Saturday, February 7, 2009

எம்பாரைப் போற்றுவோம்...


இன்று ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரியர்களுள் ஒருவரான எம்பார் திரு நக்ஷத்திரம், தை புனர்வசு. சதா சர்வ காலமும் தமது ஆசார்யரது (உடையவர்) நிழலாக வாழ்ந்தவர் எம்பார் ஸ்வாமிகள் என்று துறவற நாமம் பெற்ற கோவிந்தப் பெருமாள். இவர் அவதரித்த ஊர் ஸ்ரீ பெரும் புதூருக்கு அருகில் இருக்கும் மதுர மங்கலம் என்னும் ஊர். இவரது தாய்-தந்தையர் பெயர் முறையே, பெரிய பிராட்டி, கமலநயன பட்டர் என்பதாம். எம்பார் முதலில் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டிருந்திருக்கிறார். அவரை ஸ்ரீ-வைஷ்ணவத்தை, குலாசாரத்தினை பின்பற்ற வைத்த பெருமை பெரிய திருமலை நம்பிகளைச் சாரும் என்று படித்த நினைவு. பெரிய திருமலை நம்பிகளுடன் வாழ்ந்து எல்லா சாஸ்திர்னக்களையும், திவ்யப்ரபந்தங்களையும் கற்றவராம்.இவரது இரக்க குணத்திற்க்கு ஈடாக ஒரு நிகழ்ச்சியைச் சொல்கின்றனர். ஒரு சமயம் நந்தவனத்தில் புஷ்ப கைங்கர்யத்திற்க்காக பூக்களைக் கொய்து கொண்டு இருந்த பொழுது ஒரு பாம்பு தனது நாவினை வெளியே நீட்டிக்கொண்டு மிகுந்த வேதனையுடன் இருப்பதைக் கண்டாராம். அந்த அரவத்தின் நாவில் முள் தைத்திருப்பதால் அது வேதனையுடன் இருப்பதை அறிந்த ஸ்வாமிகள், அம்முள்ளை எடுத்து அப்பாம்பின் வேதனையைத் தீர்த்தாராம். இவரது ஜீவ காருண்யத்திற்கு இதைவிட ஒர் உதாரணம் சொல்ல முடியுமா என்ன?


ஒருமுறை உடையவர் ஸ்ரீரங்கத்தில் ராமாயணப் பிரவசனத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்புகையில் திருமலை நம்பிகளிடத்து விடைபெறுகிறார். அப்போது திருமலை நம்பிகள், உடையவரிடம் பிரவசனத்தின்னை நடத்திக் கொடுத்தமைக்கு நன்றி பகன்று, இவ்வரிய பிரவசனத்திற்கு சம்பாவனை தர தன்னிடம் ஏதும் இல்லையே என்று வருந்தினாராம். அப்போது உடையவர், அவ்வாறு சம்பாவனை தருவதாக இருந்தால், 'திருத்திப் பணி கொண்ட கோவிந்தனை' தன்னுடன் அனுப்பித் தாருங்கள் என்று கேட்டாரம். நம்பிகளும் கோவிந்தப் பெருமாளை அழைத்து, இன்று முதல் உடையவரை தானாக (நம்பிகளாக) நினைத்து இருப்பீராக என்று கூறி அனுப்பியதாகச் செய்தி.


சிறு வயதில் யாதவப் பிரகாசரது குருகுலத்தில் உடையவருடன் கல்வி கற்றிருக்கிறார் கோவிந்தப் பெருமாள். அப்போது உடையவருக்கு தீங்கு விளைவிக்க முயன்றபோது, அதிலிருந்து காப்பாற்றியவர். பிற்காலத்தில் உடையவரை விட்டகலாது, நிழல் போல் தொடர்ந்ததால் இவருக்கு 'ராமானுஜ பதச்சாயா' அதாவது ராமனுஜரின் நிழல் என்று போற்றப்படுகிறார்.


