Friday, January 30, 2009

ஐந்தொழிலும் செய்பவள் பராசக்தி - அவள் பதமலர் பணிவோம்


தை வெள்ளிக் கிழமைச் சிறப்பு இடுகைகளாக கடந்த இரு வாரங்களில் கொப்புடையாளையும், கண்ணாத்தாளையும் பற்றிக் கொஞ்சம் எழுதினேன். மூன்றாவது வெள்ளிக்கு என்ன பதிவு போடலாம் என்று நினைக்கையில் அன்னையின் ஆயிரம் நாமங்கள் என்பதாக முன்பு சில இடுகைகள் இட்டது போல இன்னும் சில நாமங்களை எழுதலாம் என்று தோன்றியது. அந்த சிந்தனையின் விளைவே இவ்விடுகை.

அன்னைக்குப் "பஞ்ச க்ருத்ய பராயணா" என்று ஒரு நாமம், அதாவது, ஐந்தொழிலை செய்கிறவள் என்று அர்த்தம். முத்தொழில் என்றால் பலருக்கும் தெரியும், படைத்தல், காத்தல், அழித்தல் என்று. ஆனால் ஐந்தொழில்கள்?. ஆமாம், மூத்தொழில்களுடன், மறைத்தல் (திரோதானம்), மற்றும் அருளுதல் என்பதைச் சேர்த்து ஐந்தொழில்கள் என்பர். இந்த ஐந்து தொழில்களுமே அன்னை செய்கிறாள் என்று கூறுகிறது லலிதா சஹஸ்ரநாமம். அபிராமி அந்தாதியில் பூத்தல், காத்தல், கரத்தல் என்று பட்டர் கூறியதும் இத்தொழில்களையே. இந்த ஐந்து தொழில்களைச் செய்யும் அன்னையின் நாமாவளிகளைப் பார்க்கலாம்.

ஸ்ருஷ்டி கர்த்ரீ - ப்ரம்ம ரூபா

கோப்த்ரீ - கோவிந்த ரூபிணி

ஸம்ஹாரிணி - ருத்ர ரூபா

திரோதானகரீ - ஈஸ்வரி

ஸதாசிவா - அனுக்ரஹதா


மேலே இருப்பது 5 தொழில்களை நடத்தும் அன்னையை அத்தொழிலுக்கான நாமங்கள்களுடன் சொல்லியிருக்கிறது. இதனையே அபிராமி பட்டர் அவர்கள், "பூத்தவள், காத்தவள், பின் கரந்தவளே" என்று முத்தொழிலுக்கும் காரணமாகச் சொல்லியிருக்கிறார். தேவி பாகவதத்தில் சொல்லியிருப்பது இங்கே நினைவு கூற வேண்டும். பாகவதத்தில் புவனேஸ்வரி, த்ரிமூர்த்திகளுக்கு தரிசனம் அளித்த போது அவர்களுக்கு அனுக்ரஹித்து தன்னிலிருந்து சக்திகளை (சரஸ்வதி, லக்ஷ்மி, கெளரி) பிரித்துக் கொடுத்து அச் சக்திகளைக் கொண்டு முத்தொழில் செய்யப் பணித்ததாக வருகிறது. அதன்படி பார்த்தால் இந்த மும்மூர்த்திகளும் அன்னையின் சக்தி ரூபங்களைக் கொண்டே முத்தொழில் செய்வதால், அன்னையே அத்தொழிலுக்கு அதிபதியாகிறாள்.

"ஸ்ருஷ்டி கர்த்ரீ" - ஸ்ருஷ்டித் தொழிலை, அதாவது படைப்புத் தொழிலைச் செய்பவள் என்பது இந்த நாமம். யார் படைப்புத் தொழிலைச் செய்வது?, பிரம்மா, அந்த பிரம்மாவாக இருப்பவளை "பிரம்ம ரூபா" என்கிறது சஹஸ்ரநாமம். "புவனங்கள் ஏழையும் பூத்தவள்" என்று பட்டர் இவளைச் சொல்லியது சரி தானே?.


"கோப்த்ரீ" - காப்பாற்றுபவள் என்று பொருள். சத்வ குணத்தின் அடிப்படையான தொழில் இது. மஹாவிஷ்ணுவைக் காக்கும் கடவுள் என்று கூறுவது வழக்கம். கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து காத்த கிருஷ்ணனுக்கு 'கோவிந்தா' என்னும் நாமம் அளித்தனர். 'கோ' என்றால் பசு என்று மட்டும் அர்த்தம் அல்ல, 'கோ' என்றால் பூமி என்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது. கிருஷ்ணனுக்கு பசுக்களை மட்டும் காத்ததால் வந்ததல்ல கோவிந்த நாமம். சகல ஜனங்களையும் அப்போது காத்ததால் கோவிந்தா என்ற நாமம். ஆக "கோவிந்த ரூபிணி" என்பது அந்த காக்கும் கடவுளது உருவில் அன்னை இருப்பதால் அவளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையே பட்டர் பிரான், "பூத்தவண்ணம் காத்தவளே" என்று கூறியிருக்கிறார்.


