்றிலேயே அனுஷ்டிக்கும் முறைகளான ஆசாரம் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றை கடைபிடிக்கும் மனிதனது ஆசாரம் வெறும் சந்தோஷத்திற்கும், பகட்டிற்கும் மட்டுமல்லாது மனத்தூய்மைக்கும், செயல்களிலும், எண்ணங்களிலும் தவறுகள் வாராது காப்பதற்குமே என்று வகுக்கப்பட்டிருக்கிறது. வேதமறிந்தவர்கள், வேதத்தைப் போற்றுபவர்கள் பின்பற்றும் இவை சதாசாரம் அல்லது சிஷ்டாசாரம் என்று கூறப்படுகிறது.

ஸ்த்துக்கள் மிகுந்த ஆசாரம் ஸதாசாரம். சிஷ்டர்கள் தமது குருவினிடமிருந்து கைக் கொண்டதால் சிஷ்டாசாரம். பொதுவாக ஆசாரத்தை தர்மம் என்று கூறினாலும், தர்மத்திற்கு ஸஹாயமான உபதர்மங்களை சதாசாரம் என்றும் கூறியிருக்கின்றனர். உதாரணமாக, ஸந்தியாவந்தனம் என்பது நித்ய கர்மா, அதுவே வேதியருக்கு தர்மமும். அதனை செய்ய ஸ்நானம், கச்சம் அணிவது, புண்ட்ரமிட்டுக் கொண்டு செய்வது என்பது ஆசாரம். ஆசாரமில்லாதவனை வேதம் கூட சுத்தமாக்காது என்று எனது இல்லத்தில் அடிக்கடிக் கூறித்தான் வளர்த்தார்கள்.

ஆசாரத்தைப் பற்றி ஸ்ரீவத்ஸ சர்மா [பரமாச்சாரியாரிடத்து அதிக தொடர்பில் இருந்தவர்] அவர்கள் கூறும்போது, கர்மா அல்லது தர்மம் என்பது பாபம் என்னும் நோயை அகற்றும் மருந்து என்றும், இம்மருந்துடன் இருக்க வேண்டிய பத்தியமே ஆசாரம் என்றும் அழகாகக் கூறியுள்ளார். ஒவ்வொரு யுக/மன்வந்திரங்களும் முடிந்து, பிரளயம் ஏற்பட்டு பின்னர் மீண்டும் சிருஷ்டி ஏற்படும் போது வேதம் ஓதுபவர்கள், முந்தைய யுகத்தில்/மன்வந்திரத்தில் வேத அத்யய்னம் செய்தவர்கள் அனுசரித்தவற்றை போன்றே தொடர்வதே சிஷ்டாசாரம் என்று கூறக் கேட்டிருக்கிறேன்.

மத்ஸய புராணத்தில் சிஷ்டாசாரம் என்பதற்கு எட்டு குணங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவையாவன:

1. தானம் - நல்லவழியில் சம்பாதித்த பொருளை பிறர்க்கு, யாருக்கு அப்பொருள் தேவையிருக்கிறதோ அவர்களுக்கு அளித்தல்

2. சத்யம் தவறாமை - தான், கண்டு, கேட்டு உணர்ந்ததை உள்ளது உள்ளபடி உரைத்தல். தனக்கு ஏற்றபடி மாற்றிக் கூறாதிருத்தல்

3. தபஸ் - இந்திரியங்களை அடக்கி வசப்படுத்தல், ஏகாதசி போன்ற உபவாசம் இருத்தல், மெளனம் பழகுதல் போன்றவை

4.லோபமின்மை - நேர்மையான வழியில் சம்பாதித்ததை மட்டும் அனுபவித்தல், பிறரை மிரட்டி, தட்டிப் பறித்து, வஞ்சித்து பொருள் சேர்க்காமை

5. வித்யை - தபஸை அடிப்படையாகக் கொண்டு மனோ நாசம் ஏற்பட, பிரம்ம ஞானத்திற்கான வித்யையில் இடுபடுதல்

6. யாகம் போன்ற சத்கார்யத்திற்கு உதவுதல், ஹவிஸுக்கு செலவு செய்தல், வேதாத்யனம் செய்பவர்களுக்கு தக்ஷிணை அளித்தல், வேதங்களைக் கற்றல்

7. பூஜனம் - இஷ்ட, குல தெய்வங்களை ஆராதித்தல், அதிதி சத்காரம், தேவ, பித்ரு, பூத திருப்தி செய்தல்

8. இந்திரிய நிக்ரஹம் - தனக்காகவோ, பிறருக்காகவோ பஞ்ச இந்திரியங்களை விஷய வஸ்துக்களில் பிரவர்த்திக்காது இருத்தல்.