இவர் திருமணமானவராகிலும், இல்லற தர்மத்தில் நாட்டமில்லாது, எப்போதும் ஆசார்யரது திருவடியில் இருந்திருக்கிறார். இச்சமயத்தில் தமது தாயின் கட்டாயத்தினால் தனது மனைவியை சந்தித்து அந்தர்யாமியான இறைவனது குண விசேஷங்களை எடுத்துரைத்துள்ளார். இவரது வைராக்கியத்தை அறிந்த உடையவர், கோவிந்தப் பெருமாளுக்கு துறவறம் அளித்து தனது பெயரைச் சுருக்கி 'எம்பார்' என்று துறவற நாமம் கொடுத்தாராம். இவர் எப்போதும் ஆசாரியானே சர்வம் என்றும், பெருமாளது லீலாவிபூதிகளே வாழ்க்கை என்று காட்டியிருக்கிறார். இவரது நன்னாளான இன்று இவரைப் பணிவோம். இறைவன் இவரைப் போன்ற குருபக்தியை நமக்கும் அளிப்பாராக.


சில வருடங்கள் முன் ஸ்ரீ ஏ.எம்.ஆர் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையே இவ்விடுகைக்கு ஆதாரம். படித்ததில் நினைவு இருந்ததை வைத்து எழுதியிருக்கிறேன். தவறுகள் இருந்தால் அது எனது நினைவாற்றல் குறைவே.

16 comments:

Raghav said...

அருமை மெளலி அண்ணா..

எம்பார் திருநக்ஷத்ரத்தன்று அரங்கனை சேவிக்கும் பாக்கியமும் கிடைத்தது அவனருளே.

அரங்கன் தேரில் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி சேவை சாதித்தது கண்கொள்ளா காட்சி..

Raghav said...

// 'ராமானுஜ பதச்சாயா' அதாவது ராமனுஜரின் நிழல் என்று போற்றப்படுகிறார்.//

எம்பாரின் திருவடி நிழலே சரணம்..

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கோவிந்தப் பெருமாள் என்னும் எம்பார் திருவடிகளே சரணம்!

எம்பார் திருநட்சத்திரப் பதிவுக்கு நன்றி மெளலி அண்ணா!

உடையவர் இவருக்கு எம்பெருமானார் என்ற சன்னியாச நாமத்தைத் தான் அளித்தார்!
ஆனால் ஆசார்யனின் பட்டப் பெயரினைத் தன்னால் தாங்கவும் முடியுமோ? அதனால் தாங்கவல்ல பெயராய்த் தாரும் என்று ஆசார்யனிடம் மறுக்கவே, அதையே சுருக்கி "எம்பார்" என்று அளிக்கப்பட்டது!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஒருமுறை உடையவர் ஸ்ரீரங்கத்தில் ராமாயணப் பிரவசனத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்புகையில் திருமலை நம்பிகளிடத்து விடைபெறுகிறார்//

திருவரங்கம் இல்லீங்கண்ணா! திருமலை திருப்பதியில் இராமாயண பாடங்கள். அங்கிருந்தே விடைபெறுகிறார்!

//இச்சமயத்தில் தமது தாயின் கட்டாயத்தினால் தனது மனைவியை சந்தித்து//

அவரின் தாயார் வருத்தப்பட, ஆசார்யர் இராமானுசர் தாம் துறவறவாதி என்றாலும், இதில் தலையிடு, எம்பாரைக் கூப்பிட்டு அனுப்பி, இல்லறக் கடமைகளை அவசியம் செய்து வாரும் என்று அறிவுறுத்தி அனுப்புகிறார்!

ஆனாலும் எம்பார் மிகுந்த வைராக்கியசாலி என்பதால், இராமானுசர் பேச்சைக் கேட்டுக் கொண்டாரே தவிர, மனைவியிடம் போய், அவரோடு இல்லற வாழ்வு ஆற்றாது, அவளிடமும் உபன்னியாசமே செய்கிறார்!