"ஸம்ஹாரிணி" - அழிப்பவள் என்று பொருள். எதை அழிப்பவள்?. நம்மிடமிருக்கும் கெட்ட எண்ணத்தை, அசுர குணத்தை அழிக்கிறாள். தேவியே, தமோ குணமுடைய ருத்ரன் வடிவில் இருந்து அழித்தலைச் செய்கிறாளாம். அதனால் "ருத்ர ரூபா", அதாவது ருத்ரனின் வடிவத்தில் இருப்பவள்.


"திரோதானகரீ" - மறைத்தலை, மாயையைச் செய்பவள் என்பது பொருள். அன்னைக்கு, "திரஸ்காரிணி" இன்னொரு பெயரும் உண்டு. அந்த சக்தியும் மறைத்தலைச் செய்பவளே. அழித்தல் தொழிலைச் செய்தபின் அவ்வாறு அழித்ததை தன்னுள் ஒடுக்கி வைப்பவள் என்பதால் "ஈஸ்வரி" என்று கூறுகின்றார் பாஸ்கர ராயர். சம்ஹாரத்திற்குப் பிறகு மறைக்கும் இதைத்தான் "பின் கரந்தவளே" என்று பட்டர் கூறியிருக்கிறார் என்று தோன்றுகிறது.


இதுவரையில் நான்கு தொழில்களைச் செய்பவள் மற்றும் அதன் சார்பாக அவளுக்கு அளிக்கப்பட்ட நாமங்கள் என்றும் பார்த்தோம். அடுத்து வருவது "சதாசிவா" என்று முதலில் நாமத்தையும் பின்னர் "அனுக்ரஹதா" என்று தொழிலையும் இங்கே மற்றும் மாற்றிச் சொல்லியிருப்பது ஏன்?. சைவ சித்தாந்தத்தில், சதாசிவனின் அருளே சக்தி என்று கூறப்பட்டிருக்கிறது. குழந்தை ஞான சம்பந்தருக்கு ஈசனது அருளான அம்பிகையே வந்து முலைப்பாலாக அருளுகின்றார். இதை எழுதுகையில் "சக்தியில்லையேல் சிவமில்லை" என்னும் வசனமும் நினைவுக்கு வருகிறது. இதுவே, தேவி பாகவதத்தில் "சிவோபிசவதாம் யாதி குண்டலின்யா" என்பதும், செளந்தர்ய லஹரி முதல் ஸ்லோகத்திலேயே "அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி" என்னும் பதமும் மனதில் தோன்றுகிறது.

ஆக ஐந்து தொழில்களைச் செய்யும் பராசக்தி ஸ்ரீ லலிதையைப் பணிவோம்.

8 comments:

Kavinaya said...

//ஐந்து தொழில்களைச் செய்யும் பராசக்தி ஸ்ரீ லலிதையைப் பணிவோம்.//

சரணம் சரணம். நன்றி மௌலி.

S.Muruganandam said...

அன்னையின் ஐந்தொழிலுக்கும் அருமையான விளக்கம். லலிதா சகஸ்ரநாமம்,அபிராமி அந்தாதி் ஒப்புவமையும் அருமை.

ஓம் சக்தி

மெளலி (மதுரையம்பதி) said...

கவிக்கா,

எப்போதும் போல வந்து படித்தமைக்கு நன்றி. :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கைலாஷி ஐயா, மகிழ்ச்சி.

குமரன் (Kumaran) said...

'முத்தேவரும் முத்தொழில் ஆற்றிடவே முன்னின்று அருளும் முதல்வி சரணம்'. மௌலி, 'அம்மன் பாட்டு' பதிவைப் படிக்கிறீங்களா?

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்.

//'அம்மன் பாட்டு' பதிவைப் படிக்கிறீங்களா?//

அவ்வப்போது படிக்கிறேங்க.
ஆமாம் ஏன் கேட்கிறீர்கள்?.

Kavinaya said...

ஏன்னா நான் இட்டது எதுவுமே படிச்ச மாதிரி தெரியலயேன்னு கேட்கிறாரு.. :) இல்லையா குமரா? :)

மெளலி (மதுரையம்பதி) said...

//ஏன்னா நான் இட்டது எதுவுமே படிச்ச மாதிரி தெரியலயேன்னு கேட்கிறாரு.. :) இல்லையா குமரா? :)//

உண்மைதான் அக்கா, சமீபத்தில் அங்கு அதிகம் வரவில்லை. 100ஆம் போஸ்ட் படித்த பிறகு வந்த நினைவு இல்லை.
குமரன் இங்கு போட்ட பின்னூட்டத்தைப் பார்த்த பின்னரே அங்கு சென்றேன்.