பிரம்மாவின் மானஸ புத்ரர்களான பிருகு, அத்ரி, அங்கிரஸ், வசிஷ்டர், புலஸ்தியர், மரீசி, புலஹர், க்ரது, மனு, தக்ஷன், போன்றவர் இவ்வாறான ஆசாரங்களைப் பின்பற்றினராம். மூன்று வர்ணத்தாருக்கும் ஆசார, அனுஷ்டானங்கள் கூறப்பட்டிருக்கிறது. இன்று செய்பவர் குறைந்து அல்லது வழக்கொழிந்ததால் அவை ஏதோ வேதியருக்கு மட்டும் என்ற தோற்றம் நிலவுகிறது. இவற்றை சிறிதளவேனும் நாமும் பின்பற்றி ஜன்மத்தைக் கடைத்தேறுவோம்.

7 comments:

Raghav said...

அருமையான தொடக்கம் அண்ணா..
நான் இனிமேல் தான் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.. உங்க மூலமாகவே அனுட்டானங்கள் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைச்சது ரொம்ப மகிழ்ச்சி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சூப்பர்...
அங்கங்க புரியலை-ன்னாலும், ஒட்டுமொத்தமாப் படிக்கும் போது புரியுது!

//பிரவர்த்திக்காது இருத்தல்//
//அதிதி சத்காரம்//
இந்த டெர்மினாலஜி-ன்னா என்னண்ணா?

//சத்யம் தவறாமை - தான், கண்டு, கேட்டு உணர்ந்ததை உள்ளது உள்ளபடி உரைத்தல். தனக்கு ஏற்றபடி மாற்றிக் கூறாதிருத்தல்//

சூப்பர்! இது மிகவும் முக்கியம்! தன் சுயநலக் காரணங்களுக்காக, மூலமான ப்ரமாணத்தைப் பாதிக்காது இருத்தல்-ன்னு சொல்வாங்க! சரி தானே அண்ணா?

//மூன்று வர்ணத்தாருக்கும் ஆசார, அனுஷ்டானங்கள் கூறப்பட்டிருக்கிறது//

நான்காவது வர்ணத்தாருக்கும் ஆசார, அனுஷ்டானங்கள் எதுவும் கிடையாதா-ண்ணா?

Anonymous said...

சதாசாரம், சிஷ்டாசாரம் ஒரு எளிய அறிமுகம்.வாழ்த்துக்கள்.இளைய தலைமுறையில் நம்மில் பலர், இதை செய்வதில்லை, அல்லது, முழு நம்பிக்கை இல்லை, அல்லது உணர்வு பூர்வமாகச் செய்வது இல்லை, அல்லது பிறர் பின் பற்றுவதை கேலி செய்கிறார்கள்.

இவற்றுக்கு ஒரு மாற்றாக , அருமருந்தாக உங்கள் பதிவு அமையட்டும்.

அறியாதவ்ர்கள் அறியட்டும். அறிந்தவர்கள் மென்மேலும் அறியட்டும். மறந்தவர்கள் இதனைப் படித்தால் தம் கடமைகளை மீண்டும் தொடங்கட்டும்.

வேத மாதாவிற்கு சிரசாஞ்சலி.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ராகவ்....தெரிந்து கொண்டால் போதாது, முயன்று கடைப்பிடிக்கப் பாருங்கள்..

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ்

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க பரவஸ்து அண்ணா...ஏதோ நான் கேள்விப்பட்டதை, படித்ததை எழுதியிருக்கிறேன். உங்களைப் போன்ற பெரியவர்கள் வந்து மேலும் தகவல்கள் அளிக்க வேண்டும்.

Anonymous said...

//சதாசாரம், சிஷ்டாசாரம் ஒரு எளிய அறிமுகம்.வாழ்த்துக்கள்.இளைய தலைமுறையில் நம்மில் பலர், இதை செய்வதில்லை, அல்லது, முழு நம்பிக்கை இல்லை, அல்லது உணர்வு பூர்வமாகச் செய்வது இல்லை, அல்லது பிறர் பின் பற்றுவதை கேலி செய்கிறார்கள்.

இவற்றுக்கு ஒரு மாற்றாக , அருமருந்தாக உங்கள் பதிவு அமையட்டும்.

அறியாதவ்ர்கள் அறியட்டும். அறிந்தவர்கள் மென்மேலும் அறியட்டும். மறந்தவர்கள் இதனைப் படித்தால் தம் கடமைகளை மீண்டும் தொடங்கட்டும்.

வேத மாதாவிற்கு சிரசாஞ்சலி.//

me too.... please try to postmore articles related to this topic, ....

Regards,
Thambi