விஷயம் மீண்டும் இராமானுசர் காதுக்கு வர, இதெல்லாம் எதுக்கு என்னிடம் கொண்டு வருகிறீர்கள் என்று சலித்துக் கொள்ளாமல், எம்பாரைக் கூப்பிட்டு வினவுகிறார்.

எம்பாரோ, தம்மால் மனைவியுடன் இருக்க முடியவில்லை, ஏனென்றால், அந்தர்யாமியான பகவானின் ஒளி அறை முழுதும் இருக்கிறது! ஒளி நிறைந்த இடத்தில் போகத்துக்கு இடமேது என்று ஆசார்யர்ரையே பதிலுக்குத் திருப்புகிறார்.

எம்பார் வைராக்கியத்தை ஒன்றுமே செய்ய முடியாது என்பதை அறிந்து கொண்ட இராமானுசர், இத்தனை வைராக்கியம் உள்ளவருக்கு ஏன் மணம் செய்வித்தீர்கள் என்று, அவர்கள் குடும்பத்தைக் கடிந்து கொண்டார்.

இத்தனை வைராக்கியம் உள்ளவர் ஆசிரமத்தை மாற்றிக் கொள்ளுதல் நலம் என்று சொல்லி,பின்னர் எம்பாரின் மனைவிக்கு வழி வகைகள் செய்து, எம்பாருக்குத் துறவறம் அளிக்கிறார்!

கபீரன்பன் said...

வைஷ்ணவ ஆசார்யார்களின் பரிச்சியம் எனக்கு மிகக்குறைவு. கேள்வியை கண்டு நகைக்க வேண்டாம்.

// உடையவரை விட்டகலாது, நிழல் போல் தொடர்ந்ததால் இவருக்கு 'ராமானுஜ பதச்சாயா' அதாவது ராமனுஜரின் நிழல் என்று போற்றப்படுகிறார் //

வைஷ்ணவத்தில் உடையவர் என்ற வார்த்தை வெறும் ராமானுஜருக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதா அல்லது வேறு பலரையும் --குரு என்பது போல்-- குறிக்கப்பயன்படுமா?

மதுரையம்பதி said...

//அருமை மெளலி அண்ணா.. //

வாங்க ராகவ்....அருமை மெளலின்னு சொன்னதை எருமை மெளலின்னு படிச்சேன் முதல்ல :-)

மதுரையம்பதி said...

வாங்க கபீரன்பரே...

எனக்கும் வைஷ்ணவ ஆசாரியார்கள் பற்றி அதிகம் தெரியாது, இப்போதுதான் தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.

எனக்குத் தெரிந்தவரையில் 'உடையவர்' என்று ராமானுஜரை மட்டுமே குறிக்கின்றனர்.
எதனால் இந்தப் பெயர் என்றும் தெரியவில்லை. வைஷ்ணவ சிரோன்மணிகள் யாராகிலும் சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ்.

ஷைலஜா said...

எம்பாரைப்பற்றி இந்தமாத ஆலயம் புக்ல நிறைய விவரம் வந்திருக்கு. படிச்சி எழுதலாம்னு நினைப்பதற்குள் இங்க மௌலி அருமையா எழுதி இருக்காரே! சிறுகக்கட்டி பெருகவாழ் என்கிறமாதிரி சின்னதா எழுதினாலும் மௌலி,சிறப்பா எழுதிட்டீங்க! மதுரமங்கலம் காஞ்சிபுரம்போறவழிலதான் இருக்காம் கண் நோய்சம்பந்தமானதுக்கு இந்தக்கோயில்போனா குணம்கிடைக்கிறதாம்.

