Friday, February 6, 2009

பாலா திரிபுர சுந்தரி - வாலைக் குமரி

பாலை என்னும் பாலா திரிபுரசுந்தரி ஆராதனை தேவி வழிபாட்டில் முதற்படி என்பர். ஸ்ரீ வித்யையில் "பாலா" மந்திரத்துடன் பெரும்பாலோர் நின்றுவிடுவது வழக்கம். இதனால் தானோ என்னவோ இம்மந்திரத்திற்கு "லகு ஸ்ரீ வித்யா" என்றே பெயர் இருக்கிறது. அன்னையை இந்த ரூபத்தில் ஆராதிக்க என்றே தனியாக கட்கமலா மற்றும் ஆவரண பூஜைகள் எல்லாம் இருக்கிறது. குண்டலினி யோகத்தில் முதல் இரு ஆதார சக்ரங்களில் அம்பிகையை பாலையாக பூஜிக்கச் சொல்லப்பட்டிருக்கிறது.


அம்பிகையின் 9 வயது ரூபமே பாலா திரிபுர சுந்தரி என்பர். ஆனால் லலிதோபாக்யானத்தில் பாலா என்னும் சக்தி அன்னையின் ப்ரியத்தை பரிபூரணமாகப் பெற்ற தனி சக்தியாகவே கூறுவர். பாலாம்பிகையின் அனுக்ரஹம் கிடைத்தால், பராம்பிகை அனுக்ரஹம் சுலபமாகுமாம்.

ஒரு முறை குபேரன் அம்பிகையை பூஜிக்கையில், 'நித்ய யெளவனா' என்ற நாமாவைச் சொன்னபோது அன்னையைக் கூர்ந்து நோக்கினானாம். அதாவது, தன்னை மறந்து, தான் செய்யும் பூஜையை மறந்து அன்னையின் பிம்பத்தினை தன் கண்களிலிருந்து மறைத்து அகக்கண்களில் அன்னையை கன்னியாக, குமரியாகக் காண தலைப்படுகிறான். உபமானங்களூக்கு அப்பாற்பட்ட அவளை மனக்கண் முன் கொண்டுவர இயலவில்லையாம். அப்போது ஈசன் அவன் முன் தோன்றி, பாலாவாக அன்னையைப் பார்க்க வேண்டுமானால் உஷத்காலத்தில் த்ரிஸாகர சங்கமத்தில், பாரதத்தின் தென் மூலையில் காணலாம் என்றாராம். அதே கன்யாகுமாரி கோவில் கொண்ட இடம் என்று கூறிக் கேட்டிருக்கிறேன். லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ள "தாரா காந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா" என்னும் நாமம் இந்த குமரியம்மனுக்கே உரியதோ என்று தோன்றுகிறது. இந்த நாமத்தின் பொருள், நக்ஷத்திரத்தை விட அதிக ஒளிதரும் மூக்குத்தியை அணிந்தவள் என்பது. இந்த மூக்குத்தியே ஒரு சமயத்தில் கலங்கரை விளக்காக தடுமாறிய மாலுமிக்கு வழிகாட்டியது என்பர். இங்கே அம்பிகையை பிரதிஷ்ட்டை செய்தவர் பரசுராமர் என்று கூறப்படுகிறது. பாலாவிற்கு இன்னும் சில கோவில்களில் தனி சன்னதி உண்டு, அவை திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம், திருக்கடையூர், சென்னை கொத்தவால் சாவடி கன்னிகா பரமேஸ்வரி போன்றவை உடனடியாக நினைவுக்கு வருகிறது.

சித்தர்கள் சிலரும் இந்த அன்னையை பலவாறாகப் பாடியுள்ளனர். திருமூலர் தனது திருமந்திரத்தில்,

சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை (1199)
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்


ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை (1073)
நீங்காத பச்சை நிறம் உடையவள்
ஆங்காரியாகிய ஐவரை பெற்றிட்டு
ஹ்ரீங்காரத்துள்ளே இனித்திருந்தானே

என்பதாக கூறியிருக்கிறார். கருவூரார் கூறுகையில்,

ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சர்யம் மெத்த மெத்த அதுதான் பாரு

என்று அன்னையை வாலைப் பெண்ணாக வைத்து அவளது மாயை போன்ற கூறுகளைப் பற்றிக் கூறுகிறார். இவர் போன்றே கொங்கண சித்தர் பாடியது வாலைக்கும்மி என்னும் பாடல் தொகுப்பு. அதிலிருந்து ஒரு பாடலைப் பார்க்கலாம்.


முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல
மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத் திக்வாலை
அமர்ந் திருக்கிறாள் வாலைப் பெண்ணே (54)
காலனை காலால் உதைத்தவளாம் வாலை
ஆலகால விடம் உண்டவளாம்
மாளாச் செகத்தைப் படைத்தவள் இந்த
மானுடன் கோட்டை பிடித்தவளாம் (57)


இடுகையின் ஆரம்பத்தில் சொல்லியது போல, ஸ்ரீவித்யைக்கு முதல் படியான பாலா திரிபுர சுந்தரிக்கான தியான ஸ்லோகத்தின் பொருளாவது; சிவந்த நிறமுடைய கிரணங்களின் கூட்டங்களால் நிரம்பிய எல்லாத் திக்குகளையும் உடையவளும், இரு கைகளிலே ஜபத்திற்கான மாலையையும், புத்தகத்தையும் ஏந்தியும், மற்ற இரு கரங்கள் அபய-வரத முத்திரைகளுடனும், செந்தாமரையில் அமர்ந்து நிரந்தரமான ஸுகத்தை தருபவள் என் ஹ்ருதயத்தில் வசிக்கட்டும்.



அன்னையின் மேல் வலது கையில் ஜப மாலையும், மேல் இடது கையில் புஸ்தகத்தையும், கீழ் இடது-வலது முறையே அபய, வரத முத்திரைகளும் கொண்டதாக பாவிக்க வேண்டும். குழந்தைகள் இந்த அன்னையை வணங்கச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்களது கல்வி செழிப்புறும் என்பர். அம்பிகைக்கு சிறப்பான நாளான இந்த 4ஆம் தைவெள்ளியில் அவளைப் போற்றி வணங்கிடுவோம்.

16 comments:

Raghav said...

பால திரிபுரசுந்தரின்னு கேள்விப்பட்டுருக்கேன் அண்ணா..

குமரியில் அன்னையை மூக்குத்தி வெளிச்சத்தில் தரிசித்த நினைவு இன்றும் மறக்கவில்லை.. 12 வருடங்களுக்கு முன்பு சென்றது.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ராகவ். ஏது இந்தப் பக்கம்? :-).

பாலா திரிபுரசுந்தரி என்பது பேச்சு வழக்கில் அப்படியாகியிருக்குமுன்னு நினைக்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வைதீஸ்வரன் கோவிலில் இருக்கும் அம்பாளுக்கும் பாலாம்பிகை என்றுதான் பெயர்.ஆனால் அவள் வைதீஸ்வரனுடன் வீற்றிருக்கிறாள். நல்ல விஷயத்தை தெளிவுற தந்ததற்கு நன்றி மௌலி.

தி. ரா. ச.(T.R.C.) said...

தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !!
கண்ணை விவரித்து விட்டு மூக்கை விட முடியுமா? நாஸாதண்டம் என்பது மூக்கினுடைய நடு தண்டு பாகமும் மூக்கும் சேர்ந்தது. அது எப்படி இருக்கிறது என்றால் அப்பொழுதுதான் பாதி மலர்ந்தும் பாதி மலராத செண்கப்பூப் போல இருக்கிறதாம்.அதுவும் இளம் சிவப்பு நிறம்தான். அப்படிப் பட்ட மூக்கில் அம்பாள் மூக்குத்தி அணிந்திருக்கிறாள். அதை வர்ணிக்க என்னால் முடியாது. இருந்தாலும் முயன்று பார்க்கிறேன்.வானத்தில் இருக்கும் எல்லா நக்ஷ்த்திரங்களின் ஒளியையும் அப்படியே திரட்டிஒரு சிறு மூக்குத்தியாக அணிந்திருக்கிறாளாம்.மூக்குத்தியின் மகிமை தெரியவேண்டுமானால் கன்யா குமாரிக்குப் போய் அவளுடைய மூக்குத்தி எவ்வாறு ஜ்வளிக்கிறது என்று பார்த்தால் புரியும்.கலங்கரை விளக்கம் போன்று ஒரு காலத்தில் கப்பல்களை ஆகர்ஷிக்குமாம்.முத்துமூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும் மோகன தங்கத்தினால் முடிந்திட்ட தாலியழகும் அடியானாற் சொல்ல திறமோ அழகான காஞ்சியில் புகழாக விளக்க விளங்கிடும் அம்மை காமாக்ஷி உமையே ஞாபகம்தான் வருகிறது. மறுமுறை படியுங்கள் நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா!
தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !! தேவியின் முகம் தெரியும்

மெளலி (மதுரையம்பதி) said...