அப்றோம் நான் வைஷ்ணவ சிரோன்மணி இல்லேன்னாலும் வை. பெண்மணி என்பதால் ஏதோ சிற்றறிவுக்கு எட்டியதை சொல்றேன்!
அதாவது உடையவருக்கு ஏன் அந்தப்பேர் இருக்கும்னா அவர் அரங்கனுக்கு உடையவர்!(பாம்பின்மீது பள்ளி கொள்கிறாரே அதனால்) அரங்கனின் அன்புக்கு உடையவர்! அருளுக்கு உடையவர்!
ஓம்நமோ நாராயணாய என்று சொன்னாலே மோட்சம் அடையலாம் என திருமந்திரத்தை அனைவர்க்கும் சொல்லி அனைவரின் மனத்திலும் உடையவர் அதனால் ராமானுஜருக்கு மட்டுமெ இந்தப்பெயர் பொருத்தம் என தோன்றுகிறது!!

மதுரையம்பதி said...

வாங்க ஷைல்ஸக்கா...

கலைமகள் வாங்கினேன், படித்தேன்...வாழ்த்துக்கள்...

சிரோன்மணிங்கறது ஆண்-பெண் இருவருக்கும் பொருந்தும் பட்டம்தான்...ஆனாலும் இதாங்க உங்களுக்கான சிறப்புப் பட்டம்.. "வைஷ்ணவ சிரோன்மணி மாது ஸ்ரீ ஷைலஜா"...ஓகேயா? :-)

நன்றிக்கா...

ஷைலஜா said...

மதுரையம்பதி said...
வாங்க ஷைல்ஸக்கா...

கலைமகள் வாங்கினேன், படித்தேன்...வாழ்த்துக்கள்...<<<ஓ என் கதையைப்படிசிட்டீங்களா வாழ்த்துக்கு நன்றீ மௌலி!

\\ஆண்-பெண் இருவருக்கும் பொருந்தும் பட்டம்தான்...ஆனாலும் இதாங்க உங்களுக்கான சிறப்புப் பட்டம்.. "வைஷ்ணவ சிரோன்மணி மாது ஸ்ரீ ஷைலஜா"...ஓகேயா? :-).\\


ஹ்ஹா! இதைப்பெற எனக்கு ஒரு தகுதி வேண்டாமா அன்புத்தம்பியே சந்திரமௌலியே! என்னவோ போங்க வரவர பட்டம்லாம் இப்படித்தான் கிடைக்கறதுபோல்ருக்கு!ஆனாலும் உங்க நல்லமனசுக்கு நன்றி! விஷ் யூ குட் லக்!

நன்றிக்கா

Anonymous said...

எம்பார் திருவடிகளே சரணம்.பதிவுப் பக்கம் வந்தவுடனேயே எம்பார் பற்றிய நல்ல நிகழ்வுகளும் படமும்.
மிக மிக அருமை.

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி பரவஸ்து அண்ணா...

//.பதிவுப் பக்கம் வந்தவுடனேயே எம்பார் பற்றிய நல்ல நிகழ்வுகளும் படமும்.
மிக மிக அருமை.//

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி? :-)

மதுரையம்பதி said...

//என்னவோ போங்க வரவர பட்டம்லாம் இப்படித்தான் கிடைக்கறதுபோல்ருக்கு!//

ஹிஹி..ஆமாம் அக்கா....பட்டம் கொடுப்பது கொஞ்சம் டேஞ்சரான விஷயந்தான்...முன்பே கையைச் சுட்டுக்கிட்டும் புத்தி வரல்ல :-)

வல்லிசிம்ஹன் said...

திரு ஏ.எம்.ஆர் எழுதி இருந்தாலும் பதிவில எம்பார் பற்றிப் படிக்கிறது அதிசயமாவும் ஆனந்தமாவும் இருக்கிறது மௌலி. ரொம்ப நன்றி.

மதுரையம்பதி said...

வாங்க வல்லியம்மா...ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க...:-)

//திரு ஏ.எம்.ஆர் எழுதி இருந்தாலும் பதிவில எம்பார் பற்றிப் படிக்கிறது அதிசயமாவும் ஆனந்தமாவும் இருக்கிறது மௌலி. ரொம்ப நன்றி.//

உங்களுக்கு ஆனந்தமா இருக்குங்கறதே எனக்கு ஆனந்தம் தருகிறது. நன்றி வல்லியம்மா.