மீண்டும் வந்தமைக்கு நன்றிகள் திராச ஐயா... :-)

//கண்ணை விவரித்து விட்டு மூக்கை விட முடியுமா? நாஸாதண்டம் என்பது மூக்கினுடைய //

அருமை....பாலையைப் பற்றிய இடுகை எழுத என்று ஆரம்பித்ததால், கன்யாக்குமரியையும், அதற்கு ஏற்ற குமரியம்மனது மூக்குத்தி என்பதைக் குறிக்கும் நாமத்தை மட்டும் இவ்வ்விடுகையில் சொன்னேன்.

செளந்தர்யலஹரி பதிவுப் பக்கம் நீங்க வருவதில்லை. அங்கு அன்னையின் நாஸாதண்டம் பற்றிச் சொல்லியிருப்பதை பாருங்கள் என அழைக்கிறேன் :-)

"நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா" என்பதை மிக அழகாக விளக்கியிருக்கீங்க...மிக்க நன்றி.

Kavinaya said...

ஆகா, அழகான பதிவு. வாலைக்கும்மி சூப்பர். பாலாதிரிபுரசுந்தரி படம் ரொம்ப அழகு.

'நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா!
தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !!'

தேவியின் அழகு முகம் தெரியுது, தி.ரா.ச. ஐயா. உங்கள் விளக்கம் படிக்கப் படிக்க சுகம். மிக்க நன்றி மௌலிக்கும் உங்களுக்கும்.

Kavinaya said...

வைத்தீஸ்வரன் கோவில் அம்மா பேரு தையல்நாயகி அல்லவா?

தி. ரா. ச.(T.R.C.) said...

@கவிநயா. பாலாவும் தைய்யலும் ஒரே பருவம்தான். பாலா என்பது வடமொழி தைய்யல் என்பது தமிழ். குமரகுருபரர் மீனாக்ஷி அம்மை பிள்ளை பதிகத்தில் தைய்யற்பருவம் என்று அம்மனை சிறபித்துப் பாடியுள்ளார்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா...பதிவினையும், பின்னூட்டங்களையும் படித்து மகிழ்ந்தமைக்கு நன்றி.

ஆம், வைத்தீஸ்வரன் கோவில் அம்பிகை பெயரும் பாலா என்று திராச அவர்களும் சொல்லியிருக்காரு....நான் எப்போதோ சிறுவயதில் சென்றேன்...நினைவில்லை. நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

வாருங்கள் திராச. மேலதிகத் தகவலுக்கு நன்றிகள் பல.. :-)

Kavinaya said...

//@கவிநயா. பாலாவும் தைய்யலும் ஒரே பருவம்தான். பாலா என்பது வடமொழி தைய்யல் என்பது தமிழ். குமரகுருபரர் மீனாக்ஷி அம்மை பிள்ளை பதிகத்தில் தைய்யற்பருவம் என்று அம்மனை சிறபித்துப் பாடியுள்ளார்.//

அப்படியா. விளக்கத்துக்கு நன்றிகள் பல ஐயா.

குமரன் (Kumaran) said...

வாலைக் குமரியைப் பற்றிய இடுகைக்கு நன்றி மௌலி. பாரதியும் வாலைக்குமரியைப் பற்றி பாடியிருக்கிறார்.

ஆராதனைக்க --> ஆராதிக்க

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி குமரன். பதிவில் திருத்திடறேன்.

jeevagv said...

பதிவுக்கு நன்றி மௌலியண்ணா!
திருமூலர் சக்தி பற்றியும் சொல்லி இருக்கிறார் என்பதை இப்போதுதான் அறிந்தேன்!

Unknown said...

its nice one..thanks for sharing.
Raja

Unknown said...

thanks for sharing frined
|